- தொழில் துறையில் பட்டியல் சாதி - பட்டியல் பழங்குடி மக்களின் பங்களிப்பு பெரும்பாலும் கடைநிலைப் பணியாளர்களுக்கு உரியதாகவே இருந்துவந்த சூழலில், தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கும் திட்டம் நம்பிக்கையளிக்கும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
- முதலீட்டைத் திரட்டுவது, வங்கியில் கடன் பெறுவது என ஆரம்பக் கட்டத்திலேயே அம்மக்களின் முயற்சி முடிவுக்கு வருவது வழக்கமாக இருந்துவந்த நிலையில், 2023 டிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளன்று, அவரது பெயரிலேயே தமிழ்நாடு அரசு தொடங்கிய தொழில் முன்னோடிகள் திட்டம் இந்த மாற்றத்துக்கு வழிவகுத்திருக்கிறது.
- பட்டியல் சாதி - பட்டியல் பழங்குடி மக்கள் தொழில் தொடங்குவதற்கும் ஏற்கெனவே நடத்தும் தொழிலை விரிவுபடுத்துவதற்கும் முதலீடு கிடைக்க ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டம்’ வழிசெய்கிறது. இதன் மூலம் 1,303 பேர் இதுவரை முதலீட்டு மானியமாக ரூ.134.86 கோடி பெற்றுள்ளதாகத் தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்துள்ளது.
- தொழில் வளர்ச்சியின் ஊடாகச் சமூக நீதியை வளர்த்தெடுக்கும் இத்திட்டம், குறுகிய காலத்திலேயே பயனாளிகளுக்கு உறுதுணை ஆகியிருக்கிறது. வேளாண்மையுடன் நேரடித் தொடர்புடைய தொழில்களுக்கு ஏற்கெனவே கடன் வழங்கும் திட்டங்கள் இருப்பதால், அவை தவிர, 50க்கும் மேற்பட்ட தொழில்களைத் தொடங்க இத்திட்டம் வாய்ப்பளிக்கிறது.
- சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் சூழலை இத்திட்டம் உருவாக்கியுள்ளது. இதன்படி, ஒரு தொழிலுக்கான திட்ட மதிப்பீட்டில் 35%ஐத் தமிழ்நாடு அரசு மானியமாக வழங்குகிறது. மீதமுள்ள 65% தொகை தேசிய வங்கிகளிடமிருந்து குறைந்த வட்டியில் கடனாகப் பெற்றுத் தரப்படுகிறது.
- ரூ.10 லட்சம் முதல் 1.5 கோடி வரை முதலீடாகப் பெற முடியும். 18-55 வயது வரம்புக்கு உள்பட்டவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். வட்டியை ஒழுங்காகச் செலுத்துவோருக்கு வட்டித்தொகையில் 6% திருப்பி அளிக்கப்படுவது இதன் இன்னொரு சிறப்பம்சம்.
- வங்கிக் கடனை அடைப்பதற்கு 10 ஆண்டுகள் வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இத்திட்டம் அறிவிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் 127 பேருக்கு மொத்தம் ரூ.45 கோடி முதலீடாக வழங்கப்பட்டது. முதல் நாளிலேயே 100 பயனாளிகளுக்கு ஒப்புதல் ஆணை கிடைத்தது.
- 15 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, வாடிக்கையாளர் தொடர்பு, வங்கிகளை அணுகுவது, சந்தைப்படுத்துதல், அடுத்த கட்டத்தை எட்டுவது உள்பட அனைத்து நிலைகளிலும் அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படுவது இத்திட்டத்தின் தொழில் நேர்த்திக்குச் சான்று.
- 2016இல் மத்திய அரசு கொண்டுவந்த ‘தேசிய பட்டியல் சாதி - பட்டியல் பழங்குடி மக்களுக்கான மையத் திட்டம்’, இம்மக்களுக்குத் தொழில் தொடங்குவதற்கான தொழில்நோக்கிலான ஒத்துழைப்புடன், அவர்களின் தயாரிப்புகளைக் கொள்முதல் செய்யவும் வழிவகுக்கிறது.
- அரசுத் துறைகள் சார்பில் நடைபெறும் கொள்முதல்களில் சிறு-குறு, நடுத்தரத் தொழில்முனைவோரின் உற்பத்திப் பொருள்களுக்கு 25 சதவீதமும் அவர்களில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு 4 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அத்தகைய கொள்முதல் வாய்ப்புகள், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டத்திலும் வலுவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 1,303 பயனாளிகளில் 288 பேர் பெண்கள் என்பது திட்டத்தின் செயல்பாட்டை இன்னும் அர்த்தம் உள்ளதாக்குகிறது. தொழில் துறையிலும் சமூக நீதியைச் செயல்படுத்தும் தமிழ்நாட்டு அரசின் பயணம் சிறக்கட்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 05 – 2024)