- தகதக என்று மின்னிக்கொண்டிருந்தது நெல்லிக்கனி. ‘எடு, எடு’ என்றது கை. ‘விழுங்கு, விழுங்கு’ என்றது வாய். ‘ஐயோ, விழுங்காதே, கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்துச் சுவைத்துக்கொண்டே இரு’ என்றது நாக்கு. புத்தி வழக்கம்போல் புத்திமதி சொல்ல ஆரம்பித்தது.
- ‘ஏன் தயக்கத்தோடு அமர்ந்திருக்கிறாய் அதியமான்? இது அரிய கருநெல்லிக்கனி என்பதை அறிவாய்தானே? உனக்காகவே இது வளர்ந்திருக்கிறது. உனக்காகவே கனிந்திருக்கிறது. உன்னைத் தேடி வந்திருக்கிறது. நீ அரசன். நீ வலுவோடு இருந்தால்தான் உன் மக்கள் மகிழ்வோடு இருப்பார்கள். நீ நிலைத்திருந்தால்தான் உன் நாடு நிலைத்திருக்கும். இப்போதே எடுத்து உண்டு முடி!’
- பய பக்தியோடு ஒரு தங்கத் தட்டில் வைத்துப் பணியாளர்கள் இந்தக் கனியைச் சுமந்துவந்து என் முன்னால் வைத்த அந்தக் கணமே நான் முடிவு செய்துவிட்டேன். இது என்னுடையது அல்ல. இதை நான் உண்ணப் போவதில்லை. அடர்ந்த காட்டில், பாறைகளுக்கு நடுவில் வளர்ந்து நின்ற ஒரு மரத்தில் காய்த்த கனி எப்படித் தங்கத் தட்டில் ஏறி என் அரண்மனைக்கு வந்துசேர்ந்தது? இது அதிசயக் கனி; இதை உண்பவரின் ஆயுள் பல மடங்கு அதிகரிக்கும் என்பது தெரிந்தவுடன், இதை நான் உண்ணக் கூடாது என் அரசன்தான் உண்ண வேண்டும் என்று யாரோ ஒருவர் நினைத்திருக்கிறார்.
- அவர் யார்? ஏன் அப்படி நினைத்தார்? காடு அனைவருக்குமானது. மரம் அனைவருக்குமானது. அது தரும் கனியை யாரும் உண்ணலாம். அதுவும் அதிசயக் கனி எனும்போது எனக்கு, எனக்கு என்று எல்லாரும் போட்டி போட்டுவதுதானே இயல்பு?
- சரி, பறிக்கப்பட்ட கனியை அவர் நிச்சயம் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றிருப்பார். அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் என்று அவர் வீட்டில் எவ்வளவோ பேர் இருக்கலாம். அவர்களில் ஒருவருக்கு அதை அவர் அளித்திருக்கலாமே? அல்லது அவர்களில் யாரோ ஒருவர் இதை எனக்குக் கொடு என்று கேட்டிருக்கலாமே? என்னைவிட, என் குடும்பத்தைவிட, என் குழந்தைகளைவிட என் அரசனின் உயிர் முக்கியம் என்று அந்த முகமற்ற எளிய மனிதர் ஏன் நினைக்க வேண்டும்? மரம் ஏறி, பறித்து எடுத்து, பத்திரப்படுத்தி அரண்மனையில் கொண்டு வந்து ஏன் சேர்க்க வேண்டும்? அமைச்சர், அதிகாரி, பணியாளர், படை வீரர் என்று என் அரண்மனையில் நூற்றுக்கணக்கானோர் இருக்கின்றனர். என்னிடம் வந்து சேர்வதற்கு முன்பே அவர்களில் ஒருவர் இதை எடுத்து உண்டிருக்கலாம். செய்யவில்லை.
- ஏன் என்றால் நான் அரசன். எல்லாரையும்விட உயர்ந்தவன். எனவே, இது எனக்கு உரியது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது என் நாடு. நான் ஆள்வதால் இங்குள்ள மக்கள் எனக்குக் கட்டுப்பட்டவர்கள். என் எல்லைக்குள் இருக்கும் காடும் மலையும் வயலும் மலரும் கனியும் என்னுடையவை. கடலுக்குள் ஒரு நல்முத்து கிடைத்தால் அது என்னுடையது. இருப்பதிலேயே வலுவான யானையும் குதிரையும் என்னுடையவை.
- ஓர் அதிசய மலர் எங்கு மலர்ந்தாலும், ஒரு சுவையான கனி எங்கு பழுத்தாலும் அள்ளி எடுத்து வந்து என்னிடம் சேர்த்துவிடுவார்கள். சேர்த்துவிட வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அன்பைச் சுமந்துகொண்டு வரவில்லை இந்த நெல்லிக்கனி. ஆசையைச் சுமந்துகொண்டும் அல்ல. மதிப்பை, மரியாதையை, அச்சத்தைச் சுமந்துகொண்டு வந்திருக்கிறது.
- என் ஆசனத்தில் வேறோர் அரசன் இருந்திருந்தால் அவர் கரத்தை அடைந்திருக்கும் இதே கனி. நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என் நாடு இருக்கும். என் மக்கள் இருப்பார்கள். மரத்தில் ஏறி இதைப் பறித்த அந்த எளிய மனிதனைவிட எந்த வகையிலும் நான் உயர்ந்தவன் இல்லை. எனவே, இது என் கனியல்ல. அதிகாரத்தைக் கொண்டு நான் அடைந்திருக்கும் இந்தக் கனியை என் குடும்பத்தில் உள்ள யாருக்கும் கொடுக்க எனக்கு மனமில்லை. பதவியின் பெயரால் பெறும் எதுவும் இனிக்காது. பலன் அளிக்காது.
- எனில், யாருக்கு அளிப்பது இதை? யார் உண்டால் என் நாடு செழிப்படையும்? எனக்கு மட்டுமல்லாமல் நம் எல்லாருக்கும் நெருக்கமானவராக, நாம் எல்லாரும் மதிப்பவராக, நம் எல்லாரையும் வளப்படுத்துபவராக அவர் இருக்க வேண்டும். அதியமானின் கனி பொருத்தமானவரையே அடைந்திருக்கிறது என்று எல்லாரும் உளமார நினைக்க வேண்டும். வாழ்த்த வேண்டும். நம் எல்லாரையும் இணைக்கும் பாலமாக, நாம் எல்லாரும் உயிர் வாழ்வதற்கான ஆதாரமாக இருக்கும் ஒருவரே இக்கனியைச் சுவைக்க வேண்டும்.
- இன்னொரு முறை கனியைப் பார்த்தேன். மினுக்கென்று ஒரு மின்னல். ஔவை! தள்ளாத வயதிலும் தமிழ், தமிழ், தமிழ் என்று வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பாட்டியைவிடப் பொருத்தமான வேறொருவர் யார் இங்கே இருக்க முடியும்? பதவியில்லை, பணமில்லை, வலுவில்லை, இளமை இல்லை.
- இருந்தும் நம் எல்லாரையும்விட உயர்ந்து நிற்பவர் அவர் அல்லவா! அவர் கரத்தில் இக்கனி குவிந்தால் அது தமிழின் கரத்தில் குவிந்ததுபோல் ஆகும் அல்லவா! அவர் ஆயுள் நீண்டால் தமிழின் ஆயுளும் உடன் சேர்ந்து அல்லவா நீளும்! தமிழைப் போல் நம்மை உயர்த்தும், இணைக்கும், வளப்படுத்தும் இன்னோர் ஆற்றல் இந்நாட்டில் உள்ளதா?
- நானல்ல, தமிழ் உண்ண வேண்டும் இக்கனியை. நானல்ல, தமிழ் வாழ வேண்டும் என்றென்றும். தமிழ்தான் இந்நாட்டின் உயிர்மூச்சு. தமிழ்தான் இந்நாட்டின் அடையாளம். தமிழ் இருக்கும்வரை நான் இருப்பேன். நாம் இருப்போம். தமிழ் நிலத்தில் விளைந்த இக்கனியை ஔவைதான் சுவைக்க வேண்டும். தமிழ்ச்சுவையும் கனிச்சுவையும் தழுவிக்கொள்ளட்டும். ஒன்றை இன்னொன்று நிறைவு செய்யட்டும். உடனே அழைத்து வாருங்கள், ஔவையை!
அதியமான் நெடுமான் அஞ்சி:
- சங்ககால மன்னர்களுள் ஒருவர். உதவி கேட்டு வருகிறவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக இருந்தவர். இவரைப் பற்றி புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் குறிப்புகள் இருக்கின்றன.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 07 – 2024)