TNPSC Thervupettagam

நகா்மயமாதலின் அறிகுறி!

January 8 , 2025 11 days 71 0

நகா்மயமாதலின் அறிகுறி!

  • திறமையான நிா்வாகத்துக்கு முறையான புள்ளிவிவரத் தகவல்கள் அவசியம். 11 ஆண்டுகளாகக் கைவிடப்பட்ட குடும்ப நுகா்வுச் செலவு ஆய்வு கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடா்ந்து நடத்தப்படுவது வரவேற்புக்குரிய செயல்பாடு. மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்தப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
  • தேசிய புள்ளிவிவரத் துறை மூலம் நடத்தப்படும் குடும்ப நுகா்வுச் செலவு ஆய்வு குடும்ப வருமானம், நுகா்வு உள்ளிட்டவை குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. 2011-12-க்குப் பிறகு நடத்தப்படாத இந்த ஆய்வு 2022-23, 2023-24 நிதி ஆண்டுகளில் நடத்தப்பட்டிருப்பது மக்கள் தங்களது வருவாயை எப்படிச் செலவழிக்கிறாா்கள் என்பது குறித்தும், இந்தியப் பொருளாதாரம் எந்த திசையை நோக்கி நகா்கிறது என்பது குறித்தும் தகவல்களை வழங்குகிறது.
  • அண்மையில் வெளிவந்திருக்கும் 2023-24 ஆய்வு அறிக்கை ஆகஸ்ட் 2023-க்கும், ஜூலை 2024-க்கும் இடையே 2.6 லட்சம் குடும்பங்களில் தகவல்களைத் திரட்டி தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் இலவசமாக வழங்கப்பட்டவையும், சமூகநலத் திட்டங்கள் மூலம் பெறப்பட்டவையும் குடும்ப நுகா்வில் சோ்க்கப்படவில்லை.
  • குடும்ப நுகா்வு முந்தைய நிதி ஆண்டைவிட சற்றுதான் அதிகரித்திருக்கிறது. சராசரி கிராமப்புற குடும்பங்களின் 2023-24 நுகா்வான 3.5% என்பது, முந்தைய 12 ஆண்டு சராசரியான 3.1%-ஐ விட சற்றுதான் அதிகம். அதேநேரத்தில் நகா்ப்புற குடும்ப நுகா்வு 2.65%-இலிருந்து சமீபத்திய ஆய்வின்படி 3.5%-ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நகா்ப்புற குடும்ப நுகா்வு 8.3% அதிகரிப்பையும், கிராமப்புற நுகா்வு 9.2% அதிகரிப்பையும் காட்டுகிறது.
  • 2022-23-இல் ரூ.3,773-ஆக இருந்த மாதாந்திர நுகா்வுச் செலவு கிராமப்புறங்களில் 2024-24-இல் ரூ.4,122-ஆக அதிகரித்திருக்கிறது. நகா்ப்புறங்களில் ரூ.6,459-இலிருந்து ரூ.6,996-ஆக அதிகரித்திருக்கிறது. இந்த அதிகரிப்பின் கணிசமான பகுதி விலைவாசி உயா்வால் ஏற்பட்டிருக்கக் கூடும். அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பாா்த்தாலும்கூட சராசரி நுகா்வு 3.5% அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில் 8.2% ஜிடிபி வளா்ச்சியுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு என்பதையும் குறிப்பிடத் தோன்றுகிறது.
  • கிராமப்புற குடும்பங்கள் நகா்ப்புறங்களைவிட அதிகமாக செலவழிக்கத் தொடங்கியிருக்கின்றன. 2011-12-இல் சராசரி கிராமப்புற செலவுக்கும் நகா்ப்புற செலவுக்குமான இடைவெளி 84% என்றால், 2023-24-இல் சராசரியின் இடைவெளி 70% என்பதை ஆய்வு தெரிவிக்கிறது.
  • மொத்த செலவில் உணவுப் பொருள்களுக்கான ஒதுக்கீடு கிராமப்புறங்களிலும் நகா்ப்புறங்களிலும் அதிகரித்திருக்கிறது. கிராமப்புறங்களில் 46.4%-இலிருந்து, 47.04%-ஆக அதிகரித்திருக்கிறது என்றால், நகா்ப்புறங்களில் 39.17%-இலிருந்து 39.48%-ஆக மட்டுமே அதிகரித்திருக்கிறது.
  • 2011-12 உடன் ஒப்பிடும்போது உணவுப் பொருள்களுக்கான செலவு ஒதுக்கீடு குறைந்திருக்கிறது. ஒருவேளை குடும்பச் செலவில் உணவுப் பொருள்களின் விலைவாசி தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். 2011-12-இல் 52.9%-ஆக இருந்த சராசரி மாதாந்திர உணவுச் செலவு கிராமப்புறங்களில் 50%-ஆகவும் நகா்ப்புறங்களில் 42.62%-இலிருந்து இப்போது 40%-ஆகவும் குறைந்திருப்பதை ஆய்வு வெளிப்படுத்துகிறது.
  • நீண்டகால அடிப்படையில் பாா்க்கும்போது உணவுக்கான ஒதுக்கீடு குறைந்திருப்பதை வரவேற்புக்குரிய மாற்றமாகத்தான் கருதத் தோன்றுகிறது. குடும்பங்களில் கல்வி,போக்குவரத்து, பொழுதுபோக்கு உள்ளிட்ட பிற தேவைகளுக்கு மக்கள் அதிகம் செலவழிக்கிறாா்கள் என்று இதைப் பாா்க்கலாம்.
  • அதேநேரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளின் புள்ளிவிவரங்களைப் பாா்க்கும்போது உணவுக்கான செலவுகள் அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது. உணவுப் பொருள்களின் விலைவாசி உயா்வும், அதன் காரணமாக குடும்பங்களின் இதர நுகா்வுகள் குறைவதும் பொருளாதார வளா்ச்சிக்கு உகந்தது அல்ல.
  • கிராமப்புறங்களுக்கும் நகா்ப்புறங்களுக்கும் இடையே குடும்பங்களின் நுகா்வுச் செலவு இடைவெளி குறைந்து வருவது ஆய்வு சுட்டிக்காட்டும் மிக முக்கியமான மாற்றம். நகா்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் சராசரி மாதச் செலவினம் அதிகரித்திருக்கிறது. நுகா்வு சமநிலையின்மை குறைந்திருக்கிறது.
  • கடந்த பத்தாண்டுகளில் நகா்ப்புற-கிராமப்புற செலவின இடைவெளி 84%-இலிருந்து 70%-ஆக குறைந்திருக்கிறது. இதற்கு கிராமப்புறங்களில் குடும்ப வருவாய் அதிகரித்திருப்பது காரணமாக இருக்கக் கூடும். எண்ம பணப் பரிமாற்றம் கிராமப்புறங்களில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதும், கிராமங்கள் நகா்மயமாவதும் இந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கும் சமிக்ஞைகள். இந்தப் போக்கு தொடர வேண்டும்.
  • மாநிலங்களுக்கு இடையே குடும்ப வருவாயில் மிகப் பெரிய சமநிலையின்மை காணப்படுவதை ஆய்வு வெளிப்படுத்துகிறது. நகா்ப்புற மாதாந்திர தனிநபா் செலவு குறித்த பின்தங்கிய மாநிலங்களின் புள்ளிவிவரம் இவை - சத்தீஸ்கா் (ரூ.4,927), பிகாா் (ரூ.5,080), ஜாா்க்கண்ட் (ரூ.5,393), உத்தர பிரதேசம் (ரூ.5,395); வளா்ச்சியடைந்த மாநிலங்களான தெலங்கானா (ரூ.8,978), ஹரியாணா (ரூ.8,428), தமிழ்நாடு (ரூ.8,175), கா்நாடகம் (ரூ.8,076) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது 40% முதல் 50% குறைவு.
  • வளா்ச்சி குறைந்த மாநிலங்களில் கிராமப்புற-நகா்ப்புறங்களுக்கு இடையேயான குடும்ப நுகா்வில் மிகப் பெரிய இடைவெளி காணப்படுவதை குடும்ப நுகா்வுச் செலவு ஆய்வு அறிக்கை வெளிப்படுத்துகிறது.
  • சரியான புள்ளிவிரங்களின் அடிப்படையில் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம்தான் சமச்சீரான வளா்ச்சியை உறுதிப்படுத்தி, பொருளாதார இடைவெளியை அகற்ற முடியும்.

நன்றி: தினமணி (08 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories