- அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் என்கிற இடத்தில் 1998 மே 11 அன்று "சக்தி' என்னும் அணுவெடிப்புச் சோதனை நடந்தது. அந்த சோதனையில் டாக்டர் ராஜா ராமண்ணா, ஆர். சிதம்பரம், டாக்டர் அப்துல் கலாம் ஆகியோருடன் "பாபா அணு ஆராய்ச்சி மைய' விஞ்ஞானிகளும், ஜோத்பூர் பாதுகாப்புத் துறை ஆய்வக நிபுணர்களும் இணைந்து செயல்பட்டனர்.
- அரபிக்கடல் பக்கம் வேண்டுமென்றே நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களை நோக்கி அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களின் கவனத்தைத் திசைமாற்றிவிட்டு, ரகசியமாக பொக்ரான் ஆயத்தப் பணிகள் நடைபெற்றன.
- "வெள்ளை மாளிகை', "தாஜ் மகால்', "கும்பகர்ணன்' போன்ற வெவ்வேறு பெயர்களில் அந்த வெடிகுண்டுகள் நிரம்பிய கலன்கள் பொக்ரானுக்குக் கொண்டுவரப்பட்டன. விஞ்ஞானிகளும், வெவ்வேறு ஊர்களுக்குச் செல்வது போலப் போக்குக்காட்டி, பல இடங்களில் இருந்து பாதுகாப்புத்துறை வாகனங்களில் ராணுவ உடையில் பரிசோதனைக் களத்திற்கு வந்து சேர்ந்தனர்.
- ஆங்காங்கே பாலை நிலங்களில் மணல் திரட்டுகள் கட்டமைக்கப்பட்டன. அங்கே இரவு வேளைகளில் தேவையான மின்தொடர்பு வடங்களுடன் குண்டுகள் புதைக்கப்பட்டு, அவற்றின் மேல் மரம், செடி, கொடிகள் நடப்பட்டன.
- இந்திய அணுசக்தித் துறையினர் அன்று வகுத்த வியூகங்களை இன்றைக்கும் ராணுவத்தினர் மட்டுமே நன்கு அறிவர். நாள் முழுதும் இந்த பூமியைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் அத்தனை அந்நியச் செயற்கைக்கோள்களின் மின்காந்த அலைக் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு வெற்றிப் புன்னகை புரிந்தனர்.
- உள்ளபடியே, 1944 மார்ச் 12 அன்று தோராப்ஜி டாடா அறக்கட்டளை உதவி நாடி, டாக்டர் ஹோமி ஜே. பாபா எழுதிய கடிதமே இந்திய அணுசக்தித் துறையின் பணிகளுக்குத் தொடக்கம்.
- 1948 ஏப்ரல் 15 அன்று அணுசக்தி மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்வழி 1948 ஆகஸ்டு 10 அன்று டாக்டர் ஹோமி ஜே. பாபா தலைமையில் "அணுசக்தி ஆணையம்' உருவானது. 1969 மார்ச் 12 அன்று சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தில் தோற்றுவிக்கப்பட்ட "அணு உலை ஆராய்ச்சி மையம்' 1983 ஜூலை 23 அன்று அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்தியால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
- அதே வகையில், நோபல் விஞ்ஞானி சர் சி.வி. ராமனின் மாணவர்களான டாக்டர் விக்ரம் சாராபாய், ஹோமி ஜெ. பாபா போன்றோரால் கட்டி அமைக்கப்பட்ட விண்வெளித் துறைக்கு, அன்று முதல் இன்று வரை பாரத பிரதமரே அமைச்சர் என்பது சிறப்புச் செய்தி.
- பாரதத்தின் முதலாவது செயற்கைக்கோளான "ஆர்யபட்டா' விண்ணில் செலுத்தப்பட்ட 1975-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரையிலான 48 ஆண்டுகளில் 120-க்கும் அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளோம். ஆக, விண்வெளிப் பயணத்திலும் நாம் முன்னேறி வருகிறோம் எனலாம்.
- தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களைப் பொறுத்தமட்டில் 1981 ஜூன் 19 அன்று ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் "ஏரியான்' எனும் ஏவுகலன் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது "ஆப்பிள்' என்னும் செயற்கைக்கோள். இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயம் ஆரம்பம் ஆனது. இன்று மின்னணுவியல் முன்னேற்றமும் செயற்கைக்கோளுடன் கைகோத்து, இணையம், தொலைக்காட்சி, காட்சி வழி தொலைபேசி, கைப்பேசி, காணொலி கருத்தரங்கம், தொலைமருத்துவம், தொலைவகுப்பறை போன்ற தொழில்நுட்பங்களாக மருவி விட்டன.
- நம்நாடு விடுதலை அடைவதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே, இந்திய அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றம் கருதி எஸ்.எஸ். பட்நாகர் (1894 - 1955) என்னும் விஞ்ஞானி வழங்கிய ஆலோசனையின் பலனாக, 1940-ஆம் ஆண்டுகளில் "அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி வாரியம்' தோன்றியது. அதுவே 1942-ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று, நம் நாட்டின் வணிகத்துறை ஆணையின்படி "அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம்' என்று பெயர்மாற்றம் பெற்றது. அது இன்று சுருக்கமாக "சி.எஸ்.ஐ.ஆர்.' என்று அழைக்கப்படுகிறது.
- 1951 ஆகஸ்ட் 18 அன்று, முதலாவது இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூரில் தோற்றம் கண்டது. தொடர்ந்து மும்பை, சென்னை, கான்பூர், தில்லி ஆகிய இடங்களிலும் இத்தகைய அறிவியல் கல்வி நிறுவனங்கள் எழுந்தன. 1961-ஆம் ஆண்டு தொழில்நுட்ப நிறுவன சட்டங்கள் இயற்றப்பட்டன.
- அதன் பின்னணியில் "தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம்', "தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம்', "தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம்', "தேசிய கடலாய்வு நிறுவனம்', "தேசிய உலோகவியல் ஆய்வகம்', "தேசிய விமானவியல் ஆய்வகம்', "தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம்', "தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்', "தேசிய பால்பொருள் மேம்பாட்டு வாரியம்', "தேசிய தாவர மரபணுவியல் ஆராய்ச்சி மையம்', "தேசிய நோய் எதிர்ப்பியல் நிறுவனம்' "தேசிய பால்பொருள் ஆராய்ச்சி நிறுவனம்' என்றெல்லாம் பல்வேறு அறிவியல் நிறுவனங்கள் உதித்தன. சுதந்திர இந்தியாவை முன்னேற்றப் பாதையில் வழிநடத்க உருவாக்கப்பட்ட ஆய்வகங்கள் இவை.
- மின்னணுவியல் சார்ந்து கணிப்பொறி முன்னேற்றத்தை மட்டுமே மையமாகக் கொண்டு "தகவல், திட்டமிடுதல் மற்றும் பகுப்பாய்வுக் குழு', "தொழில்நுட்ப மேம்பாட்டுக் குழுமம்', "தானியக்கத்திற்குப் பொருத்தமான ஊக்கத் திட்டம்', "தேசிய ரேடார் குழுமம்' ஆகிய மேம்பாட்டு அமைப்புகள் நிறுவப்பெற்றன.
- 1984-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் கணிப்பொறி தொழிற்துறையில் புதிய திருப்பம் நிகழ்ந்தது. நாட்டில் அரசுத் துறைகள், தொழிற்சாலைகள், வணிகத்துறை எங்கும் எதிலும் கணிப்பொறி அறிமுகம் ஆயிற்று. 1984-ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று, நாட்டின் "கணினி கொள்கை' அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டிற்கு கணினி மென்பொருள் ஏற்றுமதி செய்வதை இது ஊக்குவித்தது. தேவையற்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த அறிவிப்பு வெளிநாட்டு ஊடகங்களின் பாராட்டைப் பெற்றது.
- இதற்கிடையில் 1986-ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று, கணினி துறை குறித்த இரண்டாவது மென்பொருள் கொள்கை அறிவிக்கப்பட்டது. கணினி மென்பொருள் வணிகம், கணினித்துறை பயிற்சி ஆகிய தகவல் பரிமாற்ற முன் நடவடிக்கைகள் இரண்டுமே செயற்கைக்கோள் வாயிலாக நடைபெறுவதற்கு இக் கொள்கை வழிகோலியது.
- எதிர்காலத்தில் சிலிக்கான் சில்லுகளுக்கு மாற்றாக, "டி.என்.ஏ. பயோ-சிப்' என்ற வகையில் புரதம் சார்ந்த உயிரி சில்லுகள் கண்டுபிடிக்கப்படலாம். உயிரி மின்னணுவியல் (பயோ எலக்ட்ரானிக்ஸ்) சார்ந்த கணினிகள் கட்டமைக்கப்படலாம். எளிதில் மக்கிப்போகக்கூடிய உயிரி சில்லுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும்.
- அது மட்டுமின்றி, உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்த்தொற்றுகளைக் கண்டறியும் உயிரியல் உணரி (பயோ-சென்சர்) குறித்த ஆய்வு கண்ணோட்டம் பல ஆண்டுகளுக்கு முன்னமே மேனாடுகளில் தொடங்கிவிட்டது.
- இந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே "பிலிப்ஸ் ஆராய்ச்சிக் குழு' ஆய்வு நடத்தியது. நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், இருதயம், சிறுநீரகம் போன்ற பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களை அல்லது பாதிப்புகளைக் கண்டறிய புதிய உயிரியல் உணரிகளை உருவாக்கும் முயற்சிகளில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- அத்துடன் தொலைமருத்துவ வலைத்தளங்களுடன் இணைக்கப்பட்ட உயிரியல் உணரிகள் தாங்கிய உள்ளாடைகள் தயாரிப்புத் தொழில்நுட்பம் நம் நாட்டிலும் மனித மேம்பாட்டிற்குக் கணிமான பங்களிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- 2005 நவம்பர் மாத வாக்கில் தென் கொரியாவில் ஹான்சன் என்னும் தொழில்நுட்ப விஞ்ஞானி "கொரிய மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன'த்துடன் இணைந்து, சார்பியல் சித்தாந்த அறிஞரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் தோற்றத்தில் மனித "ரோபோ' ஒன்றை உருவாக்கினார். ஹான்சன், "ஃபிரப்பர்' என்ற நெகிழ்வான ரப்பர் தோலைப் பயன்படுத்தி, ஐன்ஸ்டீனின் சுருக்கம் விழுந்த முகத்துடனும், கலைந்த வெள்ளை முடியுடனும் கூடிய போலி தலையை உருவாக்கினார் (ஒயர்ட் இதழ், ஜனவரி 2006).
- அந்த ரோபோவின் தோல், பாலிவினைலைடின் ஃபுளூரைடு என்னும் வலுவான அழுத்த-மின்பாலிமர் பொருளினால் (பீசோ-எலக்ட்ரிக்) ஆனது.
- அது பழைய கதை என்றாலும், அந்த "ஐன்ஸ்டீன் ரோபோ', ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த அசல் ஐன்ஸ்டீன் போல, அவரது முக அசைவுகளோடு, பிசிறில்லாத ஜெர்மன் மொழி உச்சரிப்பில் பேசியது.
- இந்த ஆண்டின் தொடக்கத்தில் மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சியாளர்கள் "வால்-இ' எனப்படும் புதிய மின்-உரை (டெக்ஸ்ட்-டு-ஸ்பீச்) தொடர்பான செயற்கை நுண்ணறிவு மாதிரியை அறிவித்தனர். ஒருவரின் மூன்று வினாடி குரல் மாதிரி அந்த நுண்செயலிக்குக் கொடுக்கப்பட்டால், அந்த குறிப்பிட்ட நபரின் குரலைக் கற்றுக்கொள்ளும் "வால்-இ', அந்த நபர் பேசும் அதே குரலில் நாம் எழுதிக்கொடுக்கும் உரையை, அவர் பேசுவது போலவே வாசித்துவிடுமாம்.
- அன்றியும் பேச்சாளரின் உணர்ச்சி தொனியை உருவாக்கும் விதத்திலும் அதில் பல்வேறு நுட்பங்களைப் புகுத்தலாமாம். எதிர்காலத்தில் வெறும் குரல்வழிப் பதிவுகளின் அடிப்படையில் ஆட்சியாளர்களின் ஆணைகளை அரசு அதிகாரிகளால் நம்ப முடியாது. ஆட்சியாளர்கள், மக்கள் முன் நேரில் தோன்றாமல், அவர்களால் தரப்படும் 'வாய்மொழி' வாக்குறுதிகளும் மக்கள் மன்றத்தில் கேள்விக்கு உரியவை ஆகலாம்.
- இன்று (மே 11) தேசிய தொழில்நுட்ப நாள்
நன்றி: தினமணி (11 – 05 – 2023)