TNPSC Thervupettagam

தொல்லியல் கல்வியைப் பரவலாக்குவோம்

November 7 , 2023 428 days 424 0
  • பல்வேறு கலைகள், கலாச்சாரங்களின் சங்கமமாக விளங்கும் இந்தியா, பன்முக இனங்களின் தேசம். ஆரம்பக் காலங்களில் ஆங்கிலேய தொல்லியல் ஆய்வாளர்களாகக் கருதப்பட்ட ராபர்ட் பூரூஸ்புட், அலெக்சாண்டர் கன்னிங்காம், மார்டிமர் வீலர், சர். ஜான் மார்ஷல் போன்றவர்களால் இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிற்காலத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வாளர்களான ஆர்.டி. பானர்ஜி, எச்.டி. சங்காலியா, கே.என். தீட்சித் போன்றவர்களுடைய தொல்லியல் ஆய்வுகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன.

தொல்லியல் ஆய்வு முடிவுகள்

  • ஒரு தேசம் தனது தாய்மொழியையும், அதன் தொன்மை, செழுமை, உள்ளார்ந்த மொழியியல் கூறுகள், அழகியல் ஆகியவற்றை முன்னிறுத்த வேண்டும். இதன்மூலம் தேசத்தின் வரலாற்று உண்மைகளை மக்கள் அறியச் செய்யும்போது, அத்தேசம் வளர்ச்சி பெறும். இந்தியாவில் பொதுவாகத் தொல்லியல் ஆராய்ச்சி தொடர்பான முடிவுகள், அது தொடர்புடைய விவாதங்கள் ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ நடைபெறுகின்றன.
  • அறியப்படாத அல்லது புரிந்துகொள்ள முடியாத மொழியில் தொல்லியல் ஆய்வுகளை வெளியிடுவது அல்லது விவாதிப்பது, தாய் மொழிவழியில் கல்வி பயின்று, அதன் போக்கில் தன் வாழ்க்கைக் கூறுகளை அமைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு தொல்லியல் தரவுகளின் உள்ளார்ந்த கருத்துகளை அறிந்துகொள்வது இயலாத ஒன்று.
  • மேலும், தொல்லியலில் உள்ள தனித்துவமான சொற்களின் விளக்கத்தை அறிந்துகொள்வதில் இடர்ப்பாடுகள் ஏற்படும். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அதன் ஆய்வு முடிவுகளை தமிழ், ஆங்கிலத்தில் வெளியிட்டு ஆய்வாளர்களுக்கு மிகப்பெரிய ஆய்வு தளத்தை உருவாக்கித் தந்திருப்பது போற்றுதலுக்குரியது.

மக்களுக்கு விழிப்புணர்வு

  • தொல்லியல் துறையில் மொழிபெயர்ப்பு ஆய்வுகளை மேம்படுத்துவதில் மின்னணு தொடர்பும் ஊடகத்தின் பங்கும் முக்கியம். ஒலி, ஒளி வடிவங்களில் பல மொழிகளில் உள்ள தகவல்களை உடனடியாக மொழிபெயர்க்கும் மென்பொருள்கள் உள்ளன. ஆனால், இதில் சிக்கல்கள் இருப்பதும் உண்மைதான். ஏனெனில் தொல்பொருள் ஆய்வினுடைய அடிப்படை கூறுகளை சில நேரம் இவை தவறாக மொழிபெயர்த்து விடுகின்றன. ஆதலால், மொழிபெயர்க்கப்படுகிற தொல்லியல் தரவுகளைச் சரியாக மறுவாசிப்புக்கு உட்படுத்தி புரிந்துகொள்வது அவசியம்.
  • தொல்பொருள் ஆய்வுகளின் செய்திகளை வெளியிடும் வகையில் தொலைக்காட்சி ஊடகங்கள் குறைந்த எண்ணிக்கையில் பார்வையாளர்களை ஈர்க்கிற சூழல் ஏற்பட்டாலும், சமூகத்தின் மீதான அக்கறை, பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்களும் தொல்லியலும்

  • தொல்லியல் துறையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், எந்த வகையில் அவர்களுக்கு தொல்லியல் தகவல்களைக் கொண்டு சேர்ப்பது? அதை விவாதிக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கிறார்கள். மேலும் பயிற்சி அளிக்கப்பட்ட பாடங்களுடைய விவரங் களைத் தேட வழிவகுக்க வேண்டும். கல்விச் சமூகத்தினரிடையே பரிமாறப்படும் கோட்பாடுகளை கேள்விக்கு உட்படுத்துவதன் மூலமே மாணவர்கள் தரப்பிலிருந்து கேள்விகளை இடுகையிட தீர்மானிக்க முடியும்.
  • நாடு முழுவதும் பரவலாகக் காணப்படும் பல மொழிகளை புரிந்துகொள்வதே இந்தியா வில் உள்ள மாணவர்களின் பிரச்சினை. இந்தச் சூழ்நிலை மாற்றப்பட வேண்டும். தொல்பொருள் ஆய்வுகளில் மாணவர்களுக்கு அதிக ஈடுபாட்டை உண்டாக்க, ஒரே வழி ஆய்வு நடத்தப்பட்ட இடங்களை அகழ்வாராய்ச்சி செய்வதாகும். இந்த முறையில் மாணவர்கள் தொல்லியல் தளத்தின் முழுமையான கலாச்சாரம், மண்ணடுக்கு வரிசைகளைப் புரிந்துகொள்ள முடியும்.
  • தொல்லியல் ஆய்வுகள், ஆராய்ச்சிகளின் சமீபத்திய போக்குகளுக்கு தேவையான, பொருத்தமான புத்தகங்களைப் படிப்பதில், மாணவர்களைத் தூண்டுவதோடு, தங்களைத் தாங்களே தயார் படுத்திக்கொள்வதும் ஆசிரியர்களின் தலையாய கடமை. மாணவர்கள் கோட்பாடுகளைக் கேள்வி கேட்பதும், ஆராய்ச்சி பணிகளில் இருந்து பெறப்பட்ட முடிவுகள், அவற்றை மறுவிளக்கம் செய்து தொல்பொருள் ஆய்வுத்தளத்தில் தரமான ஆராய்ச்சி வெளியீடுகளைக் கொண்டு வருவதும் அத்தியாவசிய தேவை.

மின்னணு ஊடகங்களில் தொல்லியல்

  • வகுப்பறையில் கற்பித்தல் மட்டுமே மக்களிடையே தொல்லியல் கள முக்கியத்துவத்தை கட்டமைக்காது. மாறாக தொல்லியல் அடிப்படைகளை ஆராய்ந்து, அறியச் செய்யும் செயல்முறையின் மூலமே எட்டாதவர்களையும் தொல்லியல் ஆய்வுகள் சென்றடையும்.
  • தொல்லியல் துறையைச் சமூகத்துக்கு மிகவும் எளிமையாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும் கட்டமைப்பது அறிஞர்கள், மாணவர்களின் கடமை. தொல்பொருள் ஆய்வுகள் சிறு குழுவினரிடையே விவாதிக்கும் கருத்துக்கள், ஆராய்ச்சி வெளியீடுகள் என்பதோடு நின்றுவிடக் கூடாது. இன்னும் புத்தகங்கள், பத்திரிகைகள் போன்ற அச்சிடப்பட்ட பதிப்புகள் மட்டுமே பாடத்தைப் பொதுநோக்குடையதாக மாற்ற முடியாது.
  • தொலைக்காட்சி, இணையம் போன்ற மின்னணு ஊடகங்கள், சமீபகாலமாக ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் சில நொடிகளில் பொதுமக்களை சென்றடையும் திறனை கொண்ட தளங்களாக இருப்பதால், தொல்லியல் துறையைப் பொதுமக்களிடையே எளிதில் கொண்டு சேர்க்க முடியும். மேலும் இந்தியாவில் தொல்லியல் உயர்கல்வி ஒரு பகுதியாக மட்டுமே உள்ளது. தொல்லியல் பற்றி அதிகம் அறியாத பள்ளி மாணவர்களுக்கு இது மிகப்பெரும் தடையாக உள்ளது.
  • பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் தொல்லியல் பாடத்தை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும். ஒரு பகுதியினுடைய பண்பாட்டு வரலாற்றைப் பாதுகாப்பதில் பொது மக்களுடைய பங்கு, அவர்களை கள ஆய்வுகளில் ஈடுபடுத்துவதன் மூலமே சாத்தியப்படும். இந்த அருஞ்செயலில் அரசு தொல்லியல் துறை, கல்வி நிறுவனங்கள், பண்பாட்டு ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஈடுபடும்போது நம் தொன்மையான வரலாறு உலக அரங்கில் தனித்துவமான இடத்தைப் பெறும்.

நன்றி: இந்து தமிழ் திசை (07 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories