- சென்னையில் இரண்டு வளர்ப்பு நாய்கள், ஒரு சிறுமியைக் கடித்துக் குதறிய செய்தி நாய்களால் ஏற்படும் பிரச்சினைகளை மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. இதன் பின்னணியைப் புரிந்து கொள்ளச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் நாயின் இடம்:
- நம் வரலாற்றில் நாய் செல்லப் பிராணியாக இருந்ததில்லை. அது தீட்டு என்றும் கீழானது என்றும் புறக்கணிக்கப்பட்டது. பாரம்பரியமாக ஒரு வேலை செய்யும் விலங்காகவே குதிரை, ஆடு, மாடு மாதிரி, வேட்டைக்கும் காவலுக்கும் நாய் பயன்படுத்தப்பட்டது. வேட்டையாடிகள், குடியானவர்கள், நாடோடிகள் போன்ற எளிய மக்கள்தான் நாய்களைப் பராமரித்தார்கள். மற்றவர்கள் அதைக் கேவலமாகப் பார்த்தார்கள். நாய் வசவுச் சொல்லாயிற்று.
- நாயை மட்டுமல்ல, எல்லா உயிரினங்களையும் தூரத்திலேயே வைத்திருந்த நம்மூர் மேட்டுக்குடி மக்கள் சிலர், பிரிட்டிஷார் காலத்தில் அவர்களது வாழ்க்கை முறையை நகலெடுத்து கிரிக்கெட், கோல்ஃப் விளையாடத் தொடங்கினார்கள். அதுபோல நாயைச் செல்லப் பிராணியாக வீட்டில் வளர்க்க முற்பட்டனர்.
- இது 19ஆம் நூற்றாண்டில்தான் தொடங்கியது எனலாம். ஸ்பானியல், அல்சேஷன் போன்ற ஏராளமான நாய்கள், ஐரோப்பாவிலிருந்து கொண்டுவரப்பட்டன. இன்றும் நாய்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் சூட்டப்படுவதை இந்தப் பின்னணியிலிருந்து புரிந்துகொள்ளலாம். ஆனால், பெருவாரியான நாய் வளர்ப்பாளர்கள் அவற்றைச் சரிவரக் கவனிப்பதில்லை. நாய்களை வளர்ப்பவர்களில் பலர், அவற்றை வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை.
- பல மேலை நாடுகளில் வளர்ப்புநாய் யாரையாவது கடித்துவிட்டால், அது பிடிக்கப்பட்டு கருணைக்கொலை செய்யப்படும். மறுபரிசீலனைக் கெல்லாம் இடமே இருக்காது. வேறு சில நாடுகளில் பெருந்தொகையை அபராதமாகக் கட்ட வேண்டும். ஆனால், நாய்கள் சார்ந்த எந்த விதிகளுமே நம் நாட்டில் பின்பற்றப்படுவதில்லை.
நடைமுறைப் பிரச்சினைகள்:
- நாய் வளர்ப்பதற்கு உரிமம் வாங்க வேண்டும் என்றொரு விதி இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மூர்க்கமான நாயினங்களை இறக்குமதி செய்வதை 2016இல் மத்திய அரசு தடை செய்தது. அவற்றை இனப்பெருக்கம் செய்வதும் விற்பதும் இந்த ஆண்டு தடை செய்யப்பட்டுள்ளது.
- இந்த விதியை நடைமுறைப்படுத்த முடியுமா? பிட்புல் போன்ற கொடூரமான நாய்களை இன்றும் நகரங்களில் காண முடிகிறதே? தடை செய்யப்பட்ட இந்த 23 இன நாய்களை அரசு சிப்பந்திகளால் அடையாளம் கண்டுகொள்ள முடியுமா?
- வீட்டில் பி.எம்.டபிள்யூ. காரை நிறுத்தியிருப்பதுபோல ராட்வைலர், ரொடீஷியன் ரிட்ஜ்பேக் போன்ற நாய் இனங்களை வைத்திருப்பது பெரியகெளரவமாகக் கருதப்படுகிறது. மேலைநாட்டு நாயினங்களுக்குக் கிராக்கி ஏற்படுவதால், இதில்பணம் பறிக்க ஒரு நிழலுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
- இவர்கள் கோல்டி, ஹஸ்கி போன்ற நாய்களைத் துரிதமாக இனப்பெருக்கம் செய்து விற்றுப் பிழைக்கிறார்கள். நாய் ஆர்வலர்கள் இதற்குக் கொடுத்திருக்கும் பெயர் Puppy mills. இவர்கள் முறையான எந்த இனப்பெருக்க வழிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. உள்ளினப்பெருக்கம் (in-breeding) மூலம் குட்டிகளை விரைவாகப் பெறுகின்றனர் (அதாவது, ஒரே ஈற்றில்பிறந்த ஆண் நாய், பெட்டை நாய்களை இணைசேர்ப்பார்கள்).
- இம்மாதிரியான குட்டிகள் பிறப்பிலேயே வலிப்பு போன்ற நோய்களுடன் வருகின்றன. அது மட்டுமல்ல, அவற்றின் இனம்சார்ந்த நடத்தையும் மாறிவிடும். கடி நாயாக உருவாகும். இதை இயல்பு திரிந்த நாய் (neurotic dog) என்பர்.
பராமரிப்பில் அலட்சியம்:
- இன்னொரு பிரச்சினை நாம் நாய் வளர்க்கும் முறை. ஆடு, மாடுபோல பல வீடுகளில் நாயைக் கட்டிவைப்பார்கள். இது மனிதரைச் சிறையில் தனிக்கொட்டடியில் அடைப்பது போன்றதாகும். வாயில்லா ஜீவன் ஒன்றும் செய்ய முடியாமல் குரைத்துக்கொண்டேயிருக்கும் அல்லது சுருண்டு படுத்துவிடும்.
- எவ்விதப் பயிற்சியும் தர மாட்டார்கள். லாப்ரடார் போன்ற பெரிய நாய்களை அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வளர்ப்பது சித்ரவதை. தடுப்பூசி போட மாட்டார்கள். மீந்த சோற்றைப் போட்டு, அதை ஒரு நடமாடும் குப்பைத்தொட்டிபோல் நடத்துவார்கள். பெட்டை நாய் என்றால் கருத்தடை செய்யாமல், குட்டிகளைப் பூங்காக்களில் விட்டுவிடுவார்கள்.
- இந்திய நாயினங்களை வளர்க்கலாமே என்கிற கேள்வி எழுகிறது; ராஜபாளையம் போன்று பெருவாரியான உள்ளூர் நாய்கள் உருவில் பெரியவை. அவற்றுக்குத் திறந்தவெளியும், ஓடி விளையாட இடமும் தேவை. லாசா ஆப்சோ, திபெத்திய ஸ்பானியல் போன்ற சிறு இந்திய நாய்களைச் செல்லப் பிராணியாக வளர்க்கலாம்.
- நாங்கள் ஒரு திபெத்திய ஸ்பானியலைப் 15 ஆண்டுகள் வளர்த்தோம். தடுப்பூசி போடுவதற்காக மட்டுமே மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றிருக்கிறோம், மற்றபடி எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்திய நாயினங்கள் எளிதில் உடல்நலம் குன்றாதவை.
- வளர்ப்பு நாய்களைவிடத் தெருநாய்கள்தான் மனிதர்களை, அதிலும் சிறுவர்களைக் கடிப்பது அடிக்கடி செய்தியாகிறது. கடிபடும் எளிய மக்கள் கையறுநிலையில் இருக்கிறார்கள். பிரிட்டிஷாரால் இயற்றப்பட்ட சட்டத்தின்படி (The Destruction of Stray Pigs, Stray dogs and Monkeys Act of 1919), தான்தோன்றியாக அலையும் நாய்கள், பிடிக்கப்பட்டு கருணைக்கொலை செய்யப்பட்டன.
- அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்தவரை தெருநாய் பிரச்சினை பெரிதாக இல்லை. ஆனால், 2001இல் இந்தச் சட்டம் மாற்றப்பட்டு, தெருநாய் கருத்தடை விதிகள் (Animal Birth Control (Dogs) Rules) நடைமுறைக்கு வந்தன. அதன் பிறகு கடந்த 23 ஆண்டுகளில், தெருநாய்கள் கோடிக்கணக்கில் பல்கிப் பெருகிவிட்டன என்பதுதான் பிரச்சினை.
- தெரு நாய்கள் சகல இடங்களிலும் இருப்பதால், பார்வையற்றோருக்கு வழிகாட்டும் நாய்களை (Guide dogs or Seeing-eye dogs) இங்கு பயன்படுத்த முடியாது. உலகின் பல நாடுகளில் உள்ள இந்த வசதி, இந்தியாவில் பார்வையற்றோருக்குக் கிடைப்பதில்லை.
என்னதான் தீர்வு?
- தெருநாய்களுக்குக் கருத்தடைசெய்து அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கமுடியுமா? 10 பெட்டை நாய்களில் இரண்டு நாய்களுக்குக் கருத்தடை செய்தாலும், மற்ற எட்டும் குட்டி போட்டுக்கொண்டிருக்குமே? ஒருஜதை நாய், மூன்றாண்டுகளில் 400ஆகப் பெருகும். ஏழாண்டுகளில் 7,000 ஆகும் என்கிறது ஒரு கணிப்பு. நம் நாட்டில் 6.2 கோடி தெருநாய்கள் இருக்கின்றன.
- இது உலகிலேயே அதிகமான எண்ணிக்கை (ஆதாரம்: State of Pet Homelessness Index 2021). இத்தனை நாய்களுக்குக் கருத்தடை அறுவைசிகிச்சை செய்ய முடியுமா? செய்தாலும் ஒரு நாய் சாகும்வரை வெறிநோய் (Rabies) போன்ற பிரச்சினைகளை உருவாகிக்கொண்டுதானே இருக்கும்? உலகிலேயே ரேபிஸ் நோயால் உயிரிழப்பவர்கள் இந்தியாவில்தான் அதிகம்.
- இரண்டு, மூன்று நகரங்களில் சில நூறு நாய்களுக்குக் கருத்தடை செய்துவிட்டால் சிக்கல் தீர்ந்துவிடுமா? இது ஒரு ஓட்டை வாளியை வைத்துச் செம்பரம்பாக்கம் ஏரியைக் காலிசெய்ய முயல்வது போன்றது.
- அறிவியல் அடிப்படைகளுடன் ஆழ்ந்து யோசித்து இதற்கு ஒரு முடிவைக் கண்டடைய வேண்டும். நாய் கருத்தடைத் திட்டம் தோல்வி என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். உலகிலேயே நாய்களைச் சிறப்பாகப் பராமரிக்கும் நாடு என்று பெயர் பெற்ற பிரிட்டனில் என்ன செய்கிறார்கள் என்பதை நாமும் பரிசீலிக்க வேண்டும்.
- தெருநாய் பிரச்சினை மாபெரும் சுற்றுச்சூழல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மனிதருடன்அன்றாடம் உறவாடாமல், யாருக்கும் சொந்தமில்லாமல் திரியும் நாய்கள் நோய்களைப் பரப்பி, சாலை விபத்துக்களுக்குக் காரணியாகி, இரவில் மக்களின் தூக்கத்தைக் கெடுத்துவிடுகின்றன.
- இந்நிலையில், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உதவாமல் தெரு நாய்களுக்காகப் பரிந்துபேசுகிறோம் என்று விலங்கு ஆர்வலர்கள் மேலும் குட்டையைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல், பங்களாக்களில் வசித்து, காரில் செல்லும் இவர்கள் (ஜல்லிக்கட்டை எதிர்த்தவர்களும் இதே பிரிவினர்தான்), இந்தப் பிரச்சினையில் தலையிடக் கூடாது என்கிற விமர்சனத்தில் நியாயம் உள்ளது. நாய்க்கடியால் கடிபடுபவர்களும் சாகிறவர்களும் வறிய ஏழைகள் என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 05 – 2024)