TNPSC Thervupettagam

தொழில்நுட்ப வளர்ச்சி தொழிலாளர் நலனைக் கெடுத்துவிடக் கூடாது!

September 10 , 2024 128 days 93 0

தொழில்நுட்ப வளர்ச்சி தொழிலாளர் நலனைக் கெடுத்துவிடக் கூடாது!

  • பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏற்படுத்திவரும் தாக்கம் குறித்த ஆய்வுகள் நடைபெற்றுவரும் சூழலில், ஏஐ-யின் வருகையால் தொழிலாளர்களின் வருமானத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்மறை விளைவுகள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) வெளியிட்டிருக்கும் சமீபத்திய ஆய்வறிக்கையில், உலக அளவில் தொழிலாளர் வருமான அளவு தேக்கமடைந்திருப்பதற்கு, ஏஐ ஒரு முக்கியக் காரணி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  • செப்டம்பர் 4இல், ஜெனீவாவில் உள்ள ஐஎல்ஓ-வின் தலைமையகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்டம் - செப்டம்பர் 2024’ அறிக்கை, பல்வேறு நாடுகளில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, குறைந்த சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைப் பதிவுசெய்திருக்கிறது.
  • 36 நாடுகளில், கடந்த இரண்டு தசாப்தங்களில் தானியங்கித் தொழில்நுட்பம், ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியிருக்கும் தாக்கம் குறித்து ஆய்வு செய்திருக்கும் ஐஎல்ஓ, இந்தக் கண்டுபிடிப்புகள் தொழிலாளர் உற்பத்தித் திறனையும், ஒட்டுமொத்த உற்பத்தியையும் தொடர்ச்சியாக அதிகரித்து வந்திருந்தாலும், அவை தொழிலாளர் வருமான அளவைக் குறைத்திருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது. கல்வி, பயிற்சி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்காமல் உலக அளவில் ஏராளமான இளைஞர்கள் தவித்துவருவதாகவும் ஐஎல்ஓ அறிக்கை கவலை தெரிவிக்கிறது.
  • குறிப்பாக, 2004 முதல் 2024 வரையிலான கடந்த 20 ஆண்டுகளில், உலக அளவில் தொழிலாளர் வருமான அளவு 1.6% குறைந்திருப்பதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த விகிதம் குறைவானதாகத் தோன்றினாலும், உலக அளவில் இந்த இழப்பின் மதிப்பு 2.4 ட்ரில்லியன் டாலர்கள் என்பது கவனிக்கத்தக்கது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தொழிலாளர் வருமான அளவு 40% வரை குறைந்ததாகக் கூறும் இந்த அறிக்கை, ஏற்கெனவே இருந்துவந்த ஏற்றத்தாழ்வைப் பெருந்தொற்றுக் கால நெருக்கடி மேலும் தீவிரப்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டுகிறது.
  • 2030ஆம் ஆண்டுக்குள் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை (எஸ்டிஜி) எட்டக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கான பயணம் மிகவும் தாமதமாவதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. தானியங்கி-ஏஐ தொழில்நுட்பங்களின் வருகையால், அதிக வருமானம் கொண்ட வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாகத் தொழில் துறையின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. எனினும், இந்தத் தொழில்நுட்பங்கள் காரணமாக ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு போன்றவையும் நடைமுறைப்படுத்தப்படுவதால் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பதையும் மறுக்க முடியாது.
  • இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் ஐஎல்ஓ-வின் துணைப் பொது இயக்குநர் செலெஸ்ட் டிரேக், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, அனைவரும் நிலைத்த வளர்ச்சியைப் பெறுவதற்கான பாதையை உருவாக்குவது அவசியம் எனக் குறிப்பிட்டிருக்கிறார். குழுவாக இணைந்து இயங்குவதற்கான உரிமை, பேரம் பேசுவதில் ஒருங்கிணைப்பு, சிறப்பான தொழிலாளர் நிர்வாகம் என்பன உள்ளிட்ட பொருளாதாரப் பலன்களைத் தொழிலாளர்களுக்குச் சமமாகப் பகிர்ந்தளிக்கும் வகையிலான கொள்கைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
  • டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கிவரும் மனித வளர்ச்சிக்கான நிறுவனத்துடன் இணைந்து, 2024 மார்ச் 26இல் ஐஎல்ஓ வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் வேலை கிடைக்காதவர்களில் - இளைஞர்களின் எண்ணிக்கை 82.9% ஆக அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பிரச்சினை பல்வேறு வடிவங்களில் நீடிப்பதையே ஐஎல்ஓ-வின் சமீபத்திய அறிக்கை உறுதிப்படுத்துகிறது. தொழிலாளர்களைக் காப்பதில் அரசுகள் தீவிர முனைப்புக் காட்ட வேண்டிய தருணம் இது!

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories