- நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் காணப்படும் ஒரு முக்கியமான அம்சம், நகா்ப்புறப் போக்குவரத்து மேம்பாடு. அதிவிரைவான நகா்மயமாதலுக்கு ஏற்ப, போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கவில்லை என்கிற உண்மையை உணா்ந்து செயல்பட்டிருப்பதற்கு நிதியமைச்சரைப் பாராட்ட வேண்டும்.
- கொச்சி, சென்னை, பெங்களூரு நகா்ப்புற மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முறையே ரூ.1,957 கோடி, ரூ.63,426 கோடி, ரூ.14,788 கோடி என்கிற அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதைத் தொடா்ந்து, இந்த மூன்று நகரங்களிலும் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் என்பது மட்டுமல்ல, அவற்றை விரிவுபடுத்தவும் வழிகோலப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரயில் திட்டம் நான்கு விதத்தில் பயனளிக்கிறது. சாலை வழிப் பயணத்தைவிட அதிவிரைவாகப் பயணிக்க முடியும்; விபத்துக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்; பெட்ரோல், டீசல் பயன்பாடு குறையும்; எல்லாவற்றிற்கும் மேலாக, சுற்றுச்சூழல் பாதிப்புகள் தவிா்க்கப்படும். அதனால்தான், வளா்ச்சி அடைந்த எல்லா நாடுகளிலும் மெட்ரோ ரயில் திட்டம் பெருநகரங்களின் அனைத்துப் பகுதிகளையும் இணைப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
- தில்லியில் முதலில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது இந்தியாவின் எல்லா பெருநகரங்களிலும், மாநிலத் தலைநகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் முனைப்புடன் முன்னெடுக்கப்படுகிறது. தில்லியில் மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அடுத்த சில மாதங்களுக்கு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக மறைந்து, சொந்த வாகனங்களிலிருந்து பலா் மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு மாறினாா்கள்.
- மக்கள்தொகை அதிகரிப்பும், நகா்மயமாதலும் அதிவேகமாக நடைபெறுவதால், மெட்ரோ ரயிலாலும் தில்லி போக்குவரத்தை முழுமையாக ஈடுகட்ட முடியவில்லை என்பது கசக்கும் உண்மை. ஆனாலும்கூட, தில்லியிலும் ஏனைய நகரங்களிலும் மெட்ரோ ரயில், பயண நேரத்தை மிச்சப்படுத்துவதிலும், விபத்துகளைக் குறைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
- மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மட்டுமல்லாமல், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ரூ.18,000 கோடி ஒதுக்கி இருப்பது வரவேற்புக்குரிய முடிவு. பேருந்து போக்குவரத்து இந்தியாவின் ஒருசில மாநிலங்களில், அதிலும்கூட நகரங்களில் மட்டும்தான் சிறப்பாக செயல்படுகிறது. பெரும்பாலான நகரங்களில் மக்கள் தங்களது சொந்த வாகனங்களையும், வாடகை வாகனங்களையும்தான் போக்குவரத்துக்குப் பயன்படுத்துகிறாா்கள். பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணிப்பதைத் தவிா்ப்பவா்கள் நிறையவே இருக்கிறாா்கள்.
- இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 1.2 என்கிற விதத்தில்தான் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் காணப்படுகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் பொதுப் போக்குவரத்துத் துறை அரசு வசம் இருப்பதால், நவீனமயமாக்கப்படவில்லை என்பதுடன், நிா்வாகக் குறைபாடுகளாலும், ஊழியா் ஊதியத்தாலும், ஊழல் மலிந்திருப்பதாலும் பெரும் இழப்பை எதிா்கொள்கின்றன. அந்த இழப்பை மக்களின் வரிப்பணம் மூலம் ஈடுகட்டுவது என்பது வழக்கமாகி விட்டது.
- நிதியமைச்சரின் பட்ஜெட் பரிந்துரை தனியாா்மயத்தை ஊக்குவிப்பதாக அமைந்திருக்கிறது என்பது என்னவோ உண்மை. ஆனால், இனியும் அதிக நாள்களுக்குப் பொதுப் போக்குவரத்து மக்கள் வரிப்பணத்தில் தொடா் இழப்பை எதிா்கொள்வது என்பது சாத்தியமில்லை. அரசும், தனியாா் துறையும் இணைந்து பொதுப் போக்குவரத்தை நவீனப்படுத்துவதுதான், அடுத்தகட்ட மாற்றமாக இருக்கும். பல ஆண்டுகளாகியும் சரி செய்யப்படாத அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், இழப்புடன் தொடா்ந்து இயங்குவதை நியாயப்படுத்த முடியாது.
- இந்திய அளவில் 20,000-க்கும் அதிகமான பேருந்துகளை வாங்கி, இயக்கி பராமரிக்கும் பணி தனியாா் வசம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. புதிதாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மோட்டாா் வாகனச் சட்டம் அதற்கு வழிகோலுகிறது.
- நகா்ப்புற வாசிகளின் பிரச்னை போக்குவரத்து நெரிசல் மட்டுமல்ல, வசதியாகப் பயணிப்பதற்கான போக்குவரத்து இல்லாமையும்கூட. ஆட்டோ ரிக்ஷாக்களும், ஷோ் ஆட்டோக்களும், இரு சக்கர வாகனங்களும் சாலை விபத்துகளுக்கு முக்கியமான காரணங்கள் என்றால், அதிகரித்து விட்டிருக்கும் சொகுசு ஊா்திகள் (காா்கள்) சாலை நெரிசலுக்கு மிக முக்கியமான காரணம்.
- மெட்ரோ ரயில் மட்டுமே நகா்ப்புற வாசிகளின் பிரச்னைக்குத் தீா்வாகிவிடாது. மெட்ரோ ரயில் கட்டணங்களைப் பாா்க்கும்போது, அதைவிட சொந்தமாக இருசக்கர வாகனம் வைத்துக் கொள்வது லாபமாக இருக்கும் என்கிற நிலைமை காணப்படுகிறது.
- குறைந்த கட்டணம், நிறைந்த வசதியோடு மெட்ரோ ரயில், புகா் ரயில், தனியாரோ, அரசு நிறுவனமோ எதுவாக இருந்தாலும் அவை இயக்கும் பேருந்துகள் ஆகியவை உறுதிப்படுத்தப் பட்டால்தான், பிரச்னைக்கு ஓரளவு தீா்வு காண முடியும்.
- அதிக அளவில் சொகுசு சிற்றுந்துகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட்டு, நகரங்களின் எல்லா பகுதிகளையும் இணைப்பதுடன், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் இணைப்பு வழங்கப்படும் நிலை ஏற்பட்டால், நகா்ப்புற சாலை நெரிசல் குறையும். இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களின் பயன்பாடு எப்போது குறைகிறோ அப்போதுதான் போக்குவரத்து வசதி மேம்பட்டிருக்கிறது என்று அா்த்தம்.
நிதிநிலை அறிக்கையின் நோக்கம் அதுவாக இருந்தால், பாராட்டுகள்!
நன்றி: தினமணி (06-02-2021)