நாவல் வடிவில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள்
- ஆங்கில இலக்கியத்தின் தலைவாசலாகக் கருதப்படுவர் வில்லியம் ஷேக்ஸ்பியர். அவரது நாடகங்களின் பாதிப்பில் பல நாவல்கள், திரைப்படங்கள் உருவாகியுள்ளன. மனித மனங்களுக்குள்ளே விநோதமான சஞ்சாரத்தை நடத்துபவர் என ஷேக்ஸ்பியரைச் சொல்லலாம். ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற ஐந்து நாடகங்களைக் கதை வடிவில் மோகன ரூபன் தமிழில் பெயர்த்துள்ளார்.
- ஷேக்ஸ்பியர் 1601இல் எழுதிய ‘பன்னிரண்டாவது இரவு’ என்கிற நாடகம், வயோலா, செபஸ்டின் ஆகிய இரட்டையர்களின் கதையைச் சொல்கிறது. கப்பல் விபத்துக்குள்ளாக அதில் உயிர் பிழைத்த வயோலா தனது அடையாளத்தை மறைத்து ஒரு ஆணாக ஒலிவியா என்கிற பிரபு குமாரியிடம் வேலைக்குச் சேர்கிறார். ஒலிவியாவை ஒருதலையாகக் காதலிக்கும் ஆர்சினோ என்கிற பிரபு ஒருவர் இருக்கிறார். ஆர்சினோவுக்காக மாறுவேடத்தில் ஆணாக இருக்கும் வயோலா தூது செல்கிறார்.
- ஆனால், ஒலிவியாவுக்கு, ஆண் வேஷத்தில் இருக்கும் வயோலாவின் மீது காதல். வயோலாவுக்கு ஆர்சினோவின் மீது காதல். இப்படி முக்கோணக் காதல் கதையை அங்கதச் சுவையுடன் ஷேக்ஸ்பியர் எழுதியிருப்பார். ஒரு எளிய நாவல் வடிவில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்களில் ஒன்றான ‘ஒதெல்லோ’வையும் ரூபன் நாடக வடிவில் எழுதியுள்ளார். இந்தியப் புராணக் கதை அம்சத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடியது இந்த நாடகம். ஒரு கறுப்பு வீரனின் கதை இது.
- ஒதெல்லோ, ஒரு பெரிய பிரபுவின் மகள் டெசுடமெனோவைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறான். ஆனால், அவனே தன் காதல் மனைவியைச் சந்தேகிக்கிறான். ஒதெல்லோ சந்தேகிப்பதற்கான சூழலை அவனது எதிரியான இயாகோ உருவாக்குகிறான். எப்படியிருந்தாலும் தன் தந்தையை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறிய, ஒதெல்லோவைக் கரம் பிடித்த டெசுடமெனோவைச் சந்தேகப்படலாகாது. ஆனால், வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்காத பலவும் நடக்கத்தானே செய்யும்.
- இந்த மகிழ்ச்சியான காதல், ஒரு துயர்மிகு முடிவை நோக்கிச் செல்கிறது. இந்தக் கதையையும் சுவாரசியமாக நாவல்போல் ரூபன் எழுதியிருக்கிறார். ஷேக்ஸ்பியரின் மற்றுமொரு புகழ்பெற்ற நாடகமான ‘ரோமியோ ஜூலியட்’டும் நாவல் வடிவில் எழுதப்பட்டுள்ளது.
- அவரது ‘வெனிஸ் நகரத்து வணிகன்’ நாடகம் நாவலாக்கப்பட்டுள்ள மற்றுமொரு நாடகம்.
- யாரும் வாசிக்கக்கூடிய எளிய மொழியில் ஆங்கிலப் பிரயோகங்களுக்கான விளக்கங்களையும் நூலாசிரியர் எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியரின் ஆக்கங்கள் பல தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளன. இவை விறுவிறுப்பான நடையில் படிக்கச் சுவாரசியமாக வெளிப்பட்டுள்ளன. இது ஒரு தனித்துவம் எனலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 01 – 2025)