- இருப்பதற்கு ஓர் உறைவிடம் என்பது எல்லோருக்குமே இருக்கும் கனவு. வளர்ச்சி அடைந்த நாடுகளில் வீடு வாங்குவோரின் நலனைப் பேணவும், அவர்களை ஏமாற்ற முற்படுபவர்களைக் கடுமையாகத் தண்டிக்கவும் சட்டங்கள் இருக்கின்றன. இந்தியாவில் இன்னும்கூட வீடு வாங்குவோருக்கு முழுமையான பாதுகாப்பும், அவர்களது முதலீட்டுக்கு உத்தரவாதமும் வழங்கும் அளவிலான சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.
அடுத்த 25 ஆண்டுகளில் ஏறத்தாழ இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையினர் நகரங்களில் குடியேற இருக்கிறார்கள். ஏற்கெனவே இந்தியா மிக வேகமாக நகர்மயமாகி வருகிறது. அதனால் மாநகரங்களில் மட்டுமல்லாமல், சிறு நகரங்களில்கூட குடியிருப்புகள் உருவாகி வருகின்றன.
- மத்திய அரசின் நடுத்தர, நலிந்த பிரிவினருக்கான குடியிருப்புக்கு வழங்கப்படும் மானியமும், வங்கிகள் மூலம் வழங்கப்படும் வீட்டுக் கடனும் சொந்த வீடு என்கிற கனவு நனவாக பெரிதும் உதவும் அதே வேளையில், இதை பயன்படுத்தி குடியிருப்புக் கட்டுமான நிறுவனங்கள் சில வீடு வாங்குவோரை ஏமாற்றியும் வருகின்றன. வீடு வாங்குவோரின் அவலத்துக்கு செவிசாய்த்திருக்கிறது உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய இரண்டு தீர்ப்புகள்.
திவால்
- அடுக்குமாடிக் குடியிருப்பு நிறுவனங்கள் திவாலாகும்போது, அந்த நிறுவனத்தின் சொத்துகள் வங்கிகளால் பறிமுதல் செய்யப்படுகின்றனவே தவிர, வீடு வாங்குபவர்களுக்குச் சாதகமாக இல்லை. மனை வணிக ஒழுங்காற்றுச் சட்டத்தின் அடிப்படையிலோ, நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியோ தங்களது முதலீட்டை திரும்பப் பெற வேண்டுமே தவிர, திவால் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் பங்கு பெறக் கூடாது என்று மனை வணிகத் துறையினர் உச்சநீதிமன்றத்தை அணுகினார்கள். இந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் மிகவும் தெளிவாக வீடு வாங்குவோருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
- "ஜேப்பீ இன்ப்ராடெக்' என்கிற அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமான நிறுவனம், நிதி நெருக்கடியால் தங்களது பல்வேறு குடியிருப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் கைவிட்டது. அதில் குடியிருப்புக்காக முதலீடு செய்தோர் தங்களது முதலீட்டுக்கு பாதுகாப்புக் கோரி நீதிமன்றத்தை அணுகினார்கள்.
- இந்த வழக்கில், திவால் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் குடியிருப்புக்கு முதலீடு செய்திருப்பவர்களும், கடன் கொடுத்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்கிற வாதத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறது நீதிமன்றம்.
லட்சக்கணக்கானோர் வீடுகள் வாங்குவதற்காக வீட்டுக் கடன் வாங்குகிறார்கள்.
- அந்த வீடுகள் குறிப்பிட்ட காலத்தில் அவர்களுக்கு தரப்படவில்லை என்றாலும்கூட, அவர்கள் கடன் தவணை, வட்டியை வங்கிகளுக்குச் செலுத்தியாக வேண்டும்.
இவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதனால்தான் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், மனை வணிக ஒழுங்காற்றுச் சட்டம் உள்ளிட்ட அலைக்கழிக்கும் முறைகளில் வீடு வாங்க முற்படுவோர் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, திவால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
- உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இனிமேல் வீடு வாங்கியவர்கள் குடியிருப்புக் கட்டுமானம் கைவிடப்பட்டாலோ, பாதியில் நின்று போனாலோ அதற்காகக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தங்கள் வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்தவர்களும், திவால் சட்டத்தின் கீழ் நிறுவனத்துக்குக் கடன் வழங்கியவர்களாக முன்னுரிமை பெறுவார்கள். வீடு வாங்குவோரைப் பாதுகாப்பதற்கு தெளிவான, பொதுவான கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியிருக்கிறது நீதிமன்றம்.
- தலைநகர் தில்லியிலுள்ள "அமர்பாலி' என்கிற மிகப் பெரிய அடுக்குமாடிக் கட்டுமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி தன்னுடைய அத்தனை குடியிருப்புத் திட்டங்களையும் அரைகுறையாகக் கைவிட்டுவிட்டது.
- உச்சநீதிமன்றம் தலையிட்டு மனை வணிக ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்தின் பதிவை ரத்து செய்திருக்கிறது.
- அத்துடன் நின்று விடவில்லை. அரைகுறையாக நிறுத்தப்பட்டிருக்கும் அத்தனை குடியிருப்புத் திட்டங்களையும் மத்திய அரசின் தேசிய கட்டடக் கட்டுமான நிறுவனம் கட்டி முடிக்க வேண்டும் என்றும், அதற்காக 8% கட்டணத் தொகை வசூலித்துக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
- மேலும், வங்கிகளும் அரசுத் துறையினரும் அந்தத் திட்டங்கள் தடையில்லாமல் கட்டி முடிக்கப்பட்டு, வீடு வாங்கியவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது. வீடு வாங்கியவர்கள் மீது மேலும் வட்டிச் சுமையை ஏற்றக் கூடாது என்றும், அவர்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படக் கூடாது என்றும் கடுமையாக எச்சரித்திருக்கிறது உச்சநீதிமன்றம். அமர்பாலியில் வீடு வாங்கியவர்கள் சிலர் முழுமையாகவும், பலர் பாதிக்கு மேலும் வீட்டுக்கான தவணைத் தொகையைச் செலுத்தியிருக்கிறார்கள் என்பதையும்
உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
பொருளாதார வளர்ச்சி
- இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, கட்டுமானத் துறையின் வளர்ச்சியைச் சார்ந்திருக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவில் மனை வணிகத் துறையினர் மத்தியில் பேராசையும், மோசடி மனப்பான்மையும் காணப்படுகிறது. அதற்கு மிக முக்கியமான காரணம், அரசுத் தரப்பிலிருந்து அவர்களுக்குத் தரப்படும் நெருக்கடிகளும், கையூட்டு எதிர்பார்ப்புகளும்தான்.
- நேர்மையாகவும், நியாயமாகவும் தரமான வீடுகளைக் குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடித்து வழங்க முற்படும் கட்டுமான நிறுவனங்கள் அரசியல் தலையீட்டாலும், அதிகாரிகளின் எதிர்பார்ப்புகளாலும் செயல்பட முடியாமல் தவிக்கின்றன.
- மோசடி நிறுவனங்கள் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் திருப்திப்படுத்தி வீடு வாங்குவோரை ஏமாற்றி கோடிகளைக் குவிக்கின்றன. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு எட்டப்படாத வரை "ஜேப்பீ இன்ப்ராடெக்', "அமர்பாலி' போன்ற நிகழ்வுகள் தொடரத்தான் செய்யும்!
நன்றி: தினமணி(27-07-2019)