- ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளைப் பள்ளிக் கல்வித் துறையோடு இணைத்தது பெரும் விவாதங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. ஆதிதிராவிடர் நல உரிமைகள், சொத்துக்கள் பறிக்கப்பட்டது போன்ற ஒரு தோற்றம் கட்டமைக்கப்படுகிறது.
- லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றுகூட சமூக வலைதளப் பகிர்வுகள் கூறுகின்றன. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் நலப் பள்ளிகளைக் கொண்டுவர வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருந்தது. அது நிறைவேற்றப்படும்போது நேர் எதிர்வினைகள் உருவாகின்றன. அரசு இதனை எதேச்சதிகாரமாக மேற்கொள்கிறது என்கிற தோற்றமும் உருவாகியிருக்கிறது.
- பிரிக்கப்பட்ட பின்னணி: ஆதிதிராவிடர், பழங்குடியினர், கள்ளர் சீர்மரபினர் சமூகத்தினருக்குக் கற்றல் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதன் காரணமாக, நலப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இச்சமூகத்தினருக்குப் பொதுப் பள்ளிகளைப் பயன்படுத்த சாதியம், தீண்டாமை, சமூக ஒதுக்கல், பாகுபாடு போன்ற சமூக ஒடுக்குமுறைகள் காரணமாக அமைந்தன. கற்றல் வாய்ப்புகள் இன்று எல்லாருக்கும் வாய்த்திருக்கிறது.
- அதைப் பயன்படுத்தி பல சமூகப் பிரிவினரும் இன்று உயர் கல்வி வாய்ப்புகள் பெறும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதேவேளை, நேரடியாகவோ மறைமுகமாகவோ பாகுபாடுகள் வெளிப்படுவதையும் காண முடிகிறது. அது ஆசிரியர்களிடமும் இருக்கிறது. மாணவர்களிடமும் பெற்றோரிடமும்கூட இருக்கிறது. பல்வேறு அடுக்குகளைக் கொண்ட சாதியக் கட்டமைப்பு தொடரும் வரை அது தொடரவே செய்யும்.
- தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பள்ளிகளில் அரசுப் பள்ளிகள் 64%. அரசு உதவிபெறும் பள்ளிகள் 14%. தனியார் பள்ளிகள் 21%. அனைத்து நலப் பள்ளிகளையும் சேர்த்தால் 0.08%. அரசு உதவி பெறும் பள்ளிகள் நேரடியாகப் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் போலவே செயல்படுகின்றன.
- எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பங்கு 78%. இந்தச் சூழலில், அரசின் கட்டுப்பாட்டில் பல்வேறு பெயர்களில் இயங்கிவரும் நலப் பள்ளிகள், பள்ளிக் கல்வித் துறையின்கீழ் கொண்டுவருவது அதில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் உயரக் காரணமாக அமையும்.
பழங்குடியினர் நலப் பள்ளிகள்:
- பெரும்பான்மையான பழங்குடியினர் நலப் பள்ளிகள், மலைப்பாங்கான பகுதியிலேயே அமைந்துள்ளன. ஆசிரியர்கள் வெளியில் இருந்தே இப்பள்ளிகளுக்கு வருகின்றனர். ஆசிரியர் குடியிருப்பு இருந்தாலும் அங்கு தங்கி, கற்பிக்கும் ஆசிரியர்கள் குறைவு.
- பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளிகள் பலவற்றில், சமையல்காரர்களே காப்பாளர், ஆசிரியர் என சகல பணிகளையும் செய்துவருகின்றனர். பதிலிகளை நியமித்துவிட்டு அவ்வப்போது பழங்குடியினர் பள்ளியைப் பார்வையிடும் ஆசிரியர்களும் உண்டு. அதே மலைப் பகுதியில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தினமும் வருவதைப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவாதம் செய்துள்ளது.
- அடுத்த பிரச்சினை ஆசிரியர் நியமனம். இந்தச் சிக்கல் பள்ளிக் கல்வித் துறையிலும் இருந்தாலும் நலப் பள்ளிகளில் ரொம்பவே அதிகம். அடுத்து பள்ளி நிர்வாகம். ஆதிதிராவிடர் நல, பழங்குடியினர் நலப் பள்ளிகள் வருவாய்த் துறையின்கீழ் இயங்கிவருகின்றன. அவர்களுக்குப் பள்ளிக் கல்வி நிர்வாகத்தில் பயிற்சி இல்லை என்பதால், நல விடுதிகளில் கவனம் செலுத்தும் அளவுகூடப் பள்ளிகள் மீது செலுத்துவது இல்லை.
- பழங்குடியினர் கல்வியில் அக்கறையுடன் செயல்படும் இதர பகுதி ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பள்ளிக் கல்வி நிர்வாகக் காரணங்களால் அவர்கள் பழங்குடியினர் நலப் பள்ளிகளுக்கு வந்து பணியாற்ற முடியாது. மாநிலத்தில் எந்தப் பகுதியிலிருந்தும் மலைப் பள்ளிகளில் பணியாற்றும் விதத்தில் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படுவது அவசியம். எனவே, பழங்குடியினர் நலப் பள்ளிகளில் தரமான கல்விக்கு, பள்ளிக் கல்வித் துறையோடு இணைத்தல் முதற்கட்ட முன்னெடுப்பு.
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள்:
- ஆதிதிராவிடர் நல, பழங்குடியினர் நலப் பள்ளிகளில் அறுதிப் பெரும்பான்மையானவை (73%) தொடக்கப் பள்ளிகளே. 8.7% நடுநிலைப் பள்ளிகள். 9.5% உயர்நிலைப் பள்ளிகள். 0.8% மேல்நிலைப் பள்ளிகள். ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளில் இவை 3.02%தான். எந்தத் தொடக்கப் பள்ளியை எடுத்துக்கொண்டாலும் அதில் பெரும்பான்மையாகப் பயில்வது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள்.
- ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் முற்றிலும் அந்தப் பிரிவுக் குழந்தைகளே பயில்கின்றனர். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு ஆசிரியர்கள் விகிதாச்சாரம் மட்டுமே. ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் 100% அதே சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இணைப்புக்குப் பிறகும் இதே விகிதாச்சாரம் ஆதிதிராவிடர் நல, பழங்குடியினர் நலப் பள்ளிகளில் தொடர வேண்டும் என்ற கோரிக்கையும் வேலைப் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கையும் ஏற்புடையவைதான்.
- குடிமைச் சமூகத்தில் சாதியப் பாகுபாடு இருப்பதைப் போலவே பள்ளிகளில், ஆசிரியர்களின் மத்தியில் அதற்கே உரித்தான பாணியில் பாகுபாடுகள் நிலவுகின்றன. இது நலப் பள்ளிகளில் இல்லை. இந்த நிலை இணைப்புக்குப் பிறகும் தொடரும் என்பது கவனிக்கத்தக்கது.
- இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் ஒருவிதமான சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். இது தொடர வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பில் நியாயம் இருக்கிறது. இது எல்லாப் பள்ளிகளிலும் எல்லா ஆசிரியர்களுக்கும் இல்லை என்பது சாதிய சமூகத்தின் அவலம். அதற்காக நலப் பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையின்கீழ் கொண்டுவருவதைத் தடுக்க முயல்வது தீர்வாகாது.
- ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை போல் ஆசிரியர் நியமனம் இல்லை. ஆசிரியர் பற்றாக்குறை அதிகம். இதனால் கற்றல் பெருமளவு பாதிக்கப்படுகிறது. நிறைய மாணவர்கள் படிக்கும் நலப் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கவும் வசதியில்லை.
- ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் நிர்வாகம் பழங்குடியினர் நலப் பள்ளிகளைப் போன்றதே. இதையும் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் கொண்டுவருவதன் மூலமே சரிசெய்ய இயலும்.
இதர நலப் பள்ளிகள்:
- குற்றப் பரம்பரையினர் எனப் பெயரிடப்பட்ட சமூகத்தினர் இன்று அக்கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்றுள்ளனர். சமூக பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ளனர். இதன் வழியே அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் இடைநிலை ஆதிக்க சாதியாகவும் வலுவடைந்துள்ளனர். இவ்வளவு மாற்றங்கள் நடைபெற்ற பிறகும் கள்ளர் நலப் பள்ளிகள் தொடர்தல் சரியா என்பதை யோசிக்க வேண்டும்.
- வனத் துறையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகள் வெறும் 19தான் என்றாலும் அதில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பட்ட அவலத்துக்கு, இந்த இணைப்பின் மூலம் அந்தப் பள்ளிகளுக்குப் பெரும் விடுதலை கிடைத்திருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் போன்றவையே. அந்தப் பள்ளிகளின் நிர்வாகத் திறன் மேம்படும்.
- மாணவர் எண்ணிக்கையில் 3%, ஆசிரியர் எண்ணிக்கையில் 1.55% எனும் அளவில் இருக்கும் இந்த நலப் பள்ளிகள் பள்ளிக் கல்வியின் கீழ் வருவதால், இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வித் தரம் உயரும். பல கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுவது போல், இதன் பங்கேற்பாளர்கள் பயனாளிகளிடம் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம்.
- அதற்கு இப்போதும் கால அவகாசம் இருக்கிறது. அரசு இதனைச் செய்ய வேண்டும். இணைப்புக்குப் பிறகான ஓராண்டு காலத்தில் எதிர்வரும் பிரச்சினைகளைப் பரிசீலனை செய்து சரிசெய்யலாம். அதற்கான உத்தரவாதத்தை அரசு கொடுக்க முன்வர வேண்டும்.
நன்றி: தி இந்து (06 – 04 – 2023)