- உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதன் தோன்றி நான்கு லட்சம் ஆண்டுகள் நிறைவு பெற்றதாகவும் மனித மூளை சிந்திக்கத் தொடங்கி ஒரு லட்சம் ஆண்டுகள் கடந்ததாகவும் சொல்லப் படுகிறது. பரிணாமத்தில் முழுமை பெற்று மனிதன் மனிதனாகி விலங்குகளிலிருந்து வேறுபட்டு 30,000 ஆண்டுகள் முழுமை பெற்றதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
- இந்த 30,000 ஆண்டுகளின் பிந்தைய காலகட்டத்தில்தான் பிற உயிர்களிலிருந்து வேறுபட்டு சிந்திக்கும் விலங்காக முழுமையாக பரிணமிக்கிறான் மனிதன். காடு, மலை, வானம், மழை, கடல், அருவி, சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் பற்றி எல்லாம் அவன் சிந்திக்கத் தொடங்கி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
- இத்தகைய சிந்திக்கும் திறன் பெற்ற மனிதன் பல்வேறு கூறுகளை ஆய்ந்து புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்கினாலும் அவனுக்கே சவால் விடக்கூடிய கூறுகளில் ஒன்றாக இன்றும் நீடிப்பது தன்னைப் பற்றி தானே சிந்தித்து அறிவது.
- கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் "உன்னை அறிவதே எல்லா ஞானத்துக்கும் ஆரம்பம்' என்று கூறினார். வாழ்க்கையை மக்கள் தாங்களே சுயமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் கேள்வி என்னவென்றால், மக்கள் உண்மையில் தங்களை எப்படி அறிவார்கள்?
- மக்கள் தங்கள் உண்மையான சுயத்தை அறிவது என்பது தங்கள் உடலின் பல்வேறு பாகங்கள், தங்களின் அணுகுமுறை, தங்களின் உடல் அளவு, தங்களின் நடத்தை, தங்கள் மனம் மற்றும் தங்களைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்து ஏற்றுக் கொள்வது. இது முக்கியமாக மனிதனின் அகத்தின் மீது கவனம் செலுத்துகிறது.
- சில ஆண்டுகளுக்கு முன் ஒரு யோகா வகுப்புக்கு சென்று இருந்தேன். அவ்வகுப்பில் உடலை தினசரி எத்தனை முறை சுத்தம் செய்கிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தார்கள். ஓரிருமுறை என்று பதில் வந்தது பார்வையாளர்களிடமிருந்து.
- அப்படியானால் இதுவரை மனதை எத்தனை முறை சுத்தம் செய்து இருக்கிறீர்கள் என அடுத்த கேள்வியை கேட்டார்கள். யாரிடமிருந்தும் பதில் இல்லை. கைப்பேசிகூட அவ்வப்போது சுத்தம் செய்யவில்லை எனில் தேவையற்ற தரவுகளால் அதன் இயக்கத்தின் வேகம் குறைகிறது. அதுபோல் நம்மை நாம் உள்நோக்கி ஆழ்ந்து பார்க்காதபோது நம் இயக்கத்தின் வேகத்திலும் தாக்கம் ஏற்படுகிறது.
- பல வருடங்களாக லாபத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பெயர்பெற்ற நிறுவனம் சில மாதங்களாக நஷ்டத்தில் இயங்கினால் என்ன செய்வார்கள்? நிறுவனத்தின் வரவு - செலவு கணக்கிலிருந்து அந்த நிறுவனத்தின் நீள அகலம் முதல் குறுக்கு வெட்டுத் தோற்றம் வரை அலசி எடுத்து நஷ்டத்தை கணக்கிட்டு அதை தீர்க்க சில முடிவுகளை எடுப்பார்கள் இல்லையா?
- அதைப்போலத்தான் நம்மை நாம் ஆழ்ந்தகழ்ந்து பார்க்கும்போது நம் பலம், பலவீனம் நமக்கே தெரிய வரும். நம்முடைய சரியான பலத்தை நாம் தெரிந்து கொள்ளும்போது அதைக் கூட்டியோ குறைத்தோ அதீத வீரியத்துடன் அதற்குண்டான பயணத்தை நாம் ஏற்படுத்திக்கொள்ள இயலும்.
- ஒரு கருவியை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த கருவி பற்றி, அது செயல்படும் விதம் பற்றி தெரிந்து வைத்துக் கொண்டால் அதை இன்னும் சிறப்பாக நீங்கள் கையாள முடியும் அல்லவா? இந்த உண்மை மனதிற்கும் பொருந்தும். ஆனால் இன்றைய உலகம் பிறரைப் பற்றி சிந்திப்பதிலும் பிறரைப் பற்றி அறிந்து கொள்ள மெனக்கெடுவதிலுமே ஆர்வமாக இருக்கிறது. தங்களைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
- என் உறவு பெண்மணி ஒருவரை வெகு காலம் கழித்து சந்திக்க நேர்ந்தது. எழுத்து பற்றியும் வாசிப்பு பற்றியும் பேச்சு வந்தபோது அவர், "திருமணத்துக்கு முன் நான் ஒரு தொடர் வாசிப்பாளி. ஒரு புத்தகத்தை முடித்ததும் அடுத்த புத்தகம் என்று தொடர்ந்து படிப்பேன்.
- மறுநாள் நூலகத்தில் புத்தகங்களை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று வந்தால் முதல்நாள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து புத்தகங்களை வாசிப்பேன். ஆனால் இந்த பழக்கம் திருமணத்துக்குப் பிறகு என்னிடமிருந்து காணாமல் போய்விட்டது. கடைசியாக ஒரு முழு புத்தகத்தை படித்து பல வருடங்கள் ஆகிவிட்டன' என்றார்.
- பெண்ணாக இருந்தால் கணவருக்காக, குழந்தைகளுக்காக என்று தம்மை கரைத்துக் கொள்வது போல், ஆணாக இருந்தால் மனைவிக்காக, குழந்தைகளுக்காக என்று சிலவற்றை ஒதுக்கிக் கொள்ளும் போக்கு நம் சமூகத்தில் இருக்கக்கூடிய ஒன்றுதான். ஆனாலும், நம் உடல் நலனை சீர்தூக்கிப் பார்ப்பது போல மனநலனையும் பார்க்க வேண்டியது மிக மிக அவசியம்.
- இன்றைய நவீன உலகில் நம்மை நாம் சற்று உள்ளாழ்ந்து கவனிக்க வேண்டியது தேவை இருக்கிறது. என் உறவு பெண்மணி பிறருக்காகவே வாழ்ந்ததில் பலவற்றைப் பெற்று இருக்கிறார். ஆனால் தான் நேசித்த பல சங்கதிகளை வாழ்வில் தவறவிட்டிருக்கிறார். அதை காலம் கடந்து உணர்ந்தும் இருக்கிறார். இதைப்பற்றி முன்னமே சிந்தித்து இருந்தால் இரண்டையும் சமன்படுத்தக்கூடிய ஒரு மாற்று வழியை அவர் கண்டடைந்திருக்கலாம்.
- ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தேடல் இருக்கும். அந்தத் தேடலை உணர நம்மை நோக்கிய உற்று நோக்கல் அவசியம். நம் விருப்பு வெறுப்புகள் என்னென்ன, நம் தேவை எது என்று உணர்ந்து வாழும்போது நம் மீதே நமக்கு மிகப்பெரிய நம்பிக்கை உருவாகும். நாம் எதை நோக்கிப் பயணிக்க வேண்டும், நம் குறிக்கோளைஅடைய நாம் சென்று கொண்டிருக்கும் பாதை சரியானதா என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரிய வரும்.
- ஏன் இந்த அகச்சிந்தனை அத்துணை அவசியம்? சிலரைப் பார்த்திருக்கிறோம். கோபம் அதிகமாக வரும். கோபம் அதிகமாக வரும் போது, தான் என்ன செய்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒருவர் தனக்கு கோபம் வரும்போது பக்கத்தில் இருக்கும் பொருளை எல்லாம் எடுத்து தூக்கி எறிவார்.
- ஒரு சமயம் "ஏன் இதுபோன்ற உக்கிரமான செயலை செய்கிறீர்கள்' என நான் அவரிடம் வினவிய போது அவர், "என் பெரியப்பாவுக்குக் கோபம் வந்தால் அவர் இப்படித்தான் வீசி எறிவார். நான் அதைப் பலமுறை என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அந்தக் காட்சிகள் எல்லாம் என் மனதில் ஆழமாகப் பதிந்து போயுள்ளது. அதன் பொருட்டே எனக்கும் அப்படிப்பட்ட எண்ணம் வந்து கொண்டே இருக்கிறது என நினைக்கிறேன்' என்றார்.
- அவருக்குள், "ஏன் யாரோ ஒருவர் செய்வதை நாம் செய்ய வேண்டும்? நம் இயல்பு அது இல்லையே' என்ற உணர்தல் நிகழாததுதான் அவரின் செயல்பாட்டுக்குக் காரணம்.
- உளவியல் பகுப்பாய்வின் தந்தை எனச் சொல்லப்படும் சிக்மண்ட் பிராய்ட் தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தைக் கொண்டு ஒரு விளக்கம் சொல்கிறார். அவருக்கு ஐம்பது வயது இருக்கும்போது, ஒரு ரயில் நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். எதிரே ஒரு அழகான இளம் பெண் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு ஏனோ அந்தப் பெண்ணைத் தொட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
- அப்போது அவருடைய அறிவு, "உனக்கு அதிக வயதாகிறது. அந்த பெண்ணை தொட வேண்டும் என்று ஏன் கீழ்த்தரமான எண்ணம் வருகிறது? அவள் உனக்கு அறிமுகமற்ற புதியவள். எனவே அந்த எண்ணத்தை நிராகரி' என்று அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அதே வேளையில் அவர் தன் அருகில் வந்து கொண்டிருந்த அந்த பெண்ணை கண் இமைக்கும் நேரத்தில் தொட்டும் விடுகிறார்.
- இந்நிகழ்வை வைத்தே பல கட்ட ஆய்வுகள் செய்து அவர் ஒரு முடிவுக்கு வருகிறார். விழிப்பு நிலையில் இருக்கும் தன் அறிவு தன்னை இவ்வளவு தடுத்தும் விழிப்பு நிலையில் இல்லாத தன் ஆழ்மனம் என்ன நினைக்கிறதோ அதை நிறைவேற்றி இருக்கிறது.
- ஆழ்மனதை வெல்லக்கூடிய ஆற்றல் ஒரு மனிதனுடைய அறிவுக்கு வரவேண்டும் என்றால் நம் மனதை பல்வேறு நிலைகளில் உற்று நோக்கி பழக்கப்படுத்துதல் வேண்டும். அதற்கு முதலில் நம்மைப் பற்றிய சுய உணர்தல் முக்கியம் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.
- இதற்குத்தான் தியானம் பழக வேண்டும் என்று நம் முன்னோர் அறிவுறுத்தியுள்ளனர். தியானம் பழகுதல் இந்த உலக வாழ்க்கையிலிருந்து நம்மை அறுத்துவிடும் என்ற தவறான புரிதல் பலருக்கும் இருக்கிறது. முதலில் அது நீங்க வேண்டும். தியானம் பழகுவதால் நம் வாழ்க்கைக்கான சிறந்த கதவுகள் திறக்கும்.
- மன ஆரோக்கியத்தை நிர்வகிப்பதற்கும், மனச்சோர்வை விரட்டுவதற்கும் நம் ஆற்றல் மற்றும் செயல்திறன் கூடுவதற்கும், நம் கவனம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும் வாழ்வின் சுவாரசியத்தை, சாராம்சத்தை உணர்ந்து கொள்வதற்கும் வழி அமைத்துக் கொடுக்கும். தியானம் செய்வதை ஆன்மாவுக்கான உணவு என்கிறார்கள் நவீன சிந்தனையாளர்கள்.
- தியானம் செய்வது என்பது ஏதோ இளம்வயது கடந்தபின் தொடங்கி முதுமை வரை கடைபிடிப்பது என்ற எண்ணம் சமூகத்தில் நிலவுகிறது. இது தவறான கண்ணோட்டம். ஒரு குழந்தைக்கு பற்கள் முளைத்ததும் எப்படி பற்களை சுத்தப்படுத்துவது என்ற வழிமுறைகளை நாம் கற்றுத்தருகிறோமோ, அது போல் மனித மனதைப் பண்படுத்த சில நுட்பங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.
- இன்றைய இளைய தலைமுறையினர் எதற்கெடுத்தாலும் சிடுசிடுக்கின்றனர். மன அழுத்தம் ஏற்படுவதால் பலர் தற்கொலை முடிவு வரை செல்கின்றனர். இதற்கெல்லாம் நல்லதொரு தீர்வாக நம்மை நாம் உணர்தல் இருக்கக்கூடும். ஆகவே சற்றே சிந்திக்கத் தொடங்குவோம் நம்மைப் பற்றி.
நன்றி: தினமணி (26 – 10 – 2023)