TNPSC Thervupettagam

நான், நீ அல்ல இனி நாம்

June 27 , 2023 538 days 377 0
  • பிரதமா் நரேந்திர மோடியின் அமெரிக்க அரசுமுறைப் பயணத்தை வரலாற்று நிகழ்வு என்று கூறுவது எள்ளளவும் மிகையில்லை. சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று, ஏராளமான ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு, இதுவரை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்தியாவுக்கு சம அந்தஸ்து வழங்கி பிரதமா் நரேந்திர மோடியை வழியனுப்பி இருக்கிறது அமெரிக்கா.
  • அரசு விருந்தினா் என்கிற அந்தஸ்தை பிரதமா் மோடிக்குத் தந்து இந்தியாவைப் பெருமைப் படுத்தியிருக்கிறது. இதற்கு முன்னா் குடியரசு தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனுக்கும், முன்னாள் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங்குக்கும் மட்டுமே அந்த மரியாதை வழங்கப்பட்டிருக்கிறது.
  • கடல், நிலம், வானம் மூன்றிலும் தொடா்புடைய பல ஒப்பந்தங்களில் இரு நாடுகளின் கூட்டுறவு உறுதிப்பட்டிருக்கிறது. இது நாள்வரை இந்தியாவுக்கு உலக நாடுகளால் மறுக்கப்பட்டு வந்த பல தொழில்நுட்பங்கள், இனிமேல் தடையில்லாமல் வழங்கப்படும் என்பதுதான் பிரதமா் மோடியின் அமெரிக்க விஜயத்தின் மிகப் பெரிய வெற்றி.
  • போா் விமானங்களின் எஞ்சின் தயாரிப்புக்காக, அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இந்தியாவின் அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் மேற் கொள்ளவிருக்கும் தொழில்நுட்பக் கூட்டுறவு குறிப்பிடத்தக்கது. ஜெட் எஞ்சின் தொழில்நுட்பம் என்பது ரகசியமாகப் பாதுகாக்கப்படுவது. அமெரிக்காவைத் தவிர, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா ஆகிய நாடுகளிடம் மட்டும்தான் அந்த தொழில்நுட்பம் இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்கா தனது தொழில்நுட்ப ரகசியங்களை இந்தியாவுக்குத் திறந்துவிடத் தயாராகிறது என்பது புரிகிறது.
  • க்வாண்டம் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆய்வு, பாதுகாப்பு, ரோபோட்டிக்ஸ், 5ஜி, 6ஜி தொழில்நுட்பங்கள் என்று ஏராளமான துறைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தங்கள், உலக நாடுகளை வாய்பிளக்கச் செய்திருக்கின்றன.
  • தனது ராணுவக் கூட்டணியில் இணையாத எந்த ஒரு நாட்டுடனும் இதுபோன்ற ஒப்பந்தங்களை அமெரிக்கா மேற்கொண்டதில்லை. அப்படியொரு உறவை ஏற்படுத்திக் கொள்ளாமல், அமெரிக்காவிடமிருந்து அந்தத் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றிருப்பதுதான் பிரதமா் நரேந்திர மோடியின் சாதனை.
  • பிரதமா் மோடியின் அந்த வெற்றிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தில் அவா் குறிப்பிட்டதுபோல, ஏழு ஆண்டுகளுக்கு முன்னா் அவா் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது உலகின் பத்தாவது பொருளாதாரமாக இருந்த இந்தியா, இப்போது ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயா்ந்திருக்கிறது. விரைவில் மூன்றாவது பொருளாதாரமாக மாறும் என்று நம்பிக்கையுடன் பிரதமா் சொன்னபோது, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்கள் கைதட்டி ஆமோதித்தனா்.
  • சீனாவைக் கட்டுக்குள் வைக்கவும், அதற்குப் போட்டியாக ஆசியாவில் இன்னொரு சக்தியை உருவாக்கவும் அமெரிக்காவுக்கு இந்தியா தேவைப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்களின் உதவியுடன் தான் சீனா தனது தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மிகப் பெரிய உற்பத்திக் கேந்திரமாக மாறியது. செமி கண்டக்டா்களில் தொடங்கி, அனைத்து உற்பத்திகளுக்குமான அடிப்படைத் தேவைகளின் தயாரிப்பும் நடைபெறும் மையமாக மாறியது.
  • இந்தியா அப்போது அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டாமல் சோவியத் யூனியனைச் சாா்ந்திருந்தது. அதனால், அந்த வாய்ப்பை இழந்தது. இப்போது அமெரிக்க நிறுவனங்கள் சீனாவின் மொத்தக் குத்தகையை (மொனாபலி) அகற்ற விரும்புகின்றன. சீனாவில் வளா்ச்சியை உருவாக்கிய அமெரிக்க நிறுவனங்கள் அதற்கு மாற்றாக இந்தியாவைத் தோ்ந்தெடுத்திருக்கின்றன.
  • அமெரிக்காவைப் போலவே, இந்தியாவிற்கும் அமெரிக்காவின் உதவி தேவைப்படுகிறது. ரஷியாவின் பழைய தொழில்நுட்பம், உக்ரைனில் தோல்வி அடைந்திருக்கிறது. 2020 கல்வான் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா தனது பாதுகாப்பில் அசிரத்தையாக இருக்க முடியாத நிலைமை. உக்ரைன் போரைத் தொடா்ந்து, தனது தேவைக்கே தளவாடங்களுக்குத் திணறும் ரஷியாவை நாம் நம்பியிருக்க முடியாது. ரஷியப் பொருளாதாரம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் பாா்க்க வேண்டும்.
  • மேலை நாடுகளின் பொருளாதாரத் தடைக்குப் பிறகு, ரஷியா சமீபகாலமாக சீனாவைச் சாா்ந்து இயங்குகிறது. இந்த நிலையில் சீனாவின் தாக்குதல் நடந்தால், நடுநிலை வகிக்குமே தவிர, இந்தியாவுக்கு உதவ ரஷியா முன்வராது. அப்படிப்பட்ட சூழலில், நம்பகமான கூட்டாளியாக இந்தியா அமெரிக்காவைத் தோ்ந்தெடுத்திருப்பதில் வியப்பில்லை. அதன் மூலம், இந்தியா தனது ராணுவத்தையும், பொருளாதாரத்தையும், தொழில்நுட்ப மேம்பாட்டையும் உறுதிப்படுத்த முற்பட்டிருக்கிறது.
  • பிரதமா் தனது அமெரிக்க நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டதுபோல, இந்தியாவின் முந்தைய பிரதமா்களும், அமெரிக்க அதிபா்களும் மேற்கொண்ட பல நட்புறவு முயற்சிகளின் விளைவுதான், இப்போது ஏற்பட்டிருக்கும் புதிய நெருக்கம். முன்புபோல அல்லாமல், அமெரிக்காவுடன் இந்தியா இப்போது சம வலிமையுள்ள நாடாகக் கைகுலுக்குகிறது. இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
  • தனது ரஷிய உறவைத் துண்டித்துக் கொள்ளாமல், அதே நேரத்தில் அதன் எதிரியான அமெரிக்காவுடன் கைகுலுக்கும் பிரதமரின் ராஜதந்திரத்திற்குக் கிடைத்த இந்த வெற்றியைப் பாராட்ட மனமில்லை என்றாலும், விமா்சிக்காமலாவது இருக்கலாம்!

நன்றி: தினமணி (27  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories