- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, ஜூலை 20 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடந்த மழைக்காலக் கூட்டத் தொடரில், மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன. விவாதத்தின் இறுதியில் பிரதமர் மோடி ஆற்றிய பதிலுரையின்போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனால், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது என்ன? எந்தெந்தத் தருணங்களில் எதிர்க்கட்சிகள் இதைக் கொண்டுவரலாம்?
இப்போது ஏன்?
- அரசின் பெரும்பான்மை குறித்தோ ஆட்சி செய்யும் திறனிலோ நம்பிக்கை இழக்கும்போது, எதிர்க் கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது வழக்கம். அதாவது, இந்தத் தீர்மானத்தின் மூலம் எதிர்க்கட்சிகள் அந்த அரசைச் சவாலுக்கு உட்படுத்துவது என்று பொருள் கொள்ளலாம்.
- மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளில் எதிர்க்கட்சிகள் அதிருப்தி கொண்டிருந்ததாலும் பிரதமர் மோடி அவைக்கு வந்து அது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகவும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன.
விதிமுறைகள்
- மக்களவை நடத்தை விதிகள் 198, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைப்பதற்கான விதிமுறைகளைக் குறிப்பிடுகிறது. அதன்படி மக்களவையில் எந்த உறுப்பினரும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைக்கலாம். ஆனால், அந்தத் தீர்மானத்துக்குக் குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்தத் தீர்மானம் எழுத்து பூர்வமாக இருக்க வேண்டும். தீர்மானத்தைக் கொண்டுவரும் உறுப்பினரின் கையெழுத்து அதில் இருக்க வேண்டும்.
- தீர்மானத்தை அவையின் அமர்வு நாளில் மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். காலை 10 மணிக்குள்ளாகத் தீர்மானத்தின் எழுத்துபூர்வ அறிவிப்பையும் உறுப்பினர் வழங்க வேண்டும். அதை அவைத் தலைவர் அவையில் வாசிப்பார்.
- அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த பிறகு, தீர்மானத்தை விவாதத்துக்கு ஏற்பதா, இல்லையா என்பது குறித்து அவைத் தலைவர் முடிவு செய்வார். தீர்மானத்தை அவைத் தலைவர் ஏற்றுக்கொண்டால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கான தேதி, நேரம் முடிவு செய்யப்படும்.
விவாதம்
- உறுப்பினர் கொண்டுவந்த தீர்மானம் மக்களவையில் விவாதிக்கப்படும். முதலில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சமர்ப்பித்த உறுப்பினர், தீர்மானத்தை முன்மொழிந்து பேசுவார். பிறகு அவையில் உள்ள எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீது பேச வாய்ப்பு அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து அரசுத்தரப்பிலிருந்து பதில் அளிக்கப்படும். இதில் அமைச்சர்கள் பலரும் பேசுவார்கள். இறுதியாகப் பிரதமர் பதிலுரை வழங்குவார். பிரதமரின் பதிலுரைக்குப் பிறகு, மக்களவையில் அத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும். வாக்கெடுப்பும் வாக்குகளும்: நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிப்பார்கள்.
- தீர்மானம் வெற்றி பெற்றால், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகக் கருதப்படும். அந்தச் சூழலில், அரசு பதவிவிலக நேரிடும். தீர்மானம் தோற்கடிக்கப்பட்டால், அரசு எந்தச் சிக்கலும் இல்லாமல் ஆட்சியைத் தொடரும். ஒருமுறை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தபிறகு, அடுத்த 6 மாதங்களுக்கு மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடியாது என்பது விதி.
ஏன் தீர்மானம்?
- மக்களவையில் ஓர் அரசுக்கு அறுதிப் பெரும்பான்மை இருக்கும்போது, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது ஏன் என்ற கேள்வி எழலாம். குறிப்பிட்ட ஒரு விஷயத்தை (மணிப்பூர் விவகாரம் போன்ற தீவிரமான விஷயங்கள்) ஒட்டி நம்பிக்கையில்லாத் தீர்மானமாகக் கொண்டுவரும்போது, அதுபற்றி விவாதங்கள் அவையில் நடைபெறுவதன் மூலம், அந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் அரசின் அணுகுமுறை, செயல்பாடுகள் குறித்த பார்வை வெளிப்படும். மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.
நம்பிக்கைக் கோரும் தீர்மானம்
- எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதைப் போலவே நம்பிக்கைக் கோரும் தீர்மானமும் உண்டு. பொதுவாக, அரசு பெரும்பான்மையை இழக்கும்போது இத்தீர்மானம் கொண்டுவரப்படுவது உண்டு.
- இது குடியரசுத் தலைவர், அவைத் தலைவர் அறிவுறுத்தலின் பேரில் நடைபெறும். சில நேரம் உள்கட்சிப் பிளவு ஏற்படும்போது, ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறபோது, அரசே முன்வந்து நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வருவதும் உண்டு.
வரலாறு
- மக்களவையில் இதுவரை 28 முறை நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப் பட்டுள்ளன. 1963இல் ஜவாஹர்லால் நேரு அரசுக்கு எதிராக முதல் முறையாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது. 1964-1975 காலகட்டத்தில் 15 நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
- இவற்றில் லால் பகதூர் சாஸ்திரி அரசுக்கு எதிராக 3, இந்திரா காந்தி அரசுக்கு எதிராக 12 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுத் தோற்கடிக்கப் பட்டன. 1977-79 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த மொரார்ஜி தேசாய் இரண்டு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர் கொண்டார். முதல் முறை வெற்றிபெற்ற அவர், இரண்டாவது முறை போதுமான ஆதரவு வாக்குகளைத் திரட்ட முடியாததால், பதவி விலக நேர்ந்தது.
- 1981-1982இல் மட்டும் இந்திரா காந்தி 3 முறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர் கொண்டு தோற்கடித்தார். 1987 இல் ராஜீவ் காந்தி ஒரு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர் கொண்டு தோற்கடித்தார். 1991 முதல் 96 வரை பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் 3 முறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டு தோற்கடித்தார். 2003 இல் வாஜ்பாய் அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
- 2014 முதல் தற்போது வரை பதவியில் இருக்கும் நரேந்திர மோடி முதல் முறையாக 2018இலும், இரண்டாவது முறையாக 2023இலும் என இரண்டு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டு தோற்கடித்தார். குறுகிய காலமே பிரதமர்களாக இருந்த வி.பி.சிங் (1989-90), தேவ கவுடா (1996-97), வாஜ்பாய் (1998-99) ஆகியோர் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவந்து அதில் தோல்வியடைந்தனர். இதனால் பதவி விலகினர். 2008இல் மன்மோகன் சிங் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவந்து வெற்றிபெற்றார்.
நன்றி : இந்து தமிழ் திசை (16– 08 – 2023)