TNPSC Thervupettagam

நம்பிக்கையளிக்கும் பட்ஜெட்

February 20 , 2024 188 days 218 0
  • தமிழ்நாட்டின் நிதியமைச்சராகத் தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் தங்கம் தென்னரசு. சமீபத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் தமிழ்நாட்டின் நிதிநிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், பெரிய அளவிலான அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற ஐயம் நிலவியது. ஆனால், ஆக்கபூர்வமான பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் தாக்கலாகியிருக்கும் இந்த பட்ஜெட்டில் மக்களை ஈர்க்கும் அறிவிப்புகள் நிறையவே உள்ளன.
  • தமிழ்நாட்டில் முதன்முறையாகப் புத்தொழில் மாநாடு, 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள், கிராமச் சாலைகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு, 5 லட்சம் ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து வறுமையை அகற்றும் திட்டம், கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் நம்பிக்கையளிக்கின்றன.
  • வளர்ச்சியின் கரங்கள் சென்னைக்கு வெளியிலும் நீள வேண்டும் என்ற குரல்கள் வலுத்துவரும் நிலையில், கோயம்புத்தூரில் ரூ.1,100 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா; மதுரை, திருச்சி, தஞ்சாவூர் எனத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பரவலாகும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.
  • இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்திருக்கும் நிலையில், வெள்ளம், நில அதிர்வு உள்ளிட்டவற்றைக் கண்காணித்துப் பேரிடர் அபாய அளவைக் குறைக்கத் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. விரைவான வானிலை முன்னறிவிப்புகளைப் பெற இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன.
  • தேசியப் பேரிடர் நிவாரணத்திலிருந்து எந்த நிதியும் தற்போது வரை விடுவிக்கப்படவில்லை என்ற அறிவிப்புடன் இந்தத் திட்டங்கள் கொண்டுவரப்படுவது கவனிக்கத்தக்கது. நாய்க்கடி அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் நிலையில், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்க நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
  • தமிழ்நாட்டின் முதன்மை நதிகளைப் புனரமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பு, 2,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி ஒதுக்கீடு, மழைநீரைச் சேமிக்கவும், நீர்நிலைகளை மேம்படுத்தவும் ரூ.500 கோடியில் 5,000 நீர்நிலைகளைப் புனரமைக்கும் திட்டம் உள்ளிட்டவை நீர்நிலைப் பாதுகாப்பில் அரசின் முனைப்பைக் காட்டுகின்றன.
  • காலை உணவுத் திட்டத்தின் காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்திருக்கும் நிலையில், ஊரகப் பகுதிகளில் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுவது பாராட்டத்தக்கது.
  • நான் முதல்வன்திட்டத்தின்கீழ், ரூ.200 கோடி மதிப்பீட்டில் 100 கலை-அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் திறன் ஆய்வகங்கள், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள், மதி இறுக்கம் (Autism) உடையோருக்கு ரூ.25 கோடியில் உயர்திறன் மையம், திருநர்களின் கல்லூரிப் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்பது உள்ளிட்டவை வரவேற்கத்தக்க முன்னெடுப்புகள்.
  • பட்ஜெட் உரையில் திருக்குறள் தொடங்கி பிரமிள் கவிதைகள் வரை மேற்கோள் காட்டியிருக்கும் தங்கம் தென்னரசு, தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க ரூ.2 கோடி, தமிழ் மொழியை நவீனப்படுத்த செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.
  • அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் இல்லை என்பதைத் தவிர, இந்த பட்ஜெட் பெருமளவில் ஆக்கபூர்வமானதாகவே அமைந்திருக்கிறது. இந்த அறிவிப்புகள் அரசியல் ஆதாயம் பெறுவதற்கானவை என்ற பேச்சு எழுந்துவிடாமல், அர்ப்பணிப்புடன் அவற்றை நிறைவேற்றுவதுதான் அரசுக்கு அழகு!

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories