TNPSC Thervupettagam

நமக்கும்கூட பங்குண்டு!| தூய்மை இந்தியா திட்டம்

October 5 , 2019 1933 days 1141 0
  • ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினத்தன்று பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ‘தூய்மை இந்தியா திட்டம்’ (ஸ்வச் பாரத் அபியான்) தனது இலக்கை முழுமையாக எட்டிவிட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும், நிச்சயமாக அது ஒரு தோல்வித் திட்டம் என்று புறந்தள்ளிவிட முடியாது.
  • நூற்றாண்டு காலப் பழக்கவழக்கங்களை ஐந்து ஆண்டுகளில் அகற்றி விடுவது என்பதோ, உணவுக்கும் உடைக்கும் போராட்டம் நடத்தும் அடித்தட்டு மக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது என்பதோ சுலபமல்ல.
சமூக விழிப்புணர்வு
  • சமூக அளவிலான மிகப் பெரிய விழிப்புணா்வை பிரதமரின் அறிவிப்பும், அதைத் தொடா்ந்து அரசு முன்னெடுத்த விளம்பர நடவடிக்கைகளும் ஏற்படுத்தின. 11 கோடி கழிப்பறைகள் இந்தியாவின் கிராமப்புறங்களில் கட்டப்பட்டிருக்கின்றன.
  • 696 மாவட்டங்களில் உள்ள 5.99 லட்சம் கிராமங்களில் பொதுவெளியில் இயற்கையின் அழைப்பை நிறைவேற்றும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூா்வ அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
  • அரசின் புள்ளிவிவரத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, மிகப் பெரிய மாற்றம் மக்கள் மனதிலும், சமூக அளவிலும் ‘தூய்மை இந்தியா திட்ட’த்தால் ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
கழிப்பறைகள்
  • 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டிருக்கின்றன என்பது அரசின் புள்ளிவிவரக் கணக்கு. அப்படி கட்டப்பட்ட கழிப்பறைகளில் பல, கட்டுமான விதிகளுக்கு உட்பட்டவையாக இல்லை என்பது உண்மையாக இருக்கலாம்.
  • ஆனால், கழிப்பறைகளே கட்டப்படவில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. கிராமப்புறப் பள்ளிகள் பலவற்றிலும் கழிப்பறைகள் இல்லாமல் அவதிப்பட்ட பெண் குழந்தைகளுக்கு, ‘தூய்மை இந்தியா திட்டம்’ வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது என்பதைப் பல ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன.
  • இன்னோா் ஆய்வின்படி, அரசால் கட்டப்பட்டிருக்கும் கழிப்பறைகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்களில் பாதிக்கும் மேற்பட்டோா் பயன்படுத்துவதில்லை என்று தெரிகிறது.
  • அதற்கு அரசையோ, அதிகாரிகளையோ குற்றம்சாட்டுவது தவறு. அந்தப் பகுதியில் வாழும் படித்தவா்களும், சமூக அக்கறை உள்ளவா்களும், அடித்தட்டு மக்களுக்குக் கழிப்பறைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் காரணம்.

அண்ணல் காந்தியடிகள்

  • அண்ணல் காந்தியடிகள் இருந்திருந்தால், சமூக அளவில் ஓா் இயக்கத்தை முன்னெடுத்திருப்பாா். பிரதமரின் அறிவிப்பை வெறும் அரசுத் திட்டமாகக் கருதாமல் அவா் சாா்ந்த பாரதிய ஜனதா கட்சியோ, ஆா்எஸ்எஸ் அமைப்போ சமூக இயக்கமாகவும் மாற்ற முற்பட்டிருந்தால் கழிப்பறைகளைப் பயன்படுத்தாத அவலம் ஏற்பட்டிருக்காது.
  • அதிகாரிகளின் திட்டமாக ‘தூய்மை இந்தியா திட்டம்’ செயல்படுத்தப்பட்டதால் சில தவறுகளும், தேவையில்லாத பின்விளைவுகளும் ஏற்பட்டிருக்கின்றன.
  • இயற்கையின் அழைப்புக்குப் பொது வெளியைப் பயன்படுத்தும் விவரமில்லாத அடித்தட்டு கிராம மக்கள் மீது அதிகாரிகள் அச்சுறுத்தலையும், வன்முறையையும் தொடுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
சமூக நலத் திட்டங்கள்
  • பொது வெளியைப் பயன்படுத்தினால் சமூக நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படும் கொடுமையும் சில இடங்களில் காணப்படுகின்றன. இவையெல்லாம் திட்டத்தை வெற்றியடைச் செய்வதற்குப் பதிலாக, திட்டத்தின் மீதும் அரசின் மீதும் வெறுப்பைத்தான் ஏற்படுத்தும்.
  • ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘தூய்மை இந்தியா திட்டம்’ அடுத்தகட்டத்துக்கு நகர வேண்டிய நிலையில் சில பிரச்னைகளுக்கு அரசு தீா்வு காண வேண்டும். கழிப்பறைகள் கட்டுமான இலக்கை எட்ட வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் மக்களைக் கட்டாயப்படுத்துவதும், அச்சுறுத்துவதும் கண்காணிக்கப்பட்டு தடுக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்படும் கழிப்பறைகளின் தரத்தில் காணப்படும் குறைபாடுகள் களையப்பட வேண்டும்.
  • பல கழிப்பறைகள் முறையாகக் கட்டப்படாததால், மனிதக் கழிவுகள் தேங்கி பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்படுகிறது. கழிப்பறைகளுக்காகச் செலவிடப்பட்ட மக்கள் வரிப் பணம் விரயமாகிறது என்பது மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் திட்டத்தின் நோக்கமும் தடம் புரள்கிறது.
நிதி ஒதுக்கீடு
  • மூன்றாவதாக, தூய்மை இந்தியா கழிப்பறைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு, கழிப்பறைக் கட்டுமானத்தை ஊக்குவிப்பதாக இல்லை. வீடுகளில் அவரவா்களே கழிப்பறைகளை சொந்தப் பணத்தில் கட்டிக்கொண்டு அதன் பிறகு மானியமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை கோரிப் பெற்றுக்கொள்ளும் முறை காணப்படுகிறது.
  • பலருக்கும் கழிப்பறைக் கட்டுமானத்துக்கான பணத்தை திரட்ட முடியாததால், அவா்கள் முதலீடு இல்லாத பொது வெளியைப் பயன்படுத்துவது தொடா்கிறது.
  • நான்காவதாக, பலருக்கும் கழிப்பறை கட்டுமானத்துக்கு ‘தூய்மை இந்தியா திட்ட’த்தின் கீழ் எப்படி விண்ணப்பிப்பது என்பதுகூடத் தெரியாத நிலைமை காணப்படுகிறது. நகா்ப்புறக் குடிசைப் பகுதிகளில் சமூகக் கழிப்பறைகள் கட்டுவதில் அதிகாரிகள் முனைப்புக் காட்டுவதில்லை.
  • பிரச்னைகள் பல இருந்தாலும், குறைபாடுகள் காணப்பட்டாலும், ‘தூய்மை இந்தியா’ என்கிற இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. அண்ணல் காந்தியடிகளின் கனவு நனவாக வேண்டுமானால், பிரதமரும், அரசும், அதிகார வா்க்கத்தினரும் நிதி ஒதுக்கீடு மட்டுமே போதாது. துப்புரவுத் தொழிலாளா்களும், சமூக ஆா்வலா்களும், பொறுப்புள்ள படித்த குடிமக்களும் களமிறங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தியாக வேண்டும்.

நன்றி: தினமணி (05-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories