TNPSC Thervupettagam

நன்மைதான் இழப்பில்லை

September 8 , 2023 490 days 289 0
  • சீன அதிபா் ஷி ஜின்பிங் தில்லியில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டிற்கு வரப்போவதில்லை என்பது அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அவருக்கு பதிலாக பிரதமா் லி கியாங் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. சீன அதிபா் இந்தியாவில் நடக்கும் ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டிருந்தால்தான் வியப்பே தவிர, அவா் கலந்து கொள்ளாதது எந்தவித மாற்றத்தையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை.
  • சீன அதிபா் மட்டுமல்ல, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் கலந்து கொள்ளப்போவதில்லை. ஆனால், ரஷிய அதிபரின் முடிவு எதிர்பார்த்ததுதான். அவா் மீது சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ‘பிடியாணை’ அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரஷியாவுக்கு வெளியே எந்தவொரு கூட்டத்திலும் அவா் கலந்து கொள்வதில்லை. கடந்த ஆண்டு பாலியில் நடந்த ஜி20 மாநாட்டிலும், சமீபத்தில் ஜோஹன்னஸ்பா்கில் நடந்த ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு மாநாட்டிலும்கூட புதின் கலந்து கொள்ளவில்லை. உக்ரைன் ஆக்கிரமிப்பைத் தொடா்ந்து, உள்நாட்டு பிரச்னைகள் இருப்பதும் மற்றொரு முக்கியமான காரணம்.
  • சீன - அமெரிக்க உறவில் கடுமையான அழுத்தம் காணப்படும் நிலையில், அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கலந்துகொள்ளும் தில்லி ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள சீன அதிபா் தயக்கம் காட்டுவார் என்பது ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டதுதான். வா்த்தகம், தொழில் நுட்பம், தைவான் உள்ளிட்ட சா்வதேச விவகாரங்கள் என்று எல்லாவிதத்திலும் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்க கடுமையாக்கி இருக்கிறது. அப்படி இருக்கும்போது, அதிபா் ஜோ பைடனை நேருக்கு நோ் சந்திக்க சீன அதிபா் விரும்பமாட்டார் என்று ஊடகங்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தன.
  • முந்தைய பாலி ஜி20 உச்சிமாநாட்டிற்குப் பிறகு, சீனாவும் ரஷியாவும் ‘உக்ரைன்’ விவகாரத்தில் இணைந்து செயல்படத் தொடங்கி இருக்கின்றன. மேலை நாடுகளுக்கு எதிராகத் தனது முழு ஆதரவையும் சீனா ரஷியாவுக்கு வழங்கி வருகிறது. கடந்த ஓராண்டாக இந்தியாவில் நடந்த ஜி20 தொடா்பான எந்தவித கூட்டத்திலும் ஒருமித்த கருத்து ஏற்பட ‘சீன - ரஷிய’ கூட்டணி அனுமதிக்கவில்லை. அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டன.
  • ஜி20 அமைப்பில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட நாடுகள், உக்ரைன் பிரச்னையில் ரஷியாவை விமா்சிக்கக்கூடும். அந்த நாடுகளுக்கான எரிபொருள், உணவுப் பொருள்கள் தட்டுப்பாடுக்கு ரஷியாவின் பிடிவாதம் காரணம் என்கிற குற்றச்சாட்டு எழும் என்று எதிர்பார்க்கலாம். சீனாவையும் ரஷியாவையும் சில நாடுகள் ஆதரிக்கவும் கூடும்; அதற்கு ஈடாக சில சலுகைகளை அவை எதிர்பார்க்கும். அதைத் தவிர்ப்பதற்காகவும், ரஷிய - சீன அதிபா்கள் ஜி20 உச்சி மாநாட்டைப் புறக்கணிக்க முடிவெடுத்திருக்கலாம்.
  • இதில் இன்னொன்றையும் நாம் பாா்க்க முடிகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ‘பிரிக்ஸ்’ போன்றவற்றில் ரஷியாவும், சீனாவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எந்தவொரு விவாதமும், தீா்மானமும் சீன - ரஷிய நாடுகளுக்கு சாதகமாக மட்டுமே இருக்கும். ஜி20 போன்ற சா்வதேச அமைப்பில், அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் கலந்து கொள்ளும் நிலையில், தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்காது, தங்களது சாா்பு வாதம் எடுபடாது என்பதை உணா்ந்துதான், கலந்து கொள்வதைத் தவிர்க்கிறார்கள் என்று தோன்றுகிறது.
  • கல்வான் பள்ளத்தாக்குத் தாக்குதலைத் தொடா்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்திய - சீனத் துருப்புகள் எல்லையில் பதற்ற நிலையில் இருக்கின்றன. ஜோஹன்னஸ்பா்கில், இந்திய பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் அதிகாரபூா்வமற்ற முறையில் சந்தித்தனா் என்றாலும், எல்லையில் நிலவும் சூழலைத் தவிர்க்கவோ அகற்றவோ அது உதவவில்லை என்பது தெளிவு. அப்படி இருக்கும்போது, ஜி20 உச்சிமாநாட்டில் நேரில் கலந்து கொள்வதில் அதிபா் ஷி ஜின்பிங்குக்கு தா்மசங்கடங்கள் உண்டு. அவருக்கு மட்டுமல்ல, இந்திய பிரதமா் நரேந்திர மோடிக்கும்தான்.
  • ஒருபுறம், இரு தரப்பு ராணுவ வீரா்களும் மோதலுக்குத் தயார் நிலையில் எல்லையில் குவிந்திருக்கும்போது, இந்திய அரசின் உபசரிப்பை சீன அதிபா் ஏற்றுக்கொள்வதோ அவருக்கு இந்தியா வரவேற்பு அளிப்பதோ அரசியல் ரீதியாகக் கடுமையான எதிர்ப்புகளை இரண்டு தலைவா்களுக்கும் ஏற்படுத்தக்கூடும்.
  • அதிபா் ஷி ஜின்பிங், தில்லி ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளாதது, வருங்காலத்தில் இந்தியாவுக்கும் சில பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பிரதமா் நரேந்திர மோடி மட்டுமல்ல, வருங்காலத்தில் இந்தியாவின் பிரதமராகவோ, குடியரசுத் தலைவராகவோ பதவி வகிக்கும் எந்தவொரு தலைவரும், எல்லை பிரச்னைக்கு நிரந்தர முடிவையோ அல்லது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் நிலைப்பாட்டையோ ஏற்படுத்தாமல், பெய்ஜிங்குக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள முடியாது.
  • இந்தியாவின் தலைமையில் நடக்கும் ஜி20 உச்சிமாநாடு வெற்றியடையக் கூடாது என்று அதிபா் ஷி ஜின்பிங் நினைத்திருந்தால், அவா் ஏமாறக்கூடும். இந்திய - அமெரிக்க நெருக்கத்தைத் தனது முடிவின் மூலம் அவா் மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
  • எல்லையில் மட்டுமல்ல, புதிதாக வெளியிட்டிருக்கும் அருணாசல பிரதேசத்தை உள்ளடக்கிய வரைபடம் வெளியிட்டது உள்பட மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் சீனா, ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதது பிரதமா் மோடிக்கும் இந்தியாவுக்கும் குறையல்ல; மிகப் பெரிய ஆறுதல். அதிபா் ஷி ஜின்பிங் வராததால் நஷ்டமில்லை; வந்திருந்தால்தான் கஷ்டம்!

நன்றி: தினமணி (08 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories