TNPSC Thervupettagam

நஞ்சற்ற பாலை உறுதிப்படுத்துவது அரசின் கடமை

October 29 , 2019 1908 days 1581 0
  • பால் பாதுகாப்பு மற்றும் தரத்துக்கான விரிவான கணக்கெடுப்பு சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்துக்கும் அக்டோபருக்கும் இடையே சேகரிக்கப்பட்ட 6,432 மாதிரிகளைக் கொண்டு இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
  • இந்த மாதிரிகள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட 1,100 ஊர்கள், நகரங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை. இந்த ஆய்வில் 93% மாதிரிகள் பாதுகாப்பானவை என்று கண்டறியப்பட்டிருந்தாலும் கூடுதலாகக் கிடைத்திருக்கிற தகவல்கள் சங்கடத்தைத் தருகின்றன.

ஆய்வு

  • இந்த ஆய்வு பொதுவான 13 கலப்படங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், அஃப்ளேடாக்ஸின் எம்1, நோயெதிர்முறிகள் (antibiotics) ஆகிய நச்சுப் பொருட்களைக் கண்டறிவதற்காக நடத்தப்பட்டது.
  • 12 மாதிரிகள் மட்டும் கலப்படமானவையாகவும் நுகர்வுக்குப் பாதுகாப்பற்றவையாகவும் இனம் காணப்பட்டுள்ளன.
  • இந்தக் கலப்பட மாதிரிகள் தெலங்கானா (9), மத்திய பிரதேசம் (2), கேரளம் (1) ஆகிய மாநிலங்களிலிருந்து பெறப்பட்டிருக்கின்றன.
  • இந்தக் கலப்பட மாதிரிகளில் உள்ள கலப்படங்களும் நச்சுப்பொருட்களும் உடல் நலத்துக்குப் பெரும் தீங்கு ஏற்படுத்துபவையாக இனம் காணப்படவில்லை.

அஃப்ளேடாக்ஸின் எம்1

  • எனினும், 368 மாதிரிகளில் அஃப்ளேடாக்ஸின் எம்1 மிச்சங்கள் அனுமதிக்கப்பட்ட ஒரு கிலோவுக்கு 0.5 மைக்ரோகிராம் என்ற அளவைத் தாண்டியும் காணப்பட்டிருக்கின்றன.
  • அஃப்ளேடாக்ஸின் எம்1 உடன் ஒப்பிடும்போது நோயெதிர்முறிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக 77 மாதிரிகளில் காணப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரிகள் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெறப்பட்டவை.
  • தரப்படுத்தப்படாத பாலைவிடத் தரப்படுத்திய பாலில் அஃப்ளேடாக்ஸின் எம்1 அதிகமாக இருக்கிறது. பாலில் இந்த நச்சுப்பொருள் கலந்திருப்பது மதிப்பிடப்படுவது இதுவே முதன்முறை. இந்த அஃப்ளேடாக்ஸின் எம்1 அதிக அளவில் காணப்பட்டது தமிழ்நாடு (551 மாதிரிகளில் 88), டெல்லி (262-ல் 38), கேரளம் (187-ல் 37) ஆகிய மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில்தான்.
  • அஃப்ளேடாக்ஸின் எம்1 மனிதர்களுக்குப் புற்றுநோயை விளைவுக்கும் சாத்தியம் கொண்டது. தற்போதைய ஆய்வானது பாலை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதால் பால் பெருட்களில் எந்த அளவுக்கு இந்த நச்சுப்பொருள் இருக்கிறது என்பது தெரியவில்லை.
  • குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் பால்தான் பிரதான ஊட்டப்பொருள் என்பதால் அஃப்ளேடாக்ஸின் எம்1 கலந்திருப்பதை மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினையாக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து

  • பாலிலும் பால் பொருட்களிலும் அஃப்ளேடாக்ஸின் எம்1 கலந்திருப்பது என்பது விலங்குகளுக்குத் தீனியாக வழங்கப்படும் தானியங்கள் மிகவும் தரம் குறைந்தவையாக இருக்கும் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது என்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.
  • ஆகவே, தானிய அறுவடைக்கு முன்னும் பின்னும் அந்த நச்சுப்பொருளைக் குறைப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
  • இத்துடன் அஃப்ளேடாக்ஸின் எம்1-ஐப் பரிசோதிப்பதற்கான வசதிகளையும் அரசு ஏற்படுத்த வேண்டும். பால், பால் பொருட்களின் அஃப்ளேடாக்ஸின் கலந்திருக்கிறது என்பது சாதாரண விஷயம் அல்ல; ஒவ்வொரு குடும்பத்தையும் ஒவ்வொரு குழந்தையையும் பாதிக்கும் விஷயம்.
  • அரசு இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிடலாகாது.

நன்றி: இந்து தமிழ் திசை (29-10-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories