நாம் வாழும் உலகங்கள்
- மொத்தம் இரண்டு உலகங்கள் இருக்கின்றன. நானும் நீங்களும் மற்றவர்களும் சூரியனும் சந்திரனும் காடும் மலையும் மீனும் முயலும் இன்னபிற உயிர்களும் வாழும் உலகம். மற்றொன்று மாய உலகம். நாம் வாழும் உலகம் நிஜமானது. ஏனென்றால் அதை நாம் காண முடியும், உணர முடியும். மாய உலகம் என்பது நம் கற்பனையில் தோன்றுவது. நம் கற்பனையில் மட்டும் உயிர் வாழ்வது. அதைக் காணவோ உணரவோ முடியாது. எனவே, அது பொய்யான உலகம். எனக்குத் தெரிந்து பலரும் இப்படித்தான் நினைக்கிறார்கள்.
- மார்க்வெஸ், நீங்கள் எழுதும் கதைகள் எல்லாம் வித்தியாசமாக இருப்பதற்கு என்ன காரணம்? உங்கள் கதைகளில் வரும் மனிதர்கள், அவர்கள் வாழும் இடம், அங்கே நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே புதிதாக இருக்கின்றன. ஒரு புதிய உலகை எப்படி உங்களால் படைக்க முடிகிறது? ஒரு புதிய நடையில் எப்படி உங்களால் எழுத முடிகிறது? என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் இந்தக் கேள்விக்கான விடை என் எழுத்திலேயே இருக்கிறது.
- நான் எந்தப் புதிய உலகையும் படைக்கவில்லை. எந்தப் புதிய நடையையும் உருவாக்கவில்லை. நான் என் உலகின் கதையை எழுதுகிறேன். என் உலகம் என்பது நாம் அனைவரும் சேர்ந்து வாழும் உண்மை உலகம் மட்டுமல்ல. மாய உலகம் என்று பலரும் நினைக்கும் கற்பனை உலகமும்தான். என்னைப் பொறுத்தவரை இந்த இரண்டும் இரு வேறு உலகங்கள் அல்ல. ஒரே உலகம்தான். அந்த ஒரே உலகின் கதையைத்தான் நான் திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறேன்.
- நாம் வாழ்வது உண்மை உலகில். நாம் வாழ்வது கற்பனை உலகில். இரண்டும் ஒரே உலகம்தான். எப்படி என்று சொல்கிறேன். நான் தாத்தா, பாட்டிகளிடம் இருந்து கதைகள் கேட்டு வளர்ந்தவன். தாத்தா, பாட்டிகள் இன்று இல்லை. ஆனால், அவர்கள் சொன்ன கதைகள் ஒன்றுவிடாமல், ஒரு சொல் விடாமல் என்னோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றன. முதன்முதலில் நான் கேட்ட பேய்க் கதை இன்றும் என் நினைவில் இருக்கிறது.
- ஐயோ என்று சிறு வயதில் நான் அலறிய அலறலை இன்னும் நான் மறக்கவில்லை. பொக்கை வாயோடு தாத்தா பொங்கிச் சிரித்த காட்சி இன்றும் என் கண்களில் இருக்கிறது. ஒரே கதையை எவ்வளவு முறைதான் சொல்வது என்று பாட்டி பொய்க் கோபத்தோடு சலித்துக்கொண்டாலும், சரி சரி வா அழாதே என்று என்னை இழுத்து அமர வைத்து நூறாவது முறையாகச் சொன்ன கதை இன்னும் என் இதயத்தில் தங்கி இருக்கிறது.
- என் பாட்டியும் தாத்தாவும் வாழ்ந்தது வேறு உலகிலா அல்லது நான் வாழும் உலகிலா என்று கேட்டால் நான் வாழும் உலகில்தான் என்பேன். நான் சிறு வயதில் கேட்ட கதைகள் வேறு உலகின் கதைகளா அல்லது இன்றைய உலகின் கதைகளா என்று கேட்டால் இன்றைய உலகின் கதைகளும் என்பேன்.
- நான் கதை கேட்டு அலறியது வேறு உலகிலா, இந்த உலகிலா? இன்று இல்லாத பாட்டியை நினைத்து இன்று நான் புன்னகைக்கும் போது என் புன்னகையை எந்தக் கணக்கில் சேர்ப்பது? நேற்றைய உலகிலா, இன்றைய உலகிலா? நான் எப்போதோ கேட்ட கதைகள் ஏன் எனது இன்றைய கனவில் வந்து எட்டிப் பார்க்க வேண்டும்? என் கனவுகளில் எட்டிப் பார்க்கும் கனவுகளை நான் ஏன் வெளியில் இழுத்துப் போட்டு எழுதுகிறேன்? நான் கற்பனை உலகின் கதையை எழுதுகிறேனா அல்லது நிஜ உலகின் கதையையா?
- பறவைபோல் மனிதனும் வானில் பறக்க வேண்டும் என்று நேற்றைய உலகம் கற்பனை செய்தது. இன்று அது நிஜம். அதாவது, கற்பனைதான் நிஜமாகவும் இருக்கிறது. என்னால் காண முடியாவிட்டாலும் பாட்டியும் தாத்தாவும் நான் வாழும் உலகைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் சொன்ன கதைகள் மட்டுமல்ல, அவர்களுமேகூட கதைகளாக மாறிவிட்டார்கள். அந்தக் கதைகளைத்தான் நான் என் இதயத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டிருக்கிறேன். எனவே, அந்தக் கதைகள் நிஜம்.
- நான் செய்வது எல்லாம் ஒன்றுதான். வாழ்ந்து முடித்தவர்களையும் வாழ்ந்து கொண்டிருப்பவர் களையும் நான் இணைக்கிறேன். இன்றைய குழந்தைகளை நேற்றைய தாத்தா பாட்டிகளின் கைகளில் தூக்கிக் கொடுக்கிறேன். விமானங்கள் மொய்க்கும் இன்றைய வானத்தில் பறக்கும் கம்பளங்களையும் பறக்க விடுகிறேன். கனவுகளை மீட்டுவந்து நம் உலகில் மிதக்கவிடுகிறேன். கற்பனை மட்டுமே செய்ய முடிகிற காட்சிகளை அள்ளி எடுத்து வந்து, நம் கண்களால் பார்க்கக்கூடிய காட்சிகளோடு கலக்கிறேன்.
- உண்மையும் கற்பனையும் என் உலகில் கைகுலுக்கிக்கொள்கின்றன. உரையாடுகின்றன. கதை பேசிக்கொள்கின்றன. அந்தக் கதைகளைத்தான் நான் காது கொடுத்துக் கேட்டு, எழுதுகிறேன். ஏனென்றால் அவை நம் கதைகள். நம் உலகின் கதைகள். நம் கற்பனையின் கதைகள். நம் வாழ்வின் கதைகள். நம் கடந்த காலத்தின், நிகழ்காலத்தின், எதிர்காலத்தின் கதைகள். உண்மையின் கதைகள். மாயக் கதைகள். அவை கதைகளே அல்ல, உண்மைகள் என்றும் சொல்லலாம்!
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 11 – 2024)