TNPSC Thervupettagam

ந'மது' அரசுகளும் 45 ஆயிரம் கோடி ரூபாயும்!

October 2 , 2024 95 days 171 0

'மது' அரசுகளும் 45 ஆயிரம் கோடி ரூபாயும்!

  • இந்த நாளில்தான் தமிழ்நாட்டில் சுமார் 23 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையிலிருந்த மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. ஒரு தலைமுறையே முற்றிலும் மது என்றால் என்னவென அறியாதிருந்த நிலையில் மாநிலத்தில் 11 ஆயிரம் கள், சாராயக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாகத் தொடங்கியது. (நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ) அன்று பிடித்த சனி, 53 ஆண்டுகளான பின்னரும் இன்னமும் விடவில்லை!
  • மதுவிலக்கு ரத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக இவ்வளவு காலமும் பலரும் எடுத்த பல்வேறு முயற்சிகளாலும் எவ்விதப் பயனுமில்லை. தி.மு.க. ஆட்சியில் அண்ணா மறைந்த பின் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த மு. கருணாநிதி, புதிய தலைமுறைக்கு கள், சாராய, மதுக் கடைகளை அறிமுகப்படுத்தினார்.
  • தொடக்க நாளில் பல இடங்களிலும் பெண்கள்தான் மதுக் கடைகளுக்கு எதிராக மறியல் போராட்டங்களை நடத்திக் கைதாயினர். இன்றும் எதிர்த்துப் போராட இயலாவிட்டாலும்கூட மதுவால் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் ஏற்படும் பெரும் பாதகங்களைப் பெண்கள்தான் தாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
  • மது விலக்கு பற்றி எல்லா தலைவர்களும் அண்ணாவுக்குப் பிறகு முதல்வர்களாக இருந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்பட பேசியிருக்கிறார்கள். சின்னச் சின்ன நடவடிக்கைகளைத் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. மதுவின் ருசி மக்களைப் பிடித்துக் கொண்டதைப் போலவே, மதுவால் கிடைக்கும் பணத்தின் அதி ருசியோ நம் ஆட்சியாளர்களைப் பற்றிக் கொண்டுவிட்டது.
  • 2014, 2015 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மதுவுக்கு எதிராக  மக்கள் எழுச்சி பெற்றனர். போராட்டங்கள் நடைபெற்றன. இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலினே மதுவிலக்கை வலியுறுத்திய போராட்டத்தில் நின்றார்.
  • தோற்றுப்போன 2016 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று வாக்குறுதியளித்த திமுக, பின்னர்  வெற்றி பெற்ற 2021 பேரவைத் தேர்தல் அறிக்கையில் அதைக் குறிப்பிடவில்லை.
  • 2023-24 நிதி ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு மதுவால் கிடைத்த வருவாய் மட்டும் ரூ. 45,855.67 கோடி! (அரசின் மொத்த வருவாயில் 27.4 சதவிகிதம்). முந்தைய ஆண்டைவிடவும் ரூ. 1,734.54 கோடி அதிகம். மார்ச் ’24 மாத நிலவரப்படி மாநிலத்தின் 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் மதுக் கடைகள் திறந்திருக்கின்றன; இவற்றில் 2,919 கடைகளில் மதுக் கூடங்களும் இணையப் பெற்றிருக்கின்றன (‘பெருமைக்குரிய’ இந்தத் தகவல்கள் எல்லாமும்  சட்டப்பேரவையில் அரசு சொன்னவைதாம்!).
  • வருவாய்க்கு மது விற்பனையைத்தான் அரசு நம்பியிருக்கிறது. மாநிலத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் பல மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் போய்விடும் என்ற, கொஞ்சமும் கூச்சமில்லாத, ஒரு வாதம் பலராலும் எப்போதும் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
  • இந்த மதுவால் சமுதாயத்துக்கு எவ்வளவு இழப்பு என்பதை ஒரு கணம், ஒரே ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் – தங்களுக்கும் இவ்வாறெல்லாம் நடக்க நேர்ந்தால் என – இந்தத் தலைவர்கள் நினைத்துப் பார்த்தால்...
  • கள், சாராயம், மது வகைகள் திறந்துவிடப்பட்ட இந்த 53 ஆண்டுகளில் இந்த மாநிலம் முழுவதும் குடித்தும், குடிப்பழக்கத்தால் நோய்ப்பட்டும் செத்தவர்கள் எத்தனை பேர்?
  • ஆண்டுதோறும் மாநிலம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் குடிப் பழக்கத்தால் வந்த பாதிப்புகள் காரணமாக அனுமதிக்கப்படுபவர்கள் எத்தனை பேர்?
  • இவர்களில் எத்தனை பேர் நலம் பெற்றனர்? எத்தனை பேர் செத்துப் போனார்கள்?
  • குடிக்கப் பழகிய தந்தையை, சகோதரனை, கணவனை, மகனை, பேரனை இழந்த, இழந்ததால் ஆதரவற்றுப் போன பெண்கள் எத்தனை பேர்?
  • எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் குடிப்பழக்கத்தால் - சம்பாதித்த பணத்தை வீடுகளில் கொடுக்காமல் குடித்து அழிக்கும் ஆண்களால், சீரழிந்துபோன குடும்பங்கள் எத்தனையெத்தனை?
  • இதுவரையிலான எந்தவோர் அரசேனும் இதுபற்றிய கணக்குகளை எடுத்திருக்கிறதா? அரசிடம் ஏதேனும் தரவுகள் இருக்கின்றனவா? தெரியவில்லை.
  • ஆகக் குறைந்தபட்சமாகக் குடியால் மட்டுமே நடைபெறும் குற்றச் செயல்கள், கொலை, கொள்ளை, களவு, பாலியல் வன்கொடுமைகள் – அத்துமீறல்கள் பற்றியாவது அரசிடம் - காவல்துறையிடம் தரவுகள் இருக்கின்றனவா?
  • இல்லை. அரசுக்கு மது விற்பனை மூலம் எவ்வளவு வருவாய் வந்துகொண்டிருக்கிறது என்பதற்கு மட்டும்தான் கணக்கு இருக்கிறது.
  • கீழடி நாகரிகம் கண்டதாகப் பெருமைகொள்ளும் தமிழ்க் குடிமக்களிடம் ஐம்பது ஆண்டுகால அரசு போஷிப்பின் காரணமாகக் குடிப்பழக்கம் ஒரு சமூகச் சீக்கு போலப் பற்றிக் கிடக்கிறது.
  • உலகில் வேறெந்த நாட்டிலாவது அல்லது இந்தியாவிலேயேகூட எந்த  மாநிலத்திலாவது இப்படிக் குடித்துவிட்டுப் போதையில் உணர்விழந்து தெருக்களில் விழுந்துகிடக்கும் நபர்களைக் காண இயலுமா?
  • கட்டிய மனைவியை, பெற்ற பிள்ளைகளை மறந்து இவர்கள் யாருக்காகக் குடிக்கிறார்கள்? எதை மறக்கக் குடிக்கிறார்கள்? அல்லது எங்கே மிதக்கக் குடிக்கிறார்கள்? அலுப்பைப் போக்க என்றால் அப்படியே அது போய்விடுமா? அரசுக்கு மொய் எழுதும் செலவையும் தாண்டி இந்தக் குடியின் தொடர் விளைவுகள் என்னென்ன? யார் நினைத்துப் பார்க்கிறார்கள்? நிற்க.
  • தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பெண்களும் – மக்கள்தொகையில் சரிபாதி! - மதுவுக்கு எதிராக இருந்தபோதிலும், இதுவரை எத்தனையோ கட்சிகள், இயக்கங்கள் சார்பில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தபோதிலும் உருப்படியாக எதையுமே சாதிக்க முடிந்ததில்லை. அரசுகள் இறங்கி வந்ததுமில்லை, வர முயன்றதுகூட இல்லை.
  • ஆளும் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியாகத் தொடர்ந்து இருந்துவந்தபோதிலும்கூட இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம், மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்புக்கென மகளிர் மாநாடு ஒன்றை மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் உளுந்தூர்ப்பேட்டையில் நடத்துகிறது.
  • மகளிர் மாநாட்டில் அனைவரும் கூடிக் கலைந்த பின்னர் – மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு வழக்கம் போல  தீர்மானங்கள் நிறைவேற்றிய பின்னர் – அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து முன்னெடுக்கத் திட்டமிடக்கூடிய தொடர் நடவடிக்கையில்தான் இருக்கிறது இந்த மாநாட்டின் வெற்றி (கூட்டம் திரண்டதிலும் தீர்மானம் நிறைவேற்றியதிலும் அல்ல)!
  • வீதிகள்தோறும் கிராமங்கள்தோறும், தொடர்ச்சியாக சிறு நகரங்கள்தோறும் மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போல மது ஒழிப்பு மகளிர் குழுக்களை உருவாக்கலாம்; உருவாக்க வேண்டும்.
  • முற்றிலும் கட்சிச் சாயமற்றதாக – சார்பற்றதாக - இந்தக் குழுக்களை அமைக்கும் முயற்சியை தெருக்களிலிருந்து, வீதிகளிலிருந்து, சிறு கிராமங்களிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பெண்களே முன்னெடுக்கலாம். எந்தவோர் அரசியல் கட்சியையும் ஒதுக்காமல் உள்ளே கொண்டுவருவதன் மூலம் மட்டுமே இந்தக் குழுக்களால் தொலைநோக்கில் ஏற்படக் கூடிய வெற்றி எளிதாகும்.
  • திட்டமிட்ட நடவடிக்கைகள், போராட்டங்கள் மூலம் குறிப்பிட்ட தெருவில், குறிப்பிட்ட வீதியில், குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட கிராமத்தில் இனி மேலும் புதிய மதுக் கடைகளைத் திறக்க விடாமல் செய்ய முடியும் – இருக்கிற கடைகளைப் படிப்படியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
  • இந்தக் குழுக்களில் இணைந்து நிற்கும் பெண்கள், கிராம சபைகளில் செல்வாக்குச் செலுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றுவதன் மூலம், ஊரிலிருந்தே, நகரிலிருந்தே படிப்படியாக மதுக் கடைகளை வெளியேற்றிவிட முடியும், எந்த அரசு இருந்தாலும். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, மதுப் பிரச்சினை தவிர வேறெந்த விஷயங்களிலும் கவனத்தைச் சிதறவிடாதபட்சத்தில் இந்த மகளிர் குழுக்களால் மதுவை முன்வைத்துத் தேர்தல் அரசியலிலும்கூட செல்வாக்குப் பெற முடியும்.
  • திட்டமிட்ட இந்தக் குழுக்களின் செயல்பாடுகளால் காலப்போக்கில் மது இல்லா வீதிகள், மது இல்லா கிராமங்கள், மது இல்லா நகரங்கள் எல்லாமும் உருவாக முடியும்.
  • இத்தகைய பிரசாரங்களின் வழி விளையும் மதுவின் மீதான அருவருப்பும் வெறுப்புமே தொடர் விளைவாகக் குடியிலிருந்து மக்களை விடுவிப்பதில் பெரும் பங்காற்றும். மற்றவற்றைக் காலம் தீர்மானிக்கும் என்றாலும் இதுவே முதல் படியாக இருக்கும்!
  • இன்றைக்கு டாஸ்மாக் கடைகளில் திரண்டு மது குடிப்பவர்கள் எல்லாம் யார் யார்? 70, 80 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் உழைக்கிற அடித்தட்டு மக்களும் நடுத்தர மக்களும்தான் (இதற்கும்கூட யாரிடமும் எந்தவொரு ஒரு கணக்கு வழக்கும் கிடையாது). இந்தக் குடும்பங்களும் இந்த மக்களும் பயனடைய வேண்டிய பணம்தான் மதுக் கடைகளின் வழியாக நேரடியாக அரசையும், மறைமுகமாக விரல்விட்டு எண்ணக்கூடிய சில மாபெரும் மது ஆலைத் தொழிலதிபர்களையும் சென்றடைந்துகொண்டிருக்கிறது – பாழாய்ப் போன இதே குடும்பங்களுக்கான அரசு நலத் திட்டங்களை இந்தக் காசிலிருந்துதான் செயல்படுத்த வேண்டுமாம்!

நிறைவாக:

  • தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு, மதுக் கடைகள் திறந்துவிடப்பட்ட நாளில் மிகுந்த வேதனையுடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் ‘தினமணி’ நாளிதழ் எழுதியிருந்த தலையங்கம் நினைவுகூரப்பட இதுவே - மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் மகாத்மா பிறந்த நாளே - தக்க தருணம்.

துக்க தினம்

  • “ஆகஸ்ட் 30ந் தேதி தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி தேசத்துக்கே ஒரு துக்க தினம். இருபத்து மூன்று ஆண்டுகளாக மாநிலமெங்கும் அமுலாகி வந்த மதுவிலக்கு எடுபட்டது நெஞ்சைப் பிளக்கும் நிகழ்ச்சி. முதன்முதலாக இந்தியாவில் மதுவிலக்கு சட்டபூர்வமாக தமிழ் நாட்டில்தான் சேலம் ஜில்லாவில் 1937ல் ஆரம்பமாயிற்று. அடுத்த ஆண்டு மேலும் மூன்று ஜில்லாக்களுக்கு அது விஸ்தரிக்கப்பட்டது. இரண்டாவது உலக யுத்தம் குறுக்கிட்டு காங்கிரஸ் மந்திரிசபைகள் விலக நேரிட்டதையடுத்து இந்த முதன்மையான சமூகச் சீர்திருத்தப் பணி மேலும் விரிவு காணாமல் தடைப்பட்டு நின்றது. 1946ல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டதும் மூன்று ஆண்டுகளில் மாநிலமெங்கும் மதுவிலக்கு ஏற்பாடாகி, 23 வருஷ காலம் இடையறாது அமுலாகி வந்துள்ளது. ஏழை எளியவர்களுக்கும் தாய்க்குலத்துக்கும் பண்புடன் கூடிய மனிதாபிமான வாழ்க்கைக்கும் இது பெரிதும் துணை நின்றதன் காரணமாக, வருவாய் நஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் மதுவிலக்கை எந்நிலையிலும் தொடர்ந்து நடத்திவைப்பது தமது கட்சியின் கொள்கையாக இருக்கும் என்று காலஞ்சென்ற திரு. சி.என். அண்ணாத்துரை பதவிப் பொறுப்புக்கு வந்ததும் அறிவித்தார். அது இப்போது அடிபட்டுப் போனது சோக நிகழ்ச்சியே.
  • மதுவிலக்கை விரைவில் அரசு அமுலாக்க வேண்டும் என்பது அரசியல் சாஸனத்தின் கட்டளைக் கோட்பாடுகளில் ஒன்று. கட்டளைக் கோட்பாடுகளில் செப்பியுள்ள லட்சிய நிலைகள் விரைவில் கைகூடச் செய்வதற்காக, ஜீவாதார உரிமைகளை மாற்றியாக வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், மதுவிலக்கைத் துரிதமாக பரப்புவற்கு வழி செய்யாமலும், இருக்கும் மாநிலங்களில் அது எடுபடாதபடி (எடுக்கப்பட்டுவிடாதபடி) பார்த்துக்கொள்ளவும் தனக்கு அடிப்படையான பொறுப்பு இருக்கிறது என்பதை மத்திய அரசு உணர இயலாமற் போனது மிக மிக வருந்தத் தக்கது.
  • மது என்ன என்பதே தெரியாத ஒரு தலைமுறை தமிழ்நாட்டில் வளர்ந்துவிட்டது. அந்த இளந்தலைமுறை குடித்துக் கெட்டுப் போகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு முதன்மையானது. பெற்றோர்களும், ஆசிரியர்களும், பொதுவாழ்விலுள்ள பொறுப்பாளர்களும், ஆங்காங்கு செல்வாக்கு உள்ள மற்றவர்களும் தாமே எடுத்துக் காட்டுக்களாக இருந்து, இந்தத் தீமையிலிருந்து மாணவர்களையும் மற்ற இளைஞர்களையும் கட்டிக் காப்பது கடமை. பெண்களுக்கு இவ் விஷயத்தில் விசேஷப் பொறுப்பு உண்டு. தொழிற் சங்கங்களின் தலைவர்கள் நல்லபடி வழிகாட்டி ஆலை, விவசாயத் தொழிலாளரை அழிவுப் பாதையிலிருந்து காப்பாற்றுவது அவசியம். ஒவ்வொரு ஊரிலும் பெரியவர்களையும் உற்சாகமுள்ள இளைஞர்களையும் கொண்ட குழுக்கள் அமைய வேண்டும். வழி தவறுகிறவர்களை நல்ல நிலையில் இருக்கும்போது அணுகி நேர் வழிக்குத் திருப்புவதற்கு அவர்கள் முயல வேண்டும். நகர்ப்புறங்களில் பல குழுக்கள் தேவைப்படலாம். இது அமைதியாக, பொறுமையுடன், இடையறாது தொடர்ந்து நடைபெற வேண்டிய ஆக்கப் பணி. காந்திஜியை நினைவு கூர்ந்து இதற்காக உழைக்க வேண்டும்.”

நன்றி: தினமணி (02 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories