நகரத்துக்குள் ஒரு நாடு வாடிகன்
- மதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இடமாக இருந்தாலும், அனைத்து மதத்தினரும் கண்டு மகிழ்வதற்கு ஏராளமான விஷயங்கள், உலகிலேயே மிகவும் சிறிய நாடாக விளங்கும் வாடிகனில் உள்ளன. நகரத்துக்குள் ஒரு நாடு என்கிற விசித்திரமான பெருமை கொண்ட வாடிகன், இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ளது.
- மதம் என்பதையே ஒரு நோக்கமாகக் கொண்ட நாடு என்பதால், வாடிகனில் ராணுவம் கிடையாது. பிறநாடுகளுடன் வணிகம் கிடையாது. வாடிகனின் கணக்குப்படி மக்கள் தொகை வெறும் ஆயிரம்தான். (போப்பின் அலுவலக அறைகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல்!). வழிவழியாக போப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசுகள்தான் வாடிகனின் தலைவராக விளங்கி வருகின்றனர்.
- இந்தத் தலைமைப் பீடத்தை ஹோலி சி என்று அழைக்கிறார்கள். போப்பின் ஆலோசகர்களை ‘கார்டினல்கள்’ என்று குறிப்பிடுவார்கள். வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் இவர்கள்தான் அடுத்தடுத்த போப்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்தத் தேர்தல் முறையே சுவையானது.
- பூட்டிய அறைக்குள் கார்டினல்கள் கூடியிருக்க, அந்த அறையை வெளிப்புறமாகப் பூட்டி ‘சீல்’ வைத்துவிடுவார்கள். ஒவ்வொரு கார்டினலும் தனது தேர்வை ஒரு தாளில் எழுதி அங்குள்ள தெய்வீகப் பீடத்தில் வைக்க வேண்டும். மூன்றில் இரண்டு பங்குக்கு அதிகப்படியாக ஒரு வாக்கு பெறுபவரே வென்றவர்.
- தேர்தல் முடிவு தெரிந்தவுடன் வாக்குச் சீட்டுகள் அங்குள்ள கணப்பில் போட்டுக் கொளுத்தப்படும். அடர்த்தியான வெள்ளைப் புகை, கூண்டின் வழியாக வெளியேறுவதை வைத்துத் தேர்தல் முடிந்துவிட்டது என்று வெளியிலிருந்து அறிந்து மக்கள் ஆரவாரக் கூச்சலிட, பூட்டு திறக்கப்படும்.
- புதிய போப் மரபுப்படி வெள்ளை அங்கியில் வெளியே வந்து பால்கனியில் நின்று தனது முதல் வாழ்த்தை உலகுக்குத் தெரிவிப்பார். போப்புக்கான தேர்தல் நடக்கும்போது மட்டும்தான், ஒரு சிம்னியைக் கொண்டுவந்து பொருத்துவார்கள். தேர்தல் முடிந்ததும் நீக்கிவிடுவார்கள்.
- தேவாலயத்தில் நிரந்தரச் சிம்னி என்பது பொருத்தமற்றது என்பதால் இந்த ஏற்பாடு. 1,400 அறைகள், அரங்கங்கள் என்று பரந்து விரிந்திருக்கின்றன வாடிகன் அருங்காட்சியகங்கள். 16-ம் நூற்றாண்டில் வசித்தபோப் இரண்டாம் ஜூலியஸ் இங்குள்ள பல அருங்காட்சியகங்களை வடிவமைத்திருக்கிறார். இங்குள்ள படைப்புகள் கலைத்திறமையில் ஒன்றை மற்றொன்று விஞ்சுகின்றன.
- ஓவியங்கள், சிற்பங்கள், சுவர் ஓவியங்கள் என்று பலவிதங்களில் மைக்கேல் ஏஞ்சலோ, ரஃபேல், கரவாஜோ, லியனார்டோ டாவின்சி போன்ற முத்திரைக் கலைஞர்களின் கைவண்ணங்கள் கலாரசிகர்களைக் கட்டிப் போடுகின்றன.70,000 கலைப் படைப்புகள் வாடிகன் அருங்காட்சியகங்களில் உள்ளன என்றாலும் அவற்றில் இருபதாயிரத்தை மட்டுமே மக்கள் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.
- பிரபல ஓவியர் வான்காவின் ஓவியங்களைக் காண முடிகிறது. குறிப்பாக யேசுநாதரை நோக்கிப் பாசத்துடன் கைகளை விரிக்கும் மடோனா (அன்னை மேரி). ‘லாகூனும் அவரது மகன்களும்’ என்கிற சிற்பம் பலரது கவனத்தை ஈர்க்கக் கூடியது - மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ‘இதுவரை உருவான அத்தனை கலைப் படைப்புகளிலும் தலைசிறந்தது’ என்று ரோமானிய தத்துவஞானி பிளினி தி எல்டர் இது பற்றிக் கூறியதுண்டு.
- ட்ரோஜன் இனத்தைச் சேர்ந்த பாதிரியாரையும் அவரது இரு மகன்களையும் கிரேக்க தெய்வத்தால் அனுப்பப்பட்ட கடற்பாம்புகள் வளைத்துக் கொண்டிருக்க, மூவரின் முகங்களிலும் அப்படி ஓர் அதிர்ச்சி. சிலையின் வளைவு நெளிவுகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. அகஸ்டஸ் சீசரின் சிலையும் அற்புதம். மன்னர்களின் மேலாடையில் உள்ள ஓவியங்கள் மிகச் சிறப்பு. அருங்காட்சியகத்தின் மேல் தளத்தில் உள்ள ஜன்னல்கள் வழியாகப் பார்த்தால் ரோம் நகரின் பலவித அழகுக் காட்சிகள் தெளிவாகத் தெரிகின்றன.
- அருங்காட்சியக வரிசைகளில் நிறைவாக சிஸ்டைன் தேவாலயம் உள்ளது. 120 மீட்டர் நீளத்துக்கு ஓர் அரங்கின் இருபுறமும் இத்தாலியின் பல்வேறு பகுதிகளை நம் கண் முன்னர் நிறுத்தும் வரைபடங்களைக் காணலாம். இவற்றை உருவாக்கிய இக்னேஷ்யோ டான்டி என்பவரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
- போப் இரண்டாம் ஜூலியஸ், பிரபல ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோவை தேவாலயத்தின் மேற்கூரையில் ஓவியங்கள் வரையப் பணித்தார். பழைய ஏற்பாட்டில் உள்ள 13 காட்சிகளை அவர் வரைந்தார். தூய பீட்டருக்குச் சொர்க்கத்துக்கான சாவிகளை யேசுநாதர்வழங்கும் காட்சி குறிப்பிடத்தக்கது.
- தினமும் சுமார் 25,000 பேர் இங்கே வருகிறார்கள். வாடிகன் ஒரு கல் கோட்டை. சுற்றிலும் கல்சுவர்கள். பல வாயில்கள் உண்டு. சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வந்து வாடிகனில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட காவலாளிகளின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இந்த நுழைவாயில்களில் நின்றபடி காவல் காக்கின்றனர்.
- போப்பின் அலுவலகத்தில் பணியாற்று பவர்கள் மட்டும்தான் வாடிகனின் குடிமக்கள் ஆவர். 1929-ல் தோன்றிய நகரம் அது (பிறகுதான் நாடானது). யேசுநாதர் தோன்றிய காலக்கட்டத்தில் ரோம் நாட்டு அரசியலும் (இப்போதைய ரோம் நகரம் மட்டுமல்ல - பரந்து விரிந்த ரோமானிய சாம்ராஜ்யம்) கிறிஸ்துவ மதமும் அதிகாரப் பீடத்துக்குப் போட்டியிட்டன. வெற்றியும் தோல்வியும் இரண்டு தரப்பிலும் மாறி மாறி உண்டாயின.
- ரோம் நாட்டின் முதல் போப் ஆண்டவர் என்பதால் தூய பீட்டருக்கு கத்தோலிக்க மதத்தில் சிறப்பிடம் உண்டு. தவிர தனக்குப் பிறகு மதத்தை (சர்ச்) வழிநடத்தும் பொறுப்பை யேசுநாதர் அவரிடம்தான் ஒப்படைத்திருந்தார் என்பதால் மேலும் மதிப்பு. வாடிகன் குன்று என்றழைக்கப்பட்ட அந்த இடத்தில் பல கிறிஸ்துவர்களைக் கொன்று குவித்தார் ரோம் நாட்டு மன்னன் நீரோ. தூய பீட்டரும் இப்படிக் கொல்லப்பட்டார்.
- அவர் இறந்த இடத்தில் ஒரு கல்லறை எழுப்பப்பட்டது. காலப்போக்கில் ரோம சாம்ராஜ்யம் என்பது மறைந்து இத்தாலி ஒரு நாடாக உருவானது. ஒருவழியாக மதமும் அரசியலும் (கொஞ்சம் வேண்டா வெறுப்புடன்தான்) கைகுலுக்கின.
- 1929-ல் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினிக்கும் ரோம் நகரைத் தன் பிடிக்குள் வைத்திருந்த போப் இரண்டாம் பியஸுக்கும் இடையேஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி ‘வாடிகன் நகரம் ஒரு தனிநாடு’ என்பதை இத்தாலி ஏற்றுக் கொண்டது. ‘இத்தாலியின் தலைநகரம் ரோம்’என்பதை போப் ஒப்புக் கொண்டார். ஆக, இப்படித்தான் நகரத்துக்குள் நாடு உருவான அதிசயம் அரங்கேறியது.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 01 – 2025)