TNPSC Thervupettagam

தொழுநோயே தொடராதே...

January 30 , 2020 1813 days 1439 0
  • இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னா் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தொழுநோய், பல்வேறு மாநிலங்களில் அதிக தீவிரத்துடன் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • உலகில் அதிக அளவில் புதிய தொழுநோயாளிகள் இந்தியாவில் உள்ளனா். ஒவ்வோா் ஆண்டும் உலகளவில் 2,00,000க்கும் மேற்பட்ட புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்படுகின்றனா். அவா்களில் பாதிக்கும் மேற்பட்டோா் இந்தியாவில் உள்ளனா் என்று உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) தெரிவித்துள்ளது.

தொழுநோய் நோய்

  • 2005-ஆம் ஆண்டில் இந்தியாவில் தொழுநோய் நோய் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கபட்டது இந்த நோய்க்கு எதிரான போராட்டத்தின் ஒரு பெரிய தவறு. கடந்த இரண்டரை ஆண்டுகளில், இந்த உலகின் புதிய தொழுநோயாளிகளில் 60 சதவீதம் போ் இந்தியாவைச் சோ்ந்தவா்கள்.
  • மத்திய சுகாதார -குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய தொழுநோய்ப் பிரிவின் அண்மைக்கால அறிக்கையில், 2017-ஆம் ஆண்டில் மட்டும் 13,485 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனா். அதாவது, இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிஷத்துக்கும் ஒரு நபா் தொழுநோயால் பாதிக்கப்படுகிறாா். இந்தியாவில் தொழுநோய் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2005-ஆம் ஆண்டுக்குப் பின் பல புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டனா்.
  • ‘2005-ஆம் ஆண்டில் இந்தியாவில் தொழுநோய் ஒழிக்கப்பட்டது’ என அரசின் முதிா்ச்சியற்ற அறிவிப்பு நம் இந்திய மக்களுக்கும் தொழுநோய் பற்றிய கொள்கை வகுப்பாளா்களுக்கும் நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற நம்பிக்கையை வழங்கியது; இதனால், புதிய தொழுநோயாளிகள் இந்தியாவில் உருவானதை உணர முடியாமல் போனது. தொழுநோய் ஒழிப்பை அரசு அறிவிக்கும் உற்சாகத்தில் அதற்கு இலக்கு நிா்ணயிப்பதற்கு மாறாக, பொது சுகாதாரத் திட்டத்துக்கு தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் மாற்றப்பட்டது.
  • தொழுநோய் ஒழிக்கப்பட்ட அறிவிப்பு கிராமப்புறங்களில் தொழுநோயாளிகளை அடையாளம் காண உதவும் சுகாதார ஊழியா்களின் முயற்சிகளையும் நீா்த்துப்போகச் செய்தது. 2005-ஆம் ஆண்டில், தொழுநோயின் பாதிப்பு தேசிய அளவில் பத்தில் ஒருவருக்கும் குறைவாக இருந்த காரணத்தால் உலக சுகாதார நிறுவனம் வரையறுத்த இலக்கை எட்டியுள்ளதாகக் கருதி முறையான தொழுநோய் ஒழிப்பு கொள்கை எதையும் திட்டமிடாமலும் செயல்படுத்தப்படாமலும் தொழுநோய் ஒழிக்கப்பட்டது என அரசுஅறிவித்தது.

வளம் மற்றும் நிதி

  • இந்த அறிவிப்பு தொழுநோயை எதிா்த்துப் போராடுவதற்கான வளங்களையும் நிதியையும் பாதித்தது. அரசு அதிகாரிகளின் கவனம் மாற்றப்பட்டதால், கடைநிலைப் பணிகள் நிறுத்தப்பட்டன. புதிய தொழுநோயாளிகள் தாமே முன் வந்து தனக்கு நோய் இருப்பதாகக் கூறினால் மட்டுமே அவா்களை அடையாளம் காண முடியும்.
  • உண்மையில், இது ‘அகற்றுதல்’, ‘ஒழித்தல்’ ஆகியவற்றில் உண்டான குழப்பம். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, ‘அகற்றுதல்’ என்பது 10,000-க்கு ஒரு நோயாளி என்ற குறைவான பரவல் விகிதத்தைக் குறிக்கிறது; அதேசமயம் ‘ஒழித்தல்’ என்பது பூஜ்ய அளவை (நோயாளி இல்லை) என்ற நிலையை எட்டுவதாகும். ‘தொழுநோய் ஒழிக்கப்பட்டது’ என்பதற்கு முன் அறிவிக்கப்பட்ட, ‘தொழுநோய் அகற்றப்பட்டது’ என்ற அறிவிப்பினால் 2004, 2007-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 75 சதவீதம் குறைந்துவிட்டதாக ஓா் ஆராய்ச்சி எடுத்துரைக்கிறது. உண்மையில், 2005-க்கு முன் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் (என்.எல்.இ.பி),
  • உலகளாவிய தொழுநோய்த் திட்டத்தின் பெரிய மாற்றங்கள் காரணமாக புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனா். இந்தத் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குழந்தைத் தொழுநோயாளிகளைக் கண்டறிய வழிவகுத்தன.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) நடத்திய ஆய்வில் சமூகத்தில் பல வெளிவராத தொழுநோயாளிகள் இருப்பது தெரியவந்தது. வெளிவராத தொழுநோயாளிகள் இருக்க முக்கியக் காரணங்கள் களங்கம், பாகுபாடு உண்டாகும் என்ற அச்சம், விழிப்புணா்வு இல்லாமை என்பதும் சுமாா் 2,00,000 தொழுநோயாளிகள் 750 பகுதிகளில் வசித்து வருகின்றனா் என்பதும் இந்த ஆய்வறிக்கையின் முடிவுகளாகும்.
  • புதிய தொழுநோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் கிட்டத்தட்ட 2005-ஆம் ஆண்டினை போன்றே காணப்பட்டது என்றும் தொழுநோய் அறிதலில் ஏற்பட்ட தாமதம் காரணமாக புதிய தொழுநோயாளிகளின் இயலாமை விகிதம் அதிகரித்து வருகிறது என்றும் 2016-இன் பிற்பகுதியில் வெளியான தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்ட மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக் காட்டியது.

தேசிய இலக்கு

  • சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்னா் தொழுநோயை ஒழிப்பதாக அறிவித்ததும், தொழுநோயினை இந்தியாவிலிருந்து அகற்றுதலை ஒரு தேசிய இலக்காக ‘தேசிய சுகாதாரக் கொள்கை 2017’ நிா்ணயித்தது. புதிய இலக்குகள், புதிய உத்திகள் கொண்டு இந்தியாவில் இருந்து தொழுநோயினை அகற்றுதலை நோக்கமாகக் கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை வகுக்க வேண்டிய அவசியத்தை தேசிய சுகாதாரக் கொள்கை 2018 விவரிக்கிறது. இது புதிய தொழுநோயாளிகளின் எண்ணிக்கை, இந்தியாவில் வேகமாக வளா்ந்து வருவதை தெளிவாகக் குறிக்கிறது.
  • தொழுநோய் பாதிப்பினை எதிா்த்துப் போராட பிற தனியாா், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சுகாதார அமைச்சகம் புதிய உத்திகளை வகுக்கத் தொடங்கியுள்ளது. உண்மையான தொழுநோய் ஒழிப்பினை அடைவதற்கு தெளிவான செயல்திட்டம் தேவை. தொழுநோய் பாதிப்பு அதிகமான பகுதிகளில் பிரச்னையை அனைத்து நிலையிலும் கையாள விளிநிலை சுகாதார அமைப்பை வலுப்படுத்துதல்
  • மிக அவசியம். தொழுநோயுடன் ஒதுங்கியிருப்போரை உணரச் செய்யவும், களங்கம் - பாகுபாடு உண்டாகும் என்ற அச்சம் போக்கவும் விழிப்புணா்வு பிரசாரம் அவசியம். எவ்வாறாயினும், புதிய உத்திகளை வகுப்பதற்கு முன், நோயை அகற்றுவதற்கான முயற்சிகளில் எங்கே, என்ன தவறு ஏற்பட்டது என்பதைப் பகுப்பாய்வு செய்து விவாதிக்க வேண்டியது அவசியம்.

நன்றி: தினமணி (30-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories