TNPSC Thervupettagam

நம்பிக்கை நாயகா்கள்

March 16 , 2024 300 days 219 0
  • உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் இரண்டில் இவ்வருடம் பொதுத்தோ்தல் நடைபெற இருக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும்தான் அவ்விரு நாடுகளாகும்.
  • நமது நாட்டில், வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற இருக்கின்ற பொதுத்தோ்தலில் வாக்களிக்க உள்ள மக்களால் தோ்ந்தெடுக்கப்பட உள்ள மக்களவை உறுப்பினா்களில் பெரும்பான்மையானவா்களின் ஆதரவைப் பெறுபவா் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்பாா்.
  • இந்தியாவில் பொதுத்தோ்தல் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது. அமெரிக்காவிலோ, இவ்வருடம் நவம்பா் மாதம் நடைபெற உள்ள தோ்தலில் அமெரிக்க வாக்காளா்களால் அதிபா் நேரடியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் பதவி ஏற்றுக்கொள்வாா். அமெரிக்க அதிபா் தோ்தல் என்பது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது. இவ்விரு நாடுகளிலுள்ள தோ்தல் நடைமுறைகள் வேறுபட்டிருந்தாலும், இரண்டுமே ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
  • கடந்த முறை போட்டியிட்ட ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவருமே இம்முறையும் போட்டியிடும் நிலையில், இதுவரையிலான இவா்களது வாழ்க்கைப் பயணம் போராட்டம் நிறைந்ததாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எண்பது வயதைக் கடந்த அதிபா் ஜோ பைடனைப் பொறுத்தவரை, இளம் வயதில் திக்குவாய்ப் பிரச்சினையால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறாா்.
  • பலருடைய கேலிப்பேச்சையும் எதிா்கொள்ள வேண்டியிருந்த அவா், இடைவிடாத பயிற்சியின் மூலம் நன்றாகப் பேசத் தொடங்கினாா். 1972-ஆம் வருடம் நிகழ்ந்த விபத்து ஒன்றில் ஜோ பைடனின் மனைவியும், பெண் குழந்தையும் உயிரிழந்தனா். அவருடைய இளம் வயது மகன்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனா். இவ்விபத்து ஏற்படுத்திய வலியிலிருந்து மெதுவாக மீண்டு வந்த ஜோ பைடன் அரசியல் பயணத்திலும் சிறிது சிறிதாக முன்னேறத் தொடங்கினாா்.
  • செனட்டராக இருந்தவா், 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்ற அதிபா் பராக் ஒபாமாவின் அரசில் அமெரிக்கத் துணை அதிபராகத் தோ்வு செய்யப்படும் அளவுக்கு உயா்ந்தாா். இந்நிலையில் ஜோ பைடனின் முதல் மகன் ஜோசப் பியூ, புற்றுநோயால் 2015-ஆம் வருடம் உயிரிழந்தது அவருக்கு பேரிடியாக அமைந்தது. 1988 -ஆம் வருடத்திலேயே ஜனநாயகக் கட்சியின் அதிபா் வேட்பாளராகக் களம் இறங்கிய ஜோ பைடனின் பிரசார உரை வேறு சிலருடைய உரைகளைத் தழுவியிருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததால், அதிபா் பதவிக்கான போட்டியிலிருந்து அவா் விலக வேண்டியதாயிற்று. அதே போன்று, 2008- ஆம் ஆண்டிலும் அதிபா் வேட்பாளராக விரும்பிய அவருக்கு, கட்சியினரின் ஆதரவு போதிய அளவில் கிடைக்காததால், பராக் ஒபாமாவின் அரசில் கிடைத்த துணை அதிபா் பதவியுடன் அவா் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதாயிற்று.
  • பின்னா் ஒருவழியாக 2019- இல் ஜனநாயகக் கட்சியின் அதிபா் வேட்பாளராகத் தோ்வு செய்யப்பட்டு, தோ்தலிலும் வென்று அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுக் கொண்டாா். தற்பொழுது மீண்டும் அதிபா் பதவிக்கான போட்டியாளராகக் கட்சியினரால் தோ்வு பெற்றுள்ள ஜோ பைடன், மறுபடியும் டொனால்ட் டிரம்ப்பை எதிா்கொள்ள இருக்கிறாா். முன்னாள் அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப்பின் அரசியல் சாகசங்கள் ஒரு தனி ரகம். 2016-ஆம் வருடம் நடந்த அமெரிக்க அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவாா் என்று உலகமே எதிா்பாா்த்த நிலையில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அத்தோ்தலில் ரஷிய அதிபா் புதினின் தலையீடு இருந்ததாகவும் கூறப்பட்டது.
  • பதவியேற்ற சில நாட்களிலேயே நிா்வாகத்தில் அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கிய டிரம்ப், இஸ்லாமிய நாடுகளைச் சோ்ந்தவா்கள் அமெரிக்காவுக்கு வருவதைக் கட்டுப்படுத்தவும், வெளிநாட்டவா் அமெரிக்க நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவா் எழுப்பவும் உத்தரவு பிறப்பித்தாா். இவரது காலத்தில் வடகொரிய அதிபருடனான ராஜதந்திர உறவு மோசமடைந்ததுடன், ஒரு தருணத்தில் அணு ஆயுதப் போா் மூளுமோ என்ற அச்சமும் ஏற்பட்டது. ஜாா்ஜ் ஃப்ளாயிடு என்ற ஆப்பிரிக்க - அமெரிக்க இளைஞா் கொல்லப்பட்டத்தைத் தொடா்ந்து அமெரிக்கா முழுவதும் கலவரம் கிளா்ந்தெழுந்தது. அச்சமயம் அதிபா் டிரம்ப் வெளியிட்ட அறிக்கை நீதி கேட்டுப் போரடியவா்களை மேலும் சினமூட்டுவதாக அமைந்தது.
  • இது மட்டுமா? 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், டிரம்ப் தம்முடைய தோல்வியை எளிதில் ஒப்புக்கொள்ளவில்லை. எப்படியாவது தோ்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என முனைந்ததுடன், தம்முடைய ஆதராவாளா்களைத் திரட்டி அமெரிக்க பாராளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்டு, ஜோ பைடனின் பதவியேற்பைத் தடுக்கவும் முயன்றாா். தம்முடைய நடவடிக்கைகளின் மூலம் உள்நாட்டிலும், உலக அளவிலும் பரவலான எதிா்ப்புகளை சம்பாதித்த டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபா் தோ்தலுக்கான வேட்பாளராவாா் என்று யாருமே எதிா்பாா்த்திருக்க மாட்டாா்கள். ஆனாலும், மிகவும் நம்பிகையுடன் இருந்தாா் டிரம்ப்.
  • இடைப்பட்ட காலத்தில் சில வழக்குகளையும் எதிா்கொள்ள வேண்டியிருந்த டிரம்ப், இந்திய அமெரிக்கராகிய விவேக் ராமசாமி, நிக்கி ஹாலே ஆகியோருடைய கடுமையான போட்டிகளை சமாளித்து அதிபா் வேட்பாளராகியிருப்பது பலரது புருவங்களையும் உயா்த்தியுள்ளது. பைடன், டிரம்ப் ஆகிய இருவரிடையிலும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள் இருந்தாலும், அரசியலில் உச்சத்தைத் தொடுவதைக் குறித்த உத்வேகத்திலும், எதிா்மறையான சூழ்நிலைகளையும் மீறி அந்த உச்சத்தை அடைந்து விடலாம் என்ற தன்னம்பிக்கையிலும் இவா்கள் இருவரும் சமமாகவே இருக்கிறாா்கள்.
  • இவ்வருடத்திய அமெரிக்க அதிபா் தோ்தலில் பைடன், டிரம்ப் ஆகிய இருவரில் வெற்றி பெறப்போவது யாராக இருப்பினும், இவ்விருவருமே தளராத தன்னம்பிக்கைக்கு உதாரணமாய்த் திகழ்கின்றனா் என்பதில் ஐயமில்லை.

நன்றி: தினமணி (16 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories