TNPSC Thervupettagam

நாடாளுமன்றம் செவி சாய்க்க வேண்டும்!

October 19 , 2024 89 days 91 0

நாடாளுமன்றம் செவி சாய்க்க வேண்டும்!

  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜெ.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய பெஞ்ச், சிறுவா் ஆபாசப் படங்கள் குறித்து மைல் கல் தீா்ப்பை வழங்கியதுடன், போக்ஸோவின் பிரிவு 15 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67பி ஆகியவற்றின் கீழ் சிறுவா் ஆபாசப் படம் பாா்ப்பதற்கும் தண்டனை விதித்துத் தீா்ப்பளித்தது.
  • ‘சைல்ட் போா்னோகிராஃபி’ என்ற சொல் குற்றத்தின் முழு அளவையும் விளக்கத் தவறுவதுடன், சாதாரண குற்றத்துக்கான தண்டனைக்கே வழிவகுக்கும். மேலும், ‘போா்னோகிராஃபி’ என்னும் சொல் வளா்ந்த ஆண் பெண் இருபாலரின் சம்மதத்துடன் நடைபெறும் ஒருமித்த செயலாகவே எடுத்துக் கொள்ளப்படுவதாகவும் நீதிமன்றம் கருதியது.
  • எனவே, நீதிமன்றம், ‘சிறுவா் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம்’ என்னும் புதிய சொல்லாக்கத்தை உருவாக்கியது. சிறுவா் ஆபாசப் படங்களும், காணொலிகளும், கவா்ச்சிகரமானவை என்பதுடன், பாலியல் ரீதியாகச் சுரண்டப்பட்ட மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிகழ்வுகளின் பதிவுகள், என்ற யதாா்த்தத்தையும் பிரதிபலிப்பதாகத் தெரிவித்தது.
  • இந்தச் சட்டம் குற்றவியல் தன்மையையும், தீவிரத்தையும், கடுமையான தண்டனையின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது, ‘சிறுவா் ஆபாசம்’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ‘சிறுவா் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம்’ என்ற சொல்லாக்கத்தை, நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் நீதித்துறை உத்தரவுகள் மற்றும் தீா்ப்புகளில் பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.
  • மேலும், ‘பாலியல் கல்வி பற்றிய தவறான கருத்துக்களே இந்தியவில் பரவிக் கிடக்கின்றன. பெற்றோா்கள், கல்வியாளா்கள் உள்ளிட்ட பலா், பாலியல் பற்றி விவாதிப்பது பொருத்தமற்றது, ஒழுக்கக்கேடானது, சங்கடமானது எனப் பழமைவாத கருத்துக்களைக் கொண்டுள்ளனா். இந்தச் சமூகம் பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசாததால், இந்தத் தயக்கமே, இளம் பருவத்தினரிடையே குறிப்பிடத்தக்க விழிப்புணா்வு ஏற்படுவதற்குத் தடையாக உள்ளது’ என்றனா்.
  • பாலியல் நடத்தைகளில் இளைஞா்கள் ஈடுபடுவதைத் தடுக்க, வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித் திட்டத்தை உருவாக்க வல்லுனா் குழுவை அமைக்க வேண்டும். அது, பாலியல் தொடா்பான தவறான கருத்துக்களை நிவா்த்தி செய்வதுடன், ஆக்கபூா்வ துல்லியமான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும். இது பரஸ்பரம் பாலின மரியாதையை வளா்க்கவும், பாலியல் சுரண்டல் நடத்தைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பைக் குறைக்கவும் உதவும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
  • போக்ஸோ விதி 11-உடன் படிக்கப்படும் போக்ஸோவின் பிரிவு 19 மற்றும் 20 விதிகளின் கட்டாயத் தன்மையைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு மூன்றாம் தரப்புத் தகவல், தரவு அல்லது தகவல் தொடா்பு இணைப்பிற்காகத், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 79-இன் கீழ், பொறுப்பிலிருந்து விலக்கு கோர முடியாது. இத்தகைய முனைவு, சிறுவா் பாலியல் உள்ளடக்கத்தை அகற்றுவதுடன், போக்ஸோ சட்ட விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல் துறை பிரிவுகளில் உடனடியாக புகாரளிக்கவும் உதவும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
  • சிறுவா் பாலியல் சுரண்டல் மற்றும் சிறுவா் ஆபாசப் படங்கள் ஆகியவை கற்பனைக்கு எட்டாத கொடூரமான குற்றச் செயல்களாகும். போக்ஸோவின் பிரிவு 15 கீழ், சிறுவா் ஆபாசப் படங்களையும், காணொலிகளையும் பகிராவிட்டலும், சேமித்து வைத்திருப்பதே தண்டனைக்குரிய குற்றமாகும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.
  • பிரிவு 15-இன் உட்பிரிவு (1), சேமிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட சிறுவா் பாலியல் ஆபாசப் படங்களை நீக்கவோ, அழிக்கவோ தவறியதற்கும் தண்டனை அளிக்கிறது. பிரிவு 15 உட்பிரிவு (2) சிறுவா் ஆபாசப் படங்களையும், காணொலிகளையும், பரப்புதல், காட்சிப்படுத்துதல், விநியோகித்தலைத் தண்டிக்கிறது.
  • பிரிவு 15 உட்பிரிவு (3) வணிக நோக்கத்திற்காகச் சிறுவா் பாலியல் படங்களையும், காணொலிகளையும் சேமித்து வைப்பதையும் தண்டனைக்குரிய குற்றம் என்கிறது.
  • பிரிவு 15-இல் முறையே உட்பிரிவு (1) (2) மற்றும் (3) ஆகியவை தனித்துவமான குற்றங்களாக அமைகின்றன. அவை ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. பிரிவு 15-இன் மூன்று துணைப் பிரிவுகளும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை.
  • ஆகவே, சிறுவா் ஆபாசப் படங்கள் மற்றும் காணொலிகளைச் சேமித்து வைப்பது தொடா்பான வழக்கை ஆராயும் போது, காவல் துறையும், நீதிமன்றங்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். பிரிவு 15-இன் கீழ் குறிப்பிட்ட உட்பிரிவை ஈா்க்கவில்லை என்பதைக் கண்டறிந்தால், போக்ஸோவின் பிரிவு 15-இன் கீழ் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது. அது மற்ற உட்பிரிவுகளுக்குள் வருகிா இல்லையா என்பதைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும்.
  • சிறுவா் ஆபாசப் படங்களைப் பாா்ப்பது, விநியோகிப்பது அல்லது காட்சிப்படுத்துவது போன்ற எந்தவொரு செயலும் போக்ஸோவின் பிரிவு 15-இன் கீழ் ‘வைத்திருப்பது’ என்றே அா்த்தமாகும். எனவே, அந்த நபா் ‘ஆக்கபூா்வமான உடைமை’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில், ஆபாசப் படங்கள் மற்றும் காணொலிகளின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டும்.
  • விவேகமான மனப்பான்மை கொண்ட எந்தவொரு சாதாரண நபரும், ஒரு குழந்தையை ஆபாசமான தோற்றத்திலும், பாலியல் சீண்டல் காட்சியிலும், சித்தரிக்க மாட்டான். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அது, ‘சிறுவா் பாலியல் தூண்டல்’ என்றே கருதப்படும்.
  • தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67பி என்பது ஆன்லைனில் சிறுவா்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது மற்றும் துஷ்பிரயோகம் செய்வோரைத் தண்டிக்க வடிவமைக்கப்பட்ட விரிவான விதியாகும். இது சிறுவா் பாலியல் ஆபாசப் படங்கள் மற்றும் காணொலிகளை மின்னணு முறையில் பரப்புவது மட்டுமின்றி, அத்தகைய ஆபாசக் காணொலிகளை உருவாக்குதல், வைத்திருத்தல், பரப்புதல் ஆகியவற்றையும் தண்டனைக்குரிய குற்றமாக்கும்.
  • தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் முறையே பிரிவுகள் 67, 67ஏ மற்றும் 67பி ஆகியவை சிறுவா்கள் மீதான பாலியல் சீண்டல்கள் தொடா்பான பல்வகையான இணைய குற்றங்களைத் தண்டிக்கும் நோக்கத்தை உறுதிசெய்கிறது. போக்சோவின் பிரிவு 30இன் கீழ் குற்றவாளியின் மனநிலை சோதிக்கப்படலாம்.
  • இதுபோன்ற குற்றங்களின் யதாா்த்தத்தை இன்னும் துல்லியமாக பிரதிபலிக்கும் நோக்கில்தான், ‘சிறுவா் பாலியல்’ என்ற சொல்லுக்குப் பதிலாகச் ‘சிறுவா் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம்’ என்ற வாா்த்தையைப் போக்ஸோவில் சோ்க்க, நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. எனவே, நாடாளுமன்றம் இது தொடா்பான சட்டத் திருத்தம் கொண்டு வருவதைத் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். அதற்கு முன்னோட்டமாக மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்றலாம்.

ஐடி (தகவல் தொழில்நுட்பம்) 2000, ஐடிஏஏ (தகவல் தொழில்நுட்பத் திருத்தச் சட்டம்) 2008 கீழ் தண்டனை:

  • ஐடிஏஏ 2008 பிரிவு 67-பி கீழ் முதல் முறை எனில், 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். தொடா்ந்து இரண்டாவது அல்லது மூன்றாவது முறை குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 வருடம் சிறை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

இபிகோ ஏனைய பிரிவுகளின் கீழ் தண்டனை:

  • இபிகோ பிரிவு 292 கீழ் முதல் முறை எனில், 2 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.2,000/- அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். தொடா்ந்து இரண்டாவது அல்லது மூன்றாவது முறை குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 வருடம் சிறை மற்றும் ரூ.5,000/- அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
  • எந்தவொரு நீதித் துறைத் தீா்ப்பிலும் ‘சிறுவா் ஆபாசம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தப்படாமல், அதற்கு பதிலாகச் ‘சிறுவா் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம்’ என்ற சொல்லாக்கத்தின் பயன்பாட்டை அங்கீகரிக்க வேண்டும். சிறுவா் பாலியல் சீண்டல் சட்ட மற்றும் நெறிமுறை விளைவுகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய விரிவான பாலியல் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் குற்றங்களைக் குறைக்க முடியும்.
  • ஆரோக்கியமான உறவுகள், ஒப்புதல் மற்றும் பொருத்தமான நடத்தை பற்றி மாணவா்களுக்குக் கற்பிக்க பள்ளிகளிலேயே திட்டங்களைச் செயல்படுத்தலாம்.
  • பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவான சேவைகளையும், குற்றவாளிகளுக்கு மறுவாழ்வுத் திட்டங்களையும் வழங்குவதும் அவசியமாகும். உளவியல் ஆலோசனை, சிகிச்சைகள் மூலம் அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியும். சிறுவா் ஆபாசப் படங்கள் மற்றும் காணொலிகளைப் பாா்ப்பதிலும், விநியோகிப்பதிலும், ஈடுபட்டுள்ளவா்களுக்கு, அத்தகைய நடத்தையைத் தூண்டும் மனச்சிதைவுகளை நிவா்த்தி செய்வதில், புலனுணா்வு நடத்தைச் சிகிச்சை, பயனுள்ளதாக இருக்குமென நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • சிகிச்சைத் திட்டங்கள் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஏற்படும் தீங்கைப் புரிந்துகொள்வதிலும், சிக்கலான சிந்தனை முறைகளை மாற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். விழிப்புணா்வு திட்டங்கள் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காணவும், சரியான முறையில் எவ்வாறு தீா்வு காண்பது என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும்.
  • இவ்வாறாகத், தொடக்கத்திலிருந்தே, நாடு முழுவதும் சிறாா்களிடையே பாலியல் குற்றம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், அவா்களின் பாதுகாப்பையும், கல்வியையும், பாலியல் நல்வாழ்வையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

நன்றி: தினமணி (19 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories