TNPSC Thervupettagam

தொலைநோக்கா – தொல்லை நோக்கா?

August 25 , 2024 3 hrs 0 min 11 0

தொலைநோக்கா – தொல்லை நோக்கா?

  • பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து தொடர்ந்து பதினோராவது ஆண்டாக சுதந்திர தின உரையை நிகழ்த்தி சாதனை படைத்தார் (கடந்த முறைகளைவிட அதிக நேரம் - 98 நிமிஷங்கள் என்பதொரு சாதனை). மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியேற்ற பிறகான முதல் உரை என்பதால், அடுத்த ஐந்தாண்டுகளில் நாடு செல்ல வேண்டிய பாதை குறித்த ‘தொலைநோக்குடன்’ அந்த உரை இருக்கும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.
  • ‘துணிச்சலான புதிய பார்வை’யை அந்த உரை கொண்டிருப்பதாக பாஜக தலைவர்கள் புகழ்ந்தனர். அது அப்படித்தான் என்றால், அது மக்களில் ஒரு பிரிவினரைக் குறிவைத்து எச்சரிக்கும் விதத்தில் நிகழ்த்தப்பட்ட உரை என்பதையே அச்சத்துடன் கூற விரும்புகிறேன். “நாம் உறுதியுடன் முன்னேறிச் செல்கிறோம், மிக நீண்ட தொலைவு செல்கிறோம்; இந்தியாவின் வளர்ச்சியை சீரணிக்க முடியாத சிலரும் இருக்கின்றனர் என்பது மற்றொரு உண்மை; இந்தியா நன்மை அடைவதை விரும்பாத அல்லது அந்தக் கோணத்தில் பார்க்க விரும்பாதவர்களும் இருக்கின்றனர்; அவர்களுடைய சொந்த நோக்கங்கள் நிறைவேறவில்லை என்பதால், மற்றவர்கள் வளர்ச்சி பெறுவதையும் அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை; அப்படிப்பட்ட விபரீதமான சிந்தனைப் போக்கு உள்ள மனிதர்களின் எண்ணிக்கைக்கும் குறைவே கிடையாது; நாடு அப்படிப்பட்டவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”

ஜனநாயகம் என்றால் இளக்காரம்

  • யார் அந்த ‘சில மனிதர்கள்?’ வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், அணுவிசை, விண்வெளி ஆய்வு போன்றவற்றில் இந்தியா அடைந்த வளர்ச்சியால் பெருமை அடையாதவர்கள் என்று ஒருவர்கூட எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவர், தேசிய ஜனநாயக கூட்டணிக்குக் கடந்த மக்களவை பொதுத் தேர்தலில் வாக்களிக்காத 26.20 கோடி வாக்காளர்களைக் குறிப்பிடுகிறாரோ?
  • வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக அவரைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டும் படித்த இளைஞர்களைச் சொல்கிறாரோ? விலைவாசி உயர்கிறது – குடும்பத்தை நடத்த முடியவில்லை என்று முறையிடும் குடும்பத் தலைவிகளைத்தான் குறிப்பிடுகிறாரோ? இந்திய நிலத்தை சீனம் அப்பட்டமாக ஆக்கிரமித்த பிறகும் ஏதும் செய்யாமல் பின்வாங்கிய இந்திய அரசின் செயலால் விக்கித்துப் போயிருக்கும் ராணுவ வீரர்களையும் முன்னாள் ராணுவ வீரர்களையும் மனதில் கொண்டிருப்பாரோ?
  • இந்தியாவுக்கான தொலைநோக்குத் திட்டத்தைக் கூறி நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்குப் பதிலாக, தன்னுடைய அரசின் தவறான கொள்கைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை மேலும் பிளவுபடுத்தும் வகையிலேயே சுதந்திர தினத்தில் பேசியிருக்கிறார். தன்னுடைய அரசின் செயல்களைக் கேள்விக் கேட்கும் எதிராளிகளை, ‘வக்கிரமமான மனம் கொண்டவர்கள்’ என்று முத்திரை குத்துவதன் மூலம், தனக்கு ஜனநாயகப்படியான தீர்ப்பின் மீதும் மரியாதை இல்லை என்பதைத்தான் காட்டுகிறார்.
  • மக்களவையில் பாஜகவுக்குக் கிடைத்திருப்பது வெறும் 240 இடங்கள்தான் என்பதால், அந்தக் கட்சியின் ‘மனதுக்கு உகந்த சில கொள்கைக’ளை முன்வைக்காமல் பின்னுக்கு தள்ளிவிடுவார்கள் என்று நாம் எதிர்பார்த்திருந்தால் அது தவறுதான். பிரதமர் இப்போதும்கூட அனைவருக்கும் ‘பொது சிவில் சட்டம்’ (UCC), ‘ஒரே நாடு – ஒரே (சமயத்தில்) தேர்தல்’ (ONOE) என்ற கொள்கைகளையே முன்வைத்திருக்கிறார். இவ்விரண்டையும் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருக்கிறார். இப்போது அமலில் உள்ள சட்டங்களை ‘வகுப்புவாத சிவில் சட்டங்கள்’ என்று சாடியிருக்கிறார்.
  • “நவீன சமூகத்தில் மத அடிப்படையிலான சட்டங்களுக்கு இடமில்லை, அப்படிப்பட்ட சட்டங்களால் மக்களிடையே வர்க்க வேறுபாடுகளை உருவாக்குவதற்கும் இடமில்லை; மதச்சார்பற்ற பொது சிவில் சட்டத்துக்கான நேரம் இதுவே என்பதைக் கூற விழைகிறேன்; நாம் 75 ஆண்டுகளை மதங்களின் அடிப்படையிலான சிவில் சட்டப்படியே நாள்களைக் கழித்துவிட்டோம். மதச்சார்பற்ற சிவில் சட்டம் நோக்கி நாம் சென்றாக வேடும். அதற்குப் பிறகுதான் மத அடிப்படையில் மக்களை வேறுபடுத்தும் சட்டங்களால் ஏற்படும் பிளவுகளிலிருந்து நாம் விடுதலை பெற முடியும்” என்று பேசியிருக்கிறார்.
  • அவருடைய பேச்சு தவறுகள், முறையான புரிதல் இல்லாமை, ஒரு சாராருக்கு சார்பான பார்வை ஆகிய அனைத்தையும் கொண்ட கலவை. அனைத்து தனிச் சட்டங்களுமே மத அடிப்படையிலானதுதான் – இந்து மதச் சட்டம் உள்பட; அதற்காக அவை மதவாதச் சட்டங்களாகிவிடாது. திருமணத்தைப் பொருத்தவரை மதச்சார்பற்ற சட்டமும் இருக்கிறது - அதற்கு ‘சிறப்பு திருமணச் சட்டம்’ என்று பெயர். ஆனால், அது மக்களிடையே அதிகம் பிரபலம் ஆகவில்லை.
  • தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் வேறொரு மதச் சட்டப்படியான சிவில் உரிமையைப் பெற்றிருப்பதால் நாம் வேறுபடுத்தி நடத்தப்படுகிறோமே என்று எந்தச் சாமானியரும் (இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் அல்லது பார்சி) வருத்தப்படுவதே இல்லை. அனைத்து மதத்தினரும் சமூகக் குழுக்களும் பொதுவான சிவில் சட்டத்தை ஒப்புக்கொண்டு, செயல்படுத்த ஒத்துழைத்தால் அதைப் போல சிறந்த செயல் ஏதுமில்லை; ஆனால் அதைச் சொல்வது எளிது, செயல்படுத்துவது மிக மிகச் சிரமம்.

பிளவுபடுத்தும் பேச்சு

  • ‘பொது சிவில் சட்டம்’ என்பதும் ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என்பதும் மக்களை எச்சரிக்கைச் செய்யும் சிந்தனைகளாகும், எனவே மக்களுக்கு ஏற்படும் அச்சங்களை முதலில் போக்க வேண்டும். பொது சிவில் சட்டம், ஒரே நாடு – ஒரே தேர்தல் என்ற செயல்திட்டத்தின் பின்னால் உள்ள ரகசிய நோக்கத்தை ஏற்கெனவே முன்பொரு கட்டுரையில் (2024 ஏப்ரல் 21 – ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’) எழுதியிருக்கிறேன்.
  • பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்றால், அனைத்து மதத்தினருடனும் குழுக்களுடனும் விரிவாக ஆலோசனைகளை நடத்தியாக வேண்டும். ‘ஒரே நாடு – ஒரே (நேரத்தில்) நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்த’லை நடத்துவதாக இருந்தால் ஏராளமான சட்டங்களுக்குத் திருத்தங்களைச் செய்தாக வேண்டும். பிரதமரின் உரையானது பிரச்சினைகளின் தொடக்கமாகவோ – முடிவாகவோ இருந்துவிடாது. மக்களைப் பிளவுபடுத்தும் பிரச்சினைகளை முன்னெடுக்கவும் அவற்றுக்கான சட்டங்களை இயற்றவும் அரசு தயாராகிறது, அது மக்களிடையே மேலும் ஒற்றுமையை சேதப்படுத்திவிடும் என்பதே உண்மை.
  • நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போதும் பிளவுபடுத்தும் பேச்சுகள் பல நிகழ்த்தப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தல் அறிக்கை குறித்து மோடி கூறினார்:
  • காங்கிரஸ் கட்சி மக்களுடைய நிலம், தங்கம் மற்றும் விலைமதிப்புள்ள பொருள்களைக் கைப்பற்றி அவற்றை முஸ்லிம்களுக்குக் கொடுத்துவிடும்;
  • காங்கிரஸ் கட்சி உங்களுடைய மங்கலசூத்திரத்தையும் (தாலி), சீதனங்களையும் (திருமணத்தில் தரும் சீர்வரிசைகள்) கவர்ந்து சென்று, அதிக குழந்தைகள் பெறுவோருக்குக் கொடுத்துவிடும்.
  • இந்து ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துகளைக் காங்கிரஸ் கைப்பற்றி – ‘அவர்க’ளுக்குக் கொடுத்துவிடும் என்று பேசினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
  • மக்களுடைய சொத்துகளைக் கைப்பற்றி, ‘ஊடுருவியவர்க’ளுக்குப் பிரித்துத் தந்துவிடும் காங்கிரஸ் என்றார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
  • ‘எருதுகளைக்கூட பிதுரார்ஜிதமாக பெற முடியாதபடிக்கு அவற்றுக்கும் வாரிசுரிமை வரி விதிக்கப்படும்’ என்று மோடி பேசியதுதான், இந்தப் பேச்சுகளிலேயே அதிகம் பேரை திடுக்கிட வைத்தது. ஊடகங்களிலிருந்து ஒருவர்கூட இந்த வகை பித்துக்குளித்தனமான பேச்சுகள் சரியல்ல என்று கூறவேயில்லை.
  • ஆளுங்கட்சியின் வேகத்தைத் தணிக்கும் விதமாக வெளியான தேர்தல் முடிவுகள்கூட பிரதமரை மட்டுப்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால், ஆட்சியை இழந்துவிடுவோம் என்ற அச்சம் காரணமாக, சில பிரச்சினைகளில் எடுத்த முடிவுகளிலிருந்து அரசு பின்வாங்கியிருக்கிறது: மூலதன ஆதாய வரிவிதிப்பில் அட்டவணை முறையில், பணப் பயனைக் கணக்கிடும் நடைமுறையை மீண்டும் அனுமதித்திருக்கிறது; வக்ஃப் மசோதாவை, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியிருக்கிறது; ஊடகங்களைக் கட்டுப்படுத்த கொண்டுவந்த ஒலிபரப்பு மசோதாவை, பலத்த எதிர்ப்பு காரணமாக திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டது; அரசின் உயர் சிறப்புப் பதவிகளுக்கு - மத்திய தேர்வாணையத் தேர்வு இல்லாமல் நேரடியாகவே நியமிக்கும் முடிவை, பிற கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நிறுத்திவைத்திருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம், பொது சிவில் சட்டம், ஒரே நாடு – ஒரே தேர்தல் ஆகியவற்றையும் இந்த அரசு ஒரேயடியாக திரும்பப் பெற்றால்தான் இந்த அரசின் பிளவுபடுத்தும் செயல் தொடர்பான அச்சங்கள் முடிவுக்கு வரும்.
  • மக்களைப் பிளவுபடுத்தி ஆதாயம் காணும் சொந்த திட்டங்களை முழுதாக வீசி எறிந்தால்தான், நாட்டை முன்னேற்றுவதற்கான நல்லதொரு ‘தொலைநோக்குப் பார்வை’ பாஜகவுக்கும் ஏற்படும்.

நன்றி: அருஞ்சொல் (25 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories