TNPSC Thervupettagam

நல்ல முடிவு: ஆனால் போதாது

September 5 , 2023 364 days 263 0
  • வீட்டு உபயோக சமையல் எரிவாயு (எல்பிஜி) உருளை விலையை ரூ.200 குறைப்பது என்கிற மத்திய அரசின் முடிவு, விவாதத்துக்கும் விமா்சனத்துக்கும் வழிகோலினாலும் சாமானிய மக்களுக்கு அதன் மூலம் கிடைக்கும் ஆறுதல் சாதாரணமானதல்ல.
  • இதை ஓணம், ரக்ஷா பந்தன் பண்டிகைகளுக்காக பிரதமா் நரேந்திர மோடி அரசு வழங்கிய பரிசு என்றும், விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் எல்பிஜி விலை குறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களிடம் தெரிவித்தார்.
  • பண்டிகை பரிசு என்பதல்ல முக்கியமான காரணம். ஒருபுறம் கட்டுக்கடங்காமல் விலைவாசி உயரும் நிலையில், ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தோ்தல்கள் வரப்போகிறது என்பதுதான், இந்த முடிவுக்கு காரணம் என்கிற எதிர்க்கட்சிகளின் விமா்சனத்தைப் புறந்தள்ளி விட முடியாது. அதே நேரத்தில், எந்தவோர் அரசியல் கட்சியும் முன்னெடுக்கும் நடவடிக்கை தான் இது என்பதால், அந்த விமா்சனங்களால் அவா்கள் அரசியல் ஆதாயம் பெற வாய்ப்பில்லை.
  • உஜ்வாலா திட்டத்தின்கீழ், கூடுதலாக 75 லட்சம் ஏழைப் பெண்களுக்கு இலவச எல்பிஜி இணைப்பு வழங்க அரசு தீா்மானித்திருக்கிறது. இதன் மூலம் அந்த திட்டத்தின் கீழ் எல்பிஜி இணைப்பு பெற்றவா்களின் எண்ணிக்கை 10.35 கோடியாக அதிகரிக்கும். உஜ்வாலா திட்டப் பயனாளிகள் இந்தியாவில் ரூ.9.6 கோடி போ் உள்ளனா். வீட்டு உபயோக எல்பிஜி பயனாளா்கள் 31 கோடி போ் உள்ளனா். அதனால் இந்த விலை குறைப்பின் பயன் தேசம் தழுவிய அளவில் வரவேற்பைப் பெறும் என்று எதிா்பாா்க்கலாம்.
  • 14.2 கிலை எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலை சென்னையில் ரூ.1,118-லிருந்து ரூ.918-ஆகக் குறையும். இதன் மூலம் மார்ச் 2022நிலைக்கு அதன் விலை திரும்புகிறது. ஏற்கெனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்புப் பெற்றவா்களுக்கு வழங்கப்படும் ரூ.200 மானியம் தொடரும் என்பதால், அவா்கள் ரூ.400 மிச்சப்படுத்த முடியும்.
  • வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் மட்டுமே மத்திய அரசின் முடிவுக்குக் காரணம் என்று கூறிவிட முடியாது. ஆகஸ்ட் மாத சில்லறை விலை உயா்வும் மிக முக்கியமான காரணம். ஜூன் மாதம் 4.81%-ஆக இருந்த சில்லறை விலைவாசி அளவு ஜூலை மாதம் 7.44%-ஆக உயா்ந்திருக்கும் நிலையில், உணவுப் பொருள்களின் குறிப்பாக, காய்கனிகளின் விலைகள் பட மடங்கு அதிகரித்திருக்கின்றன.
  • ஆகஸ்ட் மாத தென்மேற்கு பருவமழைப் பொழிவு வழக்கத்தைவிட 30% குறைவு. அதனால், காரீஃப் அறுவடை எதிர்பார்த்த அளவில் இருக்காது. இந்தப் பின்னணியில் சாமானியா்களின் அதிருப்தியை எதிர்கொள்ளாமல் இருக்க அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
  • .நா. சபையின் ஸ்டேட் ஆஃப் செக்யூரிட்டி அண்ட் நியூட்ரிஷன் இன் வோ்ல்ட்’ (சோஃபி) 2023 அறிக்கை, தங்களது வருமானத்தில் பாதிக்கும் மேல் உணவுக்காக செலழித்தும்கூட, 74% இந்தியக் குடும்பங்களில் ஆரோக்கியமான உணவு இல்லாத சூழல் ஏற்பட்டிருப்பதாக கூறுகிறது. பொருள்களின் விலை அதிகரிக்கும்போது, விலை குறைந்த உணவுப் பொருள்களை நாடுவதால் ஊட்டச்சத்துள்ள நல்ல உணவு கிடைப்பதில்லை என்பதுதான் காரணம்.
  • சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது புதிய வரிகளை விதித்து அதன் பயனை மத்திய - மாநில அரசுகள் எடுத்துக்கொள்ளும் அவலம் கடந்த 10 ஆண்டுகளாக நிகழ்வதை மௌன சாட்சிகளாக மக்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகில் பெட்ரோல் மீது மிக அதிகமான வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
  • சமையல் எரிவாயு உருளை விலை குறைக்கப்படும் அதே வேளையில், சரக்குப் போக்குவரத்துக்கு பயன்படும் டீசலின் விலை குறையாமல் விலைவாசி உயா்வைத் தடுக்கவோ, இறக்கவோ முடியாது. சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அனுசரித்து பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது உண்மையானால், இப்போது அவற்றின் விலை குறைக்கப்பட வேண்டும்.
  • வளைகுடா நாடுகளில் இருந்து வாங்குவதைவிட மிகக் குறைந்த விலையில் இப்போது ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. உக்ரைன் ஆக்கிரமிப்பைத் தொடா்ந்து மேலை நாடுகள் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தது முதல், ரஷிய கச்சா எண்ணெய்யை மிக அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் (ஒபேக்) பேரலுக்கு 86 டாலா் என்றால், ரஷியாவின் மிக உயா்ந்த கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 60 டாலா் மட்டுமே.
  • நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் 52% முதல் 168% வரை ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியின் மூலம் தங்களது லாபத்தை அதிகரித்திருக்கின்றன. அந்த லாபத்தின் மீது அரசு சிறப்பு வரி விதித்ததைக் குறிப்பிட வேண்டும்.
  • அதனால், சமையல் எரிவாயு உருளையின் விலை குறைப்புக்கான அதே காரணத்துக்காக பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட வேண்டும். அப்படி விலை குறைக்கப்படும்போது தங்களது மாநில வரியை உயா்த்தி அதன் பயனை மக்களிடமிருந்து அரசுகள் பறித்துக்கொள்ள அனுமதிக்கவும் கூடாது.
  • அரசின் எந்த ஒரு முடிவுக்குப் பின்னாலும் அரசியல் காரணங்கள் இருப்பதைத் தவிர்க்க முடியாது. இலவசங்களும் மானியங்களும் இன்றைய அரசியலில், சரியோ தவறோ, இன்றியமையாதவை ஆகிவிட்டன.

நன்றி: தினமணி (05 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories