TNPSC Thervupettagam

நம் பிள்ளைகளைக் காக்கத் தடுப்பூசிகள் ஏன் முக்கியம்?- அரசு இதுகுறித்து மக்களிடம் பேச வேண்டும்!

January 2 , 2020 1841 days 911 0
  • நாடு முழுவதிலும் ‘இந்திரதனுஷ் 2.0’ என்னும் புதிய தடுப்பூசித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. 2017-ல் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ‘இந்திரதனுஷ்’ திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் இது. இதில் கா்ப்பிணிகளுக்கும், இரண்டு வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கும் கட்டணம் இல்லாமல் தடுப்பூசி போடப்படும். இதன் மூலம் தடுப்பூசிகளால் தடுக்கக்கூடிய எட்டு நோய்கள் அவர்களைப் பாதிப்பது தடுக்கப்படும்.
  • இந்தியாவிலுள்ள 27 மாநிலங்களில் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் முழுமையாகத் தடுப்பூசிகள் போடப்படுவதை உறுதிப்படுத்துவதும், பாதுகாப்பான தாய்மைக்கு முன்னுரிமை அளிப்பதுமே இந்தத் திட்டத்தின் இலக்கு. 2020 மார்ச் மாதத்துக்குள் இந்த இலக்கை எட்டுவது என்னும் முனைப்புடன் இத்திட்டம் செயல்படத் தொடங்கியிருக்கிறது. நாட்டில் வழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகளைப் போடத் தவறியவர்கள்தான், இந்தத் திட்டத்தின் முக்கியப் பயனாளிகள்.
  • அவர்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கம். நல்ல நோக்கம் - இலக்கு எனினும், இந்த இலக்கையும் நோக்கத்தையும் அடைவதற்கான வழிகளை அரசு மேம்படுத்தியதாகத் தெரியவில்லை. உலகிலேயே மிக அதிக அளவு பிரசவங்கள் நடக்கும் நாடு இந்தியா.
  • வருடம்தோறும் சுமார் 2.6 கோடி பிரசவங்கள் இங்கு நடக்கின்றன. சிசு மரணங்கள் அதிகமாக நிகழும் நாடுகளில் ஒன்று இந்தியா. ஆகவே, கர்ப்பிணிக்கும் பிறக்கிற ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசிகளைப் போட்டு, சிசு மரணத்துக்கும் குழந்தைகளின் உடல் ஊனங்களுக்கும் காரணமாகத் திகழும் நோய் பாதிப்புகளிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது.

தடுப்பூசி எதிர்கொள்ளும் சமூகத் தடைகள்

  • இந்தியாவில் 1985-லிருந்து நடைமுறையில் இருக்கும் சர்வதேசத் தடுப்பூசித் திட்டத்தால் ஒரு வயதுக்கு உட்பட்ட 65% குழந்தைகளுக்குத்தான் முழுமையாகத் தடுப்பூசிகள் போட முடிந்தன. இப்போது இரண்டு வருடங்களாக இயங்கும் ‘இந்திரதனுஷ்’ திட்டம் என்ன செய்திருக்கிறது என்றால், கூடுதலாக 5% - 7% பேர் பலனடைய உதவியிருக்கிறது. அவ்வளவுதான்!
  • ஏன் இத்திட்டம் முழு வெற்றி அடையவில்லை, இதற்கு எவையெல்லாம் தடைகளாக இருந்தன, போதாமைகள் என்ன, சவால்கள் எவை என்பது பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டியது அவசியமாகிறது. அந்தத் தடைகளை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் அரசிடம் இப்போதாவது வலுவாக இருக்கின்றனவா என்னும் கேள்வியும் எழுகிறது.
  • தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை முதலில் நாம் எல்லோரும் உணர்ந்திருக்கிறோமா? இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றில் தடுப்பூசியின் பலனால் பெரியம்மையும் இளம்பிள்ளைவாதமும் முற்றிலுமாக ஒழிந்துபோயின. பிளேக், காலரா போன்ற கொள்ளைநோய்கள் நாட்டைவிட்டு ஓடிவிட்டன.
  • தடுப்பூசிகளை முறையாகப் பயன்படுத்தினால் 27 தொற்றுநோய்களைத் தடுக்க முடிகிறது; குறை பிறப்புகள் தடுக்கப்படுகின்றன; சமூக ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
  • தடுப்பூசிகளைப் பயன்படுத்தாவிட்டால் ஓடிப்போன நோய்களும் திரும்பி வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். அதற்கு இரண்டு உதாரணங்கள் இவை: தடுப்பூசி முறைகள் பலவீனமாக இருந்த நாடுகளில் தட்டம்மை மீண்டும் தலைதூக்கியது.
  • உலகில் 2016-ல் 1,32,000 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2018-ல் இந்த எண்ணிக்கை 3,53,000 ஆக அதிகரித்திருக்கிறது. 2008 வரை கேரளத்திலும் தமிழகத்திலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட டிப்தீரியா, சமீபத்தில் மீண்டும் தாக்கி பல குழந்தைகளைப் பலிவாங்கியதையும் இங்கு நினைவுகூரலாம்.

அரசினர் தரப்புப் போதாமைகள்

  • இந்த நிலைமைக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் நிலவும் தயக்கம், சுகாதார மையங்களின் மீது நம்பிக்கைக் குறைவு, சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்கள், மத நம்பிக்கைகள், தடுப்பூசிப் பற்றாக்குறை போன்றவையே முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது. அதோடு, நாட்டில் கற்றறிந்த சமூகச் செயல்பாட்டாளர்கள்கூடத் தடுப்பூசிகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் சூழலும் இருக்கிறது.
  • இதனால், கோடிக்கணக்கான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடலாமா, வேண்டாமா என்னும் குழப்பத்தில் இருக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் தடுப்பூசியின் அவசியம் குறித்து தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. அதற்கான வழிமுறைகளில் இதுவரை காணப்பட்ட தடைகளை இப்போதாவது நாம் சரிசெய்துவிட்டோமா?
  • அடுத்து, தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கிடைக்கும் பாதுகாப்பு தனிப்பட்டவருக்கு மட்டும் சொந்தமன்று. அது மொத்த சமூகத்துக்குமானது. குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடாத பல பெற்றோர் தங்கள் குழந்தைகள் இப்போது ஆரோக்கியமாகத்தானே இருக்கின்றனர் என்று நினைக்கின்றனர். ஏற்கெனவே, தடுப்பூசி போட்டுக்கொண்ட சமூகம் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் பாதுகாப்புதான் அது என்பதை அவர்கள் உணரவைத்துவிட்டோமா?
  • இப்படித் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் கூட்டம் குறைந்துபோனால் ‘சமூகத் தடுப்பு’ (herd immunity) தரும் பாதுகாப்பும் நாளடைவில் குறைந்துவிடும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்களா?
  • நாட்டில் தடுப்பூசி போடத் தவறியவர்களுக்கானது ‘இந்திரதனுஷ் 2.0’ தடுப்பூசித் திட்டம் எனும்போது, எவரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்னும் புள்ளிவிவரம் அரசிடம் துல்லியமாக இருக்க வேண்டும். அவர்கள் ஏன் போட்டுக்கொள்ளவில்லை அல்லது ஏன் விட்டுப்போயினர் என்னும் விவரமும் வேண்டும். இருக்கிறதா?
  • வீடற்றவர்களும் சாலையோரங்களில், பாலங்களின் அடியில் வசிப்போரும், ஊர் மாறிச் செல்வோரும் அதிகமாக இருக்கும் நாடு இந்தியா. மலைவாழ் மக்களும் எஸ்டேட்டுகளில் பணிபுரிவோரும் இங்கு கணிசமாக உள்ளனர். அதுபோல, பணி நிமித்தம் மாநிலம் விட்டு மாநிலம் செல்வோரின் எண்ணிக்கையும் பல லட்சங்களைத் தாண்டும். இவர்களின் முழுமையான பட்டியல் தயாரித்து, அவர்களின் குழந்தைகளுக்குப் போடப்பட்ட/போடப்பட வேண்டிய தடுப்பூசிகளின் விவரங்களைத் தயாரிப்பதும் இப்போதுள்ள சவால்கள். இவற்றுக்கான திட்டங்களை ஊடகங்கள் வழியாக மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறோமா? இந்தப் போதாமைகள் சரிசெய்யப்படவில்லை என்றால், ஒருபோதும் அரசின் நோக்கமோ, இலக்கோ அடைய முடியாததாகவே இருக்கும்.

சட்டங்களும் கற்பிதங்களும் அவசியம்!

  • உலக அளவில் தடுப்பூசிக்கு எதிராகத் தவறான பிரச்சாரங்கள் புறப்பட்டிருப்பதால் அவற்றை முறியடிக்கவும் தடுப்பூசிகள் மீதான தயக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் என்று சட்டம் இயற்றியுள்ளன.
  • இதை இந்தியாவும் பின்பற்றலாம். சமூக வலைதளங்களில் தடுப்பூசிகள் குறித்துத் தவறான தகவல்களைத் தருவோரைக் காவல் துறையினர் விசாரிக்கத் தொடங்கினாலே இந்தப் பிரச்சினைகளில் பாதி குறைந்துவிடும். பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க வரும்போது, தடுப்பூசிச் சான்றிதழைப் பெற்றோர் வழங்குவதை கேரள அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவும் நல்லதொரு நடவடிக்கைதான். நாட்டில் மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றலாம்.
  • அரசின் இப்போதைய திட்டம் முடிவுக்கு வர இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், அரசு இந்தத் திட்டத்தை மக்களுக்குக் கொண்டு செல்லும்போது, அந்தந்தப் பகுதிகளில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டால் திட்டம் முழுமை அடையும். ஊடகங்களுக்கும் சமூகச் செயல்பாட்டாளர்களுக்கும்கூட இதில் முக்கியமான பங்கு உண்டு. ஏனென்றால், தடுப்பூசி ஒரு குழந்தையின் பாதுகாப்போடு மட்டும் அல்ல; சமூகப் பாதுகாப்போடும் பிணைந்தது!

நன்றி: இந்து தமிழ் திசை (02-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories