TNPSC Thervupettagam

நிகர்நிலைக் காடுகள் என்ன ஆகின

February 24 , 2024 184 days 176 0
  • இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் காடுகளின் பரப்பளவு 24.62 விழுக்காடு என வன ஆய்வு அறிக்கை-2021 கூறுகிறது. மிகவும் அடர்ந்த காடுகளின் பரப்பளவோ மொத்த நிலப்பரப்பில் 3.04 விழுக்காடுதான். நீடித்த வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்கும் திட்டங்களால் காடுகளின் பரப்பளவு குறைவதும் அரசு - மக்கள், மக்கள் - காட்டுயிர்கள் இடையே முரண்பாடுகள் அதிகரிப்பதுமே இன்றைய நடப்புநிலை. இந்நிலையில், சில நாள்களுக்கு முன், உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய வழக்கில் வழங்கியுள்ள அறிவுறுத்தல், கொந்தளிப்புக்கு நடுவே சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், இந்தியக் காடுகள் பராமரிப்புச் சட்டம் - 1980 திருத்த மசோதாவை 2023 மார்ச்சில் அறிமுகப்படுத்தியது. காட்டு நிலங்களைக் காடு அல்லாத பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்வதுதான் இதன் முக்கிய நோக்கம்.
  • நிகர்நிலைக் காடு (டீம்டு பாரஸ்ட்) என ஒரு பிரிவின்கீழ் சில காடுகளைப் பராமரிக்கும்படி ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் 1996இல் உத்தரவு பிறப்பித்திருந்தது. வனத்துறை ஆவணங்களில் இது குறிப்பிடப்படவில்லை எனினும், காடுகளாகக் கருதத்தகுந்த இடங்களை இப்பெயரால் நீதிமன்றம் குறித்தது.
  • அவை தனியாருக்கு உரியவையாக இருப்பினும் அவற்றைக் காடுகள் என வரையறுக்கும் உரிமை அத்தீர்ப்பு மூலம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டது. அத்தகைய ’நிகர்நிலைக் காடு’களைத்தான் 2023 மசோதா மூலம் பிற நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்போவதாக மத்திய அமைச்சகம் கூறியது.
  • ரயில் நிலையங்கள், சாலைகள், அறிவிக்கப்பட்ட காடுகள் போன்றவற்றை ஒட்டி வரும் காடுகளில் 10 ஹெக்டேர் வரைக்கும் பாதுகாப்புத் திட்டங்களுக்காக எடுத்துக்கொள்ள இம்மசோதா அனுமதி அளித்தது.
  • மேலும், சர்வதேச எல்லையிலிருந்து 100 கி.மீ. தொலைவுக்குள் வரும் காடுகளில் பாதுகாப்பு சார்ந்த கட்டமைப்புகள், பொதுப் பயன்பாடுகளை ஏற்படுத்தவும் இம்மசோதா முயன்றது. புதிய உயிரியல் பூங்காக்கள், காட்டுக்குள் மக்களை அழைத்துச்செல்லும் கானுலாக்கள் ஆகியவற்றைத் தொடங்குவது மற்றொரு திருத்தம்.
  • எனினும், இந்த மசோதா, காடுகளை மறைமுகமாக அழிக்கக்கூடியது எனவும் காடுகளில் வசிக்கும் பூர்வகுடி மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நோக்கம் கொண்டது எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்த்தனர். தனிநபர்கள், அமைப்புகள் எனப் பல்வேறு தரப்புகளிலிருந்து மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
  • இந்தியக் காடுகள் பராமரிப்புச் சட்டம்-1980 திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்குகள் குறித்த விசாரணையில், தற்போதைக்கு அது சார்ந்த வேலைகளை நிறுத்தும்படி 2024 பிப்ரவரி 20இல் உச்ச நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.
  • மேலும், ’நிகர்நிலைக் காடு’கள் குறித்த முழுமையான விவரங்களைத் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. காட்டு நிலங்களைக் கையகப்படுத்திப் புதிதாக உயிரியல் பூங்கா, கானுலாக்கள் ஏற்படுத்தவும் தடை விதித்துள்ளது. இந்த இடைக்கால உத்தரவு, அதிருப்தியில் இருந்த சமூக ஆர்வலர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது.
  • 1996இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, பெரும்பாலான மாநில அரசுகள், நிகர்நிலைக் காடுகளுக்கான பகுதிகளை இன்னும் வரையறுக்கவில்லை. நெடுங்காலமாக மறக்கப்பட்ட இந்தப் பணி, உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
  • நிகர்நிலைக் காடுகள் என்கிற கருத்தாக்கத்தில் சில போதாமைகள் இருப்பதாக வன உரிமை ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். அவை களையப்படுவதற்கான சாத்தியங்களும் இடைக்கால உத்தரவு மூலம் உருவாகியுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories