TNPSC Thervupettagam

நகர்மயமாதல் தலித் மக்களை விடுவித்துள்ளதா?

August 29 , 2024 137 days 197 0

நகர்மயமாதல் தலித் மக்களை விடுவித்துள்ளதா?

  • நமது அண்டைப் பகுதி​களில் உள்ள பெயர்ப் பலகைகளைப் பார்த்தாலே இந்திய நகரங்​களில் வெளிசார்​தன்​மையின் முதன்​மையான மொழி சாதிதான் என்பது தெரிந்​து​விடும். இத்தகைய வீழ்ச்​சிகளையும் தாண்டி, கிராம வாழ்க்கையை நிராகரித்து தலித் மக்கள் நகரங்களை நோக்கி நகர வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்​தினார். இந்தியக் கிராமம் என்பது ‘இந்து சமூகப் படிநிலை செயல்​படும் ஆலை’ என்று கூறிய அம்பேத்கர், கிராமம்தான் சாதியைப் பற்றிப் புரிந்​து​கொள்​வதற்கு மிகச் சரியான இடம் என்று வாதிட்​டார்​.
  • அதே நேரம், இந்தியக் கிராமத்தைச் சுயசார்பு கொண்ட, சமத்து​வமும் நியாயமும் அகிம்​சையும் நிறைந்த அமைப்​பாகப் பார்த்த காந்தி, கிராம-சுயராஜ்யம் வழியாக மையத்​திலிருந்து அதிகாரம் பகிர்ந்​தளிக்​கப்பட வேண்டும் என்று வாதிட்​டார். இதைக் கடுமையாக எதிர்த்த அம்பேத்கர், இந்தியக் கிராமத்தைச் சிறந்​த​தாகக் கருதுவது கிராமப்புற மக்களை மேம்பட்​ட​வர்​களாகக் கருதும் காலனியச் சிந்தனை அல்லது சாதி ஆதிக்​கத்தைத் தக்கவைக்கும் இந்துக்​களுடைய விருப்​பத்தின் வெளிப்பாடு என்று கூறினார்.
  • அரசமைப்பு நிர்ணய அவையில் கிராமங்கள் தன்னாட்சி கொண்ட நிர்வாக அலகுகளாக அங்கீகரிக்​கப்பட வேண்டும் என்னும் யோசனையை அம்பேத்கர் எதிர்த்​தார். அந்த யோசனையை அவை நிராகரித்தது குறித்து நிம்மதி அடைந்​தார். ‘தீண்​டப்படாத மக்களுக்கு இதைவிடப் பெரிய பேராபத்து இருந்​துவிட முடியாது’ என்று அது குறித்து அவர் எழுதினார்.

நகர்மய​மாதலும் அம்பேத்​கரின் நம்பிக்கையும்:

  • நகர்மய​மாகும் செயல்​முறையில் தலித் மக்களின் விடுதலைக்கான வாய்ப்பு இருப்பதாக அம்பேத்கர் கருதினார். சேரிகளை ஒதுக்கி, தலித் மக்களை விலக்கி வைத்தல், அவர்களின் பொருளா​தாரச் செயல்​பாடுகள் மீதான கட்டுப்​பாடுகள், நில உரிமை மறுப்பு என இந்தியக் கிராமங்​களில் செழித்​தோங்கும் சாதி ஒடுக்​கு​முறைக்கான அமைப்புகள் நகரங்​களில் வலுவிழக்கும் என்று அவர் நம்பினார். தாராளமயமாக இருந்​ததற்​காகவும் தனது வாழ்வா​தா​ரத்தைத் தேடிக்​கொள்ள வழி அமைத்துக் கொடுத்​ததற்​காகவும் ஜோதிராவ் பூலேவும் நகர வாழ்க்கையைப் போற்றினார்.
  • அம்பேத்​கரையும் பூலேவையும் பொறுத்தவரை அடையாளத்தை மறைத்​துக்​கொண்டு வாழ்வதற்கான வாய்ப்புதான் நகரங்​களின் விடுதலை அளிக்கும் ஆற்றலின் மையம். அந்நியர்​களின் கடலில் ஒரு அந்நியராக வாழ்வதற்கான வாய்ப்பை நகரங்கள் அளிக்​கின்றன. சாதி அடிப்​படையிலான படிநிலை​யி​லிருந்து வர்க்க அடிப்​படையிலான படிநிலைக்கு மாறுவதற்கான வாய்ப்​பையும் அளிக்​கின்றன. இது வம்சாவளி​யினால் அல்லாமல், வளங்கள் அல்லது மூலதனக் குவிப்​பினால் வரையறுக்​கப்​படுவதாக உள்ளது.
  • நகரங்கள் எந்த வழிமுறை​களின் மூலம் சாதியைத் தழுவிக்​கொள்​கின்றன என்பதையும் அம்பேத்கர் கண்டு​கொண்​டார். ‘விசாவுக்​காகக் காத்திருக்​கிறேன்’ நூலில் பரோடாவில் வாடகைக்கு வீடு தேடுவதற்கான தனது போராட்​டத்தை அவர் விவரிக்​கிறார்.
  • நவீன நகர்மய​மாதல் என்பது திறன் - அடிப்​படையிலான, அதாவது தொழில்​மய​மாதல் மூலமாக நிகழும் பொருளாதார மாற்றத்தால் உந்தப்​படு​கிறது. ஆனால், ஜவுளி ஆலைகளின் நெசவுப் பிரிவு​களில் திறன் வாய்ந்த தலித்துகள் நுழைய அனுமதிக்​கப்​படாத​திலிருந்து, திறன் மீதான சாதியின் ஆதிக்​கமும் அம்பேத்​கருக்குத் தெளிவாகப் புரிந்தது.
  • இத்தகைய அனுபவங்களை எதிர்​கொண்​டாலும் நகர்மய​மாதலை விடுவிக்கும் சக்தியாக அம்பேத்கர் பார்த்​தார். ஆனால், பரோடாவில் வாடகைக்கு ஒரு வீடு பிடிப்​ப​தற்கான அம்பேத்​கரின் போராட்டம் நிகழ்ந்து நூறாண்டு கடந்து​விட்ட பிறகும், இந்திய நகரங்​களின் வெளிசார் தர்க்கமாக சாதி நீடிக்​கிறது.

‘தூய்​மை-தீட்டு’ என்னும் மொழி:

  • ‘தூய்​மை-தீட்டு’ என்னும் மொழியின் மூலமாக ஒரு நகரத்தின் வெளிசார்​தன்​மையாக சாதி மாறுகிறது. 2021இல் மேற்கொள்​ளப்பட்ட நுகர்வோர் கணக்கெடுப்பு ஒன்று, இந்தியாவில் இறைச்சி உணவுப் பழக்கமே வாடகைக்கு வீடு கிடைப்​பதைத் தடுக்கும் மிகப் பெரிய காரணியாக இருப்பதை அம்பலப்​படுத்​தியது. மராத்தா ராஜ்ஜி​யத்தில் பேஷ்வாக்​களின் ஆட்சியில் விலக்​கிவைக்கும் கொள்கைகள் குறித்து எழுதுகை​யில், இந்தச் சூழலைக் குறித்து கோபால் குரு விளக்கு​கிறார்.
  • சேரி என்பது வெளி மட்டும் அல்ல. அது சேரிவாசி​யுடைய உடலின் உருவமைப்​பாகவும் இருக்​கிறது. சவர்ணர்​களின் (சாதி இந்துக்கள்) வெளியைத் ‘தூய்​மை’​யான​தாக​வும், தலித் உடலால் தீட்டுப்​படக்​கூடிய​தாகவும் அடையாளப்​படுத்தும் ‘தூய்​மை-தீட்டு’ மொழி, நகரத்தின் தர்க்​கத்​துக்கும் நீட்டிக்​கப்​படு​கிறது. இங்கு நகரத்​துக்குள் நுழையும் சேரிவாசி, தனது உடல் மீது சேரியைச் சுமந்​து​கொண்டு வருபவர் ஆகிறார்.
  • சாதியின் மொழியில், அசிங்​கத்​தையும் அழுக்கையும் பண்பாகக் கொண்ட சேரியின் வெளியும் இறைச்சி உண்ணுதல் உள்ளிட்ட தாங்கள் ஏற்கத்தகாத பண்பு​களைக் கொண்ட தலித்தின் உடலும் ஒன்றுக்​கொன்று இணைந்து செயல்​படுபவை ஆகின்றன.
  • அண்மைக் காலங்​களில் சாதியின் மொழி நகரங்​களின் பொது வெளிகளில் பல்வேறு அரசாங்​கங்​களால் சுமத்​தப்​பட்​டுள்ளது. எடுத்​துக்​காட்டாக, 2017 மார்ச் மாதத்தில் உத்தரப் பிரதேச அரசாங்கம் இறைச்சி விற்பனைக் கடைகளுக்குச் சில கட்டுப்​பாடுகளை விதித்தது.
  • மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இறைச்சி விற்கத் தடை, இறைச்சி பாதசா​ரி​களின் பார்வையில் படுவதைத் தடுக்கும் வகையில் கடையின் முகப்பில் கறுப்புச் சாயம் பூச வேண்டும் அல்லது திரைச்​சீலைகளைத் தொங்கவிட வேண்டும் என்பவை அவற்றுள் சில. 2021இல் குஜராத்தின் கணிசமான நகராட்சி அமைப்புகள் ‘மத உணர்வு’களைக் காரணம் காட்டி, நகரத்தின் முக்கியச் சாலைகளில் இறைச்சி உணவை விற்ப​தற்குத் தடை விதித்தன.
  • இத்தகைய பிராமணியக் கட்டுப்​பாடுகள் மூலமாக இறைச்சியை மதம்சார்ந்த, மதம்சாராத பொதுவெளியை அல்லது ஒரு பாதசா​ரியின் பார்வையைக்​கூடத் தீட்டுப்​படுத்தும் அசுத்தமாக அரசுகள் வகைப்​படுத்​தி​விட்டன.

முடக்​கிப்​போடும் விலக்​குதல்:

  • நகர்ப்புற நிர்வாகக் கொள்கைகளும் வீட்டுவசதி நெருக்​கடிகளும்​கூடச் சாதி அடிப்​படையிலான விலக்​குதலை நிலைபெறச் செய்துள்ளன. ரஃபேல் சுஸ்விண்ட், ஷெபா டெஜானி, கிறிஸ்டோப் ஜாஃபர்லோ (Raphael Susewind, Sheba Tejani and Christophe Jaffrelot) போன்ற அறிஞர்கள் இந்திய நகரங்​களில் தலித் மக்களும் இஸ்லாமியர்​களும் முடக்​கிப்​போடும் விலக்​குதலை எதிர்​கொண்​டிருப்பதை விவரித்​துள்ளனர்.
  • தலித்து​களும் இஸ்லாமியர்​களும் வாழும் சேரிகளில்தான் அரசு சேவைகளும் தூய்மையான குடிநீர் உள்ளிட்ட நகராட்சிக் கட்டமைப்பு வசதிகளுக்கான அணுகலும் மிக மோசமாக இருப்​ப​தாகப் பெரிய அளவில் நிகழ்த்​தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரிய​வந்​துள்ளது. குப்பைகளையும் கழிவையும் எரிக்கும் அல்லது பூமியில் புதைக்கும் பகுதிகள் போன்ற மிக மோசமான சூழலியல் பாதிப்​புக்கு உள்ளாகக்​கூடிய​வையாக அடையாளப்​படுத்​தப்பட்ட பகுதிகள் பெரும்​பாலும் தலித் மக்களும் இஸ்லாமியர்​களும் வசிக்கும் இடங்களாகவே இருப்​பதும் ஆய்வுகள் மூலம் தெரிய​வந்​துள்ளது.
  • வீட்டுவசதி - நில உரிமை வலைப்​பின்னல் (Housing and Land Rights Network) என்னும் அமைப்பு, இந்தியாவில் மக்கள் தம் வசிப்​பிடங்​களி​லிருந்து வலுக்​கட்​டாயமாக அப்பு​றப்​படுத்துவது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை​யானது, தலித் மக்களும் இஸ்லாமியர்​களுமே இத்தகைய அப்பு​றப்​படுத்​தல்​களால் பெரிதும் பாதிக்​கப்​படு​வதைக் காட்டு​கிறது.
  • நகர்மய​மாக்​கலின் மீது தலித் விடுதலை இயக்கம் வைத்திருந்த நம்பிக்கை​யையும் எதிர்​பார்ப்பு​களையும் இந்திய நகரங்கள் தகர்த்து​விட்டதை வாழ்வனுபவத்தின் மூலமாகவும் விரிவான ஆய்வின் மூலமாகவும் நாம் அறிய முடியும். நகர வாழ்க்கைக்கு மாறுவது சாதி ஒடுக்​கு​முறையின் சில கட்டமைப்புகளை வலுவிழக்கச் செய்திருந்​தா​லும், அவை மொழியின் வடிவிலும் அரசுக் கட்டுப்​பாடுகள் - கொள்கையின் வடிவிலும் உருமாறி, இந்திய நகரங்​களில் சாதி செழித்​தோங்க வழிவகுப்​பவை​யாகப் பரிணமித்துள்ளன.
  • நகர்மய​மாதலில் அம்பேத்கர் கண்ட சாத்தி​யங்​களுக்​கும் நம்​பிக்கைக்​கும் இந்தி​ய நகரம் நி​யாயம்​ சேர்க்க​வில்லை. நகர்ப்புற வளர்ச்சி தொடங்கி நூறாண்​டுகள்​ ஆகி​விட்ட பிறகும், அம்​பேத்​கரின் வார்த்​தைகளில் சொல்​வதென்​றால், தலித் மக்கள்​ ‘இந்​தியச்​ சேரி​களின் குழந்​தை’களாகவே நீடிக்​கிறார்​கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories