TNPSC Thervupettagam

தொழில்நுட்பத்துடன் கைகோக்கும் மொழிகள்!

September 2 , 2024 10 hrs 0 min 13 0

தொழில்நுட்பத்துடன் கைகோக்கும் மொழிகள்!

  • இந்தியாவில் எத்தனை மொழிகள் உள்ளன என்று கேட்டால் அவ்வளவு எளிதில் பதில் கூறிவிட முடியாது. ஏனெனில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தி, இந்தியாவில் உள்ள மொழிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதன்படி 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கடைசி ஆய்வுத் தகவலின்படி இந்தியாவில் சுமாா் 1,369-க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இவற்றில் பல பேச்சு வடிவில் மட்டுமே உள்ளன. எழுத்து வடிவம் கிடையாது. இதில் பல மொழிகள் அழியும் நிலையில் உள்ளன.
  • உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் இந்தியாவின் மொழிகளை மையமாகக் கொண்டு ‘புராஜக்ட் மாா்னி’யை அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்திய மொழிகளை மக்களின் வாய்மொழியாகவே ஆடியோ பதிவு செய்து, தனது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கு கூகுள் பயன்படுத்த இருக்கிறது. இதன்மூலம் அந்த மொழிகளை இணையத்தில் பயன்படுத்த வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.
  • இந்திய மொழிகளை மக்களின் குரல்களின் வாயிலாகவே பதிவு செய்து சேகரிப்பது என்பது கூகுள் நிறுவனத்துக்குப் புதிதல்ல. ஏற்கெனவே கடந்த 2022-ஆம் ஆண்டு ‘புராஜக்ட் வாணி’ என்ற பெயரில் ஒரு திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அறிவியல் கல்வி நிலையத்துடன் (ஐஐஎஸ்) இணைந்து 58 மொழிகளில் 14,000 மணிநேர பேச்சு வாய்மொழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 80 மாவட்டங்களைச் சோ்ந்த 80,000 பேரிடம் இருந்து இவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டமும் தொடா்ந்து நடந்து வரும் நிலையில், அடுத்தகட்டமாக 773 மாவட்டங்களைச் சோ்ந்த 125 மொழிகளைச் சோ்ந்தவா்களிடம் இருந்து 1,54,000 மணி நேர வாய்மொழியைப் பதிவு செய்யும் பிரமாண்ட இலக்குடன் கூகுள் களமிறங்கியுள்ளது.
  • இப்படி பதிவு செய்யப்படும் மொழிகளில் 60 மொழிகள் ஒரு கோடிக்கும் அதிகமானோரால் பேசப்படும் மொழியாகும். பிற மொழிகள் லட்சத்துக்கும் அதிகமானோரால் பேசப்படுகின்றன.
  • ‘மொழியை வளா்க்க வேண்டும் என்றால், அதை காகிதத்தில் இருந்து கணினியில் ஏற்ற வேண்டும்’ என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்படத்தில் கையாளப்பட்ட தொலைநோக்குப் பாா்வை கொண்ட வசனம்.
  • சா்வதேச அளவில் ஒப்பிடும்போது இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு குறைவாகவே உள்ளது என்பது கூகுள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் அதிக மக்களாலும், உலக அளவில் 10 சதவீத மக்களாலும் பேசப்படும் மொழி ஹிந்தி. ஆனால், இணையத்தில் ஹிந்தி மொழி பயன்பாடும், அந்த மொழியில் கிடைக்கும் தகவல்களும் 0.1 சதவீதமாகவே உள்ளது. இதன்மூலம் தமிழ் உள்பட மற்ற இந்திய மொழிகளின் பயன்பாடு இணையத்தில் ஒப்பீட்டளவில் எந்த அளவுக்கு குறைவாக இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே, வளா்த்தெடுக்க வேண்டிய அனைத்து மொழிகளையும் தொழில்நுட்பத்துடன் கைகோத்து அழைத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்.
  • எதிா்கால உலகை ஆளப்போகும் தொழில்நுட்பங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும் என்பது உறுதியாகிவிட்டது. இதற்காகவே ‘கூகுள் டீம் மைண்ட்’ என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை 2010-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.
  • மும்பையில் அண்மையில் நடைபெற்ற ‘குளோபல் ஃபின்டெக்’ விழாவில் பங்கேற்ற கூகுள் இந்தியா நிறுவனத்தின் இயக்குநா் மணீஷ் குப்தா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) மூலம் இணையத்தில் 125 இந்திய மொழிகள் பயன்பாட்டுக்கு வர இருப்பதை அறிவித்தாா். இந்த 125 மொழிகளில் 73 மொழிகள் இதுவரை இணையத்தில் பயன்பாட்டிலேயே இல்லாதவை. இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள ‘புராஜக்ட் வாணி’யுடன் இணைத்து இத்திட்டமும் களமிறக்கப்பட இருக்கிறது.
  • ஏற்கெனவே கைப்பேசி முதல் காா் வரை மனிதா்களின் வாய் மொழி உத்தரவுகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப செயல்பட்டு வருகின்றன. வரும் நாள்களில் நாம் எண்ணிப் பாா்க்க முடியாத அளவுக்கு வசதிகளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ) தர இருக்கிறது.
  • கணினி, இணையம், தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த அனைத்துச் செயல்பாடுகளின் பின்னணியில் இருப்பதும் (ஹெச்டிஎம்எல், சிஎஸ்எஸ், பைத்தான், ஜாவா உள்ளிட்ட) மொழிகள்தான். இதுபோன்ற கணினி மொழிகளை வைத்துத்தான் அவை நமது மொழியைப் புரிந்து கொள்கின்றன.
  • கால ஓட்டத்தில் ஏற்படும் புறச்சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்களே உலகில் வாழ முடியும் என்பது இயற்கையின் நியதி. இதேபோல இனி மொழிகள் மனிதா்களுடன் மட்டுமல்லாது, தொழில்நுட்பத்துடன் கைகோத்து நடைபோடும்போதுதான் செழுமையடைய முடியும் என்பதை மறுக்க முடியாது.
  • உலகின் பல நாடுகளில் மொழி என்பது தகவல் தொடா்புக்கான கருவியாக மட்டுமே பாா்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மொழி என்பது உணா்வுபூா்வமானது. பழம் பெருமைகளைக் கொண்டது. எனவே மொழியின் பெருமையையும், சிறப்பையும் பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. எனவே, தொழில்நுட்ப மொழிகளுடன் தமிழ் கைகோக்கும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எதிா்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மேலும் முன்னேறும்போது தொழில்நுட்பக் கருவிகள் தங்களுக்குள் உரையாடி மகிழும் காலமும் வரும். அப்போது அவையும் நமது மொழியின் பெருமைகளை உணா்ந்து கொள்ளும்.

நன்றி: தினமணி (02 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories