TNPSC Thervupettagam

"நவீன ஆத்திசூடி'

August 9 , 2019 1981 days 1546 0
  • சமுதாயம் சார்ந்த பிரச்னை  ஏற்பட்டால் நாம் உடனடியாக  கல்வி முறையைக் குறை கூறுகிறோம். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகளை  தவறாகப் பயன்படுத்துதல், படித்தவர்கள் பொருளாதார குற்றங்கள் புரிதல், பட்டா கத்தியுடன் வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் இவற்றுக்கெல்லாம்  தீர்வு வேண்டும் என்றால் கல்வியைச் சீரமைத்தால்தானே சாத்தியமாகும்?  
  • புதிய கல்வி திட்டத்தை தொலைநோக்குப் பார்வையோடு விவாதத்துக்கு வைத்தாலே, "இதற்கென்ன அவசரம், ஏதோ உள்நோக்கத்தோடு கொண்டுவரப்படுகிறது' என்றெல்லாம் எதிர் விமர்சனம் செய்கிறார்களே ஒழிய ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைப்பதில்லை. இது தமிழகத்தில் அண்மையில் திட்டமிட்டு பரப்பப்படும் எதிர்மறை ஏவுகணை!
  • தற்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள  புதிய கல்விக் கொள்கை குறித்த விவாதங்கள் தேசிய அளவில் நடைபெறுவது வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு இந்தியனும் சிந்திக்க வேண்டிய தருணமிது. ஏனெனில், இது நமது இளைய சமுதாயத்தை உருவாக்கும் திட்டம். அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியது.

புதிய கல்விக் கொள்கை

  • கல்வியில் 5 தூண்களை  இலக்காகக் கொண்டுள்ளது புதிய கல்விக் கொள்கை. அவை இணக்கமான, சமமான, தரமான, பொறுப்பானதாக இருத்தல். அதேசமயம் அதிக செலவில்லாமல் எல்லோருக்கும் எளிதாக அடையக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இந்தக் கல்விக் கொள்கை மனப்பாடம் செய்து கற்றல் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. புரிந்து உணரும் கற்றல் முறைக்கு உந்து சக்தியாக புதிய கல்வி முறை அமையும்.
  • இதில் கலை மற்றும் அறிவியலும் அடங்கும். பாடத்திட்டம், இணைப் பாடத் திட்டம், அதிகப்படியான பாடத் திட்டம்--இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகப்படுத்தப்பட்டு, பல்வேறு வகையான திறமைகள், அடிப்படை தொழிற்பயிற்சி கல்வியும் இணக்கப்பட்டு ஒரு முழுமையான கல்வி அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கம் இந்தக் கல்வித் திட்டத்தில் அடங்கியுள்ளது. 
  • பள்ளிக் கல்வியின் கட்டமைப்பு நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது . முதல் கட்டம் 3 முதல் 8 வயது வரையுள்ள ஆரம்ப  குழந்தைக் கல்வி மற்றும் செயல்வழி கல்வி தரப்படுகிறது.  இது ஷரத்து 21ஏ இந்திய அரசமைப்பில் கூறப்பட்டுள்ள கட்டாய இலவசக் கல்வி கருத்தையும் அனைவருக்கும் ஆரம்பக் கல்வியையும் வலியுறுத்துகிறது. 

அவல நிலை

  • குழந்தைகளுக்கு  எண்கள், மொழிகளின் அக்ஷர பயிற்சி அவசியம். பல மாநிலங்களில் ஏழாவது பயிலும் குழந்தைகள்கூட சரியாக எழுத, படிக்க தெரியாத அவல நிலை உள்ளது என்பது பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. அந்தத் தவறுகள் இந்தக் கல்வித் திட்டம் மூலம் திருத்தப்படும். ஆனால்,  குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே தேர்வு வைக்கிறது இந்தக்  கல்வி திட்டம் என்று ில கல்வியாளர்கள்  திரித்துக் கொச்சைப்படுத்துவது வேதனை.
  • அடுத்த தயார் நிலை கட்டம் 3, 4, 5 வகுப்புகளுக்கு மூன்று ஆண்டுகள் ஆகும். இந்த  வகுப்புகளுக்கு பாடப் புத்தகம் சார்ந்த வகுப்பறைக் கற்றல் தரப்படுகிறது. நடுநிலைப் பள்ளி பருவம் 6 ,7, 8 வகுப்புகளில் விரிவான பாடத் திட்டமும், மொழிகள் கற்றுகொள்ளும் திறன், தமிழ் போன்ற செம்மொழிகள் கற்க வாய்ப்பு அளிக்கப்படும். 
  • கடைசிக் கட்டமான 4 ஆண்டுகள் 9, 10, 11, 12  வகுப்புகளுக்கு பல பிரிவு படிப்புகளுக்கான இளங்கலை பட்டப் படிப்புக்கு தயார்படுத்துதல் தரப்படுகிறது. இந்தக் கல்விக் கொள்கை 12-ஆம் வகுப்பு வரை கட்டாயக் கல்வியை விரிவுபடுத்துகிறது. எந்த நாட்டிலும் இத்தகைய பள்ளிப் பருவம் முடிய கட்டாயக் கல்வி என்று உறுதி இல்லை. ஆனால், இந்தக் கல்வித் திட்டம் அதை உறுதி செய்கிறது என்பதை  வரவேற்று பெருமை கொள்ள வேண்டும்.
  • உயர் கல்வி சுதந்திரமாக்கப்பட்டு, மனிதநேயம் மற்றும் பல்கலைக்கழக கல்வி ஒருங்கிணைக்கப்பட்டு, அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் நேர்மறை கற்றல் கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் விமர்சன சிந்தனை, பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல், சக பணியாளர்களுடன் பகிர்ந்து கூட்டு முயற்சி மூலம் திறன் மேம்படுத்துதல், தகவல் தொடர்புத் திறன்கள்  ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும்.
  • "ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதன் தரத்தை மேம்படுத்த வேண்டும்' என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறினார்.  அதைச் செயல்படுத்தும் வகையில் இந்த கல்விக் கொள்கை உயர் கல்வியில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. 
  • உலகத் தரத்துக்கு நிகராக ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி,  உலகத் தரத்தில் முதுநிலை கல்விக்கு அனைத்துப் பிரிவுகளிலும் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை , இளநிலை பட்டப்படிப்புக்கு  உயர்தர கற்றல் என உயர் கல்வி கட்டமைப்பை மூன்று வகையாகப் பிரித்து இந்தப் புதிய கல்விக் கொள்கை அளிக்க உத்தேசித்துள்ளது.

கல்லூரிகள்

  • இந்தியாவில் உள்ள  800 பல்கலைக்கழகங்கள், 40,000-த்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள்,10 முதல் 15,000  உயர் கல்வி நிறுவனங்களாக ஒருங்கிணைக்கப்படும்.  இதையும் சிலர் திரித்து கல்லூரிகளுக்கான மூடு விழாவில் புதிய கல்விக் கொள்கை முடியும் என்று புரிந்தோ, புரியாமலோ கூறுகின்றனர்.  கல்லூரிகள் அங்கேயேதான் இயங்கும். அதன் தரம் பிரிக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட வழி வகுக்கப்படும். 
  • ஆசிரியர்களை மையமாகக் கொண்ட கல்வி முறையை உருவாக்குவது ஒரு முக்கிய குறிக்கோளாகக் கூறப்பட்டுள்ளது.  ஆசிரியர் கல்வி முறை தொழிலாக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த சிறப்பு பாடத்திட்ட கல்வி முறை கற்பிக்கப்படும். ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு என்பது அவசியம். ஒரு நல்லாசிரியர் ஐம்பது சாதாரண மாணவர்களை வல்லவர்களாக உருவாக்க முடியும். வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்தவர்களை "சீனியாரிட்டி' முறையில் ஆசிரியராகத் தேர்வு செய்யும் முறை மாணவர்களுக்கு இழைக்கும் அநீதி. பயிற்றுவிக்கும் திறன், அறிவாற்றல், ஆசிரியர் பணியில் ஆர்வமுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
  • அறிவியல், மருத்துவம், பொறியியல், மற்றும் முக்கியமான கலைப் பிரிவுகளுக்கு பாடத் திட்டத்தை  தேசிய கல்வி ஆராய்ச்சி ஆணையம் (என்.சி.இ.ஆர்.டி.) வகுக்கும். அந்தந்த மாநில பாடத் திட்டக் குழு தேவைக்கேற்ப மாற்றம் செய்து இணைத்துக்கொள்ளலாம். 
  • குழந்தைகளின் இயற்கையான திறன்களில் மொழிகளைக் கற்றலும் ஒன்று. ஆரம்ப காலத்திலேயே பல மொழிகளை குழந்தைகள் கற்றுக் கொள்ள இந்தப் புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது. இதில் நடுநிலைப் பள்ளிப் பருவத்தில் 6, 7, 8 வகுப்புகளில் தமிழ் போன்ற செம்மொழிகளை குழந்தைகள் கற்க வாய்ப்பு அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. "தேமதுர தமிழோசை உலகெங்கும் பரப்பிடச் செய்தல் வேண்டும்' என்றார் மகாகவி பாரதி. அந்தக் கனவு நனவாகும். பிற மாநிலங்களில் தமிழ் கற்க வழி வகை செய்யப்படுவது வரவேற்கத்தக்கது. வெளிநாட்டு மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ்  மொழிகளையும் அவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யலாம்.
  • இந்த மொழி முனைவு கற்றல் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது ஹிந்தி மொழியைக் கொண்டு வருவதற்கான முடிவு போன்றது என்று சில தமிழ் தேசியவாதிகள் எச்சரிக்கின்றனர். ஆனால், கல்விக் கொள்கையில் தாய்மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பிற மொழிகளைக் கற்க  தேர்வு செய்யும் சுதந்திரம் மாணவர்களுக்கு உண்டு. எந்த வகையிலும் மொழித் திணிப்பு இல்லை. மாணவர்களே அந்நிய மொழி உள்பட பிடித்த மொழிகளைத் தேர்வு செய்து கொள்ளலாம். அந்தந்த மாநிலத்தில் தாய்மொழி வழியில் கல்வி பயிற்றுவிக்கப்படும். 

மொழிகள்

  • இந்தியாவில் பல்வேறு மொழிகள் உள்ளன. தாய்மொழி தவிர ஆங்கிலம் ஓரிரண்டு மொழிகளில் இந்தியர்கள் பரிச்சயம் பெற்றுள்ளனர். இந்தப் பன்மொழி ஆளுமை பல்வகை செயல்களை ஒரே சமயத்தில் எளிதாக செய்யக்கூடிய பயிற்சி அளிக்கிறது. ஆனால், மொழி வெறியர்கள் மற்றும் சுயநல அரசியல்வாதிகள் தங்களின் சுய லாபத்துக்காக உணர்ச்சிகளைத் தூண்டி, மக்களை பல்வேறு வகையில் திசைதிருப்புகின்றனர். 
  • நவோதய பள்ளிகள்  மத்திய அரசின் மேன்மை மிகு திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டு ஊரக மற்றும் பின்தங்கிய பகுதிகளில் தரமான கல்வியை குழந்தைகளுக்குத் தருபவை. எல்லா மாநிலங்களிலும் சிறப்பாகச் செயல்படுகின்றன. இவை கிராமப்புறம் உள்பட பின் தங்கிய பகுதிகளில் வாழும் ஏழை குழந்தைகள் நகர்ப்புறத்திற்கு ஈடாக தரமான கல்வி இலவசமாக பெற வழி வகை செய்கிறது. தாய்மொழிக் கல்வி கொடுக்கப்படுகிறது. ஹிந்தி மொழி ஒரு பாடமாக  படிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது; ஆனால் கட்டாயம் இல்லை. இந்த ஒரு காரணத்துக்காக நவோதய பள்ளிகள் தமிழ்நாட்டில் இயங்குவது தடுக்கப்படுகிறது என்பது வேதனை. 
  • அதே நேரத்தில் இந்தப் பள்ளிகளை தடுத்த அரசியல்வாதிகள் தங்களின் குழந்தைகளை சி.பி.எஸ்.இ. கல்வி முறையில்  ஹிந்தியை ஒரு பாடமாக எடுத்துப் படிக்க வைக்கின்றனர். இது இரட்டை வேடத்துக்குச் சான்று.
  • டாக்டர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான  ஒன்பது சிறந்த கல்வியாளர்களைக் கொண்ட குழு மூலம் இந்தத் தேசிய கல்விக் கொள்கை 484 பக்கங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த தொழிற்புரட்சியான ரோபோ தொழில்நுட்பத்தை  அடிப்படையாகக் கொண்ட சவால்களை  இளைஞர்கள் எதிர்கொள்ளும் வகையில் இந்தப் புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. அதே சமயத்தில் நமது நாட்டின் பல்வேறு கலாசார, மொழி மற்றும் இனம் ஆகியவற்றின்  பன்முகத் தன்மைக்கு எவ்விதக் களங்கமும் வராத வகையில் இந்தப் புதிய கல்விக் கொள்கை அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

நன்றி: தினமணி(09-08-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories