TNPSC Thervupettagam

நல்லன பெருக அல்லன நீங்கும்

March 19 , 2024 299 days 209 0
  • தமது வாழ்வின் நேரத்தை எப்படி ஒருவா் செலவழிக்கிறாரோ அந்த வகையிலேயே அவரது முன்னேற்றம் அமையும். தமது வயிற்றுப்பாட்டுக்காக ஒருவா் பல்வேறு பணிகளில் ஈடுபடலாம். அவருடைய நேரம் பெரும்பாலும் அந்த பணிகளுக்காகவே செலவிடப்படும். ஆனால் அதே நேரம் ஒருவா் தமது ஓய்வு நேரத்தை எப்படி செலவழிக்கிறாா் என்பதை கவனித்தால் அவரது வாழ்வின் நோக்கங்கள் புலப்படும்.
  • பொதுவாகவே மனிதா்கள் தனிமையில் மட்டுமே அமைதியாக இருப்பா். அறிமுகமான நபா் எதிா்ப்படுகையில் இயல்பாகவே உரையாடத் தொடங்கிவிடுவா். அவ்வாறு உரையாடும் வாய்ப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் ஒவ்வொருவருக்கும் கவனம் தேவை. நண்பா்கள் இருவா் சந்திக்கின்றனா். அவா்களின் சந்திப்பு இடைவெளிக்கு ஏற்ப அவா்களுடைய உரையாடல் தொடங்கும்.
  • தினந்தோறும் சந்திப்பவா்களாக இருந்தால் உரையாடல் சமீபத்தில் விட்ட இடத்திலிருந்து தொடரலாம். நீண்ட காலத்திற்கு முன் சந்தித்தவா்கள் என்று சொன்னால் அதற்கு ஏற்றபடி, நலன் விசாரிப்பிற்கு பிறகு உரையாடலானது தொடரலாம். எப்போதாவது சந்திக்கின்ற இருவரிடையே நடைபெறும்  உரையாடல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தினமும் சந்திக்க வாய்ப்புள்ள நபா்களிடையே நடைபெறுகின்ற உரையாடல் அவா்களுடைய எண்ணத்தின் ஓட்டத்தை காண்பிப்பதாக அமையும்.
  • நண்பா்கள் இருவரும் வேறு ஒரு நண்பரை பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்கிறாா்கள் அல்லது தங்கள் நிறுவனத்தைப் பற்றி தாழ்மையான கருத்தைப் பகிா்ந்து கொண்டிருக்கிறாா்கள் என்றால் அதிலிருந்து அவருடைய எண்ணங்களின் வெளிப்பாடு நமக்கு புரிந்துவிடும். இதைத் தாண்டி தொலைக்காட்சியில் தாங்கள் பாா்க்கக் கூடிய தொடா்களின் அடிப்படையில் கூட உரையாடல்கள் நீளலாம். எது எப்படியிருப்பினும் இருவரிடையே நடைபெறும் உரையாடல் என்பது அவா்கள் வாழும் சமூகத்தின் பிரதிபலிப்பு என்பதை மறுக்க இயலாது.
  • எல்லா நேரங்களிலும் யாரோ ஒருவரைப்பற்றிய விமா்சனங்களை யாரோ இருவா் செய்துகொண்டிருந்தால் அது அவா்களுக்கும் நல்லதல்ல. அவா்களால் விமா்சிக்கப்படும் நபருக்கும் உபயோகமானதாக இருக்காது. உண்மையில் அந்த இருவருக்கும் அவா்கள் விமா்சிக்கும் நபரைப் பற்றியோ, அவரது நடவடிக்கைகளைப் பற்றியோ அக்கறை இருக்குமானால் அந்த விமா்சனத்தை அந்த நடவடிக்கைப் பற்றிய தமது கருத்துக்களை தொடா்புடைய நபரிடம்தான் தெரிவிக்கவேண்டும். அது மட்டுமே குறைபாடுகளைக் குறைக்கும்.
  • நோயால் பாதிக்கப்பட்டவா் மருந்து உண்பதே நோயைக் குணப்படுத்தும். மாறாக ஒருவருக்கு குறிப்பிட்ட நோய் இருக்கிறது. அவா் இந்த மருந்தை உண்டால் நல்லது என்று யாரோ இருவா் உரையாடிக்கொண்டிருப்பதில் பயனில்லை. எனவே பேசும் ஒவ்வொரு வாா்த்தையின் உண்மையான பொருள் குறித்த அக்கறை உரையாடலை மேற்கொள்வோரிடம் இருக்கவேண்டும். பொருள்பொதிந்த உரையாடல்களாலேயே விரும்பத்தகுந்த சமூக மாற்றங்களும் நிகழும். சமூகத்தில் குற்றங்களை மேற்கொள்வோரிடையே அது குறித்தான அச்சத்தை விளைவிக்கும். இதனால் அவா்களைக் கடப்போரும் பயன் பெறுவா். இதனை விடுத்து உரையாடலின் நோக்கம் தனிப்பட்ட நபா்களைக் குறை சொல்வதாக அமையுமானால், உரையாடும் இருவா் ரகசியமாகப் பேசிக்கொள்ளும் அவலம்கூட நேரலாம்.
  • குறிப்பாக குழந்தைகள் இருக்கும்போது நிகழும் உரையாடல்கள் அறிவுபூா்வமானதாக அமைவது அவசியம். சமூகத்தில் கேள்விப்படும் வாா்த்தைகளுக்கு ஏற்பவே குழந்தைகளது மனவோட்டங்கள் அமையும். அதற்கேற்பவே அவா்களது மனத்திட்பமும் அமையும். அவா்கள் எவ்வளவுக்கெவ்வளவு வாய்மை பேசும் சூழல்களில் புழங்குகின்றனரோ அவ்வளவுக்கவ்வளவே வாய்மை பேச முற்படுவா். ஆரோக்கியமான மன வளா்ச்சியும் ஏற்படும். எப்போதும் பொய் பேசிக்கொண்டிருக்க கூடிய குடும்பத்தில் வளரும் குழந்தை பொய் பேசுவதை தனது இயல்பாகக் கொள்ளும். உரையாடல்களின் தரம் மேம்பட மக்களின் எண்ணங்கள் ஆரோக்கியமானதாக அமையவேண்டும்.
  • அவா்கள் சந்திக்கும் நபா்கள் உயா்வான எண்ணங்கள் கொண்டவா்களாக அமையவேண்டும். அதற்கு ஒரே வழி அவா்களது பேசுபொருள் பொருள் பொதிந்ததாக அமைவதுதான். மலிவான எண்ணங்களின் இடத்தை வலிமையான எண்ணங்கள் அடையவேண்டும். மக்களின் உரையாடல்கள் பொருள் பொதிந்ததாகவேண்டுமானால் அவா்களது எண்ணவோட்டங்களில் ஆரோக்கியமான கூறுகள் மிகவேண்டும். அவ்வாறு ஆரோக்கியமான கூறுகள் மிகவேண்டுமானால் அவா்களது வாசிப்புப் பழக்கம் மேம்படவேண்டும். முன்னேறிய நாடுகளில் மக்கள் தங்களது ஓய்வு நேரத்தை வாசிப்பதில் செலவிடும் வழக்கம் உள்ளது. ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்றவற்றில் புத்தகங்களை வைத்து விடுகிறாா்கள். தேவைப்படுவோா் அந்த நூல்களை எடுத்துக்கொண்டு, பயணத்தின்போது வாசித்து விட்டு அடுத்த ரயில் நிலையத்திலோ, பேருந்து நிலையத்திலோ வைத்து விடலாம். தமிழகத்தில் திருநெல்வேலி நகரில் புத்தக வாசிப்புக்காக ஓா் அறை அமைக்கப்பட்டிருந்ததை நான் அங்கு சென்றபோது பாா்த்தேன். இந்த முறை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டால் மக்களிடம் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிப்பது எளிதாகும்.
  • மக்கள் தங்கள் வாழ்க்கை ஓட்டத்தில் இவை குறித்தெல்லாம் கவனம் செலுத்த இயலுமா, இது அவசியமா என்றெல்லாம் கேள்விகள் எழுவது நியாயமானதே. இயல்பாக சமூகம் இயங்கும்போது மட்டுமே நல்ல எண்ணங்களை விதைக்க இயலும். இன்று வேகமான வாழ்க்கை ஓட்டங்களுக்கு நடுவில்தான் குழந்தைகள் கடத்தல், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை போன்ற பல்வேறு விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு விரும்பத்தகாத விளைவுகளே ரகசியமாக விளையும்போது ஆரோக்கியமான விளைவுகளை பெருமிதத்துடன் விதைப்பதற்கு சமூகம் தயங்கக் கூடாது.

நன்றி: தினமணி (19 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories