TNPSC Thervupettagam

தொழில் வளர டாடா காட்டிய வழி

September 8 , 2024 132 days 155 0

தொழில் வளர டாடா காட்டிய வழி

  • தொழிலதிபர் ஜாம்ஷெட்ஜி டாடா, 150 ஆண்டுகளுக்கு முன்னால், மஹாராஷ்டிரத்தின் நாகபுரி நகரில் மிகப் பெரிய நூற்பு, நெசவு, பருத்தி இழை உற்பத்தி ஆலையைத் தொடங்கினார். ‘மத்திய பாரத நூற்பு, நெசவு, உற்பத்தி ஆலை’ என்ற அதன் பெயரை பிறகு ‘எம்ப்ரஸ் மில்ஸ்’ (மகாராணியார் ஆலை) என்று 1877 ஜனவரி 1இல் மாற்றினார். இந்த ஆலையில் புதுமைகளையும் புதிய தொழில்நுட்பத்தைத் திறமையாகப் பயன்படுத்தும் முறையையும் வெற்றிகரமாகக் கையாண்டார். பிற்காலத்தில் அவர் நடத்திய இரும்பு, உருக்கு, மின்னுற்பத்தி ஆலைகளுக்கான வலுவான அடித்தளத்தை இந்த ஆலையில் பெற்ற அனுபவத்தைக் கொண்டே வடிவமைத்தார்.
  • நாகபுரியில் அவர் கையாண்ட உத்தியே இன்றளவும் டாடா தொழில் குழுமத்தின் தனி அடையாள முத்திரையாகத் திகழ்கிறது. இந்தியாவில் உள்ள தொழில் குழுமங்களில் மிகுந்த மதிப்பும், வெற்றிகரமான செயல்பாடும் உள்ள - தொடர்ச்சியாக இயங்கும் கண்ணியமான தொழில் குழுமம் டாடாவுடையது.

தொழில்நுட்ப இணைப்பு

  • எம்ப்ரஸ் மில்ஸைத் தொடங்குவதற்கு முன்னால் சின்ச்போக்லி என்ற ஊரில் ‘அலெக்ஸாண்ட்ரா மில்ஸ்’ என்றொரு ஆலையைத் தொடங்கினார். பிறகு அதை விற்றுவிட்டு, இங்கிலாந்தில் பருத்தித் தொழிலை எப்படி வெற்றிகரமாக மேற்கொள்கிறார்கள் என்று விரிவாக அறிய அந்த நாட்டுக்குச் சென்றார். நல்ல தரத்தில் நூல்களையும் ஆடைகளையும் தயாரிப்பது எப்படி என்று அங்கே கற்றுக்கொண்டார். அத்துடன், இயந்திரங்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம், தொழிலாளர்களையும் தொழில்நுட்பம் தெரிந்தவர்களையும் எவ்வாறு வேலைக்கு அமர்த்துவது என்பதையும் தெரிந்துகொண்டார்.
  • நாகபுரிக்கு திரும்பிவந்து அவர் மேற்கொண்ட ஆலை உற்பத்தி, மிகவும் உற்சாகமாக முதலில் அமையவில்லை. நூல் உற்பத்தியில் அமெரிக்க ஆலைகள் வளையவடிவத்திலான இழைப்புச் சட்டங்களைப் பயன்படுத்துவதைப் பிறகு அறிந்தார். அவை உற்பத்தியளவைப் பெருக்க உதவுவதுடன் சிக்கல் இல்லாமல் உற்பத்தி நடைபெற உதவுவதை அறிந்து அவற்றையே தன்னுடைய ஆலையிலும் பயன்படுத்தினார். அப்போது இங்கிலாந்தில்கூட அந்த இழைச் சட்டங்களை ஆலைகளில் பயன்படுத்தத் தொடங்கவில்லை. இதனால் உற்பத்தி பல மடங்கு பெருகியது.
  • புதிய தொழில்நுட்ப உத்திகளைத் தொடர்ந்து கவனித்து அவற்றையும் இணைத்தால் எவ்வளவு செலவாகும், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைக் கணித்து தொழில்நுட்பங்களைப் புதுப்பிக்கத் தயங்கக் கூடாது என்று இந்தியத் தொழில் துறைக்கான பாடமாக இதை விட்டுச் சென்றிருக்கிறார் டாடா.

