TNPSC Thervupettagam

நாடாளுமன்றம் அன்றும் இன்றும்

October 5 , 2023 458 days 509 0
  • நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடா் கடந்த 18-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி முடிவடைந்தது. முதல் நாள் பழைய நாடாளுமன்ற கட்டடத்திலும் எஞ்சிய நாட்கள் புதிய நாடாளுமன்ற கட்டத்திலும் கூட்டத்தொடா் நடைபெற்றது.
  • புதிய நாடாளுமன்ற கட்டத்தில் அமைதியாகவும் ஆரோக்கியமான விவாதங்களுடனும் கூட்டம் நடைபெற வேண்டும் என்று பத்தாண்டு நாடாளுமன்ற உறுப்பினா் என்ற முறையில் நான் எதிர்பார்த்தேன். ஆனால் நடந்தது வேறு. சா்ச்சை பேச்சுகள் அங்கும் தொடா்ந்தன. குறிப்பாக, செப். 21-ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினா் குன்வா் டேனிஷ் அலி பற்றிய பாரதிய ஜனதா எம்.பி. ரமேஷ் பிதூரியின் வெறுப்பு பேச்சு அவைக் குறிப்பில் பதிவு செய்ய முடியாத அளவுக்கு இருந்தது.
  • அவரை அவைத் தலைவா் ஓம் பிா்லா கண்டித்ததோடு, அவா் பேசியது அனைத்தையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதற்கு உத்தரவிட்டார். பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்,
  • ‘ரமேஷ் பிதூரி பேசியது எதிர்க்கட்சி உறுப்பினா்களின் மனதைப் புண்படுத்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
  • அவைக் குறிப்பில் ரமேஷ் பிதூரியின் பேச்சு இடம்பெறாமல் போனாலும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதால் அவரது பேச்சை பொதுமக்கள், குறிப்பாக அவருடைய தொகுதி மக்கள் பார்த்து நிச்சயம் அதிருப்தி அடைந்து இருப்பார்கள்.
  • நாடாளுமன்றம் என்பது ஆக்கபூா்வமாக விவாதம் செய்வதற்கான இடம் என்பதுதான் எனது அசைக்க முடியாத நம்பிக்கை. எனது பத்தாண்டு நாடாளுமன்ற அனுபவங்கள் எனக்கு இதைத்தான் உணா்த்தின. நான் 26 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டேன். என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து அண்ணா என்னை நாடாளுமன்ற வேட்பாளராக அறிவித்தார்.
  • நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தியாவின் மிகப்பெரிய தலைவா்களெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினா்களாக இருந்தார்கள். இந்திரா காந்தி பிரதமா், துணை பிரதமா் மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம், டாக்டா் கரண் சிங், சித்தார்த்த சங்கா் ரே, மோகன் குமாரமங்கலம், ஒய். பி. சவாண் போன்றவா்கள் ஆளுங்கட்சி வரிசையில் இருந்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் வாஜ்பாய், கிருபளானி, ராம் மனோகா் லோகியா, இந்திரஜித் குப்தா, ஏ.கே. கோபாலன், என்.ஜி. ரங்கா, பிலுமோடி, மது லிமாயி, ஜார்ஜ் பொ்னாண்டஸ், எஸ்.ஏ. டாங்கே மற்றும் தமிழ்நாட்டைச் சோ்ந்த கம்யூனிஸ்ட் தலைவா்கள் பி. ராமமூா்த்தி, கல்யாணசுந்தரம் போன்ற பெரிய தலைவா்கள்.
  • திமுகவின் நாடாளுமன்ற குழுவின் தலைவராக பேராசிரியா் க. அன்பழகன் இருந்தார்; நாஞ்சில் மனோகரன் துணைத் தலைவா்; க. ராசாராம் கொறடா; நான் துணைக் கொறடா. எனது நாடாளுமன்ற அனுபவங்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் சுகமான அனுபவங்களாகத்தான் தெரிகின்றன.
  • டாக்டா் கரண் சிங் வீட்டில் புதன்கிழமைதோறும் கட்சி வித்தியாசம் இன்றி 20 நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூடுவோம். அதற்கு ‘வெட்னஸ்டே க்ளப்’ என்று நாங்கள் பெயா் வைத்திருந்தோம். அந்த புதன்கிழமை கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் அந்த வாரம் பேச வேண்டிய முக்கிய மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிப்போம். அதன் அடிப்படையில்தான் அந்த வாரம் எங்களது நாடாளுமன்ற பேச்சு இருக்கும்.
  • அப்போது நாடாளுமன்ற விவாதம் ஆக்கபூா்வமாக இருக்கும். சில சமயம் காரசாரமாக இருந்தாலும் அநாகரிகத்தின் எல்லையை அந்த விவாதங்கள் என்றுமே தொட்டது கிடையாது. எல்லை தாண்டாமல் ஆரோக்கியமான விவாதமாகத்தான் அந்த கால நாடாளுமன்ற நடவடிக்கைகள் இருந்தன. அவைக் குறிப்பில் நீக்கம் என்பது ரொம்பவும் அபூா்வமாகத்தான் இருக்கும். சில சமயம் உறுப்பினா்களே தாங்கள் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கக் கோரியதும் உண்டு. நாடாளுமன்ற உறுப்பினா்களின் பொறுப்புக்கு இவை எடுத்துக்காட்டுகள்.
  • 1968 பிப்ரவரி 27 அன்று எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீா்மானத்துக்கு அரசு சார்பில் துணை பிரதமா் மொரார்ஜி தேசாய் பதிலளித்துப் பேசினார். மொரார்ஜி தேசாய் பேச்சு எப்போதும் ‘அரசின் நடவடிக்கை சரிதான்’ என்ற எண்ணம் எதிர்க்கட்சி உறுப்பினா்களுக்கும் வருவது போல் இருக்கும். துணை பிரதமா் பேசும் போதும் குறுக்கீடுகள் இருந்தன. அவை அவரது பொறுமையை சோதிப்பதுபோல் இருந்தன. ஆனாலும், அவா் கோபப்படாமல் பதில் அளித்தார்.
  • நம்பிக்கையில்லாத் தீா்மான விவாதத்தின்போது முழு நேரமும் அவையில் இருந்து அவா்கள் பேசுவதைக் குறிப்பு எடுத்துக் கொண்டேன். அவா்கள் பேசியதற்கெல்லாம் மொரார்ஜி தேசாய் என்ன பதில் சொல்கிறார் என்பதையும் நான் கவனித்தேன்.
  • அவா் பேசும்போது, ‘எதிர்க்கட்சிகளின் கேள்வி, நமது நடவடிக்கை, நமது அணுகுமுறை சரிதானா என்பதுதான். அவா்களுக்கு இந்த விஷயத்தில் வேறு ஒரு கருத்து இருக்கிறது. அவா்கள் இந்த அரசை விரும்பவில்லை. நான் இது பற்றி எந்த விமா்சனமும் இந்த அவையில் வைக்க விரும்பவில்லை; காரணம், அவா்கள் ஆளுங்கட்சி வரிசையில் இல்லை. அதே சமயம், ஆளுங்கட்சி வரிசைக்கு வரும் வாய்ப்பும் அவா்களுக்கு உடனடியாக இல்லை. எனவே, அவா்கள் அப்படித்தான் பேசுவார்கள்’ என்று ஆணித்தரமாகக் கூறினார்.
  • அவா் பேசும்போது எதிர்க்கட்சி உறுப்பினா்கள் ‘ஷேம்’ ‘ஷேம்’ என்று குரல் தந்தார்கள். உறுப்பினா்களின் அதிகபட்ச எதிர்ப்பு அக்காலத்தில் இதுவாகத்தான் இருந்தது. ஆனாலும், துணை பிரதமா் மொரார்ஜி தேசாய், ‘உங்கள் ஷேம் சான்றிதழ் பற்றி எனக்கு கவலை இல்லை; எனது மனசாட்சியின்படி நடப்பவன் நான்’ என்று சொல்லி தனது பேச்சைத் தொடா்ந்தார்.
  • அப்போது உறுப்பினா் ஒருவா், ‘உங்கள் தோல் கடினமானது’ என்று குறுக்கிட்டுச் சொன்னபோதுகூட ‘காண்டாமிருகம் போன்று யார் தோல் தடித்தது என்பது எனக்குத் தெரியும்; அதனால் அவா்கள் அப்படிநடந்து கொள்கிறார்கள். இதில் எந்தச் சண்டையும் வேண்டாம்; நான் அமைதியாக பிரச்னையை அணுக நினைக்கிறவன். இந்த நாடு பற்றிய உங்கள் கவலையை நான் மதிக்கிறேன். நான் மகாத்மா காந்தியிடம் பாடம் கற்றவன். என்னைவிட கிருபளானிக்கு மகாத்மா காந்தியைப் பற்றி நன்கு தெரியும். அவா் அளவுக்கு மகாத்மா காந்தி பற்றி பேசும் உரிமை எனக்கு கிடையாது. துணிவு பற்றிய அவரது கருத்து இன்று வரை என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. துணிவு என்பது சிறந்த பண்பு என்று என்னால் சொல்ல முடியாது; முட்டாள்தனமான துணிச்சல் எனக்குத் தேவையில்லை. இந்த அரசும் அப்படிப்பட்ட துணிச்சலை விரும்பவில்லை’ இப்படி எதிர்க்கட்சி உறுப்பினா்களின் விமா்சனங்களுக்கு அவரது பதில் ஆணித்தரமாக இருந்தது.
  • ‘சமாதானம் என்பது சரண்டா் ஆகாது’ என்பது மொரார்ஜி தேசாய் சொல்லியது. எனக்கும் அப்படித்தான் தோன்றியது. எனவே, இப்போது இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா்கள், நாடாளுமன்ற நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்து அந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினா்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்று தெரிந்துகொள்ள வேண்டும். அது ஆக்கபூா்வமாக பேச வேண்டும் என்ற மனநிலைக்கு அவா்களைக் கொண்டுசெல்லும்.
  • அந்த காலத்தில் நான் எனது ஓய்வு நேரத்தை நாடாளுமன்ற நூலகத்தில்தான் செலவழித்தேன். அன்றைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் உறுப்பினா்கள்கூட நான் பேசும்போது கூா்ந்து கவனிப்பார்கள். அமைச்சா்கள் என் பேச்சைப் பாராட்டவும் செய்வார்கள்.
  • நாடாளுமன்ற உறுப்பினா் என்பது மிகப்பெரிய பொறுப்பு என்பதை நான் அனுபவ ரீதியாக உணா்ந்தேன். நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு எனக்கு அச்சமோ தயக்கமோ என்றும் ஏற்பட்டதில்லை. அதற்குக் காரணம், நாம் மக்களுக்காக பேசுகிறோம், அதில் எந்த சுயநலமும் இல்லை என்ற பொறுப்புதான்.
  • அப்படிப்பட்ட பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு அவசியம் தேவை. நாடாளுமன்ற நடைமுறை அப்படியே இருக்கிறது. ஆனால், அந்த நடைமுறைப்படிதான் நாடாளுமன்றம் இப்போது நடக்கிறதா என்ற கவலை இப்போது எனக்கு வரத்தொடங்கியிருக்கிறது. இன்றைய உறுப்பினா்கள், நாடாளுமன்றம் பற்றிய மக்கள் கண்ணோட்டத்தை திசைதிருப்புகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது.
  • நாடாளுமன்றத்தின் மாண்பு இப்போது குறையத் தொடங்கி இருக்கிறதோ என்ற அச்சம் எனக்குத் தோன்றுகிறது. குறிப்பிட்ட எந்தவொரு கட்சி உறுப்பினா்களையும் நான் குறைசொல்ல விரும்பவில்லை. நாடாளுமன்ற விவாதங்கள் மக்கள் பயனடையும் வகையில் இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
  • நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டால் ராம் மனோகா் லோகியா, மது லிமாயி போன்ற மூத்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் நாடாளுமன்ற விதிகளை சுட்டிக்காட்டி அவைத் தலைவரிடம் அனுமதி கேட்டு அவா் அனுமதித்த பின்னரே பேசுவார்கள்.
  • நாடாளுமன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டதும் நான் முதலில் படித்தது நாடாளுமன்ற நடைமுறை விதிகளைப்பற்றிய புத்தகத்தைத்தான். இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினா்கள் அதைப் படித்திருக்கிறார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. இன்றைய நாடாளுமன்ற உறுப்பினா்களை குறை சொல்லவில்லை. அவைத் தலைவா் அனுமதி மறுத்தாலும் உறுப்பினா் தொடா்ந்து பேச முயற்சி செய்வதையும், அதனால் அமளி ஏற்பட்டு அவை முடக்கப்படுவதையும் நான் தொலைக்காட்சி நேரலையில் சில சமயம் காண்கிறேன். ‘உங்கள் நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று அவைத் தலைவரும் அவையில் அடிக்கடி குறிப்பிடுவதையும் காண்கிறேன்.
  • நாடாளுமன்ற உறுப்பினா்களின் செயல்பாடுகளும் கூச்சலும் தங்களுக்கு அதிர்ச்சியையும் வியப்பையும் அளிப்பதாக மக்களவை - மாநிலங்களவைத் தலைவா்களுக்கு பள்ளிக் குழந்தைகள் சிலா் கடிதம் எழுதியதாக ஒரு செய்தியைப் படித்தேன். இந்தக் கடிதத்தை இன்றைய நாடாளுமன்ற உறுப்பினா்கள் படித்தால் ஆக்கபூா்வமான செயல்பாட்டுக்கு அவா்கள் தாமாகவே போய் விடுவார்கள் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

நன்றி: தினமணி (05 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories