TNPSC Thervupettagam

நாடு கடத்தப்பட்ட முதல் இந்திய அரசன்

September 15 , 2024 126 days 107 0

நாடு கடத்தப்பட்ட முதல் இந்திய அரசன்

  • ஆங்​கிலேய ராணுவத் தளபதிகள் மேஜர் பானர்​மேன், மேஜர் இன்ஸ், கர்னல் அக்கினியூ உள்ளிட்டோர் கோர தாண்டவம் ஆடிய காலக்​கட்டம் அது. காளையார்​கோ​யிலைப் போரில் வென்ற பின் 1801ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பரில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட போராளி​களைக் கைதுசெய்து, அவர்கள் செல்வாக்​குடன் வாழ்ந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று தூக்குத் தண்டனை வழங்கப்​பட்டது. சிலரை மட்டும் ஆங்கிலேயர்கள் தனிமைப்​படுத்​தினர். தூக்குக்குத் தப்பிய​வர்​களுக்குத் தீவாந்​திரத் தண்டனை கொடுத்​தனர். மரணத்​தை​விடக் கொடிய தண்டனை அது. அரசியல் கைதிகளைத் தங்களது தேசத்தின் சுதந்​திரத்​துக்​காகப் போராடிய​வர்களை ஒடுக்க வேண்டிய நெருக்​கடியை முதன்​முறையாக ஆங்கிலேயர்கள் சந்தித்​தனர்.
  • மருது பாண்டியர்​களின் மருமகன், சிவகங்​கையின் அரசர் பெரிய உடையணத் தேவரோடு 72 போராளிகளை ஆங்கிலேயர்கள் அச்சத்​திற்​குரிய எதிரி​களாகக் கருதவில்லை. அதனால், வேங்கை பெரிய உடையணத் தேவர், கோம்பை, ஏழாயிரம் பண்ணை, கள்ளிமந்​தையம், வாராப்பூர் பாளையக்​காரர்கள், கோயம்​புத்தூர் சேக் உசேன், ராமநாத​புரம் அமல்தார் ஜெகன்நாத ஐயர், சின்ன மருது மைந்தன் சிறுவன் துரைசாமி ஆகியோர் தூத்துக்குடி துறைமுகத்​திலிருந்து 1802ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் என்கிற கப்பல் மூலம் பினாங்​கிற்கு நாடு கடத்தப்​பட்​டனர்.
  • கடல் பயணத்​தின்போது போதுமான குடிதண்ணீர் இல்லாத​தால், பயண ஒவ்வாமை, வாழ்வின் விரக்தி காரணமாக மூவர் கடலில் குதித்துத் தற்கொலை செய்து​கொண்​டனர். பினாங்குத் தீவில் இறங்கியதும் 25 பேருக்கு மேல் மனப்பிறழ்வு ஏற்பட்டு, காட்டுக்குள் ஓடிவிட்​டனர். அரசர் உடையணத் தேவரின் நாடு கடத்தல் துயரம், பினாங்​கிலும் முடிய​வில்லை. மற்ற போராளி​களிட​மிருந்து தனித்து விடப்பட்ட அரசர் ஏப்ரல் மாதம் சுமத்திரா தீவில் உள்ள (தற்போது இந்தோ​னேசியா) பென்கோலனுக்கு மாற்றப்​பட்​டார்.
  • தீவாந்​திரத் தண்டனைக்கான முதல் சிறை என அடையாளப்​படுத்​தப்​பட்டது பென்கோலன் தீவு. ஆங்கிலேயர்கள் தீவாந்​திரத் தண்டனை கொடுக்கத் தேர்ந்​தெடுத்த இடங்கள் தீவுக் கூட்டமாக இருந்தன. தீவுக் கூட்டங்​களில் காட்டு விலங்​குகள், அதிக மழை, கொசு, விஷ ஜந்​துகள் உள்ளிட்ட அச்சுறுத்​தல்​களுடன் அங்குள்ள பழங்குடிகளின் தாக்குதலும் இருந்தன. சொந்த ஊரிலிருந்து கண்காணாத தேசத்தில் வேறுபட்ட மொழி, மதம், இனம், தப்பித்​துப்போக நினைக்கவே முடியாத இடமாக இருந்தது. சுருங்கச் சொன்னால், வாழ்வதைவிட இறப்பதே மேல் என எண்ணும்​படியான இடம்தான் தீவாந்​திரம். அப்படிப்பட்ட இடமாக இருந்த பென்கோலன் தீவையும் பின்னாளில் பினாங்கு, அந்தமான் தீவுகளையும் தீவாந்​திரத் தண்டனைக்கான இடங்களாக ஆங்கிலேயர் மாற்றினர்.
  • ஆங்கிலேய அதிகாரிகளே பணிசெய்ய அஞ்சிய பென்கோலன் கோட்டைக்குள் வாழ்க்கை நித்ய கண்டமா​யிருந்தது. கோட்டைக்குள் இறந்த அதிகாரி​களின் கல்லறைகள் இன்னும் இருக்​கின்றன.
  • 44 வயதில் இறந்த கோட்டையின் டெபுடி கவர்னர் ரிச்சர்ட் வாட்ஸ், 25ஆவது வயதில் இறந்த கோட்டையின் கவுன்​சிலர் ஹென்றி ஸ்டெர்​லிங், 36ஆவது வயதில் இறந்த கேப்டன் ஜேம்ஸ் கூனே, 38 வயதில் இறந்த கேப்டன் ராபர்ட் ஹெமில்டன், 21 வயதில் இறந்த கவர்னரின் உதவியாளர் சார்லஸ் மர்ரே ஆகியோர் கோட்டையில் பணிக்கு வந்த ஒரு சில ஆண்டு​களில் இறந்தவர்கள். கோட்டையின் ரெசிடென்ட் தாமஸ் பாரை கோட்டைக்குள் புகுந்து, மக்கள் தாக்கிக் கொன்றிருக்​கிறார்கள்.
  • ஊரைச் சுற்றி சதா புகை கக்கும் எரிமலைகள், பெரும் மழை, கடும் வெயில், கந்தக வாசம், கடுமையான காய்ச்சலை உருவாக்கிய கொசுக்​களுக்கு மத்தியில் 35 வயது பெரிய உடையணத் தேவரால் சிறைக் கைதியாக உயிரைத் தக்கவைத்து​கொள்ளப் பெரும் பாடுபட வேண்டி​யிருந்தது.
  • ஆனால், ஐந்து மாதங்கள் மட்டும்தான் அவரால் தாக்குப்​பிடிக்க முடிந்தது. கண்காணாத பென்கோலன் தீவில், 1802ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி நிகழ்ந்த இந்த அரசனின் மரணம் 1,500 கி.மீ. தள்ளி​யிருந்த பினாங்குத் தீவில் தீவாந்​திரத் தண்டனையி​லிருந்த அவரது மைத்துனன் சிறுவன் துரைசாமிக்கோ சக போராளி​களுக்கோ சிவகங்கை மக்களுக்கோ உறவினர்​களுக்கோ தெரியாமலே போயிற்று.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories