TNPSC Thervupettagam

தொலைந்த கண்டங்கள்

December 3 , 2019 1865 days 1050 0
  • கண்டங்கள் எத்தனை என்று நம்மிடம் கேட்டால் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்க்டிக்கா ஆகிய 7 கண்டங்கள் என்றே சொல்வோம். ஆனால், மண்ணியல் அறிவியலாளர்களின் பதில் வேறு மாதிரி இருக்கும்.
  • ஏனெனில், அவர்கள் நம்மைப் போல கண்ணுக்குத் தெரியும் கடலுக்கு மேற்பட்ட பரப்பை மட்டுமே பார்த்து பதில் சொல்வதில்லை. கடலுக்கு அடியிலும் பார்ப்பவர்கள் அவர்கள். அப்படிப் பார்த்துதான் தொலைந்த கண்டங்களைச் சமீப காலமாகக் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
  • இவற்றுள் நியூஸிலாந்துக்கு அடியில் இருக்கும் சிலாண்டியா (Zealandia) கண்டமும் ஒன்று. இப்படிக் கண்டுபிடிக்கப்படும் கண்டங்கள் பெரும்பாலும் குறுங்கண்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன. குறுங்கண்டம் என்றாலும் ஆஸ்திரேலியா கண்டத்தின் பரப்பளவில் பாதிக்கும் மேற்பட்ட பரப்பளவைக் கொண்டது சிலாண்டியா.
  • இதன் பரப்பளவில் 93% கடலுக்கு அடியில் இருப்பதால், இது கண்டம் என்ற அந்தஸ்தைப் பெறாமல் குறுங்கண்டம் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது.
  • 49,20,000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட இந்தக் கண்டமானது 2.3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கியிருக்கலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

கண்காணிப்பின் அடுத்த பரிணாமம்

  • மேலும் மேலும் கண்காணிப்புச் சமூகமாகிக்கொண்டிருக்கிறது சீனா! ஆம், இனிமேல் புதிய செல்பேசி வாங்குபவர்கள் தங்கள் முகத்தை ஒளிவருடல் (ஸ்கேன்) செய்து, அதனுடன் தங்கள் தேசிய அடையாள அட்டையின் தகவல்களையும் இணைக்க வேண்டுமாம்.
  • கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இந்த விதிமுறையை அமல்படுத்தியிருக்கிறது சீனாவின் தொழிலக மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்.
  • இணைய உலகில் குடிமக்களைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று அந்த அமைச்சகம் தெரிவித்திருந்தாலும், இது மக்களின் தனிப்பட்ட உரிமைகளின் மீதான தாக்குதல் என்று விமர்சிக்கப்பட்டுவருகிறது.
  • ஏற்கெனவே, இணையத்தில் அரசுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிப்பவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை சீன அரசு கைதுசெய்துவரும் சூழலில், அதன் அடுத்த கட்டமாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. சீனா முழுவதும் 20 கோடி கண்காணிப்பு கேமராக்கள் இருக்கின்றன.
  • கண்காணிப்பு கேமராக்கள் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவுக்கு முதலிடம் என்ற தகவலை வைத்துப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு அது கண்காணிப்பு சமூகமாகியிருக்கிறது என்ற உண்மை நமக்குப் புரியும்.

நஞ்சாகும் மருந்து

  • தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவுக்கு நோயுயிர்முறிகளை (antibiotics) பரிந்துரைக்கப்படுவதாகச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆயிரம் பேரில் 412 பேருக்கு நோயுயிர்முறிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
  • இதில் 0-4 வயதுள்ள குழந்தைகளுக்குத்தான் 1,000 பேரில் 636 பேர் என்ற அளவில் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஆய்வை இந்திய பொதுச் சுகாதார நிறுவனம் மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.
  • நோயுயிர்முறிகள் என்பவை அற்புதம் செய்யும் மருந்துகள்தான். அதேநேரத்தில், அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டியுள்ளது. தேவையில்லாத, அதீதப் பயன்பாடு உடலில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது.
  • இவற்றில் முக்கியமானது நோய்த் தடுப்புச் சக்தி குறைந்துபோவது. சாதாரண ஜலதோஷம், சுவாசக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகளுக்குக்கூட நோயுயிர்முறிகள் அதிகமாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.
  • மருந்து நிறுவனங்களின் வணிக லாபிதான் இதற்குப் பெருமளவில் காரணம் என்று கருதப்படுகிறது. இந்த லாபிக்குப் பலியாவது பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலன்தான்.

நன்றி: இந்து தமிழ் திசை (03-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories