TNPSC Thervupettagam

நவீன நகரமாக வேண்டும் சென்னை

April 25 , 2023 580 days 385 0
  • தமிழ்நாடு, ஒரு ட்ரில்லியன் டாலர் என்னும் பொருளாதாரமாக மாற வேண்டும் என்னும் இலக்கை முன்வைத்து இன்றைய தமிழ்நாடு அரசு செயலாற்றிவருகிறது. தெற்கு ஆசியாவில் முதலீட்டாளர்களின் முதல் இலக்காக தமிழ்நாடு இருக்க வேண்டும் என்னும் முழக்கத்தை அது பொதுவெளியில் முன்வைத்துள்ளது.
  • சில மாதங்களுக்கு முன்பு, ஸ்விட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில், உலகப் பொருளாதார மன்றம் நடத்தும் உச்சி மாநாட்டில், தமிழ்நாட்டை முதலீட்டுக்கான இலக்காக முன்வைத்துப் பங்கு கொண்டது. தமிழ்நாட்டின் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதில் கலந்துகொண்டார். அதன் பின்னர் அமெரிக்க நாட்டுக்குப் பயணம் செய்து முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து, அவர்கள் தமிழ்நாட்டில் முதலீடுசெய்ய வேண்டுகோள் விடுத்தார்.
  • பின்தங்கிவிட்ட சில துறைகளில் – எடுத்துக்காட்டாக ஸ்டார்ட் அப் போன்றவற்றை துரிதப்படுத்தும் முயற்சிகளை அரசு எடுத்துவருகிறது. ஃபின் டெக் போன்ற வருங்காலத் தொழில்களை ஈர்க்கும் வகையில், கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுவருகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்கள் தேவை என்பதற்காக, தனியார் துறையுடன் இணைந்து நான்காம் தலைமுறை தொழிற்புரட்சிக்கான பயிற்சிகளை அளிக்க ரூ.2,200 கோடி அளவில் முதலீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை எப்படியான நகரம்?

  • இந்தியாவில் தொழில் துறையின் முன்னணியில் இருக்கும் குஜராத், மஹாராஷ்ட்ரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களுக்கு எந்த வகையிலும் சளைத்த மாநிலமல்ல என்பதை அரசும், அமைச்சர்களும் முக்கியமான மேடைகளில் பேசிவருகிறார்கள்.
  • இப்படி எல்லா வகையிலும் கடந்த 15 மாதங்களில் உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் பல அரசு சார் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாம் காண முடிகிறது. இதன் விளைவாக, அந்நிய முதலீடு 2021-22ஆம் ஆண்டில் 31% அதிகரித்திருப்பதாக அரசுத் தரவுகள் கூறுகின்றன. ஆனால், இந்தப் போட்டியில், மஹாராஷ்ட்ரம், கர்நாடகம், குஜராத் போன்ற மாநிலங்கள்தான் முன்னணியில் உள்ளன. தமிழ்நாடோ போக வேண்டிய தூரம் அதிகம்.
  • தமிழ்நாடு அரசு முழு முயற்சியுடன் இதில் முன்னெடுப்புகளைச் செய்துவருகிறது என்பதை தொழில் துறை வட்டாரங்கள் ஒத்துக்கொண்டாலும் இன்னும் சில மாற்றங்களைச் செய்வது பெரும் நன்மை பயக்கும் என்கிறார்கள். அதில் முக்கியமானது சென்னை நகரின் பிம்பமும் கட்டமைப்பும். பெங்களூர் ஒரு காஸ்மோபாலிட்டன் நகரமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், சென்னை ஒரு கட்டுப்பெட்டித்தனமான நகரமாகப் பார்க்கப்படுகிறது. அத்துடன் குடிநீர் சிரமங்கள், அதீத வெப்பம் போன்றவையும் சேர்ந்துகொள்ள, மற்ற தென்னிந்திய மாநகரமான பெங்களூர், சென்னையைவிட மேலான நகரமாகப் பார்க்கப்படுகிறது. 
  • இதில் 1990க்குப் பிறகு, பெருமளவில் மென்பொருள் தொழில்கள், உயர் தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்த்து, சென்னையைவிடப் பெரும் நகரமாக பெங்களூர் மாறியது நம் கண் முன் உள்ள வரலாறு. பெங்களூர் நகரத்தின் மத்தியில் இருந்த விமான நிலையம் மாற்றப்பட்டு, ஊருக்கு வெளியே நவீன விமான நிலையம் உருவாக்கப்பட்ட பின்னர், அது சென்னையைவிட அதிகப் பயணிகள் வந்துபோகும் விமான நிலையமாக மாறிப்போனது.
  • சென்னையும் நவீன வசதிகளைக் கொண்ட காஸ்மோபாலிட்டன் நகரமாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையெனில், மேலும் பின்தங்கிப் போகும். நவீன நகரத்துக்கான சில பல மாற்றங்களை சென்னை செய்ய வேண்டியிருக்கிறது. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே அலசலாம்.

வேண்டும் மதுக் கொள்கை!

  • சமீபத்தில், வட மாநிலத்திலிருந்து தொழில் தொடர்பாகச் சென்னை வந்திருந்த ஒருவர், தமிழ்நாட்டில் மது வாங்க டாஸ்மாக் பாருக்குச் சென்று நொந்துபோனார். “இவ்வளவு அசிங்கமான சூழலில்தான் ஒருவர் சென்று மது வாங்கவோ அல்லது அருந்தவோ வேண்டுமா?” என ட்வீட்டரில் கேள்வி எழுப்பி, அதை முதல்வரின் பார்வைக்கும் கொண்டுசென்றிருந்தார்.
  • தமிழ்நாட்டில், மது விற்பனை என்பது டாஸ்மாக் நிறுவனத்தின் ஏகபோக உரிமையாக உள்ளது. இந்த விற்பனையகங்களும், அதை ஒட்டியுள்ள பார்களும், மனிதர்கள் பயன்படுத்த இயலாத வகையில் சுகாதாரமற்று உள்ளன. தமிழ்நாட்டின் மிகப் பெரும் சிக்கல் மது வணிகம் தொடர்பான ஒழுக்கவியல் பார்வையும், இதில் ஈடுபட்டிருக்கும் பெரும் வணிக முதலீட்டாளர்களும் ஆகும். இதைச் சொன்ன உடனேயே தமிழ்நாட்டின் கலாச்சாரக் காவலர்கள் ஒழுக்கவியல் வகுப்புகள் எடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.
  • சென்னைக்கு வரும் வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்கள், தாய்லாந்துக்கோ அல்லது கோவாவுக்கோ வருவது போன்ற கேளிக்கையை நாடுபவர்கள் அல்ல. பெரும்பாலும் தொழில் நிமித்தமாகவோ அல்லது மருத்துவ / கலாச்சாரச் சுற்றுலா செல்பவர்களாகவோ இருப்பவர்கள். ஒரு மாலையைக் கொஞ்சம் ரிலாக்ஸ்டாகச் செலவுசெய்ய விரும்பி ஒரு நல்ல ரெஸ்டாரண்ட் செல்ல வேண்டுமென்றால், இங்கே மிக உயர் ரக உணவகங்களில்கூட மது பரிமாற அனுமதியில்லை.
  • கடுமையான உழைப்புக்குப் பின்னர் இளைஞர்கள் வார இறுதிகளில் செல்ல நல்ல பப்கள் இல்லை. தமிழ்நாட்டில் பொறியியல் படித்து மென்பொருள் பணிக்குச் செல்லும் பலருக்கும் பெங்களூர் ஒரு கனவு நகரமாக இருப்பது இதனால்தான். எனவே, தமிழ்நாட்டில் உணவுகங்களில் மது பரிமாறுவதையும், இளைஞர்களுக்கான பப்களையும் அனுமதிக்க வேண்டும்.  இதற்கான சப்ளையை டாஸ்மாக் நிறுவனமே செய்யலாம். 
  • அதேசமயத்தில், மதுக் கடைகளும், பார்களும் இயங்கும் நேரங்கள், அவை அமைக்கப்பட்டிருக்கும் இடங்கள் முதலியன மறுபரிசீலனை செய்யப்பட்டு, அவற்றின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் குறைக்கப்பட வேண்டும். பள்ளி / கல்லூரிகளுக்கு அருகிலும், நெடுஞ்சாலைகளிலும் இவை அமையவே கூடாது என்பதையும் ஒரு கொள்கையாக உருவாக்க வேண்டும்.

கலைத் துறையில் செய்ய வேண்டியவை!

  • தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ள நாடுகளுடன் நீண்ட கால கலாச்சார உறவை மேம்படுத்தும் முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் தென் கொரியா மிகப் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளது. அதேபோல ஜப்பான் உள்பட பல நாடுகள் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன. ‘சென்னை வாரம்’ என்னும் பெயரில் ஒரு சிறு சமூக நிகழ்வு இப்போது நடத்தப்பட்டுவருகிறது.
  • அது பெரும் கலாச்சாரக் கொண்டாட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டும். சென்னையின் ஆதிக்குடிகளுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பின்னர் சென்னையின் பிற கலாச்சாரங்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ள நாடுகள் என அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அனைத்து மக்களும் பங்கேற்கும் விழாவாக மாற்றப்பட வேண்டும்.
  • அவற்றை நடத்துவதற்குத் தரம் வாய்ந்த சமூகக் கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஒரு நல்ல இசை நிகழ்ச்சியை நடத்த சென்னையில் உலகத்தரம் வாய்ந்த இசைக்கூடம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, இளையராஜா புதாபெஸ்ட் நகர இசைக் கலைஞர்களுடன் சிங்கப்பூர் ஸ்டார் நிகழ்த்துக் கலை மையத்தில் ஓர் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அந்த நிகழ்ச்சி நடந்த கூடத்தின் ஒலியியல் அமைப்பு வெகு துல்லியமாக இருந்தது.
  • சென்னையில் அப்படி உலகத்தரம் வாய்ந்த நவீன சமூகக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே இருக்கும் ம்யூசிக் அகாடமி, தமிழிசைச் சங்கம் போன்ற தனியார் இசைக்கூடங்களை நவீனப்படுத்த அரசு நிதி உதவிசெய்யலாம். இதன் மூலமாக குறைந்த செலவில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த இசைக்கூடங்களை உருவாக்க முடியும்.
  • மார்கழியில் நிகழும் செவ்வியல் இசை / கலை நிகழ்வை தமிழ்நாடு அரசு முன்னின்று உலகின் முக்கியமான நிகழ்வாக நடத்த வேண்டும். அதில் செவ்வியல் இசை மட்டுமல்லாது, மக்களின் கலைகளுக்கும் பெரும் பங்குதரப்பட்டு முன்னிறுத்தப்பட வேண்டும். உலகில் பல நகரங்களில், பெருங்காப்பியங்கள் இசை நாடகமாக நிகழ்த்தப்படுகின்றன.
  • அதேபோல சிலப்பதிகாரம் போன்றவை நடத்தப்படலாம். ‘பொன்னியின் செல்வன்’ போன்ற வெகுஜனப் புதினங்களும் நாடக வடிவில் மாற்றப்பட்டு நடத்தப்படலாம். மார்கழி தொடங்கி தை மாதம் முதல் வாரத்தில் முடியும் காலத்தை தமிழ்க் கலாச்சாரக் காலமாக உருவாக்க வேண்டும். இக்காலத்தில் உலகெங்குமுள்ள தமிழர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு வந்து செல்லும் வகையில் அது பிரபலப்படுத்தப்பட வேண்டும். இதை ஒட்டிய வணிகச் சங்கிலிகள், தொழில் மாதிரிகள் உருவாகும் வகையில் முதலீடுகளை வரவேற்க வேண்டும்.

ஒருமுறையோடு நின்றுவிடக் கூடாது…

  • இதுபோன்ற முன்னெடுப்புகளுக்கான வெற்றிகரமான உதாரணமாக, தமிழ்நாடு அரசு முன்னெடுத்து நடத்திய செஸ் ஒலிம்பியாடைச் சொல்லலாம். சதுரங்க விளையாட்டில், தமிழ்நாடு தன்னை, கடந்த 50 - 60 ஆண்டுகளில், இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கிக்கொண்டுள்ளது. ரஷ்யக் கலாச்சார மையத்தில் பொறியாகத் தொடங்கி, மானுவல் ஆரோன் வழியாக தவழ்ந்து, விஸ்வநாதன் ஆனந்த் என்னும் பெரும் சாதனையாளர் வழி பேருருக் கொண்டதன் விளைவு அது. 
  • ரஷ்யப் போர் காரணமாக, ஒலிம்பியாட்டை நடத்தும் வாய்ப்பு கிடைத்தபோது, அதைத் தமிழ்நாடு கொண்டுவரும் வாய்ப்பை உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். காலை 11 மணிக்கு சென்னை வந்த அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலருக்கு அன்று மாலையே அதிகாரபூர்வமான அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது. 187 நாடுகள் கலந்துகொண்ட இந்த உலகப் போட்டி, மிகக் குறுகிய காலத்தில் (4 மாதங்கள்) மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியை யுனெஸ்கோ கலைச் சின்னமாகப் போற்றப்படும் மாமல்லபுரத்தில் நடத்த முடிவெடுத்தது அருமையான முடிவு. இந்தப் போட்டியை நடத்துவதன் மூலம், சென்னை தனக்கான பெயரை உலக அரங்கில் ஈட்டிக்கொண்டது.
  • ஆனால், இதுபோன்ற நிகழ்வுகள் ஒருமுறை நிகழும் அதிசயமாக நின்றுவிடக் கூடாது. வாராது வந்த மாமணி போல விஸ்வநாதன் ஆனந்த் என்னும் உலகச் சாம்பியன் நம்மிடையே இருக்கிறார். அவர் தலைமையில் ஒரு உலகத்தரம் வாய்ந்த செஸ் அகாடமியை நிறுவ வேண்டும். அந்த அகாடமி உலகத் தரம் வாய்ந்த செஸ் போட்டிகளை வருடம் ஒருமுறை நடத்தலாம்.
  • இளம் வயதிலேயே மாநிலம் முழுவதும் உள்ள செஸ் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான ஓர் உண்டு உறைவிடப் பள்ளியையும் நடத்தலாம். இதற்கான ஒருமுறை நிதி நல்கையை அரசு தந்துவிட முடியும். அதுபோக, உலகின் அறிவுசார் தொழில்களில் சென்னையில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு நிறுவனங்களின் உதவியையும் பெறலாம்.
  • ஒருகாலத்தில், தமிழ்நாடு டென்னிஸ் விளையாட்டின் தலைநகராகவும் இருந்தது. ராமநாதன் கிருஷ்ணன், அமிர்தராஜ் சகோதரர்கள், ரமேஷ் கிருஷ்ணன் என்னும் ஜாம்பவான்கள் இருந்தார்கள். அந்த விளையாட்டும் புதுப்பிக்கப்படலாம். உலகில் செஸ், டென்னிஸ் என்னும் பிரபல விளையாட்டுத் தளங்களில், சென்னை உலகின் முக்கியமான நகரம் என்னும் நிலை உருவாவது, அதன் நேர்நிலைப் பிம்பத்துக்கு வலுசேர்க்கும்.

உலக நகரமாகுமா சென்னை?

  • தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டை உலகத் தொழில் முதலீடுகளின் இலக்காக முன்வைத்து, திட்டங்களையும், கட்டமைப்புகளையும் உருவாக்கிவருகிறது. அது வன்பொருள் (Hardware). அப்படி முதலீடு செய்வோர் தமிழ்நாடு வந்து இயங்கும்போது, அவர்கள் சென்னையைக் கலாச்சாரமும், நவீனமும் இணைந்த உலக நகரமாக உணர வேண்டும். அந்தக் கலாச்சார முன்னெடுப்பு மென்பொருள் (software). இவ்விரண்டின் சரியான ஒத்திசைவே நீண்ட கால நோக்கில், நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கும்.
  • நவீனப்படுத்த வேண்டும் என்று சொன்னவுடனேயே, வழக்கமான திட்ட வடிவமைப்பாளர்கள் மனதில் அகண்ட சாலைகள், பெரும் கட்டிடங்கள் மட்டுமே தோன்றும். அப்படி யோசிக்கத் தொடங்கியவுடனேயே சென்னையின் ஆன்மா அழிந்துவிடும். சென்னை என்பது இங்கே முதலீடு செய்பவர்களுக்கோ, புலம்பெயர்ந்து இங்கே வந்து பணியாற்ற வருபவர்களுக்கோ சொந்தமல்ல.
  • இங்கே ஆதிகாலம் தொட்டு வாழ்ந்துவரும் மீனவர்கள், ஏழை மக்கள் போன்றவர்களுக்கே அதன் மீது முன்னுரிமை உள்ளது. அவர்களை முன்னிறுத்தி, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கொண்ட குடியிருப்புகள், சமூக வெளிகளுக்கு முக்கியத்துவமும், முதன்மை இடமும் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட வேண்டும். இந்தத் தேவை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கப்பட்டுவிடக் கூடாது. அதுதான் சென்னையின் மையமாக இருக்க வேண்டும். அதன் அடுத்த வட்டத்தில், நகருக்கு வெளியே புலம்பெயர்ந்து பணியாற்ற வருபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான குடியிருப்புகள் சமூக வெளிகள் என அனைத்து மக்களையும் உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்கலாம்.
  • சென்னை 2020 என்னும் தலைப்பில் உரையாற்றிய உலகப் புகழ்பெற்ற மேலாண் சிந்தனையாளர் (மறைந்த) கோயமுத்தூர் கிருஷ்ணப் பிரஹலாத், “சென்னைக்கான ஒரு கனவை (Vision) உருவாக்குகையில், அது ஹாங்காங்கைப் போலவோ அல்லது ஷாங்காயைப் போலவோ உருவாக்க நினைக்காதீர்கள். சென்னைக்கு என ஒரு தனித்துவமான கனவை உருவாக்குங்கள். மிக முக்கியமாக, அந்தக் கனவு இப்போது இருக்கும் வளங்களைத் தாண்டியதாக இருக்கட்டும். அப்போதுதான் புத்தாக்கங்கள் சாத்தியப்படும்” எனச் சொல்லியிருந்தார்.
  • தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக வேண்டும் என்னும் கனவின் ஒரு முக்கியமான பகுதிதான் சென்னை நவீன உலகின் மிக முக்கியமான நகரமாக மாற வேண்டும் என்பது. சென்னையைத் தாண்டி, மாநிலத்தில் பிற முக்கிய நகரங்களான கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி போன்ற நகரங்களிலும் முக்கியமான கட்டமைப்புகளை உருவாக்கி மேம்படுத்தலாம். குறிப்பாக இந்நகரங்களில், நவீன நூலகத்துடன் இணைந்த (மதுரையில் உருவாகிக்கொண்டிருப்பதுபோல) உலகத்தரம் வாய்ந்த சமூகக் கூடம் (இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடத்த) போன்றவற்றை அடுத்த சில ஆண்டுகளில் உருவாக்க வேண்டும். அவை நவீனத் தமிழ்நாட்டின் பெருமிதங்களாகத் திகழும்!

நன்றி: அருஞ்சொல் (25 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories