TNPSC Thervupettagam

நலமிழக்கிறதா நம் பூமி?

October 2 , 2024 56 days 80 0

நலமிழக்கிறதா நம் பூமி?

  • மனித வரலாற்றில் முதல் முறையாகப் பூமியின் நலத்தை விரிவாக ஆராய்ந்து ‘புவி நலன் சோதனை அறிக்கை’ (Planetary Health Check Report) என்ற தலைப்பில் ஒரு விரிவான அறிக்கையை ஓர் ஆய்வுக் குழுவினர் தயாரித்​திருக்​கிறார்கள். போட்ஸ்டாம் காலநிலை தாக்க ஆராய்ச்சிக் கழகத்தைச் (Potsdam Institute for Climate Impact Research) சேர்ந்த யோஹான் ராக்ஸ்ட்ரோம் என்கிற அறிவிய​லா​ளரின் தலைமையில் இந்த சர்வதேச ஆய்வு மேற்கொள்​ளப்​பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்​பட்​டிருக்​கின்றன.

காத்திருக்கும் விபரீதம்:

  • 11,700 ஆண்டு​களுக்கு முன்னால் தொடங்கிய ஹோலோசீன் காலக்​கட்​டத்தில் தட்பவெப்​பமும் பொதுவான சூழலும் ஓரளவு நிலையானதாக இருந்தன. இந்தக் காலக்​கட்​டத்தில் நவீன வேளாண்​மையும் நாகரி​கங்​களும் உருவாகி வளர்வதற்கான சரியான சூழலும் நிலவியது. சுற்றி​யிருக்கும் இயற்கைக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்​தாமலேயே மனித இனம் முன்னேறு​வதற்கு ஏதுவானதாக ஹோலோசீனின் சூழல் இருந்தது.
  • இந்த ஹோலோசீனின் தரவுகளை அடிப்​படை​யாகக் கொண்டு புவிக்கான எல்லை (Planetary Boundary) என்கிற கருத்​தாக்​கத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி​யிருக்​கிறார்கள். எல்லைக்கு உட்பட்டுச் செயல்​பட்டால் பூமி சீராக இயங்கும். இந்த எல்லையைக் கடந்து​விட்டால் சுற்றுச்​சூழலுக்கான பாதிப்பு கட்டுக்​கடங்​காமல் போய்விடும்.
  • மொத்தம் ஒன்பது புவிக்கான எல்லைகளை அறிவிய​லா​ளர்கள் ஏற்கெனவே வகுத்​திருந்​தார்கள். யோஹான் ராக்ஸ்ட்ரோம் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் இந்த எல்லைகளின் அளவை விரிவாக ஆராய்ந்​திருக்​கின்​றனர். ஒன்பது எல்லைகளில் ஆறு எல்லைகளை ஏற்கெனவே கடந்து​விட்டோம் என்றும், மீதமிருக்கும் மூன்று எல்லைகளிலும் ஓர் எல்லையை விரைவில் எட்டி​விடுவோம் என்றும் இவர்களது அறிக்கை தெரிவிக்​கிறது.
  • காலநிலை மாற்றம், உயிர்க்​கோளத்தின் ஒழுங்கு, நில அமைப்பின் மாறுபாடு, நன்னீர் மாறுபாடு, உயிர் வேதியியல் போக்கின் மாறுபாடு, புதிய கூறுகளின் அறிமுகம் ஆகிய ஆறு எல்லைகளை நாம் இப்போதே கடந்து​விட்​டோம்.

தொடரும் தவறுகள்:

  • காலநிலை மாற்றம் மிகவும் மோசமான பாதையில் சென்று​கொண்​டிருக்​கிறது. முன்னெப்​போதும் இல்லாத அளவுக்குப் பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரித்​திருக்​கிறது. பூமியில் உள்ள மொத்த உயிர்​களின் தொகுப்பு உயிர்க்​கோளம் என்று அழைக்​கப்​படு​கிறது. உயிரினங்கள் அழிதல், வாழிட அழிப்பு போன்ற​வற்றால் உயிர்க்​கோளம் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டிருக்​கிறது. உயிர்க்​கோளத்தின் மீண்டெழும் ஆற்றல் குறைந்​த​படியே இருக்​கிறது.
  • நகரமய​மாக்கல், காடழிப்பு ஆகியவற்றால் இயற்கையான நிலப்​பரப்புகள் தொடர்ந்து மாற்றப்​பட்டு​வரு​கின்றன. நிலத்தால் பூமிக்குக் கிடைக்க வேண்டிய நன்மை​களும் குறைந்​த​படியே இருக்​கின்றன. நீர்ச் சுழற்சி மாறிவிட்டது, இது நன்னீரையும் மாற்றியமைத்​திருக்​கிறது. பூமியில் சீராக இருந்​துவந்த நைட்ரஜன், பாஸ்பரஸ் சுழற்சிகள் மாறுபட்​டிருக்​கின்றன. இது வேதிப்​பொருள்​களின் சமநிலையைக் குலைத்​திருக்​கிறது.
  • ‘புதிய கூறுகளின் அறிமுகம்’ என்பது, இயற்கையாக ஓர் இடத்தில் இல்லாத எல்லாப் பொருள்​களையும் குறிக்​கிறது. கதிரியக்கம் கொண்ட பொருள்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகள், செயற்கை வேதிப்​பொருள்கள், பரிணா​மத்தில் நாம் நேரடியாக ஏற்படுத்தும் மாற்றத்தால் வரும் பொருள்கள் ஆகியவை இதில் அடங்கும். இதுபோன்ற பல கூறுகள் நாள்தோறும் இயற்கை​யிடம் சென்றுசேர்​கின்றன. ஆகவே, இந்தப் பொருள்​களுக்கான உச்சவரம்​பையும் நாம் தாண்டி​விட்​டோம்.

மனிதச் செயல்​பாடுகள்:

  • இதில் இன்னொரு கவலைக்​குரிய அம்சம், அபாயக்​கட்​டத்தைத் தாண்டிய பிறகும் இந்த ஆறு உச்சவரம்​புகள் மீதான பாதிப்பும் தொடர்ந்தபடி இருப்​பது​தான். உதாரணமாக, உயிர்க்​கோளத்தின் எல்லையை வகுப்​ப​தற்கான ஒரு முக்கிய அலகு முதன்மை உற்பத்தித் திறன் (Primary Productivity) என்பதாகும்.
  • அதிலும் குறிப்பாக, மனிதச் செயல்​பாடு​களால் இது எந்த அளவுக்குப் பாதிக்​கப்​படு​கிறது என்பது கவனிக்​கப்​படும். சராசரியாக, உலகின் மொத்த முதன்மை உற்பத்தித் திறனில் 10 சதவீதம் அளவுக்கு மட்டுமே மனிதப் பாதிப்பு அனுமதிக்​கப்​படும். ஆனால், அந்த உச்சவரம்பு எப்போதோ எட்டப்​பட்டு​விட்டது. அது மட்டுமல்ல, ஆண்டு​தோறும் இது அதிகரித்​த​படியும் இருக்​கிறது. 2000ஆம் ஆண்டில் 22 சதவீதமாக இருந்த இது, 2020க்குள் 30 சதவீதத்தைத் தொட்டிருக்​கிறது.
  • மேலே இருக்கும் ஆறு எல்லைகளைத் தவிர, ஸ்டிராட்​டோஸ்​பியர் எனப்படும் வளிமண்டல அடுக்கில் இருக்கும் ஓசோன், வளிமண்​டலத்தில் சேரும் ஏரோசால் கூறுகள், கடல்நீர் அமிலமாதல் ஆகிய மூன்றும் இப்போதைக்குக் கட்டுக்குள் இருக்​கின்றன. இவற்றுள் கடல்நீர் அமிலமாதலுக்கான உச்சவரம்பை நாம் விரைவிலேயே தொட்டு​விடுவோம் என்று இந்த அறிக்கை எச்சரிக்​கிறது.

மீளவியலாப் புள்ளி:

  • புவிசார் அறிவியலில் மீளவியலாப் புள்ளி (Tipping point) என்ற ஒரு கருத்​தாக்​கமும் உண்டு. சில நிகழ்வுகள் ஏற்படும்​போது, அடுத்து மீண்டுவரவே முடியாத அளவுக்கு அந்தச் சூழல் சீர்குலைந்​து​விடும். இவற்றையே மீளவியலாப் புள்ளி என்பார்கள். உதாரணமாக, ஒரு வெடியில் இருக்கும் திரியை நீங்கள் பற்றவைக்​கிறீர்கள் என்று வைத்துக்​கொள்​வோம். பற்றவைத்த உடனே வெடி வெடிக்​காது. திரியில் அந்த நெருப்பு பயணிக்​கும்.
  • வெடிக்கு அருகில் வந்தபிறகுதான் அதற்கான வேதிவினை தொடங்​கும். திரியில் நெருப்பு பற்றிக்​கொண்​டிருக்​கும்​போது, எந்த நொடியிலும் நாம் அதை அணைக்​கலாம், வெடிக்​காமல் தடுக்​கலாம். ஆனால், வெடிக்கு அருகில் நெருப்பு வந்து வேதிவினை தொடங்கிய பின்னர் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. மீளவியலாப் புள்ளி என்பது கிட்டத்தட்ட அப்படி​யானது​தான். ஒரு சூழல் அந்த நிலைக்கு வந்து​விட்டால் அதை மீட்டெடுப்பது கடினமானது.
  • புவிக்கான எல்லைகளும் மீளவியலாப் புள்ளி​களும் ஒன்றோடொன்று தொடர்​புடையவை என்றும் சொல்லும் ஆய்வுக் குழுவினர், புவிக்கான எல்லைகள் கடக்கப்​படும்போது அந்தச் சூழல் மீளவியலாப் புள்ளியை நோக்கி வேகமாகப் பயணிக்கும் என்று எச்சரிக்​கின்​றனர்.
  • புவிக்கான ஒவ்வொரு எல்லைக்கும் தொடர்​புடைய மீளவியலாப் புள்ளிகள் இருக்​கின்றன என்றும், இவற்றையும் நாம் கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்து​கின்​றனர். காலநிலையைப் பொறுத்தவரை நாம் ஏற்கெனவே புவிசார் மீளவியலாப் புள்ளிகள் பலவற்றைக் கடந்து​விட்டோம் என்று அறிவிய​லா​ளர்கள் உறுதிப்​படுத்​தி​யிருக்​கிறார்கள். இந்தப் பின்னணியில் புவிக்கான எல்லை குறித்த தற்போதைய அறிக்கை கவலையளிப்பதாக இருக்​கிறது.

நல்ல மாற்றமா?

  • கடல்நீர் அமிலமாதலைப் பொறுத்தவரை ஆர்க்​டிக், தெற்குக் கடல் பகுதி​களில் பல இடங்களில் உச்சவரம்பு எட்டப்​பட்​டிருக்​கிறது என்றும், விரைவிலேயே இது உலகளாவிய பிரச்​சினையாக மாறும் என்றும் இந்த ஆய்வில் தெரிய​வந்​திருக்கிறது.
  • “புவியின் முக்கியமான உயிர் அறிகுறிகள் பலவீனமடைந்து வருகின்றன. இது மீண்டெழும் தன்மையைக் குறைக்​கும். மீண்டு வரவே முடியாத ஒரு நிலைக்கும் இது பூமியைத் தள்ளக்​கூடும். புவி மாறிக்​கொண்​டிருக்​கிறது, ஆனால், அது நல்ல மாற்றமல்ல, மோசமான பாதையில் நிகழ்ந்​து​கொண்​டிருக்கும் மாற்றம்” என்கிறார் ஆராய்ச்​சி​யாளர் லெவ்கே சீசர். நாம் நினைத்​ததை​விடவும் புவியின் வெவ்வேறு கூறுகள் எவ்வளவு இறுக்​கமாக, நுணுக்​க​மாகப் பிணைக்​கப்​பட்​டிருக்​கின்றன என்பதையும் இந்த அறிக்கை தெளிவாக எடுத்​துக்​காட்​டி​யிருக்​கிறது.
  • காலநிலை, சூழலியல் சார்ந்த முக்கியமான பல சர்வதேசக் கூட்டங்கள் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்​கின்றன. அவற்றி​லிருந்து வெளிவரும் ஒவ்வொரு முடிவும் இதுபோன்ற அறிக்கைகளை மனதில் வைத்துக்​கொண்டு எடுக்​கப்பட வேண்டும். அறிவியல் ரீதியான, எதிர்​காலத்தை முன்வைத்து எடுக்​கப்​படும் அப்படிப்பட்ட முடிவுகளே சமகாலத்தின் முக்கியத் தேவை.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories