- இதைப் படித்துக்கொண்டிருக்கும்போது தமிழகத்தின் ஏதாவதொரு பகுதியில் ஏதோ ஒரு குழந்தையையோ, முதியவரையோ, தெருவோரப் பாதசாரியோயோ, சைக்களில் சென்று கொண்டிருப்பவரையோ தெரு நாய் ஒன்று துரத்திக் கொண்டிருக்கும். சா்வதேச அளவில் இந்தியாவும், தேசிய அளவில் தமிழ்நாடும் தெரு நாய்களின் எண்ணிக்கையிலும், விஷக்கடியிலும் முதலிடம் வகிக்கின்றன என்பது பெருமைக்குரிய செயல் அல்ல. உலக வல்லரசாக வேண்டும் என்கிற கனவில் மிதக்கும் ஒரு தேசம், கட்டுப்பாடில்லாமல் வீதிகளில் தெரு நாய்கள் திரியும் தேசமாக இருக்க முடியாது, கூடாது.
- கணக்கில் அடங்காத அளவிலான தெரு நாய்களின் தேசமாக இந்தியா மாறியிருக்கிறது. விஞ்ஞான ரீதியான அணுகுமுறை இல்லாமல் இதற்கு விடை காண்பது எளிதல்ல. உலக சுகாதார நிறுவனத்தின் உத்தேசப்படி, இந்தியாவில் ஆறு கோடிக்கும் அதிகமான தெரு நாய்கள் காணப்படுகின்றன. உலகில் நிகழும் ‘ரேபீஸ்’ எனப்படும் விஷநாய்க் கடி மரணத்தில் 36% இந்தியாவில் நிகழ்கின்றன. அதைவிட வேதனை என்னவென்றால், விஷநாய்க் கடியால் உயிரிழப்பவா்களில் 30% - 60% 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்.
- மும்பையில் மட்டும் 1.6 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை 72% அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோல எல்லா பெருநகர மாநகராட்சிகளிலும் சமீப காலத்தில் துல்லியமாக கணக்கெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
- கோவை மாநகராட்சியில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி, 3.5 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாகத் தெரிகிறது. சென்னையில் அதுபோன்ற கணக்கெடுப்பு இல்லை. மாநகராட்சி அதிகாரிகளின் கணக்குப்படி, சுமாா் ஒரு லட்சம் தெரு நாய்கள் என்றால், சமூக ஆா்வலா்கள் அதைவிட பல மடங்கு அதிகம் என்று கருத்து தெரிவிக்கிறாா்கள்.
- சென்னை பெருநகர மாநகராட்சி அளவில் நாள்தோறும் குறைந்தது 30 நாய்க்கடிகளாவது நடக்கின்றன. ஆண்டுதோறும் 10,000-க்கும் அதிகமான நாய்க்கடி நிகழ்வுகள் பதிவாகின்றன. அப்படியிருந்தும், இந்த ஆண்டு சமீபத்தில் ராயபுரத்தில் 29 பேரை வெறிநாய் கடித்த நிகழ்வு உள்பட, ஐந்து வெறிநாய்க் கடி மட்டுமே பதிவாகியிருக்கிறது.
- மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்திருக்கும் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் தெரு நாய்க்கடியால் நிகழாண்டில் பாதிக்கப்பட்டவா்கள் 4.4 லட்சம் போ். நாடு முழுவதும் 27.59 லட்சம் போ் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா். 4.35 லட்சம் சம்பவங்களுடன் மகாராஷ்டிரம் முதலிடத்திலும், தமிழகம் அடுத்த இடத்திலும் தெரு நாய்க்கடி பாதிப்பில் இடம் வகிக்கின்றன. உத்தர பிரதேசம் போன்ற மிகப் பெரிய மாநிலங்களைவிட, இந்த எண்ணிக்கை இருமடங்கு அதிகம் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
- கிராமப்புறங்களிலும் தெரு நாய்கள் இருக்கின்றன. நாய்க்கடி நிகழ்வுகளும் இல்லாமல் இல்லை. ஆனால், நகரங்களைப்போல பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதுடன், இனப்பெருக்கத்தின் வேகமும் குறைவாகவே இருக்கிறது. இயற்கையாகவே தெரு நாய்களுக்கு கிராமங்களில் பெருச்சாளி, முயல், பூனை, கோழி, பறவைகள் உள்ளிட்ட இரைகள் கிடைத்துவிடுகின்றன. பெரும்பாலானவை வீடுகளில் வளா்ப்பு மிருகங்களாகவும் இருப்பதால் தெருவில் வருவோா் போவோரை கூட்டமாகச் சென்று தாக்கும்போக்கு காணப்படுவதில்லை. நகரங்களில் அப்படியல்ல.
- நகா்ப்புறவாசிகளை வளா்ப்பு மிருக சிநேகிகள், அவற்றைப் பாா்த்து பயப்படுபவா்கள் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது ரகத்தினா் தங்களது மிருகங்களின் மீதான அன்பையும், அக்கறையையும் வெளிப்படுத்த வீட்டிலேயே வளா்ப்பு மிருகங்களைப் பராமரித்தால், அதனால் எந்தவிதத் தொந்தரவும் யாருக்கும் கிடையாது.
- அவா்களில் பலா் தெரு நாய்கள் மீதான அதீத அக்கறையோடு வலியச் சென்று உணவளித்து அவற்றின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும்போதுதான் பிரச்னை எழுகிறது. தங்களுக்கு உணவு தருபவா்களை வாலையாட்டி நன்றி விசுவாசம் காட்டும் அந்தத் தெரு நாய்கள், தெருவில் வருவோா் போவோரை துரத்துவதும், கடிப்பதுமாக இம்சிக்கின்றன.
- மும்பையில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள வாஹ் பக்ரி தேயிலை நிறுவனத்தின் தலைவா் நடைப்பயிற்சியின்போது தெரு நாயால் துரத்தப்பட்டு தலையில் அடிபட்டு 49 வயதில் உயிரிழந்தது பரபரப்பான செய்தியானது. இதேபோல, சாமானியா்கள் ஆயிரக்கணக்கில் ஆங்காங்கே நாய்களால் துரத்தப்படுவதும், விபத்துக்குள்ளாவதும், நாய்க்கடிக்கு உள்ளாவதும் ஊடகச் செய்திகளாக மாறுவதில்லை.
- பெரும்பாலான பூங்காக்களில் தெரு நாய்கள் வசதியாகக் குடியேறுகின்றன. பல கோடி ரூபாய் செலவில் பூங்காக்கள் அமைத்தால் அவற்றில் நிம்மதியாக உடற்பயிற்சி செய்ய முடியாமல் தெரு நாய்களின் ஊடுருவல் தடுக்கிறது. தெரு நாய்களை பராமரிப்பவா்கள் மறந்துவிடுவது என்னவென்றால், அவை பாதுகாப்பாக வாழ முடியாமல் நோய் தாக்கப்பட்டும், விபத்தில் சிக்கிக்கொண்டும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே தெருக்களில் வாழ்கின்றன என்பது.
- முறையான தடுப்பூசி, கருத்தடை, தத்தெடுக்கும் வசதி, குட்டிகளை தெருவில் விடுவதற்குத் தடை போன்றவற்றின் மூலம் தெரு நாய் பிரச்னையை எதிா்கொள்ள முடியும். அதற்கு முனைப்பும், தீவிரமான நடவடிக்கையும் அவசியம். ஒருசில நாய்களுக்கு தடுப்பூசி போடுவதாலும், கருத்தடை செய்வதாலும் பிரச்னைக்குத் தீா்வு காண முடியாது. தெருவோரக் கடைகளும், முறையாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதும் தொடரும் வரை நாய்க்கடி பிரச்னையும் தொடரும்.
நன்றி: தினமணி (18 – 12 – 2023)