TNPSC Thervupettagam

தொழில் வளர்ச்சிக்குத் துணைநின்ற இடதுசாரி!

August 13 , 2024 152 days 136 0

தொழில் வளர்ச்சிக்குத் துணைநின்ற இடதுசாரி!

  • கொல்கத்தாவில் ஆகஸ்ட் 8 இல் மறைந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் இடதுசாரித் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா (80), மேற்கு வங்க அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர். 2000 இல் ஜோதி பாசு பதவி விலகியதைத் தொடர்ந்து முதல்வரான புத்ததேவ், 2001, 2006 சட்டமன்றத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மகத்தான வெற்றி தேடித் தந்தவர்.
  • இடதுசாரி அரசுகள் தொழில் துறை வளர்ச்சிக்கு எதிரானவை என்ற பிம்பத்தை மாற்றப் பெரும் பிரயத்தனம் செய்தவர் புத்ததேவ். வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவரும்கூட. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகியவை மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
  • அந்நிறுவனங்களுக்கு நிலங்கள் வழங்கவும் முன்வந்தவர். 2010இல் மேற்கு வங்கத்தின் தொழில் துறை முதலீடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமானது (ரூ.50,000 கோடி) என்று அவரே பெருமிதத்துடன் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தொழில் துறை மீதான புத்ததேவின் ஆர்வம் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் ஆதிக்கத்துக்கு முடிவுரை எழுதிவிட்டது.
  • 2007இல் கிழக்கு மேதினிபூர் மாவட்டத்தின் நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காகவும், 2008இல் ஹூக்ளி மாவட்டத்தின் சிங்கூரில் டாட்டா நிறுவனத்தின் நானோ கார் தயாரிக்கும் தொழிற்சாலைக்காகவும் நிலங்களை ஒதுக்க அவரது அரசு மேற்கொண்ட முயற்சிகள், பெரும் மக்கள் போராட்டத்துக்கு வித்திட்டன. இந்தப் போராட்டங்களை முன்னெடுத்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி, 2011 சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அரசை வீழ்த்தி அரியணை ஏறியது.
  • முன்னதாக சிங்கூர், நந்திகிராம் விவகாரத்தில் தமது அரசு தவறிழைத்துவிட்டதாக புத்ததேவ் ஒப்புக்கொண்டார். எனினும் தமது தவறுகளைச் சரிசெய்துவிட்டதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கையுடன் பேசினார். ஆனால், அவரது நம்பிக்கை பலிக்கவில்லை. அந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்டை எனக் கருதப்படும் ஜாதவ்பூர் தொகுதியில் புத்ததேவ் தோல்வியடைந்தார். அவரது தோல்வியுடன் மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு கால இடதுசாரி அரசும் முடிவுக்கு வந்தது.
  • நீண்ட கால அரசியல் வாழ்க்கைக்குப் பிறகும் ஆடம்பரம் புத்ததேவை அண்டவில்லை. கார், மாளிகையெல்லாம் அவரிடம் இல்லை. இரண்டே அறைகள் கொண்ட அரசு அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் இறுதிவரை வசித்தார். அவருடைய மாதச் சம்பளமும் மார்க்சிஸ்ட் கட்சியின் நிதியிலிருந்தே வழங்கப்பட்டது.
  • 2011 தேர்தலில் கிடைத்த படுதோல்விக்குப் பின்னர் பல நாள்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மெளனம் காத்த புத்ததேவ், கொல்கத்தாவில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசியபோது, “செங்கொடி எப்போதும் உயரப் பறக்க வேண்டும்” என்று முழங்கினார். அதேபோல மேற்கு வங்கத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது என்பதற்கு அவரது இறுதிச் சடங்குக்கு வந்திருந்த மக்கள் கூட்டமும் அனைத்துக் கட்சியினரின் பங்கேற்புமே சாட்சி.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories