TNPSC Thervupettagam

நசுக்கப்பட்ட திணைக்குடியின் அக்கறை

November 2 , 2024 68 days 73 0

நசுக்கப்பட்ட திணைக்குடியின் அக்கறை

  • இழுவை மடியின் கிளறுப் பலகைகள் கடல் தரையின் உயிர்ப்பான தன்மையைச் சிதைத்துவிட்டன என்பதற்குப் பாரம்பரிய மீனவர்கள் பல சான்றுகளைச் சுட்டிக்காட்டுகின்றனர். ஓலைக்குடாவைச் (ராமேஸ்வரம்) சார்ந்த கெவிகுமார் (1972) சங்கு குளிக்கச் செல்வதுண்டு. ‘கடலடியில் மூழ்கிச் சங்குகளைத் தேடும்போது டிராலர் மடி இழுத்த பகுதிகளில் டிராக்டர் சக்கரங்களின் தடம் பதிந்தது போன்று வெறுந்தரையாய்க் கிடக்கும், எந்த உயிரினங்களையும் அந்தப் பகுதியில் பார்க்க முடியாது’ என்கிறார் இவர்.
  • ‘கேரளத்துல பூராவும் போட்டு மடியடிச்சித்தாம் அங்கவுள்ள மடையயெல்லாம் அழிச்சிற்றானுவ; போ(ர்)டுபலகைய (otter board) வெச்சி கடலடியில இருக்கிற சேறு, சகதி எல்லாத்தையும் தூரயெடுத்து உட்டுர்ரதுனால இறாலு தங்கி வாழ்றதுக்கு எடமில்லாமப் போயிருது. மணப்பாட்டு மீன் திட்டில் இழுவை மடியடிச்சு அழிக்கப்புடாதுன்னுதாம் அந்தக் காலத்துலயே நாங்க போராடினோம்’ என்கிறார் உவரி மீனவர் அந்தோணிசாமி (1951). டிராலர் மடியுடன் இணைக்கப்பட்டிருக்கும் கிளறுபலகைகள் (ஆட்டர் போர்டுகள்) தரையைக் கிளறி வழித்தெடுத்து விடுகின்றன.
  • ராமேஸ்வரம் கடலில் சங்குகள் சுத்தமாகக் காணாமல் போயின. ஆனாலும், ‘இரண்டு மூன்று வருடங் களுக்கு மன்னார் கடல்- பாக் நீரிணை பகுதியைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டால் போதும், மீன்வளம் புத்துயிர் பெறும்’ என்கிறார் பேரின்பம். கடலுக்கு அந்த அற்புதமான நெகிழ்வுத் தன்மை உண்டு.

கடல் நிறைய மீன்

  • சுப்பிரமணியனும் கஸ்பாரும் குறிப்பிடுவதுபோல, அழித்தொழிக்கும் தொழில்நுட்பங்கள் கடலில் நுழைந்திராத அந்தக் காலத்தில் உலகக் கடல்கள் முழுவதும் மீன்வளம் செழித்திருந்தது. எவ்வளவு செழுமை என்றால், கடலின் வளம் ஒருபோதும் வற்றாது (‘ad liberum’) என்று நம்பினர். இறால், சிங்கி இறால், கணவாய், நண்டு, சூரை, கலவாய்- இப்படி ஒவ்வோர் இனத்துக்கும் படிப்படியாகப் பன்னாட்டுச் சந்தையில் மதிப்பு வந்தது, ‘தொழில்முறை மீன்பிடித்தல்’, நடைமுறைப்படுத்தப்பட்டது. அது ‘பெருந்தொழில் மீன்பிடித்தல்’, ‘ஆலை மீன்பிடி முறை’ என்பதாக விரியத் தொடங்கியது. கார்பரேட் பேராசை கடலையே விழுங்கத் தொடங்கியது. அதன் விளைவாக, கடலின் சூழலியலும் வள இருப்பும் தலைகீழானது. வளம் என்பது வற்றும் தன்மையுள்ளதே (‘mare liberum’) என்பதை உலகம் புரிந்துகொண்டது.

திணைக்குடியின் அக்கறை

  • சூழலியலை ஆங்கிலத்தில் ‘Ecology’ எனக் குறிக்கிறார்கள். ‘oikos’ (வீடு), ‘logos’ (படிப்பு) என்கிற கிரேக்கச் சொற்களின் தொகை. உயிரினங்களை அதனதன் வாழிடத்தில் வைத்து அவதானிப்பது சூழலியல். காடும் கடலும் லட்சக்கணக்கான உயிரினங்களின் முகவரியாக இருக்கின்றன.
  • இயற்கையை வாழிடமாகக் கொண்டஅனைத்து உயிர்களும் மூன்று வகையான உறவில் பிணைக்கப் பட்டுள்ளன – இயற்கையுடனான உறவு, இனத்துக்கு உள்ளேயான உறவு, சக இனங்களுக்கு இடையிலான உறவு, திணைக்குடிகள் இந்த உறவுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள்.
  • திணைக்குடிகளின் இயற்கை அக்கறை சங்கப் பாடல்கள் பலவற்றில் வெளிப்படுகிறது. ‘மரம்சா மருந்தும் கொள்ளார்’ என்கிறது ஒரு பாடல். மூலிகைக்காகப் பழங்குடியினர் ஒரு மரத்தை வெட்டி வீழ்த்துவதில்லை. வேட்டையிலும் விதிமுறைகள் உண்டு. சினைமான்களைக் குறி வைப்பதில்லை; மான் கூட்டத்தில் ஒரேயோர் ஆண் மான் மட்டுமே நிற்குமென்றால், அதைக் கொல்வதில்லை. மான்களின் தொகை நீடித்தாக வேண்டுமே.
  • உழவுக்கு உதவாத முதிய எருதுகளை மேயும் பொருட்டு காட்டில் விட்டுவரும் விவசாயியைப் போல, வழக்கொழிந்த படகினை (மூத்து வினைபோகிய மூரிவாய் அம்பி) கடற்குடி பத்திரமாகக் கரையிலேயே விட்டுவருகிறான். இன்றைக்குக் கிடைத்த பெரும் அறுவடையின் காரணமாக மறுநாள் கடலோடி கடல் புகுவதில்லை. வலைகள், தூண்டில், வில் அம்பு, எறி உளி, ஈட்டி போன்ற வேட்டைக் கருவிகள் கடலின் வளத்தைப் பாதுகாப்பவை.

கடலோர நன்னீர்நிலைகள்

  • நீர் உலகின் பொதுமொழி. திணை நிலங்களின் இணைப்பான். நீரியல் சுழற்சி சீராக நிகழ்ந்துவந்த காலம்வரை, நெய்தல் நிலமும் செழுமையான நன்னீர் வளங்களைக் கொண்டிருந்தது. கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் சங்கப் பாடல் வரிகள் அதற்கு ஒரு சான்று:
  • கோடை நீடினும் குறைபடல் அறியா எனத் தொடங்கும் பெரும்பாண் ஆற்றுப்படை: 272-275 பாடல், கோடைக்காலம் நீடித்தாலும் நீர் குறைவுபடாத, தோளுயரம் நீருள்ள குளங்கள் கடலோரங்களில் ஏராளம் இருந்துள்ளன என்கிறது. அக்காலத்தில் திணைநிலங்கள் நீரால் இணைக்கப்பட்டிருந்தன. கடலோர நன்னீர்நிலைகளுடன் காடுகளும் நிறைந்திருந்தன. கடலுக்கும் கழிக்கும் இடையில் அத்தங்கள் (வழித்தடங்கள்) அமைந்திருந்தன. கழி கடலோடு கலக்கும் கழிமுகங்களில் சுறாவும் உப்புநீர் முதலைகளும் சுதந்திரமாக உலாவந்தன.
  • கொடுந்தாள் முதலையோடு கோட்டுமீன் வழங்கும் இருங்கழி இட்டுச் சுரம்நீந்தி என அகநானூறு- 80ஆம் பாடலில் நீர்நிலைகளில் முதலைகளும் சுறாக்களும் உலாவரும் காட்சி சங்கப் பாடலில் சித்திரிக்கப்படுகிறது.
  • முத்துக்குளித்துறையில் மணப்பாடு கடற்கரையருகே வாதிரையர் சமூகம் நெய்தல் சமூகத்தினரைச் சார்ந்து வாழ்ந்துள்ளது. பாய்மரப் படகுகள், கட்டுமரங்களுக்கான கோறா பாயை (Coramandel Cloth) அவர்கள் தயாரித்துத் தந்தனர். சமவெளியினரின் நீர் மேலாண்மையில் நேர்ந்த மாற்றம் காரணமாக, பருத்திச் சாகுபடி அற்றுப்போனது; அதன் காரணமாக வாதிரையர் சமூகம் இடம்பெயர வேண்டியதாயிற்று.

கடலோரக் காடுகளின் அழிவு

  • புகார்த் துறைமுகத்தில் ஏற்றுமதிக்காகக் குவிக்கப்பட்டிருக்கும் பொருள்களின் மீது வரையாடுகள் நின்றுகொண்டிருக்கும் காட்சி சங்க இலக்கியப் பாடலொன்றில் குறிக்கப்பெறுகிறது. வரை என்பது மலையைக் குறிக்கும். குறிஞ்சி நிலத்தைச் சார்ந்த வரையாடு நெய்தலில் காணப்படுவது இரு திணைகளும் பொருந்திக் கிடந்ததன் அடையாளமாகவும், அக்காலத்தில் கடலோர நன்னீர்நிலைகளைச் சார்ந்து காடுகள் அமைந்திருந்தன என்பதன் வெளிப்பாடாகவும் புரிந்துகொள்ளலாம்.
  • கடலோரக் காடுகளைத் தமிழகம் எவ்வாறு இழக்க நேர்ந்தது? இதற்குப் பல காரணங்கள் முன்வைக்கப் படுகின்றன. மேய்ச்சல் நிலங்களுக்காக வடுகர்களால் காடுகளின் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளன; பாளையக் காரர்களின் மறைவிடங்களை அழிப் பதற்கும், ரயில்பாதை அமைக்கும் படுக்கைக் கட்டைகளுக்காகவும் பிரித்தானியக் காலனியரால் கடலோரக் காடுகள் அழிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
  • தமிழ்நாட்டில் பிறமொழி பேசும் மக்கள் குடியேற்றங்கள் மிகுந்தபோது, விவசாய நிலங்களின் பரப்பு அதிகரித்தது. ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டபோது, கடலில் சேரும் ஆற்றின் வெள்ளம் தடைபட்டு, கிழக்குக் கடற்கரையில் நன்னீர் நிலைகளும் கழிகளும் காணாமலாயின. அவ்வாறு கானல் சோலைகளும் மறைந்தன. நெய்தல் நிலத்தில் நன்னீர்ப் பஞ்சத்தின் தொடக்கம் இது.

பெருமணல் உலகம்

  • இயற்கையின் பருப்பொருள்களில் ஒன்றான நிலம், அனைத்துயிர்களின் வாழிடமாகவும், மனித வாழ் வாதாரத்தின் அடிப்படைக் கூறாகவும் அமைகிறது. இயற்கை குறித்த முன்னோர்களுடைய புரிதலின் முதன்மைக் கூறு, திணைநிலம் குறித்த அவர்களின் ஆழமான புரிதல். அக்காலத்தில் கடல்வெளியையும் கடலொட்டிய நிலத்தையும் கடலர்கள் எவ்வாறு அணுகினர், அவர்களின் வாழ்வில் நெய்தல் நிலம் பெற்றிருந்த இடம் எது என்பதைப் பதினான்குக்கும் மேற்பட்ட சங்க காலக் கவிஞர்கள் நுட்பமாக விவரித்துள்ளனர். அவர்களில் நெய்தல் நிலம் சார்ந்த கவிஞர்கள், குறிப்பாக மாமூலனார், உலோச்சனார், அம்மூவனார் என்னும் மூவர் நெய்தலைச் சிறப்பாகப் பாடியுள்ளனர்.
  • நெய்தல் நிலத்தை ‘வருணன் மேய பெருமணல் உலகம்’ என்கிறது தொல்காப்பியம். ‘கருங்கடர்க் கடவுள் காதலித்த நெடுங்கோட் டெக்கர்’ என்று தொல்காப்பிய உரையாசிரியர்களில் ஒருவரான நச்சினார்க்கினியர் இதற்குப் பொருள் கொள்கிறார். ‘வருணனைத் தங்கள் தெய்வமாக வழிபடும் மக்கள் வாழ்கின்ற, கடல் கொழித்த மணல் மேடுகள் மல்கிய கடற்கரைப் பகுதி’ என்று இதற்குப் பொருள்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories