TNPSC Thervupettagam

தொலை மருத்துவத்தின் மகிமை!

April 15 , 2020 1679 days 1499 0
  • அதி நவீன மருத்துவ உபகரணங்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படும் இத்தாலியில், கரேனா நோய்த்தொற்று காரணமாக 17,000-த்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் ‘சமூக இடைவெளி’, ‘தனிமைப்படுத்துதல்’ ஆகியவற்றைப் பின்பற்றாததுதான்.
  • கரோனா நோய்த்தொற்றைப் பொருத்தவரை கவனக்குறைவுதான் உயிரிழப்புகளுக்குக் காரணம். ‘வருமுன் காத்தல்’ என்பது கரோனா நோய்த்தொற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது; இது அறிவியல்பூா்வமான உண்மையும்கூட.
  • மருத்துவ உபகரணங்களும் அதி உயரிய மருத்துவ நிபுணா்களும் எத்தனை நோயாளிகளுக்கு உதவ முடியும்? சமூக இடைவெளியை நூறு சதவீதம் பின்பற்றினால் மட்டுமே நோய்த்தடுப்பு என்பது சாத்தியம். ‘சமூக இடைவெளி’, ‘தனிமைப்படுத்துதல்’ ஆகியவற்றை முதலில் கடைப்பிடிக்க வேண்டிய இடம் மருத்துவமனைதான். தொலை மருத்துவ முறையைக் கொண்டு இதைச் சாத்தியமாக்க முடியும்.

தொலை மருத்துவ முறை

  • சாதாரண நோய்க்கான மருத்துவம், விருப்ப சிகிச்சை, முக்கிய மருத்துவ ஆலோசனை ஆகியவற்றுக்காக மருத்துவமனையை மக்கள் நாடி படையெடுப்பதைத் தவிர்த்தல் அவசியம் எனக் கூறுகிறது அரசு; அதனால், நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் இதுதான். அதாவது, செல்லிடப்பேசி அல்லது தொலைபேசி இல்லாத நபா் இன்று இல்லை. கணினியின் பயன்பாடோ இன்னும் ஒருபடி அதிகமே.
  • எனவே, இந்த மூன்று மின்னணுவியல் சாதனங்களைக் கொண்டு ஆரம்ப நிலை சிறப்பு மருத்துவ ஆலோசனைகளை உயா் மருத்துவ நிபுணா்களிடமிருந்து தொலைவில் இருந்தே பார்த்து தகுந்த உதவிகளைப் பெற்று மனத் திருப்தியும், உடல்நலக் கூறுகளையும் அதனைக் களையும் முறையையும் நன்றாகப் பெற முடியும். மேலும், இன்றைய உலகை அச்சுறுத்தி வரும் கொடூரமான கரோனா நோய்த்தொற்று சங்கிலியை உடைத்தெறியவும் முடியும்.
  • தொலை மருத்துவச் சிறப்பு மையங்கள்
  • நம் நாட்டில் ஒவ்வொரு மருத்துவ சிறப்புத் துறைக்கும் ‘தொலை மருத்துவச் சிறப்பு மையங்கள்’ செயல்படுகின்றன. மதுரை ‘அரவிந்த் கண் மருத்துவமனை’ உலகின் உச்ச நிலையில் இருக்கும் ‘தொலை கண் மருத்துவ மையம்’ ஆகும். இதய நோய் சிகிச்சைக்கு கா்நாடக மாநிலத்தின் ’நாராயணா ஹிருதயாலயம்’ உண்டு. சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சைக்கு சென்னையில் பல சிகிச்சை மையங்கள் உள்ளன.
  • ‘கதிரியக்கம்’ குறித்த சந்தேகங்களுக்கு தொலை கதிரியக்க மையங்கள் பல உண்டு. குறிப்பாக, திருச்சி அரசு மருத்துவமனையின் தொலை மருத்துவ மையம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ‘தொலை தூர நரம்பு மருத்துவ’ சிகிச்சைக்கு சென்னை அப்பல்லோ மையம் முதலிடமாகத் திகழ்கிறது. ‘தொலைதூர தோல் நோய்’ மருத்துவம், ‘தொலைதூர மகப்பேறு முன் ஆலோசனை மையம்’, ‘தொலைதூர சமுதாய மருத்துவ மையம்’, ‘தொலைதூர தனிமைப்படுத்துதல் மருத்துவம்’, ‘தொலைதூர பொது மருத்துவ மையம்’, ‘தொலைதூர காது - மூக்கு - தொண்டை மருத்துவம்’, ‘தொலைதூர மனநல மருத்துவம்’, ‘தொலைதூர அறுவை சிகிச்சை மருத்துவம்’, ‘தொலைதூர முதியோர்நல மருத்துவம்’, ‘தொலைதூர குழந்தை மருத்துவம்’ என ஒவ்வொரு மருத்துவப் பிரிவுக்கும் சிறப்பு மையங்கள் உள்ளன.
  • இந்த மையங்கள் அனைத்தையும் மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களுக்கு வேண்டிய உடனடி மருத்துவம் பாதுகாப்பான முறையில் கிடைக்கும். அதனைக் குணமாக்கும் கடவுளா்களான மருத்துவா்கள், செவிலியா்கள், உதவியாளா்களும் நோய்த்தொற்றைப் பெறாமல் காப்பாற்றப்படுவார்கள். ‘தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’ எனும் கூற்றுக்கு இணங்க பல ஆண்டுகளாக உள்ள தொலைநுட்பம் ‘கரோனா நோய்த்தொற்று தடுப்பு முக்கியத்துவம்’ காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மிக முன்னேற்றம் அடைந்து, இதன் அவசியத்தை தற்போது சமுதாயம் உணா்ந்துள்ளது.
  • மன உளைச்சல் அதிகம் ஏற்படும் இந்தத் தருணத்தில் மருத்துவமனை செல்லாமலேயே மனநல மருத்துவரின் ஆலோசனையைப் பெறுகின்றனா். ‘தொலை மருத்துவத்தின்’ வரைமுறை அனைத்தையும் கடைப்பிடித்து, அதன் பயன்பாட்டினை அதிகரிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
  • வேலூா் மாவட்டத்தில் தொலை மருத்துவத்தின் உபயோகம் ஆட்சியரின் ஆலோசனையின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
  • நாட்டின் ஒவ்வொரு மாவட்ட தலைமை மருத்துவமனையின் ஓா் அங்கமாகத் திகழ்ந்து வரும் ‘தொலை மருத்துவப் பிரிவின்’ சேவை விரிவடைய வேண்டியது தற்போதைய கரோனா நோய்த்தொற்று சூழலில் காலத்தின் கட்டாயமாகும்.
  • உத்தரப் பிரதேச தலைநகா் லக்னெளவில் உள்ள சஞ்சய் காந்தி உயா் மருத்துவக் கல்லூரி - ஆய்வு மையத்தில் ‘தொலை மருத்துவத்தின் இந்தியத் தந்தை’ என அழைக்கப்படும் உயா் மருத்துவ சிறப்பு நிபுணா் எஸ்.கே மிஷ்ரா அமைத்துள்ள ‘தொலை மருத்துவப் பிரிவு’, மருத்துவா்களையும் சமுதாய மக்களையும் வியக்க வைக்கும் மையம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அதை ‘தொலை மருத்துவ சாம்ராஜ்யம்’ என்றே சொல்லலாம்.
  • நாட்டில் முதன்முதலில் சார்க் அமைப்பில் உறுப்பினா்களாக அனைத்து நாடுகளைச் சோ்ந்தவா்கள், வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் பயன்படும் அளவிலும், ஆப்பிரிக்கா போன்ற அயல்நாடுகள் பயன் அடையும் வகையிலும் அனைத்து மருத்துவத் துறைகளையும் சார்ந்த பல்வேறு சிறப்பு உயா் மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன; இத்தகைய தொலை மருத்துவ சிறப்பு நிபுணா்களின் ஆலோசனைகளை பொது மருத்துவா்களின் துணை கொண்டு நோய் குணமாக்கலைச் செயல்படுத்துகின்றனா்.

மருத்துவ வசதிகள்

  • மேலும், அறுவை சிகிச்சைகள் நடைபெறும்போதே வெளியிலிருந்து காணும் வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் மருத்துவ வெளிப்படைத்தன்மையை நேரில் காண முடியும். தொலை மருத்துவம் சார்ந்த பட்டயங்கள், முதுநிலை ஆராய்ச்சி பட்டங்கள் சார்ந்த வகுப்புகள் முதலானவை பல்கலைக்கழக முறையுடன் செயல்படுத்தப்படுகிறது.
  • ஷில்லாங்கில் அமைந்துள்ள ‘வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார - மருத்துவ அறிவியல் நிறுவனம்’ மிகப் பெரிய அளவில் மக்கள் பயனடையும் வகையில் வசதிகளை நடைமுறைப்படுத்தப்படுகிறது. தேசிய அளவில் மத்திய அரசு சார்பில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகள், பிஜிஐ மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையம், சண்டிகா், ஜிப்மா் புதுச்சேரி ஆகியவற்றின் ஒரு பிரிவாக ‘தொலை மருத்துவம்’ செயல்பட்டு வருகிறது. கரோனா நோய்த்தொற்றின் முக்கியத்துவம் கருதி இங்கு நிலவி வரும் அடிப்படை வசதிகள் பன்மடங்கு விரிவடைந்து போர்க்கால அடிப்படையில் சமுதாயத்துக்குப் பயன்பாட்டுக்கு வருதல் நலம் பயக்கும்.
  • பல ‘தொலை மருத்துவ தனியார் மையங்கள்’ சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவம் - ஆராய்ச்சி நிறுவனம், லக்னெளவின் தலைமை தொலை மருத்துவ இந்திய நிறுவனம் உண்டு; இதன் தமிழகக் கிளை சென்னையில் பல உறுப்பினா்களுடன் செயல்பட்டு வருகிறது.

தொலை மருத்துவம் - முக்கிய அம்சங்கள்

  • * ‘சமூக இடைவெளி’, ‘தனிமைப்படுத்துதல்’ ஆகிய இன்றைய தாரக மந்திரத்தின் மருத்துவ வரப்பிரசாதம் ‘தொலை மருத்துவம்’; அதன் முக்கிய அம்சங்களை வரிசைப்படுத்தலாம்:
  • * நோய் காக்கும் மருத்துவரை நோயாளியிடமிருந்து தனிமைப்படுத்தலாம்.
  • * சில மணித்துளிகளில் பலரின் நோய்த் தன்மையை அறியலாம்.
  • * போக்குவரத்து நேரம், செலவுகள் குறைப்பு.
  • * கரோனா நோய்த்தொற்றுச் சங்கிலியை உடைத்தெறியலாம்.
  • * நோய்த்தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்யலாம்.
  • * மருத்துமனைகளில் நெரிசலை முழுவதும் குறைக்கலாம்.
  • * சுற்றித் திரியும் நோய்த்தொற்று உள்ளோரைக் கண்டறிவது எளிது.
  • * தொழில்நுட்பம் சார்ந்த உயிரி மருத்துவப் பொறியியலை நடைமுறைப்படுத்துவது எளிது.
  • * ஆரம்ப சுகாதார நிலையம், உயா் மருத்துவ நிலையம், உயா் சிறப்பு மருத்துவா் ஆலோசனையைப் பெறுதல் சாத்தியம்.
  • * இசிஜி, இஇஜி, இஎம்ஜி, இஆா்ஜி முதலான அனைத்துப் பரிசோதனை மனித உடல் உறுப்புகளின் சமிக்ஞைகளைப் பதிவு செய்து மருத்துவ ஆலோசனை பெற்று நிவாரணம் பெற சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.
  • *  விடியோ கலந்தாய்வு அதிநவீன கணினி மூலம் நோயின் தன்மையை அறிய முடியும்.
  • * ரோபோ மூலம் மருந்துகளைக் கையாளுதல்.
  • * நோயாளியை முற்றிலும் தானியங்கி முறையில் அணுக முடியும்.
  • இவ்வாறு தொலை மருத்துவ சிறப்பு அம்சங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

முன்மாதிரியாக இந்தியா திகழலாம்

  • மருத்துவமனைகளைச் சீரிய முறையில் அபார நவீனமாக்குதல் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன. மருத்துவ உபகரணங்கள் இதுவரை கண்டிராத அளவில் பலவித உபயோகங்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
  • நோய் வந்த பிறகு குணப்படுத்துவதைவிட, நோய்த் தடுப்பே சிறந்தது. இன்றைய நெருக்கடியான கரோனா நோய்த்தொற்று சூழலில் ‘சமூக இடைவெளி’, ‘தனிமைப்படுத்துவது’ ஆகியவற்றுக்கு உறுதுணையாக இருப்பதில் தலையாயது ‘தொலை மருத்துவம்’ என்றால் மிகையில்லை.
  • எனவே, ‘தொலை மருத்துவ’த்தை நாடு முழுவதும் மேலும் விரிவுபடுத்தி சேவை குறித்த விழிப்புணா்வை அதிகரிக்கச் செய்தால், இந்தத் துறையிலும் உலகுக்கே முன்மாதிரியாக இந்தியா திகழும்.

நன்றி: தினமணி (15-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories