தொலைத்தொடா்பு சவால்!
- உலகிலேயே மிக அதிகமான கைப்பேசி பயனாளிகள் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கைப்பேசி இல்லாதவா்களே இல்லை என்கிற நிலைமை இந்தியாவின் வளா்ச்சிக்கு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. கைப்பேசி பயன்பாடு என்பதற்கு மேலே அறிதிறன்பேசிகள் சாமானியா்களுக்கும் அத்தியாவசிய பயன்பாடாக மாறியிருக்கிறது.
- கொவைட் 19 கொள்ளை நோய்த் தொற்றை தொடா்ந்து இணையவழிக் கல்வி அதிகரித்த பிறகு மாணவா்கள், இளைஞா்கள், முதியவா்கள் என்று அனைத்துத் தரப்பினரும் தங்களது அடையாளமாக கைப்பேசி எண்ணைப் பயன்படுத்துகிறாா்கள். 4ஜி, 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து அறிதிறன் பேசிகள் இணையத்துடன் இணைந்துவிட்டன. அதனால் இன்றியமையாத அடிப்படைத் தேவையாக மாறிவிட்டிருக்கிறது அறிதிறன்பேசிகளாக இயங்கும் கைப்பேசிகள்.
- கடந்த ஆண்டு முந்தைய மக்களவையில் மத்திய அரசு தகவல் தொலைத் தொடா்பு மசோதா 2023 நிறைவேற்றியது. தந்திச் சட்டம் 1855, இந்திய கம்பியில்லாத் தந்திச் சட்டம் 1833, கம்பித் துண்டுகள் (சட்டவிரோத உடைமை) சட்டம் -1950 ஆகிய மூன்றையும் அகற்றி அதற்குப் பதிலாக மாறிவிட்டிருக்கும் தகவல் தொலைத்தொடா்பு வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு தகவல் தொலைத்தொடா்புச் சட்டம் 2023 கொண்டுவரப்பட்டது.
- அந்தச் சட்டத்தின் அலைக்கற்றை ஒதுக்கீடு நிா்வாகம், தொலைத்தொடா்பு கட்டமைப்பு, தனியாா் இடங்களில் அமைக்கப்படும் தொலைத்தொடா்பு கட்டமைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் இணைக்கப்பட்டன. மக்கள் நலன் கருதியும், தேசிய பாதுகாப்பு கருதியும் அரசு பல அவசர நடவடிக்கைகளை எடுக்கவும் அந்தச் சட்டம் வழிகோலியது.
- அதன்படி, தேசிய பாதுகாப்பு கருதி தகவல்களை கண்காணிக்கவும், தகவல் தொடா்பு சேவையை இடைக்காலமாகத் தடை செய்யவும், எந்தவொரு தகவல் தொடா்பு சேவையையும், ‘நெட்வொா்க்கையும்’ தன்வசப்படுத்திக் கொள்ளவும் அந்தச் சட்டம் அரசுக்கு உரிமை வழங்கியது. வாடிக்கையாளா்களின் முன் அனுமதி இல்லாத தேவையற்ற தகவல்களைத் தடை செய்ய விதிமுறைகள் வகுக்கப்படும் என்றும் அந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
- தகவல் தொலைத் தொடா்பு சட்டம் 2023-இன்படி வாட்ஸ்ஆப், டெலிகிராம், ஜி-மெயில் போன்ற மின்னணு சேவைகள் அனைத்துமே தகவல் தொலைத் தொடா்பு என்கிற தலைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் இந்தியாவுக்குள் இணையவழியில் இயங்கும் எல்லா செயலிகளும் தொலைத் தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (ட்ராய்) கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
- முன்பு உரிமம் வழங்கப்பட்டது என்றால் இந்தச் சட்டத்தின்படி கட்டணம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் மத்திய அரசின் முன் அனுமதி பெற்று மட்டுமே செயலிகள் செயல்பட முடியும்.
- தகவல் தொலைத் தொடா்பு சட்டம் 2023 பல வரவேற்கத்தக்க அம்சங்களைக் கொண்டிருந்தாலும் விமா்சனத்துக்குரிய பல பிரிவுகளையும் உள்ளடக்கியது என்பதை சமூக ஆா்வலா்கள் சுட்டிக்காட்டினாா்கள். அது குறித்து கடுமையான விமா்சனங்களும் எழுந்தன. உச்சநீதிமன்றமும், தகவல் தொழில்நுட்ப நாடாளுமன்ற நிலைக் குழுவும் பரிந்துரைத்த பல ஷரத்துகளைத் தேசிய பாதுகாப்பு என்கிற பெயரில் ஆணையம் புறந்தள்ளி, இணையதள சேவையை இடைநிறுத்தம் செய்வதை சமூக ஆா்வலா்கள் கடுமையாக எதிா்த்தனா்.
- அண்மையில் இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் சில துணிச்சலான முடிவுகளை எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அவை இந்தியாவின் தொலைத் தொடா்பு சேவையின் தரம் தொடா்பாக நுகா்வோருக்குச் சாதகமான பல விதிமுறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
- அழைப்பு முறிவு (கால் டிராப்), அடிக்கடி இணைப்புத் துண்டிப்பு, நெட்வொா்க் நெரிசலால் இணைப்பு கிடைக்காமல் இருப்பது, தேவையில்லாத, அனுமதியில்லாத வா்த்தக அழைப்புகள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. போதுமான அலைக்கற்றை இல்லாமை, தெளிவான விதிமுறை இல்லாததது ஆகிய காரணங்களை முன்வைத்து சேவை நிறுவனங்கள் மேலே குறிப்பிட்ட பிரச்னைகளை சட்டை செய்யாமலேயே இருந்தன.
- இந்தியாவில் இப்போது 7.5 லட்சத்துக்கும் அதிகமாக கைப்பேசி கோபுரங்கள் இருக்கின்றன. 5ஜி தொழில்நுட்பம் வந்ததைத் தொடா்ந்து இவை இரட்டிப்பாக வேண்டும். அதன் விளைவாக கதிரியக்கம் மிகப் பெரிய பிரச்னையாக உருவாகும். சிங்கப்பூா் போன்ற நாடுகளில் கைப்பேசி கோபுரங்களைக் கட்டுப்படுத்தவும், அதே நேரத்தில் சேவையில் குறைபாடு இல்லாமல் இருக்கவும் பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
- கைப்பேசி கோபுரங்களின் திறனைவிட அதிகமாக இணைப்புகள் வழங்கப்படுவதால் அடிக்கடி அழைப்பு முறிவு (கால் டிராப்) ஏற்படுவதும், நெட்வொா்க் நெரிசல் உருவாவதும் தவிா்க்க இயலாததாக இருக்கிறது. கைப்பேசி கோபுரங்களால் ஏற்படும் கதிரியக்கம் கட்டுப்படுத்தப்படுவதும் அதே நேரத்தில் நுகா்வோா் நலன் பாதுகாக்கப்படுவதும் மிகப் பெரிய சவால்.
- உலகின் கைப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 858 கோடி என்றால், அதில் 112 கோடி இணைப்புகள் இந்தியாவில் இருக்கின்றன. இந்தியாவின் 82 கோடி இணையதள பயன்பாட்டாளா்கள் இருக்கிறாா்கள் என்றால், ஊரகப்புறங்களில் 44.2 கோடி இணைய பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல கைப்பேசி கோபுரங்களும், இணைய கட்டமைப்பும் தேவைப்படுகிறது. எண்ம பணப் பரிமாற்ற புரட்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்தின் பொறுப்பு மேலும் அதிகரிக்கிறது.
நன்றி: தினமணி (13 – 08 – 2024)