போக்குவரத்தும் கொள்முதலும்

  • ஒரு பொருளின் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருளை அல்லது பொருள்களை எளிதில் கொள்முதல் செய்து ஆலைக்கு அதிக போக்குவரத்து செலவில்லாமல் கொண்டுவருவது முக்கியம். அவ்வாறே உற்பத்தி செய்யும் பொருளைச் சந்தைக்குக் கொண்டுசெல்லவும் ஏற்றுமதி செய்யவும் பெரிய நகரமும் துறைமுகங்களும் அருகில் இருப்பது அவசியம். இந்த இரண்டையும் டாடா தொடக்கம் முதலே கவனித்துச் செயல்படுத்தினார்.
  • பருத்தி, நிலக்கரி, தண்ணீர் இந்த மூன்றும் அவர் காலத்தில் நாகபுரியில் அபரிமிதமாகக் கிடைத்தன. எனவே, எல்லோரையும்போல பம்பாய் நகரத்தில் தொடங்காமல், நாகபுரியில் தொடங்கினார். “நாமெல்லாம் பம்பாயில் ஆலைகளை நடத்துகிறோம், டாடா மட்டும் நாகபுரிக்குப் போய்விட்டார்” என்று அவருடைய சமகாலத்துத் தொழிலதிபர்கள் அவரைக் கேலிசெய்தனர். ஆனால், டாடா நிறுவனத்துக்கு நாகபுரியில் அதிக லாபம் கிடைத்தது.
  • இப்போது சூழல் பாதுகாப்புக்காக கரிப்புகை வெளியீட்டைக் குறைக்க வேண்டும் என்கின்றனர். மூலப்பொருள்களை ஒரே உற்பத்தி கேந்திரத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் இப்போது பிரச்சினையாகிக்கொண்டிருக்கிறது. இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வை டாடா தன்னுடைய காலத்திலேயே நாகபுரியில் ஆலை நடத்தியதன் மூலம் கண்டிருக்கிறார்.

சுதேசி உணர்வு

  • 19வது நூற்றாண்டின் நடுப்பகுதியில் நாடு முழுக்க சுதேசி இயக்கமும் சுதேசித் தொழில்களையும் உற்பத்திப் பொருள்களையும் ஆதரிக்க வேண்டும் என்ற உணர்வும் கொழுந்துவிட்டு எரிந்தது. கோபால் ஹரி தேஷ்முக், சுவாமி விவேகாநந்தர், மகாதேவ் கோவிந்த ரானடே, தாதாபாய் நௌரோஜி, பால கங்காதர திலகர் மற்றும் பலரும் சுதேசி இயக்கத்துக்கு வலுசேர்த்தனர். தொழிலதிபர் டாடாவும் இதில் முழு முனைப்புடன் பங்கேற்றார்.
  • நம்மை காலனியாக சிறைப்பிடித்தவர்கள் தொழில்நுட்பத்தால்தான் அதைச் சாதிக்கின்றனர் என்பதால் நவீனத் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதிலும் கையாள்வதிலும் நாமும் முன்னிலை வகிக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டார்.
  • இங்கிலாந்தில் உள்ள எல்லாவிதமான ஆலைகளையும் சுற்றிப்பார்த்த டாடா, அவற்றைப் போல இந்தியாவிலும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஜவுளித் துறையில், ‘இந்தியாவிலேயே தயாரிக்க முடியும்’ என்று முதலில் நிரூபித்த டாடா, உலக அளவில் தொழில் வளர்ச்சியில் முன்னோடியாகவும் திகழ்ந்தார்.

தொழிலாளர் நலம்

  • புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவது, மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்யும் அமைப்புகளை வலுவாக ஏற்படுத்துவது ஆகியவற்றுடன் நாகபுரியில் டாடா மேற்கொண்ட இன்னொரு முக்கியமான செயல் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு நல்வாழ்வுக்கான திட்டங்களையும் இணைத்தே செயல்படுத்தியது. தொழிலாளர்கள் ஆலைகளில் கவனச் சிதைவு இன்றி உற்பத்தியில் ஈடுபட வேண்டுமென்றால் குடும்பத்தைப் பற்றிய கவலை அவர்களுக்கு இருக்கக் கூடாது என்று தீர்மானித்த டாடா, அந்த நோக்கில் சில நடவடிக்கைகளை எடுத்து முன்னுதாரணர் ஆனார்.
  • தொழிலாளர் குடும்பங்கள் இலவசமாக சிகிச்சை பெற மருத்துவமனைகளைத் திறந்தார், அவர்களுடைய குழந்தைகள் தரமான கல்வி கற்க பள்ளிக்கூடங்களை நிறுவினார், அவர்களுக்குச் சுகாதாரமான – பாதுகாப்பான குடியிருப்புகளை உருவாக்கினார், பாதுகாக்கப்பட்ட குடிநீர், மின்சார இணைப்பு, சாலை வசதி, விளையாட மைதானம், பொழுதுபோக்க பூங்காக்கள் ஆகியவற்றை அளித்தார். உலகிலேயே ‘சமூக முதலாளியம்’ என்ற கொள்கை ஏற்படுவதற்கு முன்னதாகவே அதற்குச் செயல்வடிவம் கொடுத்தார்.
  • முதலாளிய சமூகத்தில் மூலதனம் என்பது தனிநபருக்குச் சொந்தமானது, அவரே தொழில் நடத்துகிறார், தொழிலில் கிடைக்கும் லாபம் முழுவதும் அவருக்கே சென்றுசேர்கிறது; கம்யூனிஸ நாடுகளில் அனைத்துவகை உற்பத்தி அலகுகளும் அரசுக்கே சொந்தம், அதில் கிடைக்கும் வருவாய், லாபம் இரண்டையும் அரசே எடுத்துக்கொள்கிறது. முதலாளிய உற்பத்தி முறையில் செல்வம் மிகச் சிலரிடமே குவிவதாகவும் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால், 100% முதலாளியமும் 100% கம்யூனிஸமும் எங்கும் இப்போது இல்லை. இவ்விரண்டும் வெவ்வேறு விகிதங்களில் கலந்தே காணப்படுகிறது.
  • மிக உயரிய சமூக நோக்கங்களோடு கூடிய முதலாளியம் என்ற கலப்புமுறை நாகபுரி பருத்தி ஆலைகளில்தான் முதலில் தொடங்கியது, அது டாடா தொழில் குழுமத்தின் தனி அடையாளமாக இன்றும் தொடர்கிறது. அறிவியல் – தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய நிறுவனத்தில் கிடைத்த தொகையைக் கொண்டு இந்திய அறிவியல் கழகத்தை அவர் தொடங்கினார். நவீனத் தொழில்நுட்பங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்துடன் அவருடைய சுதேசி உணர்வும், மனிதவள ஆற்றலை மனிதாபிமானத்துடன் நடத்திய பண்பும், மூலப்பொருள் கொள்முதலுக்காக அவர் ஏற்படுத்திய அமைப்பும் நிர்வாக இயந்திரமும் இனி வரக்கூடிய தொழில்முனைவோர்களுக்கும் நல்ல முன்னுதாரணங்கள்.
  • அறிவுசார் சொத்துடைமை விவகாரத்தில் உலகின் பிற பகுதிகளில் கடுமையான சட்டப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தியாவில் போதிய விழிப்புணர்வு இல்லை. இந்தியர்களின் பாரம்பரிய அறிவுக்குக் காப்புரிமை கோருவதிலும் பயன்படுத்துவதிலும் புதிய தொழில்முனைவோர் அக்கறை செலுத்த வேண்டும். எல்லாத் தொழில் குழுமங்களும் வளர்ச்சி - ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மனிதாபிமானத்தோடு தொழில் வளர்ச்சியில் ஈடுபட வேண்டும்.
  • தொழில் நிறுவனங்களுக்குச் சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கில் சட்டம் இயற்றியதும் செலவுக்குக் குறிக்கோள் நிர்ணயித்ததும் சமீபத்திய நிகழ்வுகள். ஆனால், டாடா இதை எப்போதோ தொடங்கிவிட்டார். அவர் செய்த செயல்கள் இந்திய சமூகத்துக்கு எப்போதும் பெரிய ஊக்குவிப்பு சக்தியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும்.

நன்றி: அருஞ்சொல் (08 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories