TNPSC Thervupettagam

நாடாளுமன்ற சிறப்புரிமைகளைக் காப்போம்

September 6 , 2023 489 days 288 0
  • நாடாளுமன்றத்தின் கடந்த மழைக்காலக் கூட்டத்தொடர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் தன்னிச்சையாக இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டது. அந்த நடவடிக்கைகளுக்கு முன்னதாக, அவர்களுக்கு தங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்பதற்கான போதிய வாய்ப்பும் வழங்கப்படவில்லை; நாடாளுமன்ற உரிமைக் குழுவின் முன் தங்கள் நியாயத்தைக் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
  • இந்த இடைநீக்க நடவடிக்கைகள் தற்காலிகமானவையோ, குறுகிய காலம் கொண்டவையோ எதுவாக இருந்தாலும், முன்னதாக தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க குறிப்பிட்ட அந்த உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாதது, இயற்கையான நீதிக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது; எதிர்த்தரப்பின் கருத்துகளையும் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்ற அரசியல் நடைமுறைக்கும் மாறானது.
  • நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்தைப் பொறுத்தவரை, மக்களவை நடத்தை நடைமுறைகள் விதி 374-இன்படியும், மாநிலங்களவை நடத்தை நடைமுறைகள் விதி 256-இன்படியும், தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த விதிமுறைகளின்படி, அவையில் உறுப்பினர் ஒருவர் மீது உரிமைமீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அவரது தரப்பின் நியாயத்தைக் கேட்காமலே, அவையில் வாக்கெடுப்புக்கு விட்டு, அவரை இடைநீக்கம் செய்ய முடிகிறது.
  • இது கருத்து சுதந்திரத்தையும் அதை வெளிப்படுத்தும் உரிமையையும் பாதிக்கிறது. நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர், தான் சார்ந்த தொகுதியின் நலனுக்காகச் செயல்பட வேண்டும். மாநிலங்களவை உறுப்பினரோ, தான் சார்ந்த மாநிலத்தின் நலனுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். அதற்கு உறுப்பினர் தனது கருத்துரிமையை அவையில் எந்தத் தடையுமின்றி வெளிப்படுத்தும் சூழல், அவசியமான, தவிர்க்க இயலாத தேவையாகும்.
  • "நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நிலையாணைகள் மற்றும் அரசியல் சாசன விதிமுறைகளைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை இருக்க வேண்டும்' என்று இந்திய அரசியல் சாசனத்தின் 105 (1)-ஆவது பிரிவு கூறுகிறது. அதற்கு மாறாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவது, அந்த உரிமையின் சாராம்சத்தைப் பொருளிழக்கச் செய்கிறது.
  • இந்தப் பேச்சு சுதந்திரம் என்பது, கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தும் உரிமை, கடுமையாகப் பேசும் உரிமை, யாரையும் புண்படுத்தாத அளவில் கொச்சையாகப் பேசக்கூடிய உரிமை ஆகியவற்றைக் கொண்டதாகும். மறைந்த சட்ட அமைச்சரும் பாஜக எம்.பி.யாக இருந்தவருமான அருண் ஜேட்லி, "நாடாளுமன்றச் செயல்பாடுகளில் அவை நடவடிக்கைகளை முடக்குவதும்கூட, வரலாற்றில் இடம்பெற்றுள்ள, அனுமதிக்கப்பட்ட அரிய தந்திரம்தான்' என்று கூறியிருப்பதை இங்கு நினைவுகூரலாம்.
  • அவை நடவடிக்கைகளை முடக்குவது என்பது எப்போதேனும் நிகழக்கூடிய அரிய நிகழ்வாக இருந்தது மாறி, தற்போது அது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு, எதிர்க்கட்சியினரின் கருத்துகளை மதிக்காத அரசின் போக்கே காரணம். அண்மையில் நிகழ்ந்த மணிப்பூர் வன்முறையின்போது, அதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க உடன்படாத ஆளுங்கட்சியை மக்களிடம் வெளிப்படுத்தவும், அரசைப் பேச வைக்கவும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டது.
  • நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் வரலாறு நெடிய பயணம் கொண்டது. இங்கிலாந்தில் 1512-இல் நிறைவேற்றப்பட்ட நாடாளுமன்ற சிறப்புரிமைகள் சட்டம் அதன் முதல் அடியாகும். நாட்டு மக்களிடம் நாடாளுமன்றம் செல்வாக்குப் பெறுவதைத் தடுக்கவும், தனது அதிகாரத்தைத் தக்கவைக்கவும் விரும்பிய மன்னரின் அநாவசிய முயற்சிகள் அந்நாட்டு வரலாற்றில் பதிவாகி இருக்கின்றன. இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துரிமை, மன்னராட்சியால் நசுக்கப்படுவதைத் தடுக்கவே அச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
  • நவீன நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகள், 1689-இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் நிலை கொண்டுள்ளன. மன்னரின் வரையரையற்ற அதிகாரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் வாயிலாக, இங்கிலாந்தின் பிரபல சிந்தனையாளரான ஜான் லாக் முன்வைத்த அரசியலமைப்புக் கோட்பாட்டுக்கு சட்ட அந்தஸ்து அளிக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் பாதுகாப்பை அச்சட்டம் மேம்படுத்தியது.
  • நாடாளுமன்ற சிறப்புரிமைகளைக் காக்க இந்தச் சட்டம்தான் இந்தியாவிலும் நடைமுறையில் இருக்கிறது. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், 1950 முதல் இத்தனை ஆண்டுகளாக இச்சட்டம், எந்த மாற்றமும் இன்றி, எவ்வித மேம்படுத்தலும் இன்றி அப்படியே இருக்கிறது. இதில் தேவையான மாற்றங்களைச் செய்ய ஏதுவாக 2000-ஆவது ஆண்டு நியமிக்கப் பட்ட நீதிபதி வெங்கடாசலையா குழு அளித்த பரிந்துரைகள் இதுநாள் வரை செயல்படுத்தப்படவில்லை.
  • ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை அலுவல்களை முறைப்படுத்தும் பழைய விதிகளால், இந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்ய இயலவில்லை. அந்த நடத்தைகளை ஒழுங்குபடுத்தும் விதிகள், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உறுதுணையாக விளங்கும் நீதிநெறிகளுக்கு எதிரானதாக அமைந்துவிடக் கூடாது.
  • தற்போதுள்ள விதிமுறைகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவர்களுக்கும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கான விருப்புரிமைகளை வழங்கி இருக்கின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவர்களும் நடுநிலையாகவும் பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும் என்பது அரசியல் சாசனத்தின் எதிர்பார்ப்பு. அப்போதுதான் நாடாளுமன்ற அவைகளின் தன்னாட்சி காப்பாற்றப்படும். ஆனால், நடைமுறையில் இது நிறைவேறாத கனவாகவே உள்ளது.
  • பிரிட்டனில் தற்போது கடைப்பிடிக்கப்படும் ஒரு முக்கியமான வழக்கம், இங்கு நாமும் பரிசோதித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. அங்கு நாடாளுமன்ற அவைத்தலைவராக இருப்பவரை அடுத்த தேர்தலில் அவரது தொகுதியில் எதிர்க்கட்சிகள் போட்டியின்றி மறுபடியும் தேர்வு செய்வது மரபாக இருக்கிறது. அவ்வாறு தேர்வாகும்பட்சத்தில் அவர் சார்ந்திருந்த கட்சி ஆட்சியை அமைத்தாலும், இழந்தாலும், அதுபற்றிய கவலையின்றி, அதே அவைத் தலைவரைத் தேர்வு செய்யவும் உறுதி அளிக்கப் படுகிறது.
  • இத்தகைய நிலைப்பாடு காரணமாக அவைத்தலைவராக இருப்பவர் எந்தச் சாய்வுமின்றி இயங்குவது ஓரளவுக்கு உறுதியாகிறது; அவரது தனிச்சார்பு நிலைகள், கட்சி சார்புகள், சித்தாந்த சார்புகளைத் தாண்டி அவரால் செயல்பட முடிகிறது. அவைத்தலைவர் ஒருபக்க சார்பின்றி நடுநிலையாக இருக்க வேண்டும் என்ற தார்மிகக் கோட்பாடும் அங்கு நிலை பெறுகிறது.
  • தேர்தலில் ஒருவர் மீண்டும் வெல்ல அவர் சார்ந்த கட்சியின் செல்வாக்கும், கட்சி இயந்திரத்தின் கடும் உழைப்பும், பெருமளவிலான நிதியுதவியும் தற்போது தேவையாக உள்ளன. தவிர, அவருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். எனவே அவர் தனது கட்சியைச் சார்ந்திருத்தல் தேவையாகிறது. அத்தகைய நிலையில் அவரால் மக்களவையில் சார்பின்றிச் செயல்படுதல் இயலாது.
  • இந்த விஷயத்தில் மாநிலங்களவைத் தலைவராக உள்ள குடியரசு துணைத் தலைவருக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது. அவர் நடுநிலையாகச் செயல்படுவதற்கான கூடுதல் வாய்ப்பை அரசியல் சாசனத்தின் 67ஆவது பிரிவு வழங்கி இருக்கிறது.
  • நாடாளுமன்ற சிறப்புரிமைகளை முறைப்படுத்த, நீதிபதி வெங்கடாசலையா குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டியது அவசியம். நாடாளுமன்ற அவையில் ஓர் உறுப்பினருக்கு எதிராக உரிமைமீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் நிலையில், அதை ஆராய்ந்து தீர்மானிக்க ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என்பது அக்குழுவின் முக்கியமான பரிந்துரையாகும்.
  • இந்தத் தீர்ப்பாயத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் அல்லது உரிமைமீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்ட அவையின் தலைவர், அந்த அவையின் எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் நியமிக்கப்படும், அங்கு தற்போது பணியிலுள்ள நீதிபதி ஒருவர் ஆகிய மூவரும் இடம்பெற வேண்டும்.
  • அவைத்தலைவர் அல்லது குடியரசு துணைத் தலைவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அளிக்கும் எழுத்துபூர்வமான தகவல் தொடர்புகளும் அவையில் பேசிய விவரங்களும் ஆவணமாகத் தொகுக்கப்பட்டு தீர்ப்பாயத்தில் முன்வைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதுபோலவே, மத்திய அமைச்சர்கள், மாநில அரசுகளின் அமைச்சர்கள், மத்திய - மாநில அரசு அதிகாரிகள், பொதுத்துறை, தனியார்துறை நிர்வாகிகளுடனான நாடாளுமன்ற உறுப்பினரின் தகவல் தொடர்புகளும் முன்வைக்கப்பட்டு, அவை உரிமைமீறலா இல்லையா என்பது ஆராயப்பட வேண்டும்.
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்குரைஞர்கள் அல்லர் என்றபோதும், பொதுநலனுக்காக அனைத்து நீதிமன்றங்களிலும் பார்வையாளர்களாக அமரும் வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப் பட வேண்டும்.
  • நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஒருவர் தோராயமாக இருபது லட்சம் வாக்காளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தவிர, அவர் தனது தொகுதியின் அருகிலுள்ள பகுதிகளில் வாழும் பத்து லட்சம் மக்களின் நலனுக்கும் உதவக் கூடிய நிலையில் இருக்கிறார். அதுபோலவே, மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் தான் சார்ந்த மாநில நலனுக்குக் குரல் கொடுக்கும் பிரதிநிதியாகிறார்.
  • எனவே, நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை முறைப்படுத்துகையில், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அவரது செயல்பாட்டுக்கு தேவையற்ற இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதைத் தடுப்பது அவசியம். அதுபோலவே, அவரது மக்கள் பிரதிநிதித்துவச் செயல்பாட்டுக்கு எதிராக மிரட்டல் விடுப்பது, தடைகள் ஏற்படுத்துவது, தாக்குதல்கள் தொடுப்பது ஆகியவையும் தடுக்கப்பட வேண்டும்.
  • இறுதியாக, சார்புநிலைகளைத் தவிர்க்கவும், தவறான கண்ணோட்டத்தை மாற்றவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், நாடாளுமன்ற நடவடிக்கைகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். நாடாளுமன்ற சிறப்புரிமைகளைக் காக்கும் வகையிலான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவது அதைவிட அவசியம்.

நன்றி: தினமணி (06 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories