- தமிழில் இடதுசாரி இலக்கியம் குறித்து எழுதுகையில் மூன்று ‘சி’ எழுத்தாளர்களைத் தவிர்த்து விட்டு எவராலும் எழுதவே முடியாது. தொ.மு.சிதம்பர ரகுநாதன், தி.க.சிவசங்கரன், கு.சின்னப்ப பாரதி ஆகிய மூவரும் இடதுசாரி இலக்கியப் படைப்புகளை மக்கள் மனதிற்கு நெருக்கமாகக் கொண்டு சேர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். அதிலும் தொ.மு.சி. பண்டைய இலக்கியம், நவீன இலக்கியம் ஆகிய இரு தளங்களிலும் மிகுந்த அக்கறையுடனும் ஆற்றலுடனும் விளங்கிய சிறப்புக்குரியவர்.
- திருநெல்வேலியில் 1923ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று, தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் தொ.மு.சி. ‘ரெங்கநாதர் அம்மானை’, ‘நெல்லைப்பள்ளு’ ஆகிய நூல்களை எழுதிய தமிழறிஞர் சிதம்பரத் தொண்டைமான் தொ.மு.சி.யின் தாத்தா. தந்தையார் ஓவியர் - ஒளிப்படக் கலைஞர்; ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதியவர். தொ.மு.சி.யின் அண்ணன் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக மட்டுமின்றி, மரபிலக்கிய ஆய்வாளராகவும் பயண இலக்கிய எழுத்தாளராகவும் விளங்கியவர். இப்படியான சூழலில் வாழ்ந்த தொ.மு.சி.க்கு இளம் வயதிலேயே புத்தக வாசிப்பும் எழுத வேண்டும் என்கிற ஆர்வமும் துளிர்த்ததில் வியப்பு ஒன்றுமில்லை.
அரசியல் ஈடுபாடு
- பள்ளிப் பருவத்திலேயே ‘ஜவகர் வாலிபர் சங்க’த்தில் இணைந்த தொ.மு.சி, தனது நண்பருடன் இணைந்து ‘மார்க்சிஸ்ட் மாணவர் இயக்கம்’ என்ற பெயரில் மார்க்சியக் கருத்துகளைப் பரப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1942இல் நாடுமுழுவதும் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் சார்பில், நெல்லையில் நடைபெற்ற ஊர்வலத்தில் பங்கேற்றுத் தடியடிக்கு ஆளானார். பிறகு, பொதுக்கூட்டத்தில் பேசியதற்காகக் கைதுசெய்யப்பட்டு, இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். படிப்பு தடைபடவே, சில மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை வாழும் சூழல் ஏற்பட்டது.
- கல்லூரி ஆசிரியரான அ.சீனிவாசராகவன் மூலமாக நவீன இலக்கியத்தையும் பழந்தமிழ்இலக்கியத்தையும் கற்பதில் தொ.மு.சி-க்குஆர்வம் உண்டானது. சிறுவயதிலேயே கதைகளை எழுதத் தொடங்கியவரின் முதல் சிறுகதை, 1941இல் ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளியானது. 1945இல் ‘புயல்’ எனும் தனது முதல் நாவலை வெளியிட்டார். இதழியல் பணியில் ஈடுபடும் ஆவலில் ‘தினமணி’யில் (1944) உதவி ஆசிரியராகவும் பின்னர் ‘முல்லை’ (1946) இலக்கியப் பத்திரிகையிலும் பணியாற்றினார். 1948இல் ‘சக்தி’ இதழில் சேர்ந்தார். எழுத்தாளர் கு.அழகிரிசாமியுடன் இணைந்து பணியாற்றிய காலத்தில், இருவருக்கும் இடையே இருந்த நட்பையும் இருவரது படைப்பின் சிறப்பையும் கண்டவர்கள் ‘இரட்டையர்கள்’ என்று இவர்களை அழைத்தனர்.
முன்னுதாரண நாவல்
- கைத்தறி நெசவாளர்களின் துயரமிக்கவாழ்க்கைப் பாடுகளைப் பதிவுசெய்யும் வகையில் ‘பஞ்சும் பசியும்’ எனும் நாவலை 1951இல் எழுதியதோடு, அந்த நாவல் மூலமாகத் தமிழில் சோஷலிச யதார்த்தவாத நாவல் எனும் புதிய இலக்கியப் போக்கினையும் தொ.மு.சி.தொடங்கிவைத்தார். அந்த நாவல் ‘செக்’ மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது. ஐரோப்பிய மொழி ஒன்றில் மொழியாக்கம் செய்யப்பட்ட தமிழின் முதல் நாவல் எனும் பெருமையைப் பெற்றதோடு, அப்போதே 50 ஆயிரம் பிரதிகள் விற்று, சாதனையும் படைத்தது.
- பல்வேறு இதழ்களில் பணியாற்றிய தொ.மு.சி, தணியாத ஆர்வத்தோடு ‘சாந்தி’ எனும் முற்போக்கு இலக்கிய இதழினை 1954இல் தொடங்கினார். தமிழின் சிறப்புமிக்க எழுத்தாளர்களாகப் பின்னாளில் மிளிர்ந்த டேனியல் செல்வராஜ், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி ஆகியோரின் தொடக்க காலப் படைப்புகளை ‘சாந்தி’ இதழில் வெளியிட்டு, அவர்களுக்கான சிறப்பான அறிமுகத்தை வழங்கினார் தொ.மு.சி.
- 1960இல் ‘சோவியத் நாடு’ இதழில் சேர்ந்து, ஏராளமான ரஷ்ய மொழிப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பெரும் பணியைத் திறம்படச் செய்தார். மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல், ‘சந்திப்பு’சிறுகதைகள், மயாகோவ்ஸ்கியின் ‘லெனின் கவிதாஞ்சலி’ ஆகிய நூல்கள் அவருடைய சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பினால் கவனம் பெற்றன.
புதுமைப்பித்தன் நட்பு
- எழுத்தாளர் புதுமைப்பித்தனின் நண்பராக இருந்த தொ.மு.சி., புதுமைப்பித்தனின் மறைவுக்குப் பிறகு, அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டார். 1951இல் புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். 1999இல் ‘புதுமைப்பித்தன் கதைகள் - விமரிசனங்களும் விஷமங்களும்’ எனும் நூலை எழுதி, அதுநாள் வரை புதுமைப்பித்தனின் படைப்புகள் பற்றிச் சொல்லப்பட்டுவந்த தவறான கருத்துகளுக்கு முற்றுப்புள்ளியும் வைத்தார்.
- திருச்சிற்றம்பலக் கவிராயர் எனும் புனைபெயரில் தொ.மு.சி. கவிதைகளை எழுதினார். ‘ரகுநாதன் கவிதைகள்’, ‘கவியரங்கக் கவிதைகள்’, ‘காவியப் பரிசு’, ‘தமிழா எப்படி?’ ஆகிய நான்கு கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
- எழுத்தையே தன் வாழ்வாக வரித்துக்கொண்ட தொ.மு.சி. 1942 முதல் 1962 வரை 20 ஆண்டு காலம் எழுத்துத் துறையில் முழு வீச்சோடு இயங்கினார். சோஷலிச யதார்த்தவாத எழுத்தாளர் என்று பாராட்டப்பெற்ற தொ.மு.சி.சிறுகதை, நாவல், நாடகம் உள்ளிட்ட நூல்களோடு இலக்கிய விமர்சனம், இலக்கிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். ‘பாரதி - காலமும் கருத்தும்’ எனும் நூலுக்காக 1983இல் சாகித்ய அகாடமி விருது தொ.மு.சி.க்கு வழங்கப்பட்டது. தனது மொழிபெயர்ப்புகளுக்காக ‘சோவியத் லேண்ட் நேரு விருது’, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘தமிழ் அன்னை பரிசு’ ஆகியவற்றையும் பெற்றார். ஒப்பிலக்கியத் துறையில் இன்றளவும் பேசப்படும் நூல்களாக விளங்கும் தாகூரோடு பாரதியை ஒப்பிடும் ஆய்வு நூலான ‘கங்கையும் காவிரியும்’, ‘பாரதியும் ஷெல்லியும்’ ஆகிய நூல்களைப் படைத்தளித்தார் தொ.மு.சி.
- பொதுவுடைமை இயக்கத் தலைவரான ஜீவா, இலக்கிய விமர்சகர்களான கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, தவத்திரு குன்றக்குடி அடிகளார், எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன், கிருஷ்ணன் நம்பி போன்ற பல அரசியல் - இலக்கிய ஆளுமைகளுடன் நட்புடன் பழகியவர்தொ.மு.சி. எழுத்தாளர் பொன்னீலனுடன் இணைந்து ‘முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்’ (1994) என்கிற புத்தகத்தையும் எழுதியுள்ளார். தமிழ் யதார்த்தவாதப் படைப்பாளிகளின் முன்னோடியாக தொ.மு.சி. என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 10 – 2023)