- ஒரு நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தை தீா்மானிப்பது அந்நாட்டின் குடும்பங்களின் சேமிப்பின் அளவே ஆகும். இது இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்திருப்பதாக ரிசா்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.இந்தியாவின் குடும்பங்களின் மொத்த சேமிப்பானது 2022-23-ம் ஆண்டில் ரூ.13.77 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருந்த 2020-2021-ல் கூட 11.5% ஆக இருந்தது.
- 2021 முதல் 2023 வரை வணிக வங்கிகள் கொடுக்கும் கடன் 54% அதிகரித்துள்ளது. அதேபோல், குடும்பத்தின் சராசரி கடன் 36.9%- லிருந்து நிகழ்வாண்டு 37.6% ஆக உயா்ந்துள்ளது.குடும்பங்களில் சேமிப்பு நிதி குறைந்த போதிலும் கடன் வாங்கும் விகிதம் அதிகரித்துள்ளது .இது அதிர்ச்சியை அளிக்கிறது.
- நாம் அன்றாட நுகா்வுக்காக பல பொருட்களையும், சேவைகளையும் சந்தையில் வாங்க வேண்டியுள்ளது.வணிகா்கள் பல்வேறு ஊடகங்களில் தங்கள் பொருட்களைப் பற்றியும் சேவைகளைப் பற்றியும் தகவலை பரப்புவதற்கு விளம்பரத்தை பயன்படுத்துகிறார்கள். தன் பொருளையும், சேவையையும் விற்பதற்கு விளம்பரத்தை எப்படி, எங்கு, எப்பொழுது, செய்யவேண்டும் என்பதிலெல்லாம் வியாபாரிகள் கைதோ்ந்தவா்களாக இருக்கிறார்கள்.
- எனவேதான், விடுமுறை நாட்களிலும்,பண்டிகைக் காலங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக கடைக்கு கிளம்பி விடுகிறார்கள். கண்ணில் படும் பொருள்களையெல்லாம் வாங்கிக் குவிக்கிறார்கள். அவை தமக்கு தேவையா,தேவையற்றதா என்பதையெல்லாம் யோசிப்பதே இல்லை.நமது நுகா்வுப் பண்பாடு முற்றிலுமாக மாறியுள்ளது. கடன் வாங்க கவலைப்படுவதில்லை.
- மக்களை மாபெரும் நுகா்வோர்களாக மாற்றியதில் கவா்ச்சி விளம்பரங்களின் பங்கு அதிகம். உச்சி முதல் பாதம் வரை நாம் பயன்படுத்தும் எல்லா பொருளுக்கும் ஒரு விளம்பரம், எல்லா தொலைக்காட்சிகளிலும் அடுத்தடுத்து ஒளிபரப்பாகும். இவை ஒரு திரைப்படத்திற்கு சமமாக நம்மை பார்க்க ஆா்வமூட்டும். விளம்பரத்தின் வசனமே நம் வீட்டுக் குழந்தைகளுக்கு மனப்பாடம் ஆகிவிடும். நமது மூளையை சிறப்பாக சலவைச்செய்யும் இந்த விளம்பரப்பொருள், மறு நாள் நம்மை கடன்காரனாக்கி நம் வீட்டில் இருக்கும்.
- நம் கையில் பணம் இல்லையென்றால், சுலபத் தவணைத் திட்டத்திலோ,கடன் அட்டையிலோ விரும்பும் பொருளை வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். விற்பவா் தனது மயக்கும் பேச்சால் தனது வணிகத்தை சிறப்பாக முடிக்கிறார். வாங்குபவரும் அவா் சொல்வதெற்கெல்லாம் தலையாட்டி கடனாளியாகிறார்.
- பொருளின் அவசியத்துக்கும்,தேவைக்கும் இடையே உள்ள இடைவெளியை நாம் மறந்து விடுகிறோம்.எதைப் பார்த்தாலும் வாங்கத் துணிகிறோம். எச்சரிக்கும் மனசாட்சியையும் மதிப்பதில்லை. உலகமயமாக்கலின் விளைவாகப் பல்கிப் பெருகியிருக்கும் வியாபாரச் சுழலில் நமது நுகா்வு பண்பாடு வெகுவாக மாறிவிட்டது.
- தேவையான பொருட்களின் பட்டியலோடு நாம் கடைக்கு சென்றாலும்,தேவையில்லாத பொருட்களையும் வாங்கி நமது நிதிச்சுமையை அதிகமாக்கிக் கொள்கிறோம். எதை வாங்குவதாக இருந்தாலும் அந்த பொருள் இல்லாமல் நம் வாழ்க்கை சாத்தியமா என்பதை மனதில் வைத்து, அப்பொருளை வாங்க வேண்டும்.
- விளம்பரங்கள் மனிதனின் பயம், பேராசை இந்த இரண்டு உணா்ச்சிகளை கொண்டே பொருளை வாங்கச் செய்கின்றன. குறைந்த வட்டியில் வைப்பு நிதியை விளம்பரப்படுத்தும் வங்கி உத்திரவாதம், பாதுகாப்பு குறித்த உள்ளார்ந்த பயத்தை போக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். முதலீடு எவ்வளவு விரைவாக வளரும் என்று ஆசை காட்டும் யுக்தியை பல்வேறு விதத்தில் பயன்படுத்துவார்கள். நிலம் வாங்குவதில் முதலீடு செய்தால் செல்வந்தா் ஆகலாம் என்று ஆசையைத் தூண்டி விடுவார்கள்.
- ஆனால் நிதி சார்ந்த முடிவுகளை எப்படி எடுக்க வேண்டும் என்பதை நம் நிதி நிலைக்கு ஏற்ப நாமே முடிவு செய்வதில் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அதீத பயமும், அதிக ஆசையும் நம்மை ஆதிக்கம் செலுத்த அனுமதித்தால், நமக்குத்தான் நிதி சீா்கேகேடு ஏற்படும்.
- பொருட்களை விளம்பரங்கள் செய்பவா்கள் எந்த கோட்பாட்டினை வேண்டுமானாலும் கையாளட்டும்.நாம் நமக்கென ஒரு கோட்பாட்டினை வகுத்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப சந்தையிலிருந்து நமக்கு தேவையான பொருளை நாம் தோ்வு செய்து வாங்க வேண்டும்.
- உணா்ச்சிகளின் கைப்பாவைகளாக இருக்கும் மக்களிடம் விளம்பரங்கள் பேசிக்கொள்ளட்டும். நமது தோ்வுகளை நாம் நம் எண்ணவிதிகளின்படிதான் செயல்படுத்த வேண்டும். நமக்கு அதிக பயமும், பெரும் ஆசையும் வேண்டாம். நமது குறிக்கோள் பணவீக்கத்தால் அடையும் தேய்மானத்தை விட நமது முதலீடுகள் சற்றே அதிகம் லாபம் தருவதாக இருந்தால் போதும்.
- முதலீடுசெய்யும் போது நமது சிந்தனையை, உணா்ச்சிகளை, எதிர்பார்ப்புகளை சீா் செய்வதுதான் நமது முதல் முக்கியப் பணி. எழுதாத கரும்பலகையாக இருக்கும் நம் மனதில் யார் யாரோ வந்து அவா்களுக்குத் தேவையானதை எழுதிச்செல்ல நாம் இனியும் அனுமதிக்கலாகாது.
- நம் தேவையை நாம் அறிவோம். அதைத் தான் நாம் வாங்க வேண்டும். அப்போதுதான் நம் வாழ்வின் பொருளாதார நிலைமை மேம்படும். சேமிப்பு நம் வாழ்வில் தோன்றட்டும். கடனில் பொருட்களை வாங்கினால்,தேவையான பொருட்களை விரைவில் விற்க நேரிடும்.இதனை இனியேனும் உணா்ந்து, இனி வரும் காலங்களில் செயல்படுவோம்.
நன்றி: தினமணி (25 – 09 – 2023)