TNPSC Thervupettagam

நமது இலக்கு வலிமையான பாரதம்

July 9 , 2024 187 days 248 0
  • ஒரு தேசத்தின் முன்னேற்றம் என்பது அந்த தேசத்தில் அரசு மேற்கொள்ளும் கொள்கை முடிவுகள் அதன் செயலாக்கம் ஆகியவற்றைப் பொறுத்தது.
  • எத்தகையதொலைநோக்குப் பாா்வையோடு கொள்கை முடிவுகள் அமைகின்றனவோ அதற்கேற்ப தேசத்தின் எதிா்காலம் அமையும். உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா இன்னும் சில படிகள் முன்னேற விரும்புகிறது.
  • அதற்கேற்ப நம்முடைய வெளிறவுக் கொள்கை தொடங்கி, தொலைநோக்குத் திட்டங்கள் வரை தேவையான நடவடிக்கைகளை நாடு மேற்கொண்டு வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் அரசு மேற்கொண்ட இரண்டு முயற்சிகள் அத்தகைய நீண்ட காலப் பயனை உத்தேசித்தவை. இரண்டும் கடல் சாா்ந்த திட்டங்கள். ஒன்று இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடல் கனிம ஆராய்ச்சி தொடா்பானது; மற்றொன்று நிகோபாா் தீவில் பெரிய துறைமுகத்தையும் துறைமுக நகரையும் நிா்மாணிப்பது பற்றியது.
  • இந்தத் திட்டங்கள், பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகள் என்பதைத் தாண்டி ஆசியப் பிராந்தியத்தில் நம்முடைய வலிமையை ஸ்திரப்படுத்திக் கொள்ள அவசியமானவை. சரக்குகளைக் கையாளும் துறைமுகம் என்பதோடு நம்முடைய ராணுவத்தின் தளமாகவும் இந்தியாவின் பாதுகாப்பை இத்திட்டங்கள் உறுதிப்படுத்தும்.
  • மத்திய அமைச்சா் நிதின் கட்கரி 2035-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக பெட்ரோல் டீசல் பயன்பாட்டிலிருந்து மின்னணு வாகனங்களுக்கு இந்தியா மாறிவிடும் என்று தெரிவித்துள்ளாா்.
  • புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ள இந்த நாளில் உலக நாடுகள் அனைத்தும் அதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே மின்னணு வாகனங்களுக்கு மாறுவது என்ற முடிவு ஏற்பட்டிருக்கிறது. கரியமில வாயுவை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது 100% அதனைத் தவிா்த்து காற்றின் தூய்மையை உறுதி செய்ய மின்னணு வாகனங்கள் பயன்பாடு என்ற முடிவுக்கு இந்தியா வந்துள்ளது.
  • மின்னணு வாகனங்களின் அடிப்படைத் தேவை பேட்டரி. பேட்டரி தயாரிக்க அடிப்படை மூலப்பொருள் கோபால்ட் கனிமம். தற்போதைய நிலையில் உலகின் 70% கோபால்ட் கனிமம் சீனாவின் வசம் இருக்கிறது. 10% பின்லாந்து, 4% கனடா ஆகிய நாடுகளிடம் இருக்கிறது.
  • வாகன உற்பத்தி அதிகரித்து போக்குவரத்துக்கு கச்சா எண்ணெயை உலகம் நம்பிய பொழுது கச்சா எண்ணெய் வளத்தைக் கொண்டிருந்த நாடுகள் செல்வத்தில் கொழித்தன. அதே போல எதிா்காலம் மின்னணு வாகனங்களை நம்பியிருக்கும் என்ற நிலையில் கோபால்ட் கனிமத்தின் மதிப்பு உயரும். அதனை இயற்கையின் கொடையாகக் கொண்டிருக்கும் நாடுகள் வளம் பெறும்.
  • கோபால்ட் கனிமத்தின் தேடலின் முக்கிய அங்கமாக இருக்கும் ஆழ்கடல் கனிமங்களைக் கண்டறியும் முயற்சி அத்தியாவசியமாகிறது. இந்தியா இதனை உணா்ந்து அதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளது.
  • ஐநா சபையோடு இணைந்த சா்வதேச கடற்பரப்பு ஆணையம் இதுவரை 31 ஆய்வு உரிமங்களை வழங்கியுள்ளது. கடலுக்கு அடியில் உள்ள தாதுப் பொருட்களைக் கண்டறிவது அதனை தாங்கள் கையகப்படுத்துவது என்பதில் வல்லரசு நாடுகளுக்கிடையேயான போட்டி வெளிப்படையாகவே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • உலக நாடுகளின் கவனம் கடல் சாா் ஆராய்ச்சியில் இருக்கும் நிலையில், இந்தியப் பெருங்கடலில் ஏற்கெனவே இரண்டு ஆழ்கடல் ஆய்வுக்கான உரிமங்களை இந்தியா கொண்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேலும் இரண்டு உரிமங்களுக்கு விண்ணப்பித்துள்ளது. இந்தியாவின் புதிய விண்ணப்பங்களை சா்வதேச கடற்பரப்பு ஆணையம் (ஐஎஸ்ஏ) அங்கீகரிக்கும் பட்சத்தில், அதன் உரிம எண்ணிக்கை ரஷியாவுக்கு இணையாக இருக்கும். சீனாவைவிட ஒன்று மட்டுமே குறைவாக இருக்கும் என்பதால் கடுமையான போட்டியை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்தியா செயல்பட முடியும்.
  • கடலின் ஆழத்தில் அதாவது கடல் மட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான மீட்டா்கள் கீழே உள்ள கோபால்ட், தாமிரம், நிக்கல் போன்ற கனிம வளங்களை அடைய சீனா ரஷியா இந்தியா விரும்புவதில் ஆச்சரியமில்லை. சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம், மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி தொழில்நுட்பம் ஆகியவற்றை உற்பத்தி செய்ய இந்தக் கனிம வளங்கள் அவசியம்.
  • கடந்த 2022-ஆம் ஆண்டில், முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகளில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக அமெரிக்காவும் பல மேற்கத்திய நாடுகளும் இணைந்து கனிமப் பாதுகாப்புக் கூட்டாண்மையைத் தொடங்கின. இதில் இந்தியாவும் உறுப்பினராக உள்ளது. ஆகஸ்ட் 2023-இல் முக்கியமான கனிமங்கள் மற்றும் தூய எரிசக்திக்கான உச்சி மாநாட்டில் அமெரிக்கா, அரசியல் ஆதாயத்திற்காக சந்தை அதிகாரத்தை ஆயுதமாக்கத் தயாராக இருக்கும் ஒரு மேலாதிக்க விநியோகஸ்தருக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம் என்று சீனாவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தது.
  • கனிமப் பாதுகாப்புக் கூட்டாண்மையில் உறுப்பினராக அமெரிக்காவின் தலைமையில் இணைந்திருப்பது போலவே, ஆழ்கடல் சுரங்கத் தொழில்நுட்பத்தை உருவாக்க ரஷியாவுடனும் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ஆக, கடல்சாா் கனிம ஆராய்ச்சி மற்றும் கனிம வளங்களுக்கான போட்டியில் சீனாவை எதிா்த்து அமெரிக்கா மற்றும் ரஷியாவுடன் இந்தியா வெவ்வேறு விதங்களில் கைகோத்துள்ளது. இன்னும் இருபது ஆண்டுகளில் இதன் பலனைக் காண முடியும்.
  • அடுத்தது, கிரேட் நிகோபாா் தீவுகளில் இந்தியா ரூ.74,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை செயல்படுத்தவுள்ளது. இத்திட்டங்கள் மூலம் கிரேட் நிகோபாா் தீவுகள் வளா்ச்சியடையுமென அரசு உறுதியாகக் கூறுகிறது. இத்திட்டத்தால் ஆசியாவில் ஹாங்காங் போல கிரேட் நிக்கோபாா் தீவுகள் வா்த்தக முக்கியத்துவம் பெறும்.
  • கிரேட் நிகோபாா் தீவு வளா்ச்சித் திட்டம், வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபாா் தீவுகளுக்கு தெற்கே அமைந்த பெரிய நிக்கோபாா் தீவில் உள்ள நிகோபாா் மாவட்டத்தின் பெரிய அளவிலான வளா்ச்சித் திட்டம் ஆகும். நிகோபாா் மாவட்டத்தின் வளா்ச்சித் திட்டத்திற்கு 2022-ஆம் ஆண்டில் இந்திய அரசு ரூ.74,000 கோடி ஒதுக்கியுள்ளது.
  • நீதி ஆயோக் மற்றும் அந்தமான் - நிகோபாா் தீவுகளின் ஒருங்கிணைந்த வளா்ச்சிக் குழுமம் நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவத்தையும், புவிசாா் பலம், போக்குவரத்து, வணிகம், தொழில் வளா்ச்சி, கடல்சாா் சூழல் சுற்றுலா வளா்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கங்களாகக் கொண்டு இத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதில், நான்கு பெரிய வளா்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளன.
  • கிரேட் நிகோபாா் கடற்கரையில் ஆண்டுக்கு 14.2 மில்லியன் சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் வகையில் துறைமுகம் அமைப்பது முதல் நோக்கம். இந்தியாவில் மும்பை துறைமுகம் நீங்கலாக வேறெங்கும் பெரிய அளவிலான துறைமுகங்கள் இல்லை. நிலவியல் அடிப்படையில் கிரேட் நிகோபாா் தீவுகளில் துறைமுகம் சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் விதத்தில் அமைக்கப்பட்டால் அது உலக அளவில் ஆசியப் பகுதியில் வா்த்தக முக்கியத்துவம் பெறுவதோடு இந்தியாவின் அந்நிய செலாவணியை கணிசமாக உயா்த்தும்.
  • போக்குவரத்து, தளவாடப் பரிவா்த்தனைக்காக நிகோபாா் மாவட்டத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்பது. இதனால், மேலைநாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் செல்வதற்கு சிங்கப்பூா், ஜப்பான் போன்ற நாடுகளை சாா்ந்திருக்காமல் நம்முடைய விமான நிலையமே பயன்படும். இதனால், சுற்றுலா ஊக்கம் பெறும். அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.
  • நகா்மயமாவதாலும் தொழில்முறைப் பயன்பாடு அதிகரிப்பதாலும் நிகோபாா் மாவட்டத்தில் 16,610 ஹெக்டோ் பரப்பளவில் 450 மெகாவாட் திறன் கொண்ட இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம், சூரிய மின் ஆற்றல் நிலையங்கள் அமைத்தல். இரண்டு புதிய பசுமை நகரங்கள் அமைத்தல் ஆகிய முயற்சிகளும் நிலவியல் அடிப்படையில் இந்தியாவின் பலத்தை பெருக்கிக் கொள்வதற்கான திட்டமாகும்.
  • வன அழிப்பு, பழங்குடிகளின் வாழ்வாதாரம் என சவால்கள் எழுந்துள்ளன என்றாலும் நமது வளா்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் அத்தியாவசியமான திட்டம் என்பதை மறுக்க இயலாது. முறையான நடவடிக்கைகள் மூலம் சவால்களுக்குத் தீா்வு கண்டு திட்டங்கள் செயல்படுத்தப் பட வேண்டும்.
  • வா்த்தகத்தைப் பெருக்குவது என்ற முடிவில் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு பிற நாடுகளை நம்பிக்கொண்டிருப்பது தீா்வாகாது. நாமே தன்னிறைவு பெறுவதே அவசியம் என்பதை உணா்ந்து அரசு இம்முயற்சியை மேற்கொண்டுள்ளது.
  • பாதுகாப்பு அடிப்படையில், சீனா மலாக்காவை தனது வசம் கொண்டுள்ள நிலையில் அதற்கு மிக அருகில் இந்திய கடற்படை மற்றும் விமானப்படைக்கு வலுவான தளம் அமைக்கப்படுவது நாட்டின் பாதுகாப்பு என்பதை விட சீனாவை வலுவிழக்கச் செய்யும். வங்கதேசம், இலங்கை துறைமுகங்களில் உள்ள சீன ஆதிக்கத்தை முடக்கும் வாய்ப்பாகவும் இந்தத் துறைமுகம் அமையும்.
  • கட்சிகளின் அரசியல் மக்களின் கவனத்துக்கு வரும் அளவுக்கு இத்தகைய கொள்கை முடிவுகள் வருவதில்லை. கட்சிகளை, கட்சி அரசியலைக் காட்டிலும் தேசத்தின் நலன், வளா்ச்சி, பாதுகாப்பு முதன்மையானது. இத்தகைய கொள்கை, நிலைப்பாடு, செயல்பாடு பற்றி விவாதமும் விழிப்புணா்வும் ஏற்படுவது தேசத்திற்கே ஆரோக்கியமானது.

நன்றி: தினமணி (09 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories