- வரலாற்றை மறுக்கட்டமைக்க பண்டைய மாந்தர்கள் விட்டுச் சென்ற கற்கருவிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள், நீத்தார் நினைவுச் சின்னங்கள், உலோகப் பொருட்கள், சிற்பங்கள், கட்டிடக்கலை ஆகியவை பயன்படுகின்றன. இவை ஒரு சமூகத்தினுடைய அடிப்படை வாழ்வியல் கூறுகள், எழுத்தறிவு, மொழியறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி, வணிக தொடர்புகள், சமூக கட்டமைப்பு உள்ளிட்டவற்றை நமக்கு எடுத்துரைப்பதால் தொல்லியல் ஆய்வுகளையும், அதன் ஊடான அடிப்படைக் கல்வியையும், கலையியல் சார்ந்தபுலமாக தற்போது வரை இந்தியாவில் கற்பிக்கப்பட்டு வருகிறது.
- தொல்லியல் சார்ந்த கல்வியை கற்கின்ற மாணவர்களும் பெரும்பாலும் கலையியல் சார்ந்த புலங்களிலிருந்து வருகின்றவர்களாக இருக்கின்றார்கள். அறிவியல் தொழில்நுட்பங்கள் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்று தொன்மை வாய்ந்த இந்திய நாட்டினுடைய தொல் வரலாறையும், குறிப்பாக கற்காலம் தொட்டு பல லட்சம் ஆண்டுகளாக தொடர்ந்து இந்த மண்ணில் மனிதர்களின் வாழ்வியல் தடங்களை கொண்டிருக்ககூடிய தமிழ்நாடு போன்ற பகுதியினுடைய தொன்மை வரலாற்றை மிகத் துல்லியமாக கூற முடியும்.
- தொல்லியல் கள ஆய்வுகள் இன்றைக்கு இருக்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பங்களான ஆளில்லா விமானங்கள் (Drone or Unmanned Aerial Vehicle), GIS (Geographical Information System), GPS (Global Positioning System) உள்ளிட்டவை வாயிலாக மிகக் குறைந்த காலத்தில், முப்பரிமாண படங்களோடு வழங்கி கள ஆய்வில் விரைவாக அகழாய்வுக்கான இடத்தை தேர்வு செய்வதற்கு பயன்படுகின்றன. GPR (Ground Penetrating Radar) கருவி சென்சார் மற்றும் கணினி உதவியுடன் மண்ணுக்குள் ஊடுருவிச் சென்று பூமிக்குள் இருக்கின்ற தொல்லியல் எச்சங்கள் பாதிக்கப்படாதவாறு அதன் இருப்பிடங்களை காண்பிக்கின்றன.
- அகழாய்வுகளில் எடுக்கப்படுகின்ற பொருட்கள் பல்வேறு வகையான அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த ஆய்வுகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களாக இருக்கக்கூடிய Raman Spectroscopy, Electro Magnetic Induction Technique, Guided Wave Testing, X Fluorescence Analysis உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை தொல்பொருட்களினுடைய உட்கட்டமைப்பு, பல்வேறு கனிம பொருட்கள் பூமிக்கு அடியில் நிலவியல் சூழலால் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றன என பல வகையிலும் தொன்மைச் சமூகத்தின் படிநிலை வளர்ச்சிகளை அறிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கின்றன.
- ஒலி மாசால் பழமையான கட்டிடங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கண்டறிந்து அவற்றை சீரமைப்பதற்கு பயன்படுத்தப்படக் கூடிய Accuastic Emission Technique தொழில்நுட்பம் தொன்மை பண்பாட்டு எச்சங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுவதற்கு வழிவகுக்கின்றன. இவை அனைத்தும் தொல் மாந்தர்களுடைய பரிணாம வளர்ச்சி, சூழலில் மாற்றங்கள், சமூக கட்டமைப்பு, வணிகத் தொடர்புகள், தொழில் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிகளையும் அறிந்து கொள்வதற்கு பேருதவியாக பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.
- இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் கல்வியை கலையியல் கல்வி என்பதைவிட, அறிவியல் சார்ந்த கல்வி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். தொல்லியல் பாடத்திட்டத்தில் பல்வேறு அறிவியல் தொழில்நுட்பங்களை இணைத்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றபொழுது, அவர்கள் அத்தகைய தொழில்நுட்பங்களை பயன்
- படுத்துவதற்கும், அது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுவதற்கும் வழிவகுக்கும். மேலும் அறிவியல் பாடப் பிரிவுகளில் தொல்லியல் தொடர்பான பாடங்களை இணைப்பது என்பது வளர்ச்சி அடைந்த, மேம்பட்ட தொழில்நுட்பங்களை கற்கின்ற மாணவர்கள் அவற்றை தொல்லியல் ஆய்வுகளுக்கு பயன்படுத்தி வரலாற்று ஆய்வில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, குறிப்பாக தமிழ் மாணவர்கள், ஆய்வாளர்கள் தொன்மைத் தமிழகத்தின் தொல்லியல் தரவுகளை மீட்டெடுத்து, காலத்தை கணித்து தமிழினத்தின் பண்பாட்டுப் பெருமையை பரவச் செய்வதற்கு வழிவகை ஏற்படும் என்பது திண்ணம்.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 06 – 2024)