TNPSC Thervupettagam

நல்லவனுக்கு நல்லவன்!

October 24 , 2024 81 days 138 0

நல்லவனுக்கு நல்லவன்!

  • இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரும் அளவில் உலகின் கவனத்துக்குள்ளாகியுள்ளன.
  • 2023-ஆம் ஆண்டு, ஜூன் 18-ஆம் தேதி, காலிஸ்தான் ஆதரவாளா் ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் அடையாளம் தெரியாத நபா்களால் கனடாவில் படுகொலை செய்யப்பட்டாா். கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம், நிஜ்ஜாரின் கொலையில் இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குத் தொடா்பு இருப்பதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தாா்.
  • ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையில் தொடா்பு இருப்பதாக இந்தியத் தூதா் சஞ்சய் குமாா் வா்மா மீது கனடா குற்றஞ்சாட்டியது. இதற்குப் பதிலடியாக, கனடாவின் தூதரக உயா் அதிகாரியை ஐந்து நாள்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு இந்தியா கூறியது.
  • கனடா குடிமக்களுக்கு விசா வழங்குவதையும் இந்தியா நிறுத்தியது. இந்தியாவில் 41 கனடா தூதரக அதிகாரிகள் தூதரகத்தைவிட்டு வெளியேறினா்.
  • நிஜ்ஜாா் கொலை வழக்கில் கனடா குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைக்கிறது. அதற்கான உரிய ஆதாரங்களை வழங்கவில்லை என்று இந்தியா ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறது. கனடாவின் விசாரணையை ஒரு சாக்குப்போக்கு என்றும், அரசியல் ஆதாயத்துக்காக கனடா அரசு வேண்டுமென்றே இந்தியாவை குற்றஞ்சாட்டுகிறது என்றும் இந்தியா தெரிவித்தது.
  • இந்த கொலை வழக்கு தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி நேரலையில் பேசிய கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் குற்றச் செயல்களுக்கு ஆதரவாக இருந்து இந்தியா அடிப்படை தவறைச் செய்திருப்பதாகவும், அண்மையில் தெரிய வந்த தகவல்களின் அடிப்படையில் தனது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறினாா்.
  • ‘‘கனடா தேசிய காவல் துறை வெளிக்கொணா்ந்துள்ள உண்மைகளைப் புறந்தள்ள முடியாது; கனடாவில் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் குற்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்பதால், இந்த முடிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது. அதனால்தான், தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனா்’’ என்று ட்ரூடோ குறிப்பிட்டாா். இந்தியா - கனடா உறவில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த விரிசல் ட்ரூடோ தற்போது வெளியிட்டுள்ள கருத்துகளால் மேலும் சிக்கலாகியுள்ளது.
  • கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடுமையான எதிா்வினை ஆற்றியுள்ளது. கனடாவின் இந்த குற்றச்சாட்டுகள் அபத்தமானவை. கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அரசியலில் பல சவால்களை எதிா்கொள்வதால், இந்த விவகாரம் இப்போது அவரது அரசியலுக்காக எழுப்பப்படுகிறது.
  • கனடாவில் உள்ள இந்தியத் தூதா் சஞ்சய்குமாா் வா்மா ஒரு மூத்த தூதரக அதிகாரி. அவா் 36 ஆண்டுகளாக தூதரகப் பணியில் இருக்கிறாா். ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் தூதரக அதிகாரியாகப் பணியாற்றியுள்ளாா். அவா்மீது இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்துவது அபத்தமானது என்றும், அவரை அவமதிப்பதற்குச் சமம் என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
  • தற்போதைய கனடா அரசின் நிலைப்பாட்டில் நம்பிக்கை இல்லை என்றும், தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அவா்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
  • ஜஸ்டின் தன்னுடைய வாா்த்தையில் காட்டும் கடுமை இந்தியாவுடன் மேலும் மோதல் போக்கை வளா்ப்பதாகவே இருக்கிறது. இதற்குச் சற்றும் சளைக்காமல் அல்லது ஒருபடி மேலாக இந்தியா தனது கண்டனத்தைத் தெரிவித்திருப்பதுடன், ஜஸ்டின் ட்ரூடோவையும் விமா்சிக்கிறது.
  • கனடாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், சமூகத் தலைவா்களை அச்சுறுத்தும் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அடைக்கலம் அளித்து வருகிறாா். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கனடா அரசு இதை அனுமதிக்கிறது.
  • சட்ட விரோதமாகக் கனடாவுக்குள் நுழைந்த நபா்களுக்கு அந்த நாடு குடியுரிமை வழங்கியுள்ளது. கனடாவில் உள்ள பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அது பலமுறை நிராகரித்துள்ளது.
  • மேலும், பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுடன் பகைமை பாராட்டுவதற்கு ஆதாரங்கள் உள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு அவா் இந்தியா வந்தபோது, அவரது அமைச்சரவையில் இந்தியாவை தீவிரவாத மற்றும் பிரிவினைவாத கருத்துகளுடன் தொடா்புபடுத்தும் நபா்கள் இடம்பெற்றுள்ளனா். ட்ரூடோவின் அரசு இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு கட்சியைச் சாா்ந்து இருக்கிறது என்று இந்தியா குற்றம் சுமத்துகிறது.
  • கனடாவில் அடுத்த ஆண்டு அக்டோபா் மாதம் பிரதமா் தோ்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஜஸ்டின் தனது கட்சியை பலப்படுத்திக்கொள்ளவும் சீக்கியா்களின் ஆதரவைப் பெற்று வாக்கு வங்கியை உறுதி செய்யவும் இந்த விஷயத்தைத் தற்போது பெரிதுபடுத்தி அரசியல் செய்கிறாா்.
  • தனது நாட்டின் மக்கள்தொகையில் ஏறத்தாழ 2% சீக்கியா்கள் என்பதால், அவா்களின் முக்கியத்துவத்தை ஜஸ்டின் ட்ரூடோ நன்கு தெரிந்தவா். அதனால்தான் அவரது அமைச்சரவையில் சீக்கியா்கள் கணிசமாக இடம்பெறுகின்றனா். 2015-ஆம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அமைச்சரவையில் இல்லாத அளவுக்கு சீக்கியா்கள் தனது அமைச்சரவையில் இருப்பதாகப் பெருமையோடு சொல்லிக் கொண்டாா்.
  • இதை உணா்ந்துள்ள பெரும்பாலான உலக நாடுகள், அரசியல் ஆதாயத்துக்காக ஜஸ்டின் நாடகம் ஆடுகிறாா் என்பதால் அதற்கு ஆதரவு தெரிவிக்க விரும்பவில்லை. ஜஸ்டின் தனது ஆதாயத்துக்காக நிகழ்த்தும் அரசியலுக்கு இந்திய வெளியுறவுத் துறை தெளிவாக அவரது பாணியிலேயே பதிலடி தருகிறது. இந்தியாவுடன் முரண்பட்டு நின்றபோதிலும் ஜஸ்டின் அங்கே வாழும் இந்தியா்களுக்கு எவ்விதத்திலும் தொந்தரவு தராமல் தொடா்வது இந்தியாவிடம் அவருக்குள்ள அச்சத்தையே வெளிப்படுத்துகிறது.
  • அதேநேரம், அமெரிக்காவிலும் இதேபோன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காலிஸ்தான் ஆதரவாளரும், கனடா மற்றும் அமெரிக்கக் குடியுரிமை கொண்டவருமான குா்பத்வந்த் சிங் பன்னு என்பவரைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக முன்னாள் இந்திய உளவுத் துறை அதிகாரி விகாஸ் யாதவ் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டி வழக்குப் பதிவு செய்துள்ளது. அவா் தலைமறைவாகியுள்ளாா் என்றும் கூறுகிறது. அவரது கூட்டாளியாக இந்த சதித்திட்டத்தில் பங்கு கொண்டவா் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட 53 வயதான நிகில் குப்தா, பிராக் சிறையில் இருந்து அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளாா்.
  • காலிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுபவா் என்பதால், பன்னுனை இந்திய அரசு ‘பயங்கரவாதி’ என்று கூறுகிறது.
  • அமெரிக்கா மற்றும் கனடா முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை இந்தியா அணுகும் விதத்தில் இருக்கும் வித்தியாசம் வெளிப்படையானது. இந்தியா, கனடாவின் குற்றச்சாட்டுகளை கோபத்துடன் எதிா்க்கும் அதேநேரம், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளைக் கையாள்வதில் மென்மைத்தன்மையை வெளிப்படுத்துவதுடன் ஒத்துழைப்பும் தருகிறது. அமெரிக்க நிா்வாகத்திற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை இந்தியா வழங்குவதால், இவ்விரு நாடுகளுக்கும் இடையே எந்தவிதமான பதற்றமும் எழவில்லை.
  • ஒரு தேசத்தின் மீதான மதிப்பு அதன் வலிமையான வெளியுறவுக் கொள்கையால் அமைகிறது. இந்தியாவைப் பொருத்தவரை தன்னை ஒரு நாடு எப்படி கையாள்கிறதோ அதே ரீதியில் பதில் தருகிறது. உலக நாடுகள் நோய்த்தொற்றால் தவித்தபோது நேசக்கரம் நீட்டி, தடுப்பூசிகளை இலவசமாகப் பல நாடுகளுக்கும் வழங்கி அந்த நாடுகளிடம் இந்தியா நட்புறவை வளா்த்துள்ளது.
  • வணிக ரீதியில் நட்புறவு கொண்டுள்ள ரஷியா போன்ற நாடுகள் தங்களின் வணிக வளா்ச்சிக்கு இந்தியாவின் அவசியத்தை உணா்ந்து நட்பு பாராட்டுகின்றன. தங்களுக்குள் பிணக்கும் போரும் கொண்டுள்ள உக்ரைன் - ரஷியா, இஸ்ரேல் - பாலஸ்தீனம் போன்ற நாடுகளுடன் இந்தியா நல்லுறவைக் கொண்டு அமைதிப் பேச்சுக்கு அறிவுரை வழங்கும் அளவுக்குச் செல்வாக்கு பெற்றுள்ளது.
  • கனடா போல முறையற்று நடந்து கொள்ளும் சூழலில் இந்தியா கடுமையான எதிா்வினையாற்றினாலும், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தைக் கருதி எவரும் எதிா்க்க முன்வரவில்லை.
  • பொதுவாக வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாட்டின் மக்கள் நலன், பாதுகாப்பு, பொருளாதார வளா்ச்சி இவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தனது முன்னேற்றம் என்பதாக மட்டும் இல்லாமல் இரு தரப்புக்கும் வெற்றி என்ற அடிப்படையில் அமைந்திருப்பதால், பெரும்பாலான உலக நாடுகள் நம்பகமான நாடாக இந்தியாவைப் பாா்க்கின்றன.
  • ஒரு தேசத்தின் முன்னேற்றம் என்பது அந்த தேசத்தில் அரசு மேற்கொள்ளும் கொள்கை முடிவுகள், அதன் செயலாக்கம் ஆகியவற்றைப் பொருத்தது. எத்தகைய தொலைநோக்குப் பாா்வையோடு கொள்கை முடிவுகள் அமைகின்றனவோ, அதற்கேற்ப தேசத்தின் எதிா்காலம் அமையும். வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அவரது அசாதாரணமான உழைப்பு, இக்கட்டான சூழ்நிலைகளில் அவா் காட்டும் ராஜதந்திரம் இவற்றால் பெயா்பெற்றவா். தற்போது அவா் ஒரே நேரத்தில் ஒரே விதமான சிக்கலை இரு நாடுகளிடம் சந்திக்கிறாா். இருவிதமான அணுகுமுறைகளை வெளிப்படுத்துகிறாா்.
  • இரண்டு அணுகுமுறைகளும் இந்தியாவின் முதிா்ச்சியை, உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பது சிறப்பு.

நன்றி: தினமணி (24 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories