TNPSC Thervupettagam

நம்பிக்கை ஏற்படுத்தும் நட்புறவு!

December 18 , 2024 26 days 179 0

நம்பிக்கை ஏற்படுத்தும் நட்புறவு!

  • மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருக்கிறார் இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக. இலங்கையின் புதிய அதிபர் குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டிருக்கிறார். மாலத்தீவு அதிபர் மூயிஸ் போலல்லாமல், தனது முதலாவது அரசுமுறைப் பயணத்துக்கு புது தில்லியைத் தேர்ந்தெடுத்திருப்பதிலிருந்து, எந்த அளவுக்கு இந்திய-இலங்கை உறவுக்கு அதிபர் அநுரகுமார முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கிறார் என்பது வெளிப்படுகிறது.
  • பிரதமர் நரேந்திர மோடி உடனான அவரது சந்திப்பு இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைகிறது. இலங்கையின் வளமான எதிர்காலம், நீடித்த பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்கிற உறுதி பிரதமர் நரேந்திர மோடியால் இலங்கை அதிபருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு எந்த வகையிலும் தீங்கு ஏற்பட இலங்கையைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்கிற உறுதியை அதிபர் அநுரகுமாரவும் வழங்கியிருக்கிறார்.
  • கடந்த 2022-ஆம் ஆண்டு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இந்தியா ஆதரவுக் கரம் நீட்டியதை நினைவுகூர்ந்த அதிபர் அநுரகுமார, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் உள்ள பொதுவான சவால்கள் குறித்தும் இந்தியப் பிரதமருடன் கலந்தாலோசனை நடத்தியிருக்கிறார்.
  • அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருக்கும் இலங்கை அதிபரின் கவனத்துக்கு இந்தியா சில பிரச்னைகளைக் கொண்டுவர மறக்கவில்லை. இலங்கையின் மலையகத் தமிழர்கள், கிழக்கு மாகாணத்துக்கான திட்டங்களை நிறைவேற்ற இந்தியா முழு ஆதரவு அளிக்கும் அதேவேளையில், மாகாணத் தேர்தல்களை நடத்தி இலங்கைத் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வற்புறுத்தியிருக்கிறது.
  • நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியிருப்பதுபோல, இலங்கையின் தலைமன்னாரையும் ராமேசுவரத்தையும் விரைவில் கப்பல் போக்குவரத்து மூலம் இணைப்பது குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் பேசியிருக்கிறார்கள்.
  • இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்டகாலமாகவே முடிவு காணப்படாமல் தொடர்கிறது மீனவர் பிரச்னை. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் மீனவர்களும், படகுகளும் சிறை பிடித்து வைக்கப்படுவதும் வழக்கமாகவே இருந்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதுபோல மனிதநேயம், அமைதியான சூழல், மோதல் போக்கைத் தவிர்ப்பது ஆகியவற்றின் அடிப்படையில் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
  • இலங்கைக் கடற்படையின் கடுமையான நடவடிக்கைகளும், தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் தொடர்கதையாகவே மாறியிருக்கின்றன. அதே நேரத்தில், இந்தப் பிரச்னைக்கு இந்திய மீனவர்களும் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
  • பல நூற்றாண்டுகளாக இனத்தாலும், மொழியாலும், மதத்தாலும் இணைந்து வாழ்ந்த தமிழக-இலங்கை மீனவர்களின் உறவில் பிளவு ஏற்படுவதற்கு மீன்பிடி சுருக்குமடி வலைகள் காரணமாக அமைந்தன. இலங்கையின் வடக்குப் பகுதியில் வாழும் தமிழக மீனவர்களின் முக்கியமான தொழில் மீன்பிடித்தல். இலங்கையின் மொத்த மீன் தேவையில் மூன்றில் ஒரு பங்கு வடபகுதியில்தான் கிடைக்கிறது. உள்நாட்டுப் போர்க் காலத்தில் மீன்பிடித்தல் முற்றிலுமாக நடைபெறவில்லை என்றே கூறலாம்.
  • பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிப்பது இலங்கை அரசால் தடை செய்யப்பட்டிருந்தது. இலங்கை மீனவர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வருவதும், இந்திய இழுவைப் படகுகளில் பணியாற்றுவதும் தவிர்க்க முடியாதவையாக இருந்தன. 2009-இல் உள்நாட்டுப் போர் நிறைவுபெற்று, அவர்கள் மீண்டும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டபோது இந்திய மீனவர்களும், அவர்களது இழுவைப் படகுகளும், சுருக்குமடி வலைகளும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறின.
  • சுருக்குமடி வலைகள் மூலம் தமிழக மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைப் பகுதியில் நுழைந்து மீன்களை அள்ளிக்கொண்டு செல்வதும், இலங்கை மீனவர்களின் வலைகள் இழுவைப் படகுகளால் சேதம் அடைவதும் அவர்களுக்கு ஆத்திரமூட்டியதில் வியப்பில்லை. தென்சீனக் கடலில் மீன் பிடிக்கும் சீனாவுக்கு எதிராக பிலிப்பின்ஸ் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததைப்போல, இந்தியாவுக்கு எதிராக இலங்கை களமிறங்கவில்லை என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
  • கச்சத்தீவுப் பகுதியிலும், பாக் ஜலசந்தியிலும்தான் அதிக அளவில் மீன்கள் கிடைக்கின்றன என்னும் நிலையில் இருநாட்டு மீனவர்களுக்கு இடையேயும் முறையான புரிதல்-நட்புறவை ஏற்படுத்துவதும், இருதரப்பினரும் மீன் வளத்துக்கு பாதகம் இல்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ள வழிகோலுவதும் இந்திய-இலங்கை அரசுகளின் கடமை. கடந்த அக்டோபர் மாதம் இலங்கைத் தலைநகர் கொழும்பில் மீனவர் நலனுக்காக நடைபெற்ற இரு நாட்டு கூட்டு பணிக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை முறையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • எந்தச் சூழலிலும் மீனவர்கள் மீது ஆயுத பிரயோகம் செய்வதைத் தவிர்ப்பது, இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை அரசமைப்புச் சட்டத்தின் மூலம் முழுமைப்படுத்துவது ஆகியவை இந்தியாவால் இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயகவிடம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. அவரது முதலாவது அரசுமுறைப் பயணத்தின் வெற்றி, மேலே குறிப்பிட்ட இரண்டையும் நடைமுறைப்படுத்துவதில்தான் உறுதிப்படும்.

நன்றி: தினமணி (18 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